Monday, March 26, 2012

சினேகா படாத கஷ்டமே இல்ல....! - அம்மா பத்மாவதி!!!

Monday, March 26, 2012
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், ரொம்ப சிரமப்பட்டு சினிமாவிற்கு வந்தவர் சினேகா, என்று சினேகாவின் அம்மா பத்மாவதி முதன்முறையாக மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். கல்யாண பத்திரிக்கை கொடுக்க, பட்டுப்புடவை எடுக்க, நகை வாங்க என்று கல்யாண வேலைகளில் ரொம்பவே பிஸியாக இருக்கும் சினேகா அம்மா பத்மாவதி முதன்முறையாக சினேகாவை பற்றியும், அவரது கல்யாண ஏற்பாடுகள் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார். இதோ...

சினேகா சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 12 வருஷம் ஆச்சு. 'விரும்புகிறேன்' படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு வந்த சினேகா, தொடர்ந்து நிற்க கூட நேரம் இல்லாமல் பல படங்களில் நடித்து வந்தார். வீட்டில் அவள் தான் கடக்குட்டி. ரொம்ப செல்லமா வளர்த்தோம். இன்னும் சொல்லப் போனால் சினிமாவில் அவர் படாத கஷ்டமே இல்லை. அவ்வளவு பிரச்சினையையும் அவள் சந்தித்த போது, அவளை தூக்கி விட ஆள் இல்லை. சினேகா என்றதால் எல்லாவற்றையும் சமாளிச்சு, எல்லாவற்றையும் கடந்து பல வெற்றி படங்களில் நடித்து மக்கள்கிட்ட நல்ல பெயர் எடுத்து, ஒரு நிலையான இடத்தை பிடித்தார். 'ஆட்டோகிராப்' படத்தில் வர 'ஒவ்வொரு பூக்களுமே' என்ற பாட்டில் வர்ற கஷ்டம் மாதிரியே சினேகாவின் வாழ்க்கை இருந்தது. அவ்வளவு கஷ்டத்தையும் கடந்து, அவளுக்கு ஒரு நல்ல இடத்தை கொடுத்திருக்கிறார் கடவுள்.

மே மாதம் சினேகா-பிரசன்னா திருமணம் நடக்க இருக்கிறது. திருமணம் நெருங்க, நெருங்க எல்லோருக்கும் ஏற்படுகிற திருமண பதட்டம் எனக்கும் ஏற்பட்டு இருக்கு. வீட்டில் இருக்கும்போது சினேகா என் ரூம்க்கு வந்து ஒரு நாளைக்கு 4முறையாவது ஐ லவ் யு மம்மி என்று சொல்லுவாள். சினேகாவிற்கு இப்ப வரைக்கும் நான் தான் சாப்பாடு தரணும், அவ்வளவு செல்லமா வளர்த்துவிட்டோம். சமீபத்தில் தாம்பூலம் மாற்ற பிரசன்னா வீட்டிற்கு சென்றோம். அங்கு பிரசன்னா அம்மா-அப்பா சொல்ற விஷயத்தை அப்படியே சினேகா கேட்டார். மேலும் நீங்க எந்த விசேஷம் என்றாலும் சொல்லுங்க நானும் கலந்து கொள்கிறேன், விரதம் எல்லாம் இருப்பேன் என்று சினேகா சொன்னார். பிரசன்னா குடும்பத்தாரின் அனைத்து கண்டிஷன்களுக்கும் சினேகா ஒப்புக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினேகா-பிரசன்னா இருவரையும் தனிக்குடித்தனம் வைக்க இருவீட்டாரும் முடிவு செய்துள்ளோம். இதற்காக அடையாறில் ஒரு வீடு பார்த்துள்ளோம்.

சினேகாவுக்கு, இதுவரைக்கும் சமைக்க தெரியாது. இப்பத்தான் என் கூட சமையல் அறையில் கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொண்டு வருகிறாள். கல்யாணத்திற்கு சென்னையில் பல கடைகளில் பட்டுப்புடவை வாங்கிட்டோம். அப்புறம் ஐதரபாத், மும்பையில் கொஞ்சம் டிரஸ் வாங்கியிருக்கோம். மேலும் மெகந்தி விழாவுக்காக சினேகா விரும்பி ஒரு தங்க அணிகலன் கேட்டார். அதனால் அவருக்காக அதை ஸ்பெஷலாக வாங்கியிருக்கோம். இரண்டு பேரும் குடும்பமும் வேறு வேறு பிரிவினர் என்பதால் இரண்டு பேர் குடும்பம் சார்பிலும் திருமணம் நடத்த உள்ளோம். சினேகா 2 முதல்வரிடமும் விருது வாங்கியிருக்கிறார். இதுதவிர நந்தி, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளும் பெற்றுள்ளார். இப்போது சினேகா, 'ஹரிதாஸ்' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு டீச்சராக நடிக்கிறார். இந்தபடத்திற்கும் அவருக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் சினேகாவை சினிமாவில் நடிக்காதே என்று பிரசன்னா எதுவும் சொல்லவில்லை. அது அவருடைய விருப்பம் என்று கூறிவிட்டார். இதனால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து சினேகா இன்னும் முடிவு செய்யவில்லை. எங்க வீட்டு கடைசி பெண்ணின் கல்யாணம். அதனால் அவளுடைய வாழ்க்கை நல்லபடியாக அமைய, சந்தோஷமாக இருக்க எல்லோரும் வேண்டுங்க என்று பணிவோடு கேட்டுக் கொண்டு தனது பேட்டியை முடித்தார் பத்மாவதி. பதினாறும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறோம்.....!

ஆர்.பி.சவுத்ரியின் 'ரகளை'!!!

Monday, March 26, 2012
கோடம்பாக்கத்தின் குடியிருந்த கோவிலாக பலரும் நினைப்பது ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தைதான். இவர் ஏராளமான புது இயக்குநர்களுக்கு வாழ்வளித்தவர் என்ற பெருமை ஒரு புறம் இருந்தாலும், அவர்களையும் திறமையிருந்தால்தான் தேர்ந்தெடுப்பார் என்ற நல்ல பெயரும் இன்னொரு புறம் இருக்கிறது. ஆனால் கொஞ்ச நாட்களாக அன்னாரது பணப்பெட்டி எந்த புதுமுக இயக்குநருக்காகவும் திறக்கப்படவில்லை. கள்ளச் சாவி போட்டாவது இவரது பிடிவாதக் கதவை திறந்து விட வேண்டும் என்று முயற்சித்த பல இயக்குநர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. வாழ்க்கை கொடுக்கிற வேலையே வேணாம்ப்பா என்று இவர் முடிவெடுக்கவும் சில காரணங்கள் இருந்தது. நீண்டகால ஒதுங்கலுக்கு பிறகு இவர் புது இயக்குநர் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு ஆபிஸ் ஒன்றையும் ஒதுக்கிக் கொடுத்தாராம். வந்த ரெண்டாம் நாளே, புரடக்ஷன் மேனேஜரிடம் வாட்டர் பாட்டில் கூலிங்கா இல்லை. ஆபிஸ்ல மெத்தை இல்ல. ஏ.சி இல்ல என்று ஏகப்பட்ட இல்ல... களை அள்ளிவிட்டாராம் அவர். தம்பி நேத்து வரைக்கும் குழாயில் தண்ணியடிச்சு குடிக்கிறீங்க. ஆபிஸ் போட்டுக் கொடுத்தா கூலிங்கா பிஸ்லரி கேட்கிறீங்க. உங்க அலட்டலுக்கு நான் சரிப்பட மாட்டேன். கிளம்புங்க என்று மீண்டும் புளியமரம் ஏறிவிட்டாராம். தெலுங்கு மார்க்கெட் நல்லாவும் இருக்கு. மரியாதையும் இருக்கு என்று அந்த பக்கம் கடைவிரித்திருக்கும் ஆர்.பி.சவுத்ரி தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் படம் 'ரகளை'. ராம்சரணும்- தமன்னாவும் நடிக்கும் இந்த படம் 40 கோடியில் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் தமிழிலும் ரிலீஸ் ஆகும். பின்ன.. பழுத்த அனுபவசாலியாச்சே.. யாரு எப்டினு தெரியாதவரா என்ன?

வெங்'காய'த்தால் காயமான சேரன்!!!

Monday, March 26, 2012
அதான் நா இருக்கேனே... என்று நர்ஸ் ஒருவர் டாக்டர் மயில்சாமிக்கு முட்டுக் கொடுக்க முயலும் நகைச்சுவை காட்சியை ஒருமுறை மனக்கண்ணில் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்து நாம் சொல்லப் போகும் மேட்டர் அதற்கு இணையானதுதான். தனது சொந்த முயற்சியால் ஒரு அற்புதமான படத்தை இயக்கி தயாரித்து வெளியிட்டிருந்தார் சங்ககிரி ராஜ்குமார் என்ற இளைஞர். படத்தின் பெயர் 'வெங்காயம்'. நிஜமாகவே தமிழ்சினிமா இண்டஸ்ட்ரியை அதிர வைத்தது படம் அது. ஆனால் அப்படம் போய் சேர வேண்டிய இலக்கை அடையவே இல்லை. விளம்பரம் என்ற முதலைக்கு சில லட்சங்களையாவது அள்ளி இரைத்தால்தான் இப்படி ஒரு படம் வந்த தகவலே வெளியே தெரியும். அதுமட்டுமல்ல, சரியான தியேட்டரும் அப்புறம்தான் கிடைக்கும். இது இரண்டிற்கும் வழியில்லாமல் அழுகியே போனது 'வெங்காயம்'. இந்த நேரத்தில்தான் நா இருக்கேனே என்று நர்ஸ் போல வந்தார் சேரன். இப்படத்தை தனது செலவிலேயே இண்டஸ்ட்ரியின் முன்னணி இயக்குநர்களுக்கும் சில பொழுது போகாத பின்னணி(?) இயக்குநர்களுக்கும் போட்டுக் காண்பித்தார். அவர்களும் ஆஹா ஓஹோ என பாராட்டித்தள்ள, படத்தை நானே வெளியிடுகிறேன். கவலைப்படாதீங்க ராஜ்குமார் என்றாராம் சேரன். சேரன் பெருமையுடன் வழங்கும்... என்ற உபரி தகவலுடன் கடந்த வெள்ளியன்று படம் மறு ரிலீஸ் ஆனது. இந்த முறை படத்தின் டைட்டிலில் இருந்த 'வெங்' சுருக்கப்பட்டு 'காயம்' மட்டும் பெரிதாக்கப்பட்டது. 'காயம்' என்பதுதான் படத்தின் தலைப்பு. ஆனால் நல்ல நோக்கத்துடன் இப்படத்தை வெளியிட்ட சேரனுக்கும் ராஜ்குமாருக்கு நேர்ந்த கதிதான் ஏற்பட்டுள்ளது. பெரிய அளவுக்கு தியேட்டர்காரர்கள் ஒத்துழைக்கவில்லையாம். தமிழ் லாங்வேஜின் டாப்மோஸ்ட் நாளிதழில் கூட விளம்பரம் கொடுக்க முடியாதளவுக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது அவருக்கு. இருந்தாலும் 'வெங்காய'த்திற்கு தோள் கொடுக்க வேண்டியது நமது சமூக கடமை என்பதால் மீண்டும் ஒருமுறை காயத்தை பார்த்து காயம்பட்ட உள்ளத்துக்கு ஒத்தடம் கொடுங்கப்பா.. ஐயோ! பாவம்.. உதவி செய்யப்போய் உபத்திரவத்துல மாட்டிக்கிட்டாரே.....

விந்தியா விவாகரத்து மனு தாக்கல்!!!

Monday, March 26, 2012
நடிகை விந்தியாவுக்கும் கோபி என்ற கோபாலகிருஷ்ணனுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக குடும்ப நலகோர்ட்டில் விந்தியா விவாகரத்து மனு தாக்கல் செய்தார். அதன் மீது விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் விந்தியாவும் கோபியும் இன்று முதன்மை குடும்ப நல கோர்ட்டில் ஆஜராகி பரஸ்பரம் விவாகரத்து செய்து கொள்ள மனு தாக்கல் செய்தனர். விரைவில் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. விவாகரத்து மனுவை தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த விந்தியா, கோபியுடன் கருத்துவேறுபாடு இருக்கின்ற காரணத்தால் இருவரும் கூடி பேசி பிரிவது என்றும் விவாகரத்து பெற்றுக் கொள்வதென்றும் முடிவு செய்ததாக கூறினார். விவாகரத்துக்கு பின் மீண்டும் மறுமணம் உண்டா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். இவருடைய கணவர் கோபி பிரபல நடிகை பானுப்பிரியாவின் சகோதரர் என்பது அனைவரும் அறிந்ததே.

'நீர்பறவை'க்காக பாடிய ஜீ.வி.பிரகாஷ்!!!

Monday, March 26, 2012
ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக நடித்து வரும் உதயநிதி, கூடவே 'நீர்பறவை' என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். தேசிய விருது பெற்ற 'தென்மேற்கு பருவக்காற்று' படத்திற்கு பிறகு சீனு ராமசாமி இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக விஷ்ணு நடிக்கிறார். ஹீரோயினாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கிறார். தம்பி ராமைய்யா, சரண்யா பொன்வன்னன், பிளாக் பாண்டி, அருள்தாஸ், தேவராஜ், ரோகினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள். 'தென்மேற்கு பருவக்காற்று' படத்திற்கு இசையமைத்த ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்காக ரகுநந்தன் இசையமைப்பில் உருவான 'பர பர பர பறவை ஒன்று சிறு சிறுவென தலையை சுற்றி உன் காலில் விழுந்தது பெண்ணே' என்ற பாடலை இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். ஆரோக்கியமான விஷயம் வாழ்த்துகள்! கீப் இட் அப் ஜீ.வி!

'3' இயக்குநரை சிலாகித்த சூப்பர் ஸ்டார்!!!

Monday, March 26, 2012
தமிழ்ப்பட ரசிகர்கள் தற்போது ஒரு படத்தினை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்றால் அப்படம் '3' ஆக தான் இருக்கும். ரஜினி மகள் இயக்கம், கமல் மகள் நாயகி, தனுஷ் நாயகன் என ஒரு வாரிசுகளின் ஈர்ப்பு ஒருபுறம், புதுமுக இசையமைப்பாளார் அனிருத் இசைக்கு கிடைத்து இருக்கும் வரவேற்பு மறுபுறம் என படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. மார்ச் 30ம் தேதி '3' படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகிறது. கொஞ்ச நாட்கள் கழித்து இந்தியில் வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். படத்தின் தெலுங்கு பதிப்புக்கு ஏற்பட்ட கடும் போட்டியில் பெரும் விலை கொடுத்து '3' படத்தினை வாங்கி இருக்கிறார் தயாரிப்பாளார் நாட்டிகுமார். காரணம் ஆந்திராவிலும் 'கொலவெறி' பாடலுக்கு ஏகப்பட்ட மவுசாம். ரஜினி மற்றும் சரத்குமார் குடும்பம் 'கோச்சடையான்' படத்திற்காக லண்டனில் இருக்கிறார்கள். அப்போது ரஜினியிடம் ராதிகா பேசும்போது, ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் உங்களுக்கு மேலும் பெருமை சேர்ப்பார்கள் என்றாராம். ஐஸ்வர்யா தனுஷ் குறித்து ரஜினி மிகவும் சிலாகித்து பேசி மகிழ்ந்தாராம். சிங்கக்குட்டிகளாச்சே...!

சிம்புன்னா.. 2 மடங்கு வேணும்: நயன்தாரா அதிரடி!!!

Monday, March 26, 2012
கொஞ்சம் ஆச்சர்யமான செய்திதான்! ஆனால் நயன்தாரா தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் தயாராகும் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழ், தெலுங்கு, ஆகிய இருமொழிகளில் தயாராக இருக்கிறது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் 'வடசென்னை'. ஆனால் இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு, வெற்றிமாறன் புதிதாக தொடங்கியிருக்கும் 'க்ராஸ் ரூட் புரடெக்ஷன்' என்ற தனது சொந்த பட நிறுவனத்தின் மூலம் சித்தார்த்- புதுமுகம் அர்ஜிதா ஜோடியை வைத்து 'தேசிய நெடுஞ்சாலை 45' என்ற படத்தை துரை.தயாநிதியுடன் இணைந்து தயாரிக்கிறார். இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை தனது உதவியாளர் மணிகண்டனுக்கு கொடுத்திருக்கும் வெற்றிமாறன், இன்னொரு பக்கம் 'வடசென்னை' படத்துக்கு நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பதுதான் நம்பகமான வெற்றிமாறன் வட்டாரம் நமக்குத்தரும் தகவல். சிம்புவுடனான காதல் முறிவுக்குப் பின்னர் தான் நயன்தாரா பிரபுதேவாவை காதலிக்க ஆரம்பித்து கல்யாணம் வரை சென்றார். தற்போது அந்த காதலும் முறிந்து விட்ட நிலையில் தன்னம்பிக்கையொடு தனது சினிமா கேரியரில் கவனம் செலுத்தும் நயன்தாரா, சிம்புவுடன் நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் சம்பளம் இரண்டு மடங்காக வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறாராம். அதாவது நயன் தமிழ், தெலுங்கு இரண்டுக்குமாக 1.50 கோடி கேட்கிறாராம். இந்த சம்பள விவகாரத்தை தற்போது டிஸ்கஸ் செய்துகொண்டிருப்பதாக தகவல் தருகிறார்கள். இந்த ஜோடி மீண்டும் சேர்ந்தால் படத்துக்கு வேறு விளம்பரமே தேவையில்லை என்பதால், இந்த சம்பளத்தை நயனுக்கு கொடுத்து விடுவார்கள் என்பதில் எந்த ஐயமும் கொள்ளத்தேவையில்லை. சந்தடிச்சாக்கில் தனது 'லவ் ஆந்தத்தில் தலைகாட்ட முடியுமா என்று கேட்க.. அதற்கெல்லாம் நேரமில்லை' என்று கறாராக சொல்லி விட்டாராம் நயன்!

மேடை டான்சுக்கு கோடிகளில் சம்பளம் கடும் போட்டியில் 4 நடிகைகள்!!!

Monday, March 26, 2012
மேடை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி கல்லா நிரப்புவதில் மும்பை ஹீரோயின்கள் இடையே போட்டி நிலவுகிறது. குறிப்பாக 4 ஹீரோயின்கள் இந்த போட்டியில் குதித்துள்ளனர். நட்சத்திர இரவு, பட விருது விழாக்கள் என்றால் நடிகைகளின் நடன நிகழ்ச்சி தவிர்க்க முடியாததாகிவிட்டது. வெளிநாடு மற்றும் மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் சல்மான் கான், ஷாருக்கான் படங்களின் வெற்றி விழா, சினிமா விருது விழாக்களில் நிகழ்ச்சியின் தொடக்கமாகவும் இடையிடையேயும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. படங்களில் ஹீரோயினாக நடிப்பதற்கு போட்டி போடுவதுபோல் இதுபோன்ற மேடைகளில் ஆடுவதற்கும் ஹீரோயின்கள் இடையே போட்டி நிலவுகிறது. கரீனா கபூர், கேத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோருக்கு இடையேதான் கடும்போட்டி நிலவுகிறது. நிகழ்ச்சி நடத்துபவர்கள் முதல் முக்கியத்துவத்தை பிரியங்கா சோப்ராவுக்குதான் தருகின்றனர். அவர் நடனம் ஆடும் விழாக்களுக்கு டி.வி சேனல்கள் மத்தியிலும், ரசிகர்களிடையேயும் வரவேற்பு அதிகம். காலையில் படப்பிடிப்பு, மாலையில் மேடை நடனம் என்று இந்த ஹீரோயின்கள் பண பெட்டி நிரம்புகிறது. ஒரு ஆட்டத்துக்கு ரூ.80 லட்சம் முதல் ஒன்றேகால் கோடிவரை சம்பளம் பெறுகின்றனர். இது பற்றி விழா அமைப்பாளர் ஒருவர் கூறும்போது, ‘மேடைகளில் ஆடுவதற்கான முதல் தேர்வாக பிரியங்கா சோப்ரா கருதப்படுகிறார். இதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் ரிகர்சல், காஸ்டியூம் தேர்வு, நேரம் தவறாமை போன்ற கவனம்தான் காரணம். கேதரினா, கரீனாவுக்கும் மவுசு உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடக்க விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சினிமா முகங்களையே நாடிச் செல்வதால், நடிகைகள் காட்டில் மழைதான்' என்றார்.

காதலில் விழுந்தேன் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானா - நகுலின் புதுப்படம்!!!

Monday, March 26, 2012
பாய்ஸ் படத்தின் ஐந்து நண்பர்களில் ஒருவராக அறிமுமானவர் நகுல். அப்படத்தில் அவர் கொழு கொழு பையனாக வலம் வந்திருப்பார்.

அப்படத்தையடுத்து திடீரென உடலைக் குறைத்து காதலில் விழுந்தேன் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு மாசிலாமணி, கந்தக்கோட்டை என அடுத்தடுத்து படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகராக உருவானார். இவர் நடிகை தேவயானியின் தம்பியுமாவார்.

இவர் தற்போது நடிக்கவிருக்கும் புதுப்படமொன்றிற்கு ‘நான் ராஜா ஆக போறேன்’ என பெயரிட்டுள்ளனர். இப்படத்தை பிரிதிவி இயக்குகிறார். மேலும் இப்படத்திற்கு ‘ஆடுகளம்’ வெற்றிமாறன் வசனம் எழுதுகிறார். இதன் படப்பிடிப்பில் வெற்றிமாறன் திடீர் என பிரவேசமாகி சில சீன்களையும் இயக்கிக் கொடுத்திருககிறாராம்.

காந்தர்வக் குரலோனின் பிறந்த நாள் ஸ்பெஷல்!!!

Monday, March 26, 2012
டி.எம்.எஸ்... தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட எழிலிசை வேந்தன் தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்! இந்த பாட்டுத் தலைவன் நேற்று (25-ம் தேதி) தனுது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார். இசையுலகில் மாபெரும் சகாப்தம் டி.எம்.எஸ். என்றால் அது மிகையல்ல! இவரை பற்றி அறிந்த அறியாத சில விஷயங்கள் இதோ.....

* டி.எம்.எஸ். என்பதில் உள்ள 'எஸ்' என்றால், சௌந்தரராஜன் 'எம்' என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார் 'டி' என்பது அவரின் குடும்பப் பெயர் துகுளுவா'. கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு சத்து மாவு தயாரித்துத் தருவதில் பிரபலமான குடும்பம் அவருடையது!

* டி.எம்.எஸ்-ஸூக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு(எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர, தியாகைய்யர் (டி),முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார்!

* மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார்.

* டி.எம்.எஸ்ஸின் முதல் பாடல் 'ராதே என்னை விட்டு ஓடாதேடி' ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ. 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக்கிடந்த அதே பழைய ஒலிப்பதிவு அறையில் நின்று மீண்டும் அதேபாடலைப் பாடி மகிழ்ந்திருக்கிறார்!

* மதுரை, வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்திலேயே ஓர் ஓரமாக பெஞ்சுகள் போட்டு, இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்தது இல்லை. மற்றபடி எல்லாக் கோயில் விசேஷங்களுக்கும் சென்று, பஜனைப்பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய், வெற்றிலை, பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஓடியது!

* டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும். 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்...', 'உள்ளம் உருகுதய்யா முருகா', 'சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா', 'மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்' போன்ற உள்ளம் உருக்கும் பலப்பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியவர்!

* டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய 'கற்பகவல்லி நின் பொற்பாதங்கள் பிடித்தேன்' இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடல். இந்தப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெறும். அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்தார்!

* 'அடிமைப் பெண்' படத்தின் போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். 'பாடி முடித்துவிட்டுத்தான் போக வேண்டும்' என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட்டும் கோபத்தில் கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு, அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்குக் கிடைத்தது, அந்தப் பாடல்தான், 'ஆயிரம் நிலவே வா!'

* பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள் அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர். "இல்லாட்டா ஒருத்தனும் மதிக்க மாட்டான்யா! 'பாவம், டி.எம்.எஸ்”க்கு என்ன கஷ்டமோ!'ன்னு உச்சுக் கொட்டுவான். அதனால, இந்த வெளி வேஷம் தேவையா இருக்கு" என்பார்.

* கவிஞர் வாலியைத் திரை உலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ். அந்த நன்றியை இன்று வரையிலும் மறவாமல், 'இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ். போட்டது' என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நெகிழ்வார் வாலி!

* 'நீராரும் கடலுடுத்த...' என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், 'ஜன கண மன' என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன்வராத நிலையில், டி.எம்.எஸ்”ம் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தியாக இருந்தது!

* தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், டி.எம்.எஸ்ஸூக்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும்போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக் கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி.எம்.எஸ்!

* 'வசந்தமாளிகை' படத்தில் வரும் 'யாருக்காக' பாடலைப் பாடும்போது, அதற்கு எக்கோ எஃபெக்ட் (எதிரொலி) வைக்கச் சொன்னார். 'அதெல்லாம் வீண் வேலை' என்று தயாரிப்பாளர் மறுத்துவிட, 'எக்கோ எஃபெக்ட்' வைத்தால்தான் பாடுவேன் என்றார் தீர்மானமாக. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு வியந்தார் தயாரிப்பாளர்!

* வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் 'யாரந்த நிலவு... ஏன் இந்தக் கனவு'. கனத்த குரலுடைய டி.எம்.எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்ததைவிட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி.எம்.எஸ்!

* காஞ்சிப் பெரியவர், புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்திகொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாய்பாபா ஒரு முறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி.எம்.எஸ்ஸை 'கற்பகவல்லி' பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார்!

* கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி.எம்.எஸ். கண்ணதாசன் எழுதிய 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்' என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் 'சாக வேண்டும்' என்பதை 'வாட வேண்டும்' என்று மாற்றித் தந்த பிறகே பாடினார்!

* நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி நாளைய அடையாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும் பொருட்டு கோயம்புத்தூர் வருவதற்கு முன்பாக இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டுவிட்டு, பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண்டார். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போதுதான்!

* எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி, ஜெயலலிதா என அனைவரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர்!

* 'பாகப் பிரிவினை' படத்தின் 100-வது நாள் விழாவில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட, பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை. இது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ்., விழாவில் 'கடவுள் வாழ்த்து' பாட மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன!

* 'நவராத்திரி' படத்தில் சிவாஜி கணேசனின் ஒன்பது வித்தியாச வேடங்களுக்கு ஏற்ப தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!

* 'பட்டினத்தார்', 'அருணகிரிநாதர்' என இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்!

* மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகர். காரில் பயணம் செய்யும்போதெல்லாம், டி.எம்.எஸ். பாடிய ஏதாவதொரு பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும்!

* சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர, தனிப்பட்ட நண்பர்கள் வட்டாரம் என்று டி.எம்.எஸ்ஸூக்கு எதுவும் இல்லை.

* எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ். சொல்லப்போனால், இருவருக்கும் பலப்பல பாடல்களைப் பாடிய பின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார்!

* தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும். இந்த சகாப்தத்துக்கு சிங்கிள் பேஜ் போதுமா....?

பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் வில்லன் நடிகரானார்!!!

Monday, March 26, 2012
பிரபல பின்னணி பாடகர் மனோ. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் கடந்த 25 ஆண்டுகளாக பாடி வருகிறார். மனோ மகன் ஷாகர் 'நாங்க' படம் மூலம் வில்லன் நடிகராகியுள்ளார்.

இந்த படத்தை செல்வா இயக்கியுள்ளார். மகனை நடிகராக்கியது குறித்து மனோ கூறும்போது, இசையமைப்பாளர் இளையராஜாவால் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன். எனது மகனையும் நடிகராக அறிமுகப்படுத்தி உள்ளேன். நானிருக்கும் சினிமா துறையிலேயே எனது மகனையும் அறிமுகப் படுத்துவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

ஷாகர் கூறும்போது, எனது தந்தையால் சிறுவயதில் இருந்தே சினிமாவால் ஈர்க்கப்பட்டேன். நடனம் கற்றேன். 'நாங்க' படத்தில் வில்லனாகி உள்ளேன். கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்டேன். இயக்குனர் செல்வா என்னை வில்லனாக்கி விட்டார்.

இருப்பினும் மனம் தளராமல் போராடுவேன். நல்ல வேடங்களில் நடித்து எனக்கென்று தனி இடத்தை பிடிப்பேன். நான் ஒரு சிறந்த நடிகன் என்ற நிலைக்கு நிச்சயம் வருவேன் என்றார்.

கோச்சடையான்: லண்டன் ஸ்டுடியோவில் ரஜினி - சரத் - ஆதி!!!

Monday, March 26, 2012
கோச்சடையான் - தி லெஜன்ட் வரலாற்றுப் பட ஷூட்டிங் லண்டனில் தொடங்கியது.

இந்தப் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி பங்கேற்றார். அவருடன் நடிகர்கள் சரத்குமார், ஆதி உள்ளிட்டோம் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. ரஜினி - தீபிகா காட்சிகளும் படமாக்கப்படுகின்றன.

லண்டனில் உள்ள பைன்வுட் ஸ்டுடியோவில் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த ஸ்டுடியோவில்தான் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் எடுக்கப்படுகின்றன.

சில தினங்களுக்கு முன் ரஜினி, சௌந்தர்யா, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் லண்டன் சென்று சேர்ந்தனர். சமீபத்தில் சரத்குமார், அவர் மனைவி ராதிகா மற்றும் மகன் ராகுலுடன் லண்டனுக்குப் போய் ரஜினியுடன் சேர்ந்து கொண்டார்.

அடுத்து நடிகர் ஆதியும் லண்டன் போயுள்ளார். கதாநாயகி தீபிகா படுகோனும் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்..

இரு தினங்களுக்கு முன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் கோச்சடையான் படப்பிடிப்பு நடந்த ஸ்டூடியோவுக்கு வந்து சென்றதாகவும் அவர் தெரிவித்தார். லண்டனில் படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் அரங்குகள் அமைத்து இரண்டாம் கட்ட சூட்டிங் நடைபெற உள்ளது.

தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகும் என்று ரஜினி ஏற்கனவே அறிவித்து உள்ளார். இந்த படத்தை ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார். கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது

ரஜினி, சரத், ஆதி தொடர்பான காட்சிகள் படமாகின்றன. இந்தப் படப்பிடிப்பின்போது, ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் சரத்குமாரும் ராதிகாவும்.

இதுகுறித்து ராதிகா கூறுகையில், "கோச்சடையான் படப்பிடிப்பு இடைவெளையில் ரஜினியுடன் பேசிக் கொண்டிருந்தது இனிய அனுபவம். அப்போது நாங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம். கேரவன் இல்லாமல், வெட்ட வெளியில் சாப்பிட்டுவிட்டு அரட்டையடித்துக் கொண்டிருந்த பழைய நினைவுகளை ரஜினி சார் சொல்லி மகிழ்ந்தார். அன்றைக்கு நடிகர்களுக்குள் அத்தனை அழகான, எளிய உறவு இருந்தது," என்றார்.

ரஜினி நடிக்கும் கோச்சடையான் படப்பிடிப்பு ல்ணடனில் உள்ள பைன்பட் ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக நடக்கிறது. வசன காட்சிகள் இங்கு படமாகி வருகிறது. 50 சதவீத படப்பிடிப்பு இந்த ஸ்டூடியோவில் முடிந்துவிடும் எனத் தெரிகிறது. இதே ஸ்டூடியோவில்தான் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் படப்பிடிப்பு நடந்தள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

பிரபு தேவா இடத்தைப் பிடித்துவிட்டாரோ ஆர்யா?!!!:-'டெல்லி பெல்லி' தமிழ் ரீமேக்கில் ஆர்யா-நயன்!!!

Monday, March 26, 2012
வேட்டை படத்தில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே ஆர்யாவும் அமலாவும் காதலில் விழுந்ததாக ஏகப்பட்ட வதந்திகள்.

இருவரும் அதை மறுக்கவில்லை. விளம்பரத்துக்கு உதவட்டுமே என்று அமைதி காத்தனர்.

இப்போது இருவருக்குமிடையே பிரிவு வந்துவிட்டதாகவும், இருவரும் பேசிக் கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் தனது புதிய வீட்டில் நண்பர்களுக்கு கொடுத்த பார்ட்டியில் கூட அமலா கலந்து கொள்ளவில்லையாம். மாறாக ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன் நாயகி நயன்தாராதான் கலந்து கொண்டாராம்.

முக்கியமாக, இந்த வீட்டின் மினி கிரகப்பிரவேசத்தில் குத்துவிளக்கேற்றியவர் நயன்தாராதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது தனது படம் ஒன்றிற்குக் கூட நயனைத்தான் சிபாரிசு செய்திருக்கிறாராம் ஆர்யா. பிரபுதேவா இடத்தைப் பிடித்துவிட்டாரோ!

'டெல்லி பெல்லி' தமிழ் ரீமேக்கில் ஆர்யா-நயன்!!!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் படத்துக்கு கால்ஷீட் தர மறுத்து விட்டார் நயன்தாரா. ஆனால் நிச்சயமான பெண்ணை மணக்க மறுத்ததால் மனமுடைந்த மணமகளின் அப்பா தற்கொலை செய்து கொண்டதில் பிரபல தெலுங்கு ஹீரோ கோபிச்சந்தின் பெயர் ஆந்திராவில் நாறிக்கிடக்கிறது. அப்படிப்பட்டவருக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் நயன்தாரா. பிரபுதேவா உடனான காதல் முறிவுக்குப் பிறகு திரும்பவும் நடிப்புக்கு திருப்பிய பிறகு முன்பை விட அதிக தன்னம்பிக்கையோடும், போலிவோடும் காணப்படும் நயன், ஆர்யா புதிதாக சென்னை பெசண்ட் நகரில் வாங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு புதுமனை புகுவிழாவுக்கு வந்து, குத்துவிளக்கு ஏற்றினார். ஆர்யாவுடன் இங்கே நயன்தாராவுக்கு என்ன வேலை?! வெறும் நட்புக்காக மட்டும்தான் வந்தாரா என்று துருவினால் அசத்தலான ஹாட் செய்தி நம் கைகளில் வந்து விழுந்தது. யூடிவி தயாரிப்பில் 'ஜெயம் கொண்டான்', 'வந்தான் வென்றான்' படங்களின் இயக்குநர் கண்ணன் இயக்க இருக்கும் 'டெல்லி பெல்லி' தமிழ் ரீமேக்கில் ஆர்யாவுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருகிறாராம் நயன்! அம்ணிய ஆளாளுக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட கூப்பிடுறாங்களே..... ஆச்சர்யமாத்தாங்க இருக்கு.....

நடிகை அனுஷ்காவை திருமணம் செய்ய மாட்டேன்” - கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா!!!

Monday, March 26, 2012
இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடி வெடுத்து இருப்பதாகவும் செய்திகள் பரவியது. இதற்கு சுரேஷ்ரெய்னா பதில் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:-

அனுஷ்கா சர்மாவை நான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியான செய்தி பற்றி சமீபத்தில் கேள்விப் பட்டேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அனுஷ்கா சர்மாவை லண்டனில் சந்தித்தேன். அங்கு கிரிக்கெட் போட்டியை காண அவர் வந்து இருந்தார். மற்றபடி அவருடன் எந்த தொடர்பும் இல்லை.

இந்த வதந்திகள் எங்கிருந்து கிளம்பின என்று தெரிய வில்லை. எனக்கு இன்னும் ஒரு வருடத்திலோ அல்லது இரண்டு வருடங்களிலோ திருமணம் நடக்கும். ஆனால் உறுதியாக ஒரு விஷயத்தை என்னால் சொல்ல முடியும். அனுஷ்கா சர்மா போன்ற நடிகையை நிச்சயம் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.

என்னுடையது நடுத்தர குடும்பம். என்னையும் எங்கள் குடும்பத்தையும் புரிந்து கொண்ட பெண்ணை மணப்பேன். எனது வருங்கால மனைவி புத்தி கூர்மை உள்ளவராகவும் எனக்கு நல்ல துணையாகவும் இருக்க வேண்டும். எனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் என்னுடன் இருந்து ஆதமார்த்தமாக அன்பு செலுத்துபவராகவும் விளங்க வேண்டும்.

சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் துவக்க விழா நிகழ்ச்சிகளை காண ஆர்வமாக இருக்கிறேன். அவ்விழாவில் கரீனா கபூர், ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா போன்றோர் பங்கேற்க உள்ளனர். எனது பெற்றோருடன் அந்த விழாவில் பங்கேற்பேன்.

மும்பையில் நடிகர் விஜய் விழாவில் ரகளை- ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி!!!

Monday, March 26, 2012
மும்பை::மும்பையில் நடிகர் விஜய் கலந்து கொண்ட விழாவில், பயங்கர ரகளையாகிவிட்டது. ரசிகர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.

மும்பை மாநகர விஜய் நற்பணி இயக்கத்தின் 5-ம் ஆண்டு விழா, கலை விழா மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா மும்பை அண்டாப்ஹில்லில் நேற்று நடந்தது.

விழாவில் இயக்குனரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மேடையில் வரிசையாக அமர்ந்தனர். இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் மேடையில் தோன்றினார்.

அப்போது மேடையில் நடந்தவாறு அவர் ரசிகர்களை நோக்கி கையசைத்தார். விஜயை பார்த்து பேசிவிடவேண்டும் என்று துடித்த ரசிகர்கள் விஜயின் கால் மற்றும் கையை பிடித்து இழுத்தவாறு இடையூறு செய்யத் தொடங்கினர்.

ரசிகர்கள் கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு மேடையை நோக்கிச் சென்றனர். இதனால் கூட்டத்தில் பதட்டம் ஏற்பட்டது.

இதனையடுத்து பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீசார் விழா மேடை அருகே நின்று கொண்டிருந்த ரசிகர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினர்.

கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 25-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் நாற்காலிகள் நொறுங்கின. நாற்காலிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. அந்த மைதானமே போர்க்களம் போல காட்சியளித்தது.

விழாவில் நலிவடைந்தோர்களுக்கு தையல் மிஷின்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகளை நடிகர் விஜய் கையால் வழங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

ரசிகர்களின் இடையூறு காரணமாக விஜய் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் எதுவும் வழங்காமல் சென்றுவிட்டார். இதனையடுத்து மாநகர விஜய் நற்பணி இயக்க நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

'பூந்தமல்லிதான், புஷ்பவள்ளிதான்...!'- எல்.ஆர்.ஈஸ்வரி!!!

Monday, March 26, 2012
எங்க ஊரு மாரியம்மா .. உள்பட பல அம்மன் பாடல்களுக்குப் பெயர் போன எல்.ஆர்.ஈஸ்வரியை இப்போது தமிழ் சினிமாக்காரர்கள் குத்துப்பாட்டுகளுக்கு மொத்தமாக குத்தகை எடுத்து விட்டார்கள் போல. ஒஸ்தியில் இடம் பெற்ற குத்துப் பாட்டைத் தொடர்ந்து இன்னொரு குத்துப் பாட்டுக்குக் குரல் கொடுத்துள்ளார் ஈஸ்வரி.

எலந்தப் பயம், துள்ளுவதோ இளமை, பட்டத்து ராணி பார்க்கும் பார்வை உள்பட பல ஹஸ்க்கியான பாடல்களைப் பாடி பெரும் பிரபலம் ஆனவர் ஈஸ்வரி. இதே ஈஸ்வரி பாடிய வாராயோ தோழி வாராயோ என்ற அருமையான பாடல் இன்றளவும் திருமணக் கூடங்களில் முக்கியப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. பின்னாளில் அம்மன் பாடல்களுக்கு அக் மார்க் முத்திரையாக ஈஸ்வரியின் குரல் விளங்கியது. இப்படி எந்தப் பாடல் பாடினாலும் அதில் உச்சத்தைத் தொட்ட பெருமைக்குரியவர் ஈஸ்வரி. இந்த நிலையில் தற்போது அவரை குத்துப் பாட்டுகளுக்கு கூப்பிட ஆரம்பித்துள்ளனர்.

ஒஸ்தி பாடத்தில், அட்டகாசமான குத்துப் பாட்டுக்குக் குரல் கொடுத்த ஈஸ்வரிக்கு இப்போது குத்துப் பாடல்கள் பாட ஏகப்பட்ட அழைப்புகள் வருகிறதாம். இந்த வயதில் இப்படி ஒரு வாய்ப்பா என்று அவரும் அசந்து போய்தான் நிற்கிறாராம். இந்த நிலையில் அருண் விஜய் நடிக்கும் தடையறத் தாக்க என்ற படத்தில் குத்துப் பாட்டுக்குப் பாடியுள்ளாராம் ஈஸ்வரி. தமன் இசையமைத்துள்ளார்.

பூந்தமல்லிதான், புஷ்பவள்ளிதான் என்று ஆரம்பிக்கும் இப்பாடலுக்கு செமத்தியான குத்தாட்டம் போடவிருப்பவர் மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமான தேபி தத்தா. நெய்யில் போட்டு முக்கி எடுத்த திராட்சைப் பழம் போல தகதகவென இருக்கிறார் தேபி தத்தா.

ஏற்கனவே இவர் பானா காத்தாடி, மங்காத்தா ஆகிய படங்களில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடிய அனுபவம் கொண்டவர் தேபி. இப்போது தடையறத் தாக்க படத்திலும் தனது தகதக ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

இப்பாடலை ஈஸ்வரியுடன் சேர்ந்து அருண் விஜய் பாடியுள்ளார். தெலுங்குப் பட டான்ஸ் மாஸ்டரான நோபிள்தான் இந்தப் பாடலுக்கு பட்டையைக் கிளப்பும் வகையில் ஆட்டம் அமைத்துள்ளாராம்.

இப்பாடலின் மூலம் தேபி தத்தா எங்கேயோ போகப் போகிறார் என்கிறார்கள்.