Thursday, January 5, 2012

ஜெயலலிதாவும் கமலும் இணைந்து நடித்த ஒரே படம்!!!(ஓல்டு இஸ் கோல்டு)

Thursday,January 05, 2012
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1974ல் உருவான ‘அன்புத் தங்கை’ படத்தில் முத்துராமன், ஜெயலலிதா நடித்தனர். இதில் மேடை நாடகம் நடப்பது போன்ற ஒரு காட்சியில் ஜெயலலிதாவுடன் புத்த பிஷு வேடத்தில் கமல்ஹாசன் நடித்தது சிறப்பு. ஜெயலலிதா, கமல்ஹாசன் சேர்ந்து நடித்த ஒரே படம் இதுதான். தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தி, பெங்காலியிலும் ரீமேக் ஆக காரணமாக இருந்த சூப்பர் ஹிட் படம் ‘அவள் ஒரு தொடர்கதை’. கே.பாலசந்தருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்த இப்படத்தில் ஜெய்கணேஷ், விஜயகுமார், கமல்ஹாசன் நடித்திருந்தனர். நடிகை சுஜாதா அறிமுகமானது இப்படத்தில்தான் என்பது சிறப்பு.

ஜெமினி கணேசன் தயாரித்த ‘நான் அவன் இல்லை’ படத்தை கே.பாலசந்தர் இயக்கினார். பணத்துக்காக 5 பெண்களை ஏமாற்றும் மன்மதனின் கதை. படம் ஓடவில்லை. ஆனால், இதே படம் ஜீவன் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரீமேக் ஆகி ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. உலக சினிமா எடுக்கிறோம் எனக் கூறிக் கொண்டு திரையுலகில் பலர் பூச்சாண¢டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் 1970களின் கடைசியில் உலக தரமான படங்களை தந்து அந்த வேலையை சத்தம் இல்லாமல் செய்து காட்டியவர் மகேந்திரன். அவரை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்த படம் ‘தங்கப் பதக்கம்’. மேடை நாடகத்துக்காக இந்த கதையை அவர் தயார் செய்தார். மேடையில் வெற்றி பெற்ற இக்கதையை படமாக தயாரிக்க சிவாஜி முடிவு செய்தார். மேடையில் வில்லன் நடிகர் செந்தாமரை ஏற்ற வேடத்தில்தான் சிவாஜி நடித்திருந்தார். படத்துக்கு கதை, திரைக்கதையுடன் வசனங்களை மகேந்திரன் எழுத, மாதவன் இயக்கினார். வெள்ளி விழா கண்ட படம் இது.

‘அன்றே சிந்திய ரத்தம்’ படத்தில் எம்ஜிஆரும் ஸ்ரீதரும் இணைய இருந்தனர். சில காரணங்களால் ஷூட்டிங் தொடங்கி, படம் நின்றுபோனது. அவர்கள் இணைய மாட்டார்களா என்ற ரசிகர்களின் ஏக்கத்தை போக்கியது ‘உரிமைக் குரல்’. எம்ஜிஆருக்கு மாபெரும் வெற்றியை தந்த இப்படத்தில் லதா, புஷ்பலதா, சச்சு, நம்பியார், நாகேஷ் நடித்தனர். நடிகர் அசோகன் தயாரிப்பில் எம்ஜிஆர், மஞ்சுளா நடித்த படம் ‘நேற்று இன்று நாளை’. நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்த படத்தை ப.நீலகண்டன் இயக்கினார். இந்தியில் ஹேமமாலினி இரட்டை வேடங்களில் நடித்த படம் ‘சீதா அவுர் கீதா’. ‘எங்க வீட்டுப் பிள்ளை’ பாணி கதைதான். அதே படத்தை தமிழ், தெலுங்கில் நாகிரெட்டி தயாரித்தார். தமிழில் ‘வாணி ராணி’ என்றும் தெலுங்கில் ‘கங்கா மங்கா’ என்றும் தயாரானது. தர்மேந்திரா வேடத்தில் தமிழில் சிவாஜி நடித்தார். வாணிஸ்ரீ டபுள் ரோலில் நடித்தார். சி.வி.ராஜேந்திரன் இயக்கத¢தில் 100 நாள் கொண்டாடிய படம் இது.

1941ல் டிகேஎஸ் சகோதரர்கள் நடத்திய நாடகம் ‘குமாஸ்தாவின் பெண்’. அதையே டிகேஎஸ் சகோதரர்கள் பின்பு படமாகவும் தயாரித்து, நடித்தனர். ஒரிஜினல் நாடகத்தில் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் நடித்திருந்தார். எனவே இப்போது அதே படத்தை ‘குமாஸ்தாவின் மகள்’ என்ற பெயரில் எடுக்க ஏ.பி.என். முடிவு செய்தார். அவரே இயக்கிய இப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன் நடித்தனர். கன்னட நடிகை ஆர்த்தி நாயகியாக அறிமுகமானார். ஜெயலலிதாவின் 100வது படம் ‘திருமாங்கல்யம்’. கேமராமேன் வின்சென்ட் இயக்கி இப்படத்தில் முத்துராமன், லட்சுமி, பண்டரிபாய், ஸ்ரீதேவி, சச்சு, சுகுமாரி நடித்தனர்.

மேஜர் சுந்தர்ராஜனின் மேடை நாடகம் ‘டைகர் சாத்தாச்சாரி’, அதே பெயரில் படமானது. வி.டி.அரசு தயாரித்து இயக்கினார். சிவகுமார், சசிகுமார், பி.ஆர்.வரலட்சுமி, சுகுமாரி ஆகியோர் நடித்திருந்த இப்படத்தில் மேஜர் சுந்தர்ராஜனே ஹீரோ. கவிஞர் வாலியின் மேடை நாடகமான ‘கலியுக கண்ணன்’, படமானது. கிருஷ்ணன், பஞ்சு இயக்கிய இந்தப் படத்தில் ஜெய்சங்கருடன் ஜெயசித்ரா நடித்திருந்தார். அசோகனும் வாசுவும் ஹீரோவாக நடித்த படம் ‘வைரம்’. இந்தியில் வெளியான ‘விக்டோரியா 203’ படத்தின் ரீமேக் ஆன இப்படத்தை ராமண்ணா இயக்கியிருந்தார். ஜெய்சங்கர், ஜெயலலிதா ஜோடியுடன் சச்சு, கே.எஸ்.ஜெயலட்சுமி, மனோகர் ஆகியோரும் நடித்திருந்தனர். தெலுங்கில் லட்சுமி நடிப்பில் இதே படம் வெளியானது. இந்தி சூப்பர் ஸ்டாராக அமிதாப் பச்சன் உயர காரணமாக அமைந்த படம் ‘ஜன்ஜீர்’. இந்த படத்தின் ரீமேக்கில் அமிதாப் வேடத்தில் புரட்சித் தலைவர் நடித்தார். எஸ்.எஸ்.வாசனின் மகன் எஸ்.எஸ்.பாலன் இயக்கினார். லதா ஹீரோயின்.

ரூ.7 கோடி சம்பளம் கேட்கும் வித்யாபாலன்: தயாரிப்பாளர் அதிர்ச்சி!!!

Thursday,January 05, 2012
நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்ததால் கவர்ச்சி காட்ட வித்யா பாலனுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. மேலும், கவர்ச்சி வேடங்களை தவிர்த்தும் வந்தார். இந்நிலையில், சில்க் ஸ்மிதா கதையாக உருவான ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடிக்க கேட்டபோது ஒப்புக்கொண்டார். படுகவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஓவர் கவர்ச்சியாக இவர் நடித்ததை எதிர்த்து ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி எப்ஐஆர் பதிவு செய்யும்படி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ‘தி டர்ட்டி பிக்சர்’ படம் வெளியாகி ஹிட்டானதையடுத்து பாலிவுட் தயாரிப்பாளர்கள் வித்யா பாலன் கால்ஷீட் கேட்டு படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். இதையடுத்து தனது சம்பளத்தை ரூ.7 கோடியாக உயர்த்தி இருக்கிறார் வித்யா பாலன். இந்தியில் இவ்வளவு பெரிய சம்பளத்தை ஒரே படம் ஹிட்டானதும் யாரும் கேட்டதில்லை என்பதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடுவிரலை உயர்த்திக் காட்டிய சோனம் கபூர்!!!

Thursday,January 05, 2012
பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது தனது நடுவிரலை உயர்த்திக் காட்டி அனைவரையும் அதிர வைத்தார் இந்தி நடிகை சோனம் கபூர். பிளேயர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார் சோனம் கபூர். இப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடந்தது. அதில் கலந்து கொள்ள வந்த சோனம் கபூர், பிரஸ் மீட் முடிந்து கிளம்பியபோது தனது நடுவிரலை உயர்த்திக் காட்டி அனைவரையும் அதிர வைத்தார். நடுவிரலைக் காட்டியது குறித்து சோனத்திடம் கேட்டபோது, நடுவிரலைக் காட்டுவது என்பதில் எந்த விசேஷமும் இல்லை. இன்றைய இளைஞர்களின் மொழியாக அது உள்ளது. ஒருவரது பேச்சு அல்லது செயல் பிடிக்காவிட்டால் நடுவிரலைக் கொள்வது சகஜமானதுதான்., இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பிரச்சினையாக்கக் கூடாது. அதுவும் கலை, திரைப்படங்களில் ஈடுபட்டிருப்போருக்கு இதெல்லாம் சாதாரணம். மேலும் இந்தியா பேச்சு, கருத்து சுதந்திரத்திற்குப் பெயர் போனது. அப்படிப்பட்ட நாட்டில் நான் நடுவிரலைக் காட்டியதை பெரிதாகப் பேசுவது வியப்பாக உள்ளது என்றார்.

கொலவெறி அனிருத்தின் அநியாய அடக்கம்!!

Thursday,January 05, 2012
உலகின் சந்து, பொந்துகளில் எல்லாம் ஒலி(ளி)த்து கொண்டிருக்கும் பாடல் என்றால், அது கொலவெறி தான். ஒரே பாட்டிலேயே உலகம் முழுவதையும் தன் பக்கம் திரும்ப வைத்த கொலவெறி பாடலின் இசையமைப்பாளர் அனிருத், ரொம்பவே அடக்கமாக, அமைதியாக இருக்கிறார். 3 படத்தின் தற்போதை நிலை என்ன என்று அனிருத்திடம் தொலைபேசியில் பேசினோம். மும்பையில் இருந்த அவர் கூறுகையில், தற்போது படத்திற்கு பின்னணி இசை சேர்க்கும் பணி நடந்து வருகிறது. பிப்ரவரி முதல்வாரத்தில் படம் திரைக்கு வரலாம் எனத் தெரிகிறது என்றார்.

ஒரே பாட்டில் ஓஹோன்னு பாராட்டும், நிறைய ரசிகர்களும் கிடைச்சாச்சு போல என்று கேட்டதும், அப்படி எல்லாம் நான் எடுத்துக்கல, எப்பவும் போல என்னுடைய வேலையை பார்த்துக்கிட்டு இருக்கேன் என்கிறார் அடக்கமாய்.

முதல் படம் வெளிவருவதற்கு முன்பே இந்தி படங்களிலும் வாய்ப்பு வந்துள்ளதே என்று கேட்ட போது, இம்மாதம் மட்டும் நிறைய புதுப்பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. படத்தை தேர்ந்தெடுப்பதில் ரொம்ப கவனமாக உள்ளேன். இந்தியில் கே.எஸ்.ரவிக்குமார் சார் இயக்கும் படம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் வேறு ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். இதைத்தவிர தமிழில் ஒரு படமும், தெலுங்கில் ஒரு படமும் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளேன் என்றார்.

அனிருத்திடம் பேசியதில் இருந்து, எவ்வளவு பெரிய வெற்றி கிடைச்சாலும், புகழ் அடைந்தாலும் அதை தலையில் ஏற்றி கொண்டாடமால், பார்க்கும் வேலையை மட்டும் ரொம்ப கவனமாக சிறப்பாக செய்ய வேண்டும் என்பது மட்டும் புரிகிறது.

அதிக தமிழ் படங்களில் நடிக்க ஆசையில்லை!

Thursday,January 05, 2012
சென்ற வருடம் தமிழில் ஹன்சிக்காவிற்கு சிறப்பான வருடமாக அமைந்து. விஜய், ஜெயம் ரவி, தனுஷ் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் ஹன்சிகா. தற்போது அவரை தேடி நிறைய தமிழ் படங்கள் வருகிறதாகவும், ஆனால் வரும் ஒரு சில வாய்ப்பினை மட்டும் ஹன்சிகா ஏற்றுக் கொள்வதாகவும் செய்திகள் வெளியாகின. இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஆசையில்லை, காரணம் தமிழில் நான் நல்ல பெயர் எடுக்க வேண்டும், நிறை தமிழ் பட வாய்ப்புகள் வந்தாலும், எல்லாவற்றையும் ஒப்புக் கொள்வதில்லை. நல்ல கதைக்கு மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். இதனால் தான் நிறைய தமிழ் படங்கள் நடிப்பதை விட பெயர் நடிகையாக இருக்க விரும்புகிறேன்' என்று கூறினார்.

முதன்முறையாக சினிமா படத்தின் ஆடியோ சி.டி.யை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வெளியிட்டுள்ளார்!!!

Thursday,January 05, 2012
முதன்முறையாக சினிமா படத்தின் ஆடியோ சி.டி.யை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வெளியிட்டுள்ளார். வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகி இருக்கும் புதிய படம் கிருஷ்ணவேணி பஞ்சாலை. இப்படத்தை தனபால் என்பவர் இயக்கியுள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். பொதுவாக ஒரு படத்தின் ஆடியோ விழாவை பிரம்மாண்டமாக வெளியிட்டு வரும் இந்தக்கால கட்டத்தில் ரொம்பவே எளிமையாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தியுள்ளனர்.

பொதுவாக எந்த சினிமா விழாவிலும் பார்க்க முடியாத மனிதரான நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், தான் இப்படத்தின் ஆடியோ சி.டி.யை வெளியிட்டுள்ளார். ஸ்டுடியோ அல்லது திரையரங்கில் விழா வைத்தால் அப்துல் கலாம் வரமாட்டார் என்பதால், நேராக அவர் தங்கியிருக்கும் விருந்தினர் இல்லத்துக்கே போய், அவர் கையால் வெளியிட வைத்து வாழ்த்துப் பெற்றுள்ளனர் படக்குழுவினர்.

காதலில் விழுந்தார் நமீதா!!

Thursday,January 05, 2012
நடிகை நமீதா தற்போது மும்பையைச் சேர்ந்த வக்கீல் ஒருவரை தீவிரமாக காதலித்து வருகிறாராம். நமீதா,அவரது முன்னாள் பாய் பிரெண்ட் பரத் கபூருடன் ஏற்பட்ட மனக்கசப்புக்குப் பின்னர் எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது அவர் வக்கீல் ஒருவரின் காதல் வலையில் விழுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

அண்மைக்காலமாக திரைப்படங்களில் நமீதாவிற்கு அதிக வாய்ப்பு இல்லை. இதனால் நமீதா கட்டுமான தொழிலதிபராக மாறினார். மும்பையில் ஒரு பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் அவரது பணத்தை முதலீடு செய்துள்ளாராம் நமீதா. நமீதாவின் இந்த பிசினஸ் விஷயங்களில் அறிவுரை கூறி, ஆலோசனை வழங்கி எல்லா முயற்சிகளிலும் கூடவே இருந்து நல்வழி காட்டிய மும்பையைச் சேர்ந்த அந்த இளம் வக்கீல் தான் தற்போது நமீதாவின் மனம் கவர்ந்த காதலர் எனக் கூறப்படுகிறது. விரைவில் நமீதாவுக்கு டும் டும் டும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனி என் வழி... சூப்பர் ஸ்டார் வழி : சந்தானம்!

Thursday,January 05, 2012
2011ல் வெளிவந்த முன்னணி ஹீரோக்களின் 70% படங்களில் காமெடியனாக சந்தானம் நடித்த படங்கள் தான் அதிகம். சூப்பர்ஸ்டார் முதல் சிம்பு, விக்ரம், கார்த்தி. ஜீவா என அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் சந்தானத்தின் காம்பினேஷன் சென்ற வருடம் காமெடியில் அசத்தியது. அதே போல் இந்த வருடமும் சந்தானத்திறகு சூப்பரான வருடம் போல இருக்கு, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', சகுனி, வேட்டை மன்னன் என இப்போதே 15 படங்கள் கையில் உள்ளன. இப்படி பிசியாக இருக்கும் சந்தானம், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழியை பின்பற்ற போகிறாராம். அது என்ன வழி தெரியுமா?... ஆன்மீகம் தான்-!. சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகனாக இருக்கும் சந்தானம், இனி டைம் கிடைக்குபோது ஆன்மீகத்தில் ஈடுபடப் போவதாக கூறியுள்ளார். 'ரஜினி சார் ஆன்மீகத்தில் அதிகம் கவனம் செலுத்துவதால் தான் புகழின் உச்சிக்கு சென்றாலும், எளிமையாக, அத்தனை பேருக்கும் வழிகாட்டியாக அவர் இருக்கிறார்' என சந்தானம் சூப்பர் ஸ்டாருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

காலாவிதியான மார்க்கெட் : விட்ட மார்க்கெட்டை பிடிக்க பிரசாந்த் முயிற்சி!

Thursday,January 05, 2012
தமது திருமண வாழ்க்கையால், தன் வாழ்வையும், சினிமா மார்க்கெட்டை தொலைத்த பிரசாந்த், விட்ட மார்க்கெட்டை பிடிக்க தீவிர முயிற்சியில் இறங்கியுள்ளார். அதுமட்டுமின்றி தான் ஒரு நல்ல நடிகர் என்பதை மம்பட்டியான் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் பிரசாந்த். தற்போது தன் கையில் மூன்று படங்களை கையில் வைத்திருக்கும் பிரசாந்த் மீண்டும் வெளி இயக்குனர்களிடம் கதை கேட்க ஆரம்பித்துவிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, 'அடுத்து மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கேன். மூணுமே பெ‌ரிய இயக்குனர்களின் படங்கள். அவர்களே அந்தப் படங்களைப் பற்றி கூறுவார்கள் என்பதால் இப்போது அதுபற்றி நான் பேசப் போவதில்லை. இந்த மூன்றுப் படங்களையும் முடித்தப் பிறகு மீண்டும் என் தந்தை இயக்கத்தில் நடிப்பேன்.' என்று கூறினார்.

ரூ 1.5 கோடி மோசடி: புவனேஸ்வரி மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Thursday,January 05, 2012
சென்னை: தொழிலதிபரிடம் ரூ.1.5 கோடி கடன் வாங்கிவிட்டு, அதை கொடுக்காததாக தாக்கல் செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில், கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.கே.நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர்.குருநாதன் தாக்கல் செய்த மனுவில், "நான் கட்டிட உள்அலங்காரப் பணி தொடர்பான காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறேன். எனக்கு சில ஆண்டுகளாக சம்பூர்ணா என்பவர் நண்பராக உள்ளார். இவர் அஷ்டலட்சுமி பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்.

டி.வி. நடிகை டி.புவனேஸ்வரியை, சம்பூர்ணாதான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து நானும், புவனேஸ்வரியும் நண்பர்கள் ஆனோம். என்னிடம் அதிக பணம் புழங்கியதை புவனேஸ்வரி தெரிந்து கொண்டார்.

எனவே எனது நட்பை பயன்படுத்திக்கொண்டு என்னிடம் கடன் கேட்டார். தொலைக்காட்சி தொடர் தயாரிக்கப்போவதாகவும், அதற்கு பணத்தை கடனாகத் தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அவரது வார்த்தையை நம்பி, நானும் எனது எனது நண்பர் வட்டாரத்தில் கிடைத்த பணத்தையும் சேர்த்து புவனேஸ்வரிக்கு கடன் கொடுத்தேன்.

கடந்த 2010 ஆகஸ்டு மாதம் முதல் 2011 ம் ஆண்டு தொடக்கம் வரை ரூ.1 கோடியே 50 லட்சம் தொகையை கடனாக கொடுத்தேன். ஆனால் அவர் தொலைக்காட்சி தொடர் எதையும் எடுக்கவில்லை என்று தெரிந்தது. எனவே கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டேன்.

இதனால் என்னுடன் பேசுவதைத் தவிர்த்தார். நான் போன் செய்தால் புவனேஸ்வரி பேசுவதில்லை. பணம் கேட்க சென்றால், சட்டவிரோதமான நடவடிக்கைகள் மூலம் அவர் தப்பிவிடுவார். கடனை திருப்பிக்கேட்டதால், சில சமூகவிரோதிகளை வைத்து எனக்கும், எனது குடும்பத்துக்கும் அச்சுறுத்தல் தருகிறார்.

அவர் ஒரு கட்சியில் செயலாளராக இருப்பதால் அவருக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது. அதை பயன்படுத்தி, கடனை திருப்பித் தருவதைத் தவிர்க்கிறார்.

இதனால் வேறு வழியில்லாமல் கே.கே.நகர் போலீசில் கடந்த 29.8.11 அன்று புவனேஸ்வரி மீது புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் விசாரணை எதுவும் மேற்கொள்ளவில்லை. எனவே எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்து, புவனேஸ்வரியை விசாரிக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும்", என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி மதிவாணன் விசாரித்தார். விசாரணை முடிவில், "மனுதாரரின் புகாரின் அடிப்படையில், புவனேஸ்வரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். அவர் மீது குற்ற முகாந்திரம் இருப்பது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவர் மீது இன்னும் 6 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். மனு முடித்து வைக்கப்படுகிறது," என்று தீர்ப்பளித்தார்.