Wednesday, April 18, 2012

சல்மான்கானை மீண்டும் இயக்குவேன் - பிரபுதேவா!!!

Wednesday,April,18, 2012
ஐபிஎல் தொடக்க விழாவில் ஆர்ப்பாட்டமாக பிரபுதேவா மைடயில் ஆட, பேக்ஸ்டே‌ஜில் புதிய படத்துக்கான வாய்மொழி ஒப்பந்தம் சத்தமில்லாமல் அரங்கேறியது.

இந்த விழாவுக்கு தனது குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார் பிரபுதேவா. சல்மான்கானின் ரசிகர்களான அவர்களுக்கு அவரை சந்தித்ததில் அளவற்ற மகிழ்ச்சி. அத்துடன் அடுத்தப் படம் குறித்தும் பேசியிருக்கிறார்கள். சல்மான்கானின் அடுத்தடுத்த மாஸ் ஹிட்களுக்கு அடித்தளம் இட்ட படம் பிரபுதேவா இயக்கிய வான்டட். தற்போது அக்சய்குமார் நடிக்கும் ரவுடி ரத்தோர் படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா.

ஐபிஎல் விழாவில் சந்தித்துக் கொண்ட போது மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து இருவரும் பேசியிருக்கிறார்கள். இதுபற்றி பேட்டியளித்த பிரபுதேவா, சல்மான்கானுடன் இணைந்து மீண்டும் கண்டிப்பாக படம் செய்வேன். ஆனால் அடுத்தப் படமாக அது இருக்காது. ச‌ரியான ஸ்கி‌ரிப்ட் அமைந்ததும் மீண்டும் இணைவோம் என்று தெ‌ரிவித்திருக்கிறார்.

யோஹான் தொடரும்” கௌதம் மேனன் திடீர் முடிவு!!!

Wednesday,April,18, 2012
விஜய் நடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்தாலும், துப்பாக்கி முடிந்ததும் விஜய் யார் படத்தில் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த யோஹான்-அத்தியாயம் ஒன்று படம் காரணம் சொல்லப்படாமல் நிறுத்தப்பட்டது.

சீமான் இயக்கத்தில் பகலவன் என்ற படத்தில் விஜய் நடிக்கப் போவதாக கூறப்பட்டாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் பாடல்கள் வரை முடித்துவிட்ட கௌதம்மேனன் தனது அடுத்த படத்தி பற்றி கூறியுள்ளார்.

இதை பற்றி பேசிய கௌதம் மேனன் “ யோஹான் கதை முழுமையாக தயாராகிவிட்டது. விஜய் இப்போது நடித்துக்க்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தை முடித்ததும் யோஹான் படம் துவங்கப்படும். இந்த படத்தில் நடிக்கும் ஒரே தமிழன் விஜய் தான். ஹீரோயின் ஒரு இந்தியப் பெண். மற்ற நடிகர்களும் நடிகைகளும் வெளிநாட்டவர்கள் என்றாலும் இது ஒரு தமிழ் படம் தான். இந்த படம் ஆங்கில சப்-டைட்டில்களுடன் உலகம் முழுவதும் வெளியிடப்படும்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். யோஹான் கதாபாத்திரத்தை நான் முழுமையாக வெளிக்கொண்டு வந்தாலோ, யோஹானை மக்கள் ஏற்றுக்கொண்டாலோ ஜேம்ஸ் பாண்ட் படம் போல யோஹான் பாகம்-2,3,4 என தொடர்ச்சியாக வெளிவரும்” என்று கூறினார்.

மற்ற படங்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டாலும் விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மட்டும் தொடர்ந்து நடக்கிறது என்று விஜய்யின் தந்தையும், தயார்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது சில தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டியிருப்பதால் விஜய் நடிக்கும் அடுத்தடுத்த படங்களுக்கு இதனால் எதுவும் பாதிப்பு வருமா என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

மயக்கம் என்ன படத்தில் நடித்த ‌ரிச்சாவின் கதை ஞானத்தை பார்த்து புல்ல‌ரித்துப் போயிரு‌க்கிறது திரையுலகம்!!!

Wednesday,April,18, 2012
மயக்கம் என்ன படத்தில் நடித்த ‌ரிச்சாவின் கதை ஞானத்தை பார்த்து புல்ல‌ரித்துப் போயிரு‌க்கிறது திரையுலகம்.

ஒஸ்தி, மயக்கம் என்ன படங்களுக்குப் பிறகு தமிழில் எந்தப் படத்திலும் கமிட்டாகவில்லை ‌ரிச்சா. பொழுதுபோகாத நிருபர் இது குறித்து கேட்டதற்கு ஸ்கி‌ரிப்ட் பிடிக்காததால்தான் தமிழ்ப் படத்தில் நடிக்கவில்லை, இதுவரை எட்டு கதைகள் கேட்டேன் ஒன்றுமே பிடிக்கவில்லை என்றிருக்கிறார். அத்துடன் நிறுத்தியிருக்கலாம். வங்க மொழியில் ஒரு படம் நடிப்பதாக‌த் தெ‌ரிவித்திருக்கிறார். அந்த வங்க மொழிப் படம் எது தெ‌ரியுமா?

கவர்ச்சி உடையில் ராதிகா ஆப்தே- ரசிகர்கள் கலாட்டாவால் ஷூட்டிங் பாதிப்பு!!!

Wednesday,April,18, 2012
நடிகைகள் முழுசாக போர்த்திக் கொண்டு வந்தாலே, ரசிகர்கள் உற்சாகம் தாங்காது. இதில் குட்டைப் பாவாடையும் தம்மாத்துண்டு மேலாடையும் அணிந்து வந்தால், அவர்களை அடக்க முடியுமா...

முடியாமல்தான் போனது, வெற்றிச் செல்வன் ஷூட்டிங்கில்.

அஜ்மல், ராதிகா ஆப்தே ஜோடியாக நடிக்கும் படம் 'வெற்றிச் செல்வன்'. இதன் படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. பஹல்காம் பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது ஏராளமான ரசிகர்கள் படப்பிடிப்பை காண திரண்டார்கள். அப்போது ராதிகா ஆப்தே குட்டை பாவாடையும் சின்ன மேலாடையும் அணிந்து கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தாராம்.

அவரை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமடைந்து, ஆரவாரம் செய்தனர். செல்போனிலும் கேமராவிலும் அவரது கவர்ச்சியை சிறைப்பிடிக்க ஆரம்பித்தனர்.

இதனால் படப்பிடிப்பு பாதித்தது. படம் எடுக்க வேண்டாம் என்று ரசிகர்களை தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த கூட்டத்தினர், படப்பிடிப்பு குழுவினரை அடிக்கப் பாய்ந்தனர். மிரட்டவும் செய்தார்கள். மொழிபுரியாத இடத்தில் வசமாக மாட்டிக் கொண்டேமே என கலவரமாகிவிட்டனர்.

அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க ராதிகா ஆப்தேவை பாதுகாப்பாக அழைத்து கேரவேனில் ஏற்றினர். படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். வேறு இடத்தில் படப்பிடிப்பு மீண்டும் அமைதியாக நடந்தது.

இதுகுறித்து அஜ்மல் கூறும்போது, ''படப்பிடிப்பை காண வந்த கூட்டத்தில் சிலர் அநாகரீகமாக நடந்து கொண்டது உண்மைதான். நட்பாக பழகியவர்களும் அந்த கூட்டத்தில் இருந்தனர்,'' என்றார்.

வடக்கு, தெற்கு என்ற பேதமில்லாமல் ரசிகர்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் போலிருக்கிறது!

இந்திரா கல்லூரியில் கலைவிழா நடிகர் ஜீவா பங்கேற்பு!!!

Wednesday,April,18, 2012
திருவள்ளூர் அடுத்த பாண்டூரில் உள்ள இந்திரா பொறியியல் கல்லூரியில் எக்டசி 2012 கலைவிழா கல்லூரி தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்திரா முன்னிலை வகித்தார். விழாவில் திரைப்பட நடிகர் ஜீவா கலந்து கொண்டு கலாச்சார விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

இந்தியாவில் நிறைய வேலை வாய்ப்பு உள்ளது. சம்பளமும் அதிகம் கிடைக்கிறது. எனவே படித்து முடித்தவுடன் வேலைக்காக நீங்கள் வெளிநாடு செல்லாமல் நம் நாட்டிலேயே சேவை செய்ய வேண்டும்.

இவ்வாறு ஜீவா பேசினார்.

மாணவ - மாணவிகள் வேண்டுதலுக்கு இணங்க மேடையில் ஜீவா ஒரு பாட்டு பாடினார். மேலும் பல போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

இவ்விழாவில் இயக்குனர் அமுதன், நடன இயக்குனர்கள் காய்திரி ரகுராம், தருண்குமார், நடிகர்கள் ஆர்த்தி கணேஷ், அஸ்வின் மகந்த், இசை அமைப்பாளர் அனிருத், பாடகர்கள் அர்சித் ஜனனி உள்பட பலர் பங்கேற்றனர். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் விழாவில் நடைபெற்றது.

நானாக வாய்ப்பு கேட்டு யாரிடமும் கெஞ்ச முடியாது : பிரியாமணி கோபம்!!!

Wednesday,April,18, 2012
தமிழில் வாய்ப்பு இல்லாததற்கு நானாக வாய்ப்பு கேட்டு யாரிடமும் கெஞ்ச முடியாது என்றார் பிரியாமணி. இது பற்றி அவர் கூறியதாவது: கன்னடத்தில் இரட்டை சகோதரிகளாக சாருலதா படத்தில் டபுள் ரோலில் நடிக்கிறேன். இதற்கு முன் இருவேடத்தில் நடித்ததில்லை. ஒருத்தி ஜாலியாக ஊர் சுற்றுபவள். இன்னொருத்தி அப்பாவி என இரு வேறுபட்ட குணம் கொண்டவர்கள். ஒரே செட்டில் ஷூட்டிங் நடக்கும். அப்போது அடுத்தடுத்து அதே இடத்தில் காட்சி படமாக்குவார்கள். ஒரு காட்சி முடித்து உடனே காஸ்டியூம் மாற்றிக்கொண்டு வேறு பாடிலாங்குவேஜுடன் நடிக்க வேண்டும். இது கடினமாக இருந்தது. இது எந்த படத்தையும் பார்த்து காப்பியடிக்கவில்லை.

மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்துள்ள படம் வெளிவர உள்ளது. அடுத்து பாலிவுட்டில் நடிக்க உள்ளேன். அங்கு 2 இந்தி படத்துக்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறேன். இதில் ரிதேஷ் தேஷ்முக¢குடன் காமெடி கலந்த கதையில் நடிக்கிறேன். கோலிவுட், டோலிவுட்டில் புதிய படங்கள் எதுவும் நடிக்கவில்லை. கடந்த ஆண்டில் தமிழில் நடித்திருக்கிறேன். அதன்பிறகு நல்ல கதை வரவில்லை. உங்களுக்கு பட வாய்ப்புகள் குறைந்ததற்கு யார் காரணம் என்கிறார்கள். அதுபற்றி எதுவும் கூற முடியாது. மேலும் நானாகவே வாய்ப்பு கேட்டு தயாரிப்பாளர்களை போய் சந்திக்க முடியாது. யாரிடமும் வாய்ப்புக்காக கெஞ்சவும் முடியாது. யாராவது என்னை ஒப்பந்தம் செய்ய வந்தால், அதற்கு முன் என்னால் எந்த கேரக்டர் செய்ய முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Wednesday,April,18, 2012
கே.எஸ்.ரவிகுமாரின் மூத்த மகள் ஜனனிசதிஷ்குமார் திருமணம் மே 3ம் தேதி நடக்கிறது.

தனது மனைவி ஜீவா பெயரில் அறக்கட்டளை தொடங்கி இருக்கிறார் இளையராஜா. இதன் மூலம் ஏழை பிள்ளைகளுக்கு கல்விக்கான உதவி செய்ய நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அவரது மகள் பவதாரிணி செய்து வருகிறார்.

கணேஷ் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கிறார். இதில் ஹீரோயினாக நடிக்க பார்வதி ஓமனகுட்டனிடம் கால்ஷீட் பேச்சு நடக்கிறது.

யுத்தம் செய் படத்தில் நடித்த தீபா ஷா அடுத்து சில்லுனு ஒரு சந்திப்பு படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக தமிழ் பேச பயிற்சி எடுக்கிறார்.

பிருத்விராஜ் அனன்யா நடிக்கும் மும்பை தோஸ்த் படத்துக்கு இசை அமைக்கிறார் வித்யாசாகர்.

பிரபுதேவா பார்ட்டியில் பங்கேற்றது ஏன்? த்ரிஷா பதில்!

Wednesday,April,18, 2012
பிரபுதேவாவின் பார்த்டே பார்ட்டியில் பங்கேற்றது ஏன் என்பதற்கு த்ரிஷா பதிலளித¢தார். பிரபு தேவாநயன்தாரா இடையிலான காதல் சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. இந¢நிலையில் சமீபத்தில் தனது பர்த்டே பார்ட்டியை கொண்டாடினார் பிரபு தேவா. இந்த பார்ட்டியில் திடீரென ஆஜராகி ஷாக் கொடுத்தார் த்ரிஷா. பிரபுதேவாவுடன் நெருக்கமாக இருக்கும் போஸையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி த்ரிஷா கூறியது: தெலுங்கில் எனக்கு பிரேக் தந்தவர் பிரபு தேவா. அவர் இயக்கிய முதல் 2 படங்களிலும் நான்தான் ஹீரோயின். அப்போது முதலே நாங்கள் நல்ல நண்பர்கள்.

இடையில் எப்போது சந்தித்தாலும் சகஜமாக பேசுவோம். நட்பு காரணமாக அவருக்கு பர்த்டே வாழ்த்து கூறுவது எனது கடமையாக நினைத்தேன். அதனால் அவரது பர்த்டே பார்ட்டிக்கு சென்றேன். அதற்குள் ஏகப்பட்ட கட்டுக்கதைகளை எழுதி வதந்தி பரப்புகிறார்கள். இது எனக்கு புதிதல்ல. இது பற்றி நான் கவலைப்படவும் இல்லை. இப்போது சமரன் படத்தில் விஷாலுடன் நடிக்கிறேன். எனது முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. மற்ற விஷயங¢களுக்கு என்னிடம் நேரம் இல்லை. அது பற்றி யோசிப்பதும் கிடையாது. இவ்வாறு த்ரிஷா கூறினார்.

விஜய் படத்தில் நோ சான்ஸ் : சமந்தாவுக்கு கவுதம் மேனன் கல்தா!!!

Wednesday,April,18, 2012
விஜய் படத்தில் நடிக்க சமந்தாவுக்கு வாய்ப்பு தருவதாக கூறி இருந்த கவுதம் மேனன் ஷூட்டிங் தொடங்கும் நேரத்தில் அவரை படத்திலிருந்து ஒதுக்கியுள்ளார். கவுதம் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிறு வேடத்தில் நடித்தார் சமந்தா. அதே நேரம் இதே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அவர்தான் ஹீரோயின். இதையடுத்து நடுநிசி நாய்கள் படத்திலும் அவருக்கு சிறு வேடம் தந்தார். இப்போது கவுதம் 3 மொழிகளில் நீதானே என் பொன் வசந்தம் படத்தை இயக்குகிறார். 3 மொழிகளிலும் சமந்தாதான் ஹீரோயின். இதனால் கவுதமின் பேவரைட் ஹீரோயினாக சமந்தா மாறினார்.

இருவருக்கும் இடையிலான நட்பு தொடர்பாக கோடம்பாக்கத்தில் கிசு கிசுவும் கிளம்பியது. இதற்கிடையே இளம் ஹீரோக்களுடன் மட்டும் நடிக்க தனக்கு வாய்ப்பு தருவதால் கவுதமிடம் சமந்தா கோபித்துக் கொண்டதாக தகவல் பரவியது. இதையடுத்து விஜய்யை வைத்து கவுதம் இயக்கும் யோவான் அத்தியாயம் ஒன்று படத்தில் சமந்தா நடிப்பார் என படக்குழு தெரிவித்தது. இந்நிலையில் யோவான் பட ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது. ஆனால் படத்தில் சமந்தா இல்லை என பட யூனிட் உறுதி செய்துள்ளது. தனது படங்களில் ஒரே நடிகையை தொடர்வதை தவிர்க்கவே யோவானில் சமந்தாவை கவுதம் ஒப்பந்தம் செய்யவில்லை என கூறப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் உயிருக்கு ஆபத்து : போலீஸ் கமிஷனரிடம் இப்ராஹிம் ராவுத்தர் மனு!!!

Wednesday,April,18, 2012
சினிமா தயாரிப்பாளர்கள் இப்ராஹிம் ராவுத்தர், கேயார், முக்தா சீனிவாசன் ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் மனு கொடுத்தனர். பின்னர் இப்ராஹிம் ராவுத்தர் நிருபர்களிடம் கூறியதாவது: பெப்சி, சினிமா தயாரிப்பாளர்களிடையே நடந்த பிரச்னையில் சங்கத்திற்கு எதிராக செயல்பட்டதாக எஸ்.ஏ.சந்திர சேகரன், தேனப்பன், கலைப்புலி தாணு ஆகியோரை 6 மாத காலத்திற்கு நீக்க¤யுள்ளோம். இந்நிலையில் இடைக்கால தலைவராக என்னை உறுப்பினர்கள் நியமித்துள்ளனர். 3 பேரை நீக்கியதால், எங்கள் உறுப்பினர்களுக்கு அடியாட்கள் மூலம் ஆபத்து வர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே எங்கள் உறுப்பினர்களுக்கு போலீசார் தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். சங்கத்திற்கு எதிராக செயல்பட்டதால் தான் 3 பேரும் நீக்கப்பட்டுள்ளார்கள். அதற்கான அதிகாரம் இருப்பதால், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்தின் பில்லா 2-வில் யுவன் சங்கர் ராஜா நடனம்!!!

Wednesday,April,18, 2012
அஜீத் நடிக்கும் 'பில்லா 2' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. டப்பிங், ரீ ரிக்கார்டிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட வேலைகள் நடக்கிறது. பில்லா 2 படத்தின் டிரெய்லர் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இது ரசிகர்களை ஒட்டு மொத்தமாக கவர்ந்துள்ளது.

நடிகர், நடிகைகளும் பாராட்டி உள்ளனர். இந்த நிலையில் பில்லா 2 படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடனம் ஆடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு பாட்டுக்கு மட்டும் அவர் நடனம் ஆடுகிறார். இந்த காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டதாம். ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் இந்த பாடல் காட்சியை எடுத்துள்ளனர்.

சாதாரண இளைஞன் தாதாவாக எப்படி மாறுகிறான் என்பதே படத்தின் கதை. நாயகியாக பார்வதி ஓமனகுட்டன் நடிக்கிறார். சக்ரி டோலட்டி இயக்குகிறார். படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகள் ரஷ்யாவில் படமாகி உள்ளது. மும்பை, ஐதராபாத், சென்னை போன்ற பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.

தமிழ் படத்தில் நடனம் ஆடுகிறார் அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி!!!

Wednesday,April,18, 2012
தமிழ் படத்தில் நடனம் ஆடுகிறார் அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி. கலிபோர்னியாவை சேர்ந்த பாப் பாடகி, டான்ஸர் கேட்டி பெர்ரி, சமீபத்தில் ஐபிஎல் தொடக்க விழாவில் நடனம் ஆடினார். இவரிடம் கருப்பம்பட்டி தமிழ் படத்தில் நடனம் ஆட கால்ஷீட் கேட்டுள்ளனர். இது பற்றி பட இயக்குனர் பிரபு ராஜ சோழன் கூறியதாவது: பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் வசிக்கும் அஜ்மல் தமிழகத்தில் தனது தந்தை வாழ்ந்த ஊரை தேடி வருகிறார். அவருடன் ஹீரோயின் அபர்ணா பாஜ்பாய்க்கு காதல் மலர்கிறது. ஊரை கண்டுபிடித்தாரா? அபர்ணாவுடன் காதல் என்ன ஆகிறது என்பதே கதை. இதன் ஷூட்டிங் பாரிஸ் நகரில் 30 நாட்கள் நடந்தது. இதையடுத்து சென்னை, பழநியில் ஷூட்டிங் நடந்தது.

தந்தை, மகன் என இருவேடத்தில் அஜ்மல் நடிக்கிறார். இப்படத்திற்காக பாலிவுட் இசை அமைப்பாளர் பப்பி லஹரி ஒரு பாடல் பாடி உள்ளார். இதன் ஷூட்டிங் டிஸ்கோ பாணி அரங்கில் நடக்க உள்ளது. இதில் நடனம் ஆடுவதற்காக பிரபல மேற்கத்திய இசை பாடகி கேட்டி பெர்ரியிடம் பேசப்பட்டுள்ளது. கால்ஷீட் இடைவெளியை பொருத்து நடிப்பதாக கூறி இருக்கிறார். இவர் ஐபிஎல் தொடக்க விழாவில் சமீபத்தில் நடனம் ஆடி இருந்தார். அஜ்மலும் இவருடன் டான்ஸ் ஆடுகிறார். இவ்வாறு இயக்குனர் பிரபு ராஜ சோழன் கூறினார்.

ஜெயம் ரவி வீட்டில் நடிகர்களுக்கு விருந்து: ஆர்யா, ஜீவா, சிபிராஜ் பங்கேற்பு!!!

Wednesday,April,18, 2012
நடிகர் ஜெயம் ரவி தனது வீட்டில் நடிகர், நடிகைகளுக்கு விருந்து கொடுத்தார். தனக்கு நெருக்கமானவர்களை மட்டுமே இந்த விருந்துக்கு அழைத்து இருந்தார்.

நடிகர்கள் ஆர்யா, ஜீவா, சிபிராஜ், இயக்குனர் வெங்கட் பிரபு என பலர் இந்த விருந்தில் பங்கேற்றனர். அனைவருக்கும் வித விதமான உணவுகள் பரிமாறப்பட்டன. ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் பிரத்யேகமாக தயார் செய்த உணவு வகைகளை பரிமாறி அசத்தினர்.

இதுகுறித்து சிபிராஜ் கூறும்போது, ஜெயம் ரவி அளித்த விருந்தில் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருந்தது. என் மனைவியுடன் நான் சென்று இருந்தேன். தொழில் சம்பந்தமான மன அழுத்தங்களை ஒதுக்கி வைத்து விட்டு ஒரே இடத்தில் கூடி ஒரே குடும்பத்தினர் போல் அன்பை பகிர்ந்து கொண்டோம். நிறைய பேரை அந்த விருந்தில் சந்திக்க வாய்ப்பு அமைந்தது என்றார். ஜெயம் ரவியை பின்பற்றி மேலும் பல நடிகர்கள் தங்கள் வீடுகளில் நடிகர், நடிகைகளை அழைத்து விருந்து கொடுக்க தயாராகி வருகிறார்கள்.

எஸ்ஏ சந்திரசேகரன், தாணு, தேனப்பனை நீக்கியது சட்டப்பூர்வமானது! - இப்ராகிம் ராவுத்தர்!!!

Wednesday,April,18, 2012
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், பொருளாளர் தாணு, செயலாளர் தேனப்பன் ஆகியோரை சங்க விதிகளின் சட்டப்படிதான் நீக்கியிருக்கிறோம் என பொறுப்புத் தலைவர் இப்ராகிம் ராவுத்தர் தெரிவித்தார்.

ஊதிய உயர்வு தொடர்பாக பெப்ஸி அமைப்பினருக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே நடைபெற்ற பிரச்னையை அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கூடியது.

இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், பொருளாளர் தாணு, செயலாளர் தேனப்பன் ஆகியோரை 6 மாத காலத்துக்கு நீக்கியும் அடுத்த நான்கு மாதத்துக்குள் தேர்தல் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுவரை இப்ராகிம் ராவுத்தர் பொறுப்புத் தலைவராக பதவி வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

எஸ்ஏசி அணி எதிர்ப்பு

இந்த நீக்கத்துக்கு பொருளாளர் எஸ். தாணு கண்டனம் தெரிவித்துள்ளார். தலைவர், பொருளாளர், செயலாளர் ஆகியோர் ராஜினாமா செய்யாத நிலையில் எங்களை அழைக்காமல் நடந்த பொதுக்குழு கூட்டம் எந்த வகையிலும் செல்லாது. இது சட்டப்படி தவறு. இந்தக் கூட்டத்தில் முக்கியப் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொள்ளவில்லை. எனவே எஸ்.ஏ. சந்திரசேகரன் தலைமையிலான சங்கம் அப்படியே செயல்பட்டு வருகிறது. பொதுக்குழு என்ற பெயரில் ஒரு கூட்டத்தினர் எடுத்த முடிவு எங்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என எஸ்.தாணு செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தார்.

சட்டப்படியே நடவடிக்கை

இந்த நிலையில் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு கூடிய அவசரக் கூட்டத்தில் இப்ராகிம் ராவுத்தர், தயாரிப்பாளர்கள் கேயார், கே. ராஜன், முரளிதரன், சத்யஜோதி தியாகராஜன், எடிட்டர் மோகன் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

அவர்கள் கூறுகையில், "தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்ட எஸ்.ஏ. சந்திரசேகரன் தரப்பினரை சிறப்புப் பொதுக்குழு நீக்கியது முற்றிலும் சட்டப்பூர்வமானதே. பொதுக்குழுவில் நாங்கள் மேற்கொண்ட தீர்மானங்களை சட்டப்படி முறையாக பதிவுத்துறைக்கு அனுப்பிவிட்டோம்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஒரு சார்பாக நடந்துகொண்டார். அவர் பேசியது தயாரிப்பாளர்கள் மத்தியில் பிரிவை உருவாக்கும் நோக்கத்திலேயே இருந்தது.

பல படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறாத சூழ்நிலையில் அவருடைய மகன் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு மட்டும் தடையில்லாமல் நடைபெற்று வருவதில் இருந்தே இதை புரிந்துகொள்ளலாம்.

மேலும் பதவியேற்ற ஆறு மாத காலத்தில் மூன்று மாதங்களை விடுமுறையிலேயே கழித்துள்ளார் எஸ்.ஏ.சி. அதோடு சக நிர்வாகிகளிடமும் சங்க ஊழியர்களிடமும் கடுமையாக நடந்து கொண்டார். ஒரே அணியில் உள்ள எங்களிடமே இப்படி நடந்துகொண்டால் ஃபெப்ஸி அமைப்பினரிடம் இவர் எப்படி பேச்சுவார்த்தையை சுமுகமாக நடத்துவார்?

அதனால்தான் அவரையும் அவருக்கு ஆதரவாக செயல்படுபவர்களையும் பொதுக்குழுவைக் கூட்டி நீக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். எஸ்.ஏ. சந்திரசேகரன் தரப்பினரை நீக்கியது பொதுக்குழுவில் கூடிய 292 தயாரிப்பாளர்களின் ஒட்டுமொத்த முடிவு. அதை மாற்ற முடியாது.

இனி நாங்கள் சார்ந்த அணியினர் சார்பாக ஃபெப்ஸி அமைப்பினருடன் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி பிரச்னையை விரைவில் தீர்ப்போம்," என்றனர்.

இந்தக் கூட்டத்தில் ஏராளமான தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

எங்கப்பா மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை என் படம் மீது காட்டுகிறது ஜெ அரசு! - உதயநிதி ஸ்டாலின்!!!

Wednesday,April,18, 2012
என் தந்தை மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியை எனது படங்கள் மீது காட்டுகிறது ஜெயலலிதா அரசு, என தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை:

"நான் தயாரித்து நடித்து திரைக்கு வந்துள்ள 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 7-ம் அறிவு படத்துக்கு, அந்தப் படம் திரையரங்குகளிலிருந்து எடுக்கப்பட்ட பிறகு வரிவிலக்கு அறிவித்து, அந்தப் பலன் யாருக்கும் கிடைக்காமல் செய்தனர்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தைப் பொறுத்தவரை, அரசு நிர்ணயித்துள்ள அத்தனை விதிமுறைகளையும் பூர்த்தி செய்து உரிய முறையில் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளோம்.

சமீபத்தில் கேளிக்கை வரிவிலக்கு கொடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் ஆங்கிலம் கலந்த தமிழ் பாடல் உள்ளது. பாரில் வைத்து திருமணம் நடப்பது போல் காட்சி வருகிறது. இதுபோன்ற திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளித்துவிட்டு, எந்த வித ஆபாச காட்சிகளும், கலாச்சார சீரழிவு விஷயங்களும் இல்லாத, எங்கள் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க மறுப்பது எந்த வகையில் நியாயம்?

வன்முறை அதிகமாக உள்ள மற்றும் ஆங்கில கலப்பு அதிகமாக உள்ள படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களையும் கவர்ந்த, ஆங்கிலக் கலப்பில்லாத 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துக்கு வரிவிலக்கு அளிக்க மறுப்பது என்ன நியாயம்?

இதனால் எனக்கு மட்டும் பாதிப்பு இல்லை. என்னை நம்பி படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ் , ஸ்ருதி நடித்த 3 படத்தால், ஆந்திர வினியோகஸ்தருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஏற்கிறார் ரஜினிகாந்த்!!!

Wednesday,April,18, 2012
நடிகர் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்து ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் சமீபத்தில் வெளியான படம் ‘3’. இப்படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் படம் வெளிவரும் முன்பே உலகம் முழுவதும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால் நஷ்டம் அடைந்திருப்பதாக ஆந்திர சினிமா வினியோகஸ்தர் நட்டி குமார் கூறியுள்ளார். ஆந்திர நாளிதழுக்கு அவர் பேட்டி அளித்தது தொடர்பாக என்டிடிவி இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ‘ஒய் திஸ் கொலவெறிடி’ பாடல் சூப்பர்ஹிட் ஆனதால் ‘3’ படத்தின் தெலுங்கு பட உரிமையை ரூ.4.3 கோடிக்கு வாங்கினேன். ‘தனுஷின் தெலுங்கு மார்க்கெட் ரூ.10 லட்சத்துக்கு மேல் கிடையாது. ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறாய்?’ என்று நண்பர்கள் கேட்டார்கள்.

ரஜினி குடும்பத்தினர் மீது இருந்த நம்பிக்கையாலும் ஐஸ்வர்யா தனுஷ் முதன்முதலாக இயக்கும் படம் மாபெரும் வெற்றி பெறும் என்று நம்பியும்தான் அதிகளவு முதலீடு செய்தேன். மேலும், படத்தின் தோல்விக்கு தனுஷ், ஸ்ருதி, ஐஸ்வர்யா ஆகியோரும் காரணம். படத்தை விளம்பரப்படுத்த ரூ.1 கோடிக்கு அதிகமாக செலவு செய்தேன். ஆனால், பட விளம்பரத்துக்காக கட்டாயம் ஐதராபாத் வருவதாக சொல்லியிருந்த தனுஷும் ஐஸ்வர்யாவும் வரவில்லை. படத்தின் பிரத்யேக காட்சி திரையிட்டபோதும் வரவில்லை என்று நட்டி குமார் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து, நட்டி குமாருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஏற்றுக்கொள்வதாக ரஜினிகாந்தும் ஐஸ்வர்யாவும் ஒப்புக்கொண்டுள்ளனர். ரஜினிகாந்த் தனது ‘பாபா’, ‘குசேலன்’ படங்களால் வினியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்தபோது சொந்தமாக பணம் வழங்கி ஈடுகட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது என என்டிடிவி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சினிமா இயக்குநர்கள் சங்கத்துக்கு புதிய இணையதளம்- வெப் டிவி!!!

Wednesday,April,18, 2012
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கான இணையதளம் புதுப்பொலிவுடன் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. மேலும் வெப் டி.வி. ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிமுக நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர்கள் சங்கச் செயலாளர் அமீர், பொருளாளர் எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், "இயக்குநர் சங்கத்துக்கு என ஏற்கெனவே இணையதளம் இருந்தபோதும் அது முறையாக செயல்படவில்லை.

அதனால் நவீன தொழில்நுட்பத்துடன் ஏராளமான தகவல்களை உள்ளடக்கி புதிய வடிவில் இணையதளத்தைத் தொடங்கியுள்ளோம். www.tantis.in என்ற இந்த இணையதளமும் திரைப்படத்துறை குறித்த செய்திகள் அடங்கிய 24 மணி நேர வெப் டி.வி.யும் வரும் ஏப்ரல் 20-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.

இந்த இணையதளத்தில் திரைப்பட இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் ஆகியோருக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் இருக்கும். இயக்குநர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைவரைப் பற்றிய முழுத் தகவல்களும் இதில் இடம்பெற்றிருக்கும்.

மேலும் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு ஒரு படத்தை எப்படி அனுப்புவது, ஓர் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையேயான ஒப்பந்தம் அமைக்கப்பட வேண்டிய விதம், உறுப்பினர்களுக்கு உள்ள அடிப்படை உரிமை, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், உதவித் தொகை, இயக்குநர் சங்க செயல்பாடுகள் உள்ளிட்ட ஏராளமான தகவல்களும் இதில் இடம்பெற்றிருக்கும்.

24 மணி நேர வெப் டி.வி.யில் டிரெய்லர்கள் இலவசமாகவும், தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதத்தில் விளம்பரங்கள் மிகக் குறைந்த கட்டணத்திலும் ஒளிபரப்பப்படும் என்றனர்.

ட்ரைலராக வழக்கு எண் 18/9 வரும் 20ம் தேதி ஒளிபரப்பாகும்," என்றனர்.

இந்த இணையதளத்தை இயக்குநர்கள் அமீர், ஜனநாதன், எஸ் எஸ் ஸ்டேன்லி, தம்பி துரை, பாலசேகரன், ஜெகன்னாத், வித்யாசாகர், கமலக் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் தொடங்கிவைத்தார். மூத்த சினிமா பத்திரிகையாளரும் நடிகருமான யோகி தேவராஜ் உடனிருந்தார்.

3 பட வியாபாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை - ரஜினி அறிக்கை!!!

Wednesday,April,18, 2012
3 படத்தின் வர்த்தகத்துக்கும் எனக்கும் எந்தவித தொடர்புமில்லை. இதுகுறித்து வெளியானவை பொய்ச் செய்திகள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினி மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்க, மருமகன் தனுஷ் - ஸ்ருதி நடித்த 3 படத்தின் தெலுங்கு வெளியீட்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால, அதை ஈடுகட்டுவதில் உதவ ரஜினி முன்வந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

இது முழுக்க தவறான செய்தி என ரஜினியே தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து ரஜினிகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

எனது மகள் ஐஸ்வர்யா இயக்கி, தனுஷ், ஸ்ருதி நடித்து சமீபத்தில் வெளியான `3' திரைப்படத்தில் வியாபார ரீதியாக என்னை சம்பந்தப்படுத்தி ஒரு பொய்யான செய்தி வெளியாகி உள்ளது. அந்த படத்திற்கும், எனக்கும் வியாபார ரீதியாக எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆகவே திரைப்பட வினியோகஸ்தர்கள் யாரும், என்னை சம்பந்தப்படுத்தி வெளிவரும் பொய்யான செய்திகளை நம்பவேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.