Saturday, May 5, 2012

யுகே-யில் ஓகே ஓகே!!! யுகே-யில் ஓகே ஓகே!!!

Saturday, May, 05, 2012
அறிமுக நடிக‌ர் ஒருவ‌ரின் படம் யுகே-யில் ஐம்பது லட்சங்களைத் தாண்டுவது ஆச்ச‌ரியமானது. அதுவும் ஷங்கர், மணிரத்னம் போன்ற ஸ்டார் இயக்குனர்கள் இல்லாமல் ராஜேஷும், உதயநிதியும் இதனை சாதித்திருப்பது உண்மையிலேயே ஆச்ச‌ரியமானது.

இங்கு வெளியான அதே நாள் யுகே உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் வெளியானது. யுகே-யில் மூன்றாவது வார இறுதியில் ஒரு திரையிடலின் மூலம் 1,207 பவுண்ட்களை இப்படம் வசூலித்துள்ளது. இதுவரை அதன் மொத்த யுகே வசூல் 65,203 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 55.77 லட்சங்கள்.

வழக்கு எண் 18/9 - சிறப்பு விமர்சனம்!!!

Saturday, May, 05, 2012
நடிகர்கள்: ஸ்ரீ, ஊர்மிளா மஹந்தா, மனிஷா யாதவ், மிதுன் முரளி, முத்துராமன், சின்னசாமி

இசை: பிரசன்னா

ஒளிப்பதிவு: விஜய் மில்டன்

தயாரிப்பு: சுபாஷ் சந்திர போஸ் & ரோனி ஸ்க்ரூவாலா

எழுத்து - இயக்கம்: பாலாஜி சக்திவேல்

சம்பிரதாயமான ஒரு பாராட்டை முன்னுரையாகத் தருவது கூட, இந்தப் படைப்பின் இயல்புக்கு விரோதமாகிவிடுமோ என யோசிக்க வைக்கும் அளவு ஒரு நேர்மையான படம் வழக்கு எண் 18/9.

தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தப் போகிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்காமல், சத்தமின்றி அந்த வேலையைச் செய்யும் மிகச் சில படைப்பாளிகளுள் ஒருவர் பாலாஜி சக்திவேல். படங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதில் நம்பிக்கையில்லாத, ஜீவனுள்ள படைப்புகளைத் தருவதை மட்டுமே பிரதானமாகக் கொண்ட இயக்குநர்.

தனது முந்தைய காதல், கல்லூரி படங்களை விட பல மடங்கு உயர்வான ஒரு படைப்பை தமிழ் ரசிகர்கள் கண்முன் வைத்திருக்கிறார்.

காதலும் அந்த உணர்வும் எல்லாவுயிர்க்கும் பொதுவானது. அந்தஸ்துகளுக்கு அப்பால் உயர்ந்து நிற்பது என்பதையும், சட்டம் ஏழைகளுக்கு எப்படி எட்டாத உயரத்தில் நிற்கிறது என்ற பேருண்மையை வெகு எளிதாகவும் சொல்லியிருக்கிறார்.

கதையின் முடிவில் கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தாலும், ஒரு துயருற்ற மனதுக்கு இளைப்பாறக் கிடைக்கும் சிறு மேடை போல அந்த முடிவு அமைந்திருப்பதால் பலத்த கைத்தட்டலுடன் வரவேற்கிறார்கள் ரசிகர்கள்.

கதை?

ஆசிட் வீச்சில் முகம் வெந்து துடித்தபடி மருத்துவமனைக்கு தூக்கி வருகிறார்கள் ஒரு வேலைக்காரப் பெண்ணை. போலீஸ் விசாரணை தொடங்குகிறது. அந்தப் பெண் வேலை செய்யும் வீட்டுக்கு எதிரே நடைபாதைக் கடையில் வேலை செய்யும் இளைஞன் மீது சந்தேகம் என்கிறாள் பெண்ணின் தாய். விசாரிக்கிறது போலீஸ். அந்த விசாரணையில் இளைஞனின் கண்ணீர்க் கதையும் அந்த வேலைக்காரி மீதான காதலும் மட்டுமே தெரியவருகிறது.

அப்போதுதான், அந்தப் பெண் வேலை செய்த வீட்டு எஜமானியின் மகள் வருகிறாள். வேறு ஒரு இளைஞனை விசாரிக்க வேண்டும் என அவள் புகார் கொடுக்க, விசாரிக்கிறது போலீஸ். அந்த விசாரணை வேலைக்காரிக்கு நீதியைப் பெற்றுத் தந்ததா என்பது கொஞ்சம் சினிமா, கொஞ்சம் Poetic Justice கலந்த க்ளைமாக்ஸ்!

இரண்டு கோடுகளாய் பயணிக்கும் இந்தக் கதை, ஒரு புள்ளியில் இணைவதே தெரியாமல் இணைகிறது. திரைக்கதையில் அத்தனை நேர்த்தி.

ஹீரோவின் ப்ளாஷ்பேக் தர்மபுரியின் வறட்சி மிக்க கிராமத்தில் தொடங்குகிறது. அந்த மனிதர்கள், அவர்களின் துயர்மிகு வாழ்க்கை, மண்மூடி மறைந்து போகும் அவர்கள் வாழ்க்கை ஒரு கண்ணீர் அத்தியாயம்.

பெற்றோர் இறந்ததைக் கூட மறைத்துவிடும் அந்த முறுக்குக் கம்பெனி முதலாளி, நடைபாதையில் பசி மயக்கத்தில் வீழ்ந்து கிடப்பவனை எல்லோரும் வேடிக்கை மட்டுமே பார்த்துச் செல்ல, அவன் பசி தீர்த்து, வேலையும் வாங்கிக் கொடுக்கும் ஒரு செக்ஸ் தொழிலாளி, மெல்ல மெல்ல உயிர் விட்டுக் கொண்டிருக்கும் கிராமத்து கட்டைக் கூத்திலிருந்து சினிமா வாய்ப்பு தேடி வரும் சின்னசாமி, நொடியில் குணம் மாறும் அந்த தள்ளுவண்டி சாப்பாட்டுக் கடை முதலாளி, மகளைக் காக்க எல்லோர் மீதும் எரிந்து விழும் வயதான வேலைக்காரி... இவர்கள் அனைவரையும் நாம் அடிக்கடி சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இவர்களுக்குப் பின்னாள் உள்ள கதைகள் நமக்குத் தெரிவதில்லை. காரணம் நமது மனிதாபிமானம் என்பதே ஒரு demonstration effect என்பதால்தான். அடுத்தவர் மெச்சிக் கொள்ள வேண்டும் என்பதுதான் நமது மனிதாபிமானங்களின் உள்ளார்ந்த நோக்கம் இல்லையா! இந்த நோக்கம் இல்லாமல் அணுகினால் நம்மாலும் வேலு, ஜோதி, சின்னசாமிகளைக் காண முடியும்!

இவர் நாயகன், அவர் நாயகி என்றெல்லாம் இனம் பிரித்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை இந்தப் படத்தில். காரணம், ஒரு நிமிடம் வந்து செல்லும் அந்த பஞ்சர் ஒட்டும் பாத்திரம் கூட மனசுக்குள் வந்துவிடுவதுதான். நடித்த அனைவருமே புதுமுகங்கள். ஆனால் அவர்களின் நடிப்பு படத்தையே தூக்கி நிறுத்துகிறது.

நடைபாதை சாப்பாட்டுக்கடையில் வேலை பார்க்கும் வேலுவாக வரும் ஸ்ரீ, வேலைக்காரப் பெண் ஜோதியாக வரும் ஊர்மிளா மஹந்தா, பணக்காரப் பையனாக வரும் மிதுன் முரளி, எஜமானி மகளாக வரும் மனீஷா நால்வரையும் பிரதான பாத்திரங்களில் ஜொலிக்க வைத்துள்ளார் இயக்குநர்.

கூத்துக் கலைஞனாக வரும் சின்னசாமி அசத்தியிருக்கிறார்.

ஆனால் இவர்கள் அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடுகிறார் இன்ஸ்பெக்டராக வரும் முத்துராமன். தமிழ் சினிமாவில் இதுவரை இத்தனை இயல்பாக போலீஸ் வேடத்தைச் செய்ததில்லை.

காட்சிகளை மீறி ரசிகனின் கவனத்தைக் கவர வேண்டும் என்ற பிரயத்தனம் துளிகூட வசனங்களில் இல்லை. அந்த பாத்திரம் தன் இயல்பில் பயன்படுத்தும் சொற்களே வசனங்கள்!

சதா சர்வகாலமும் செல்போனை நோண்டிக் கொண்டே இருக்கும் இளம் பெண்கள், இளைஞர்களுக்கு இந்தப் படம் சொல்லும் எச்சரிக்கை செய்திகள் ஏராளம்.

பார்ப்பவருக்கு, இது பக்கத்து தெருவில் நடக்கும் சமகால நிகழ்வு என்பதை உணர்த்தும் அளவு உறுத்தலில்லாத ஒளிப்பதிவு. அதுவும் ஸ்டில் கேமிராவில். விஜய் மில்டன் பாராட்டுக்குரியவர்.

முதல் முறையாக எந்த பாடலுக்கும் பின்னணி இசை இல்லை. வெறும் பாடல் மட்டும்தான். 'ஒரு குரல் கேட்குது பெண்ணே...' மனதுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

எதற்கெடுத்தாலும் ஈரானிய, மெக்சிகன் படங்களை உதாரணத்துக்கு தேடும் அறிவு ஜீவிகளின் வேலையைக் குறைத்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்!

இந்த வழக்கால் தமிழ் சினிமா தலை நிமிர்ந்தது!

தாய்லாந்து தீவில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய த்ரிஷா - பென்ஸ் கார் பரிசு!!!

Saturday, May, 05, 2012
தனது பிறந்த நாளை இந்த முறை சென்னையி்ல் கொண்டாடவில்லை நடிகை த்ரிஷா. தாய்லாந்து தீவு ஒன்றில் தோழிகளுடன் ஆட்டம் பாட்டம் என அமர்க்களமாகக் கொண்டாடினார்.

த்ரிஷாவுக்கு நேற்று 29வது பிறந்த நாள். வழக்கமாக பிறந்த நாளன்று சென்னையில் ஏதாவது ஒரு அனாதை இல்லத்தில் இருப்பார். மாலையில் உற்சாகமாக பார்ட்டி கொண்டாடுவார்.

இந்த முறை மாறுதலாக, தாய்லாந்து போய்விட்டார். அங்குள்ள தீவு ஒன்றின் கடற்கரையில் மிக ஆடம்பரமாக கேக் வெட்டினார் த்ரிஷா.

இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், "சினிமா துறையில் இது எனக்கு பத்தாவது வருடம். ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எனது கவர்ச்சி பேசப்படுகிறது.

சினிமாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன். என்னைப்பற்றி கிசு கிசுக்கள் வருகின்றன. அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

சொந்த வாழ்க்கையை சினிமாவில் போட்டு குழப்பிக் கொள்ளமாட்டேன். வீட்டுக்கு போனால் சினிமா தொடர்புடைய பலருடன் பேசுகிறேன். ஆனால் என் தோழிகள் சினிமாவை தவிர்த்து திரிஷாவாகவே என்னை பார்க்கின்றனர்.

எனது இந்தப் பிறந்தநாளுக்கான பரிசு மெர்சி டெஸ்பென்ஸ் கார். செம க்யூட்!," என்றார்.

என்னை சில்க் என்று கூறுவது பிடிச்சிருக்கு - பிந்து மாதவி!!!

Saturday, May, 05, 2012
இரண்டுப் படங்களிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டதால் மீடியாவின் பார்வைக்கு மீண்டும் வந்திருக்கிறார் பிந்து மாதவி. கழுகு படத்தில் கடைசியாக நடித்தவர் இப்போதும் தெலுங்கு வாய்ப்புகளை கைவசம் வைத்திருக்கிறார். தன்னைப் பற்றிய அவரது ஓபன் ஸ்டேட்மெண்ட் உங்களுக்காக.

உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்... பிறந்தது, படித்தது, சினிமாவுக்கு வந்தது..?

நான் பிறந்தது ஆந்திராவிலுள்ள மதனப்பள்ளி. அப்பா கமர்ஷியல் டாக்ஸ் டிபார்ட்மெண்டில் அசிஸ்டெண்ட் கமிஷனராக இருந்ததால் திருப்பதி, நெல்லூர், குண்டூர், விஜயவாடா, ஹைதராபாத்னு நிறைய இடங்கள் மாறிகிட்டே இருந்தோம். பிளஸ் ஒன்னுக்கு அப்புறம் சென்னை. என்னுடைய பயோ டெக்னால‌ஜி டிகி‌ரியை வெல்லூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னால‌ஜியில் முடிச்சேன்.

சினிமாவுக்கு வந்தது...?

நான் எப்போதுமே ஒரு ஆவரே‌ஜ் ஸ்டூடண்டாதான் இருந்தேன். என்னோட இன்ட்ரஸ்ட் கல்‌ச்சுரல் ஆக்டிவிட்டீஸ்லதான் இருந்திச்சி. நிறைய கல்‌ச்சுரல் புரோக்கிரா‌மில் கலந்துகிட்டு ப‌ரிசெல்லாம் வாங்கினேன். அப்படியே மாடலிங்குக்கு வந்திட்டேன். முதலில் சரவணா ஸ்டோர்ஸ் சா‌ரி விளம்பரம். டாட்டா கோல்டு விளம்பரத்தில் என்னைப் பார்த்துட்டு இயக்குனர் சேகர் கம்முலாவும், அனிஸ் குருவில்லாவும் நடிக்கக் கூப்பிட்டாங்க. அந்தப் படம்தான் ஆவ‌க்காய் பி‌ரியாணி.

மாடலிங்கிற்கே அப்பா அனுமதிக்கவில்லைன்னு சொல்லியிருக்கீங்க. எப்படி நடிக்க சம்மதம் கிடைச்சது?

மாடலிங் பண்ணப் போறேன்னு சொன்னதுக்கு அப்பா சம்மதிக்கலை. ஆறு மாசம் நானும் அவரும் பேசிக்காம இருந்தோம். அப்புறம்தான் பெர்மிஷன் கிடைச்சது. சினிமாவைப் பொறுத்தவரை சேகர் கம்முலாவின் நல்ல டைரக்டர்ங்கிற க்ளீன் இமே‌ஜ்தான் அனுமதி கிடைக்க காரணம்.

ஆவக்காய் பி‌ரியாணியில் ஊறுகாய் விற்கும் பெண், வெப்பத்தில் விலைமாது, கழுகிலும் கிராமத்துப் பெண் வேடம். இது உங்களின் நகரத்துப் பெண் என்ற ஒ‌ரி‌ஜினல் இமேஜுக்கு முற்றிலும் மாறுபட்டவை இல்லையா?

மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கவே நான் விரும்பறேன். வெப்பம் எனக்கு முதல் தமிழ்ப் படம். முதல் படத்திலேயே விலைமாது கேரக்டர் பண்ணணுமா என்று பலரும் கேட்டாங்க. எனக்கு அது தப்பா தெ‌ரியலை. தபு போன்ற நடிகைகள் அந்த மாதி‌ரி கதாபாத்திரத்தை இப்போதும் செய்ய‌த் தயாராக இருக்காங்க. தவிர நான் நான்கு தெலுங்குப் படங்களுக்குப் பிறகுதான் தமிழில் நடிக்க வந்தேன். முக்கியமான விஷயம் என்னுடைய இரண்டாவது படம் பம்பர் ஆஃப‌ரிலும் அதுமாதி‌ரி ஒரு கேரக்டர்தான் செய்திருந்தேன்.


FILEகழுகு படம் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறதே...?

எல்லா நடிகைகளும் ஆசைப்படடுகிற ஒரு கேரக்டர். எப்போதும் சோகம் ததும்புகிற பார்வை, காதலை வெளியே சொல்ல முடியாத வலின்னு அப்படியே என்னுடைய கேரக்டருக்கு எதிரான வேடம். ரசிச்சு நடித்தேன். உண்மையிலேயே புது அனுபவமாக இருந்தது. நண்பர்கள் படம் பார்த்து பாராட்டிய போது சந்தோஷமாக உணர்ந்தேன்.

சிலக் மாதி‌ரி இருக்கிறீங்க என்ற கமெண்டை எப்படி எடுத்துக்கிறீங்க?

இறந்த பிறகும் இந்தியா முழுக்க தெ‌ரிஞ்ச நடிகை என்றால் அது சில்க்தான். அவரைப் போல் யாராலும் வர முடியாது. சில்க் என்று சொல்வதற்கு எனக்கு தகுதி இருக்கிறதா தெ‌ரியாது. ஆனா அப்படி சொல்லப்படுவதை விரும்பறேன்.

உங்கள் பிளஸ் பாயிண்ட் எது என்று நினை‌க்கிறீங்க?

என்னுடைய கண்கள். அவை பெ‌ரிசா இருப்பதால் ஒரு நடிகையாக உணர்ச்சிகளை கண்களில் கொண்டு வர முடியுது.

நீர்ப்பறவையிலிருந்து திடீரென நீக்கப்பட்டதுக்கு என்ன காரணம்?

அது பற்றி பேச வேண்டாம்னு நினைக்கிறேன். ரொம்ப நல்ல கேரக்டர். அதுபோல் கேரக்டர் அமைந்தால், வாய்ப்பும் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். இப்போதைக்கு இது போதும்.

கோச்சடையானுக்காக தீபிகாவுடன் பரத நாட்டியம் ஆடிய ரஜினி!!!

Saturday, May, 05, 2012
கோச்சடையான் படத்துக்காக சூப்பர் ஸ்டார் ரஜினியும் தீபிகாவும் பரத நாட்டியம் ஆடியுள்ளனர். இந்தக் காட்சி கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளது.

கோச்சடையான் படம், சரித்திரக் கதை. இதில் ஒரு பரதநாட்டியப் பாடல் இடம்பெற்றுள்ளது. சிவபெருமானின் ருத்ர தாண்டவத்துக்கு நிகரான ஒரு பாடல் இந்தப் படத்தில் இடம் பெறுகிறது.

இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கியுள்ள இந்த பாடலுக்கான படப்பிடிப்பு கேரளாவில் நடந்தது. இதில் ரஜினி, தீபிகா படுகோனே இருவரும் பரத நாட்டியம் ஆடினர்.

இந்தி நடன இயக்குனர் சரோஜ்கான் இதற்கான நடனத்தை அமைத்துள்ளார். ரஜினி, தீபிகா இருவருமே சில தினங்கள் ஒத்திகை செய்து பார்த்த பிறகே இந்த நடனக் காட்சியில் நடித்துள்ளனர்.

இது குறித்து டான்ஸ் மாஸ்டர் சரோஜ்கான் கூறுகையில், "தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பணி புரிகிறேன். அதுவும் ரஜினி படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. ரஜினி, தீபிகா படுகோனே இருவரும் இந்த நடனத்துக்காக கடுமையாக உழைத்தனர். குறிப்பாக ரஜினி இதற்கா தீவிரமாக ரிகர்சல் செய்து ஆடினார்," என்றார்.

கோச்சடையான் படம் செப்டம்பர் அல்லது தீபாவளிக்கு ரிலீசாகிறது.

ஐஸ்வர்யா உண்டானாலும் நியூஸு, குண்டானாலும் நியூஸு!!!

Saturday, May, 05, 2012
பிரசவத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் ரொம்ப குண்டாகிவிட்டார் என்பது தான் தற்போது மீடியாக்களில் விவாதிக்கப்படும் ஹாட் டாப்பிக்.

உலக அழகிப் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த ஐஸ்வர்யா ராய் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். பாலிவுட், கோலிவுட், டோலிவுட், பெங்காலி மொழிப்படங்களில் நடித்துள்ளார். அவர் அழகுக்கு மட்டுமல்ல நடிப்பிற்கும் பெயர் போனவர். அபிஷேக் பச்சனை திருமணம் செய்த பிறகும் மார்க்கெட் அடியாகாமல் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார்.

சொல்லப்போனால் திருமணத்திற்குப் பிறகு தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹீரோயின் என்ற இந்தி படத்தில் ஒப்பந்தமான அவர் கர்ப்பமானதால் அதில் இருந்து விலகினார். அவர் பிள்ளையைப் பெற்றெடுப்பதற்குள் மக்களும், மீடியாவும் தான் படாதபாடு பட்டுவிட்டார்கள். அவருக்கு கடந்த நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்து இத்தனை மாதங்கள் ஆகியும் அதன் பெயர் என்னவென்றே தெரியவில்லை. பிரசவத்திற்குப் பிறகு நடிக்காமல், பொது நிகழச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருக்கும் ஐஸ் குண்டாகிவிட்டாராம். இப்போது அது தான் மீடியாக்களில் வலம் வரும் ஹாட் டாப்பிக். கடந்த வாரம் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி கொடுத்த பார்ட்டிக்கு கணவர் அபிஷேக்குடன் சென்ற அவரை யாரோ ஒரு போட்டோகிராபர் புகைப்படம் எடுத்துள்ளார்.

அதில் அவர் குண்டாக வயதானவர் போல் காணப்பட்டுள்ளார். எத்தனையோ நடிகைகள் குழந்தை பெற்ற பிறகு உடனே வெயிட்டைக் குறைத்துள்ளார்கள். அப்படி இருக்கையில் பிரசவம் முடிந்து இத்தனை மாதமாகியும் ஐஸ் ஏன் வெயிட்டைக் குறைக்கவில்லை என்று ஆளாளுக்கு விமர்சித்து வருகிறார்கள்.

மீண்டும் சிக்கென்ற ஐஸை பார்க்கவே முடியாதா என்று பலரும் முணுமுணுக்கின்றனர்.

பிரபு மகனுக்காக தன் 'பாலிஸியை' தளர்த்திய சூப்பர் ஸ்டார்!!!

Saturday, May, 05, 2012
தனிப்பட்ட முறையில் எந்த நடிகரையும் ப்ரமோட் செய்வது ரஜினிக்குப் பிடிக்காத விஷயம். தன் மகள், மருமகன் என யாரையும் அவர் பெரிதாக உயர்த்திப் பேசியதில்லை, பொது மேடைகளில் அல்லது மீடியாவில்.

அவரவர் திறமை, அணுகுமுறை, வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் விதம்தான் அவர்கள் கேரியரை தீர்மானிக்கும் என்பது அவர் கருத்து.

முதல் முறையாக தனது இந்த நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொண்டுள்ளார். அதுவும் சம்பந்தப்பட்ட நடிகரின் நடிப்புத் திறனைப் பார்த்து!

அந்த நடிகர் வேறு யாருமல்ல, நடிகர் திலம் சிவாஜியின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமாக விக்ரம் பிரபு. இவரது கும்கி படத்தின் சில காட்சிகள் ரஜினிக்கு காட்டப்பட்டதாம்.

கேரளாவில் ' கோச்சடையான்’ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய ரஜினி, கடந்த வாரத்தில் ஒரு நாள் காலை, ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து விக்ரம் பிரபுவைப் பாராட்டி ஒரு வீடியோ பேட்டி கொடுத்தார்.

சிவாஜியின் பேரன் என்ற கூடுதல் தகுதி வேறு விக்ரமுக்கு இருப்பதால், ரொம்பவே பாராட்டிப் பேசினாராம் ரஜினி!

சைக்கோவிலிருந்து தமாஷுக்கு தாவி்ய தனுஷ்... சற்குணத்துடன் இணைகிறார்!!!

Saturday, May, 05, 2012
தொடர்ந்து சைக்கோ பாத்திரங்களில் நடித்து வந்ததால், தனுஷ் இமேஜ் கொஞ்சம் ஆட்டங்கண்டுதான் போய்விட்டது. அவரது பேட்டிகளும் கிட்டத்தட்ட அதே ரேஞ்சுக்கு இருக்கவே, நெஜமாலுமே பார்ட்டி இப்படித்தானா என கமெண்டுகள் குவியத் தொடங்கின.

விளைவு... இன்னும் கொஞ்ச நாளைக்கு சீரியஸ் படமே வேணாம்பா... நல்ல சிரிக்கச் சிரிக்க ஒரு கதை வேணும் என்று கேட்டுக் கொண்டிருந்தாராம் இயக்குநர்களிடம்.

அப்போதுதான் களவாணி, வாகை சூட வா புகழ் சற்குணத்தின் ஒரு ஸ்க்ரிப்டைக் கேட்டிருக்கிறார்.

கதையும், அதை சற்குணம் சொன்ன விதமும் களவாணிக்கு நிகராக இருக்கவே, உடனே ஓகே சொல்லிவிட்டாராம் தனுஷ்.

இந்தப் படத்தை தயாரிப்பவர், தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தை எடுத்த கதிரேசன். இப்போதைக்கு வெற்றி மாறன் படம், சற்குணம் படம், பரத் பாலா படம், அடுத்து ஒரு இந்திப் படம்... இதுதான் தனுஷின் லைன் அப்!

விஜய் அசத்தல் ஆட்டம் ... பாராட்டிய அக்ஷய் குமார்!!!

Saturday, May, 05, 2012
அதிலும் அவரது சமீபத்திய படங்களைப் பார்த்தவர்களுக்கு, விஜய்யின் நடனத் திறமையும், அதை அவர் எத்தனை லாவகமாகக் கையாள்கிறார் என்பதும் புரிந்திருக்கும்.

சக நடிகர்கள் அனைவருமே, நடனத்தில் விஜய்யை மிஞ்ச முடியாது என்பார்கள் மேடைகளில்.

இத்தனை நாளும் தமிழ் நடிகர்கள்தான் விஜயின் நடனத்துக்கு ரசிகர்களாக இருந்தனர். இப்போது இந்தி முன்னணி நடிகர்களும் விஜய் நடனத்தை பாராட்டித் தள்ளிவிட்டனர்.

பிரபு தேவா இயக்கும் பாலிவுட் படமான ரவுடி ரத்தோரில் (தமிழில் வந்த சிறுத்தையின் ரீமேக்) ஒரு பாடலுக்கு ஹீரோ அக்ஷய் குமார், இயக்குநர் பிரபு தேவாவுடன் இணைந்து ஆட்டம் போட்டுள்ளார் விஜய்.

நடன இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை, இன்னும் மேம்படுத்தி அழகாக ஆடிய விஜய்யை ஆச்சரியமாகப் பார்த்தாராம் அக்ஷய் குமாரும், உடனிருந்த சக நடிகர்களும்.

சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது!

59வது தேசிய திரைப்பட விருது விழா : அழகர்சாமியின் குதிரைக்கு தங்க தாமரை விருது!!!

Saturday, May, 05, 2012
புதுடெல்லி::அழகர்சாமியின் குதிரை படத்துக்கு தங்க தாமரை தேசிய விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை வித்யா பாலன் பெற்றார். டெல்லியில் 59வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி விருதுகளை வழங்கினார். தமிழில் சிறந்த ஜனரஞ்சக படமாக தேர்வான அழகர்சாமியின் குதிரை படத்துக்கு தங்க தாமரை விருது, மற்றும் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இதில் ஹீரோவாக நடித்த அப்பு குட்டி சிறந்த துணை நடிகருக்கான விருது பெற்றார். வெள்ளி தாமரையும், ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது. விமல், இனியா நடித்த ‘வாகை சூடவா’ சிறந்த தமிழ் படத்துக்கான விருது பெற்றது. உமேஷ் குல்கர்னி இயக்கிய மராட்டிய படம் தியோல்,

பியாரி ஆகிய படங்கள் சிறந்த படங்களுக்கான தேசிய விருதை பகிர்ந்து கொண்டன. இந்த படங்களுக்கு தங்க தாமரையும், இரண்டரை லட்ச ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. சில்க் ஸ்மிதா கதையான தி டர்ட்டி பிக்சர்ஸ் இந்தி படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகை விருதும், தியோல் படத்தில் நடித்த கிரிஷ் குல்கர்னி சிறந்த நடிகருக்கான விருதும் பெற்றனர். பஞ்சாப் மொழி பட இயக்குனர் குர்விந்தர் சிங் (படம் ஆன்கே கியோரி டாடான்) சிறந்த இயக்குனர், ‘ஆரண்யா காண்டம்’ பட இயக்குனர் குமாரராஜா தியாகராஜா சிறந்த புதுமுக இயக்குனர், சிறந்த எடிட்டர் கே.எல்.பிரவீன் (ஆரண்யா காண்டம்) விருதுகளை பெற்றனர். மேலும் சிறந்த ஸ்பெஷல் எபக்ட்டுக்காக ஷாருக்கான் நடித்த ரா ஒன் உள்ளிட்ட படங்கள் விருது பெற்றன.