Tuesday, February 28, 2012

காமெடி நடிகர் எஸ்.வி.சேகரும் மீண்டும் அதிமுகவுக்கு ரிட்டர்ன் ஆகிறார்!!!

Tuesday, February 28, 2012
சென்னை::இயக்குநர் பாக்யராஜைப் போலவே காமெடி நடிகர் எஸ்.வி.சேகரும் கூட மறுபடியும் அதிமுகவுக்கே வரப் போகிறாராம்.

சங்கர மடத்துடன் நெருங்கிய நட்பு வைத்திருப்பவர் எஸ்.வி.சேகர். பாஜகவில் செயல்பட்டு வந்தார். பின்னர் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு மயிலாப்பூர் தொகுதியைத் தூக்கிக் கொடுத்து நிறுத்தி எம்.எல்.ஏ ஆக்கினார் ஜெயலலிதா.

இருப்பினும் காலப் போக்கில் ஜெயலலிதாவிடமிருந்து விலக ஆரம்பித்தார் எஸ்.வி.சேகர். இதற்கு முக்கியக் காரணம் ஜெயலலிதாவைச் சுற்றி இருந்த சசிகலா குடும்பத்தாரின் தலையீடு என்று கூறப்பட்டது. இந்த மன்னார்குடி வகையாறாவைத் தாண்டி மயிலாப்பூர்காரரால் ஜெயலலிதாவை நெருங்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில் அதிருப்தி அடைந்த அவர் கட்சிக்குள் இருந்தபடியே விமர்சித்துப் பேச ஆரம்பித்தார். அப்போது சசிகலாவுடன் ஜெயலலிதா நல்ல நட்பு பாராட்டி வந்ததால் சேகர் மீது கடும் காட்டம் கொண்டார். கட்சிக் கூட்டம், பொதுக்குழு என எதற்கும் சேகர் அழைக்கப்படவில்லை. சட்டசபைக்குள்ளும் கூட சேகரை அதிமுகவினர் ஒதுக்கியே வைத்தனர். அவரை கேள்வி கேட்கக் கூட அனுமதிக்கவில்லை.

இதைப் புரிந்து கொண்ட அப்போதைய ஆளும் கட்சியான திமுக, சபாநாயகர் மூலம் சேகரை சட்டசபையில் பேச வைத்து பிரச்சினையை மேலும் பெரிதாக்கியது. இறுதியில் எஸ்.வி.சேகரை கட்சியை விட்டுத் தூக்கினார் ஜெயலலிதா. கூடவே அனிதா ராதாகிருஷ்ணனையும் போனஸாக கட்சியை விட்டு விரட்டினார்.

இதில் அனிதா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் போய் சேர்ந்தார். திருச்செந்தூர் இடைத் தேர்தலிலும் திமுக சார்பில் நிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்றார். சேகர் அப்படிச் செய்யவில்லை. திமுக தரப்புடன் நட்பு மட்டும் பாராட்டி வந்த அவர் திமுகவில் சேரவில்லை.

இடையில் ராகுல் காந்தியைப் போய்ப் பார்த்து விட்டு வந்தார். ஆனால் காங்கிரஸிலும் அவர் சேரவில்லை. இப்படி பெரும் மர்மமான முறையில் இருந்து வந்த சேகர், சமீபத்தில் சசிகலா கட்சியை விட்டு நீக்கப்பட்டதை சசிப் பெயர்ச்சி என்று கூறி வரவேற்றிருந்தார்.

இந்த நிலையில் பாக்யராஜைப் போல இவரும் அதிமுகவில் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் மார்ச் 2ம் தேதி முதல் இங்கிலாந்தில் ‘கோச்சடையான்’ ஷூட்டிங்!!!

Tuesday, February 28, 2012
வரும் மார்ச் 2ம் தேதி முதல் இங்கிலாந்தில் ‘கோச்சடையான்’ ஷூட்டிங் நடக்கிறது என்றார் சவுந்தர்யா. சூப்பர் ஸ்டார் ரஜினி, லதா தம்பதிக்கு நேற்று 31வது ஆண்டு திருமண விழா. போயஸ்கார்டன் வீட்டில் எளிமையான கொண்டாட்டத்துடன் விழா நடந்தது. நெருக்கமான நண்பர்கள் தம்பதிகளுக்கு வாழ்த்து கூறினார்கள். ஐஸ்வர்யா தனது குழந்தைகளுடன் நேரில் சென்று பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார். இதுபற்றி டுவிட்டரில் ஐஸ்வர்யா கூறும்போது,‘‘ஞாயிறு மாலை அப்பா, அம்மாவுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டேன். 31 ஆண்டுகள் இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து அசத்தி உள்ளனர். இருவரையும் நான் மனமாரா விரும்புகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கோச்சடையான்’ பட பணிக்காக ஹாங்காங் சென்றிருக்கும் ரஜினியின் இளையமகளும், இயக்குனருமான சவுந்தர்யா டுவிட்டரில் கூறும்போது, ‘‘சிறந்த தம்பதிகளாக அம்மாவும், அப்பாவும் வாழ்கின்றனர். கோச்சடையான் பணிக்காக பட குழுவினருடன் ஹாங்காங்கில் இருக்கிறேன். பணிகள் சிறப்பாக நடக்கிறது. மார்ச் 2ம் தேதி முதல் இங்கிலாந்தில் ஷூட்டிங் நடக்கிறது’’ என்று கூறி உள்ளார்.

மணிரத்னத்திற்கு நான் வில்லன் அல்ல: அர்ஜுன்!!!Tuesday, February 28, 2012
மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் தான் வில்லன் இல்லை என்று ஆக்ஷன் கிங் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

ராவணன் படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படம் கடல். இதில் நடிகர் கார்த்திக் மகன் கவுதம் தான் ஹீரோ. சமந்தா நாயகியாக நடிக்கிறார். அர்ஜுனும், மோகன் பாபு மகள் லட்சுமி மஞ்சுவும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்துவும் அவர் மகன் மதன் கார்க்கியும் பாடல்கள் எழுதுகிறார்கள். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் அர்ஜுன் தான் வில்லன் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அதை அர்ஜுன் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

கடல் படத்தில் நான் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இன்னும் ஷூட்டிங் துவங்காததால் படத்தைப் பற்றி வேறு எதுவும் கூற இயலாது. மணிரத்னம் இயக்கத்தில் நான் நடிப்பது இது தான் முதல் தடவை என்பதால் ரொம்ப த்ரில்லாக உள்ளது. இதில் நான் தான் வில்லன் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. கடல் படத்தில் நடிகர் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது தான் எனக்குத் தெரியும்.

இரண்டாவது நாயகனாக நடிப்பதில் பிரச்சனையில்லை. ஏனென்றால் எனக்கு கதாபாத்திரம் தான் மிகவும் முக்கியம். தென்னிந்திய சினிமாவில் பெயர் எடு்த்துவிட்டேன். பாலிவுட்டிலும் ஒரு கை பார்க்கலாம் என்று நினைத்து கதை தயார் செய்து கொண்டிருக்கிறேன். அதில் நான் தான் ஹீரோ என்றார்.

2வது பில்லாவில் கெஸ்டாக வருகிறார் நயன்தாரா?-காதல் முறிவால் விரக்தி: கவர்ச்சி வேடத்துக்கு மாறும் நயன்தாரா!!!

Tuesday, February 28, 2012
பில்லா 2 படத்தில் நயன்தாரா சிறப்பு தோற்றத்தில் வரக்கூடும் என்று கூறப்படுகின்றது.

பில்லா படத்தில் அஜீத் ஜோடியாக நடித்தார் நயன்தாரா. இந்நிலையில் பில்லா 2 படத்தில் அஜீத் ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா கெஸ்ட் ரோலில் வந்து செல்லக்கூடும் என்று கூறப்படுகின்றது.

திரையுலகை விட்டு விலகியிருந்த நயன்தாரா பிரபுதேவாவைப் பிரிந்த பிறகு மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார். ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக நயன் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பில்லா 2 படத்திலும் நயன் வரவிருக்கிறார். அப்படியென்றால் அடுத்தடுத்து 2 படங்களில் தல-நயன் ஜோடியைப் பார்க்கலாம்.

இப்படத்தை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்குகிறார். இதில் அஜீத்தும், தூக்குடு தெலுஙகு படம் மூலம் பிரபலமான மீனாக்ஷி தீக்ஷிதும் சேர்ந்து ஆட்டம் போட்டுள்ள குத்துப்பாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

காதல் முறிவால் விரக்தி: கவர்ச்சி வேடத்துக்கு மாறும் நயன்தாரா!!!

நயன்தாராவும்-பிரபுதேவாவும் காதலை முறித்துக் கொண்டு பிரிந்துள்ளனர். நயன்தாரா மீண்டும் சினிமாவில் குதிக்கிறார். நாகார்ஜூனா ஜோடியாக தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ்ப் படங்களில் நடிக்கவும் பேசிவருகின்றனர். காதல் முறிவு விரக்தியால் கவர்ச்சியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் கேரக்டரை கவர்ச்சியாக உருவாக்கி கதைகளை தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில் 'அஜீத்தின் பில்லா-2' படத்தில் நடிக்க நயன்தாராவை அழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 'பில்லா' படத்தில் அஜீத்துடன் நயன்தாராவும், நமீதாவும் நடித்தனர். அப்படத்தில் நயன்தாரா நீச்சல் உடையில் தோன்றினார். எனவே பில்லா-2 படத்திலும் நயன்தாரா இருந்தால் படம் வெற்றி பெறும் என்று சென்டிமென்டாக படக்குழுவினர் கருதுகின்றனர்.

அவரை கவுரவ தோற்றத்தில் ஓரிரு காட்சியிலாவது நடிக்க வைத்து விடவேண்டும் என்று ஆர்வப்படுகின்றனர். இதுகுறித்து நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதிலும் நயன்தாரா கவர்ச்சியாக தோன்றுவார் என்று தெரிகிறது.

இப்படத்தில் அஜீத் ஜோடியாக பார்வதி ஓமன குட்டன் நடிக்கிறார். சக்ரி டோலட்டி இயக்குகிறார்.

தனுசின் '3' படத்தில் சோகமான முடிவு: கிளைமாக்சை மாற்ற ரஜினி வற்புறுத்தல்?

Tuesday, February 28, 2012
'3' படத்தின் பிரத்யேக காட்சியை பார்த்த ரஜினி படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சோகமாக இருப்பதற்கு பதில் மகிழ்ச்சியாக இருக்குமாறு வைக்கலாமே என்று அறிவுரை கூறியுள்ளார்.

ஒய் தி்ஸ் கொலவெறி, கொலவெறி டி பாடல் மூலம் புகழ் பெற்றது தனுஷ் மட்டுமல்ல அவரது மனைவி ஐய்வர்யா இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள 3 படமும் தான். இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் ரஜினி மகள் படத்தில் கமல் மகள் ஸ்ருதி நாயகியாக நடித்திருப்பது தான். இந்த படம் மார்ச் மாத இறுதியில் ரிலீஸாகிறது.

இந்த நிலையில் '3' படத்தின் பிரத்யேக காட்சியைப் பார்த்த ரஜினி தனுஷ், ஸ்ருதிஹாசன் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக உள்ளதாகவும், ஐஸ்வர்யா சிறப்பாக பணியாற்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கிளைமாக்ஸ் சோகமாக முடிவது மட்டும் ரஜினிக்கு பிடிக்கவில்லை போன்று. அதனால் கிளைமாக்ஸை சந்தோஷமாக முடியும்படி மாற்றலாமே என்று அறிவுறுத்தியுள்ளார். சூப்பர்ஸ்டார் பேச்சுக்கு மறுபேச்சேது. கிளைமாக்ஸை மாற்றுவது குறித்து ஐஸ்வர்யாவும், தனுஷும் ஆலோசித்து வருகின்றனர்.

பள்ளிகள் பாடம் தவிர்த்து நற்பண்புகளையும் கற்றுத் தர வேண்டும்: சினேகா!!!

Tuesday, February 28, 2012
பள்ளிகள், பாடங்களைத் தவிர்த்து நற்பண்புகளையும் கற்றுத் தர வேண்டும் என்று நடிகை சினேகா அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை கொளத்தூர் எவர்வின் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 20ம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை சினேகா பேசியதாவது,

ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டதற்கு ஆசிரியரா, மாணவரா அல்லது பெற்றோர் காரணமா என்று விவாதம் செய்யாமல் இனி இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பது தான் என்னைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு.

பிள்ளைகள் மார்க் குறைவாக வாங்கினால் பெற்றோர்கள் அவர்களைத் திட்டுகின்றனர். இந்த காலத்தில் படிப்பு தவிர பல்வேறு துறைகளில் ஜொலிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இங்கே 2 வயது ப்ரீ கேஜி குழந்தை டிரம்ஸ் வாசித்ததைப் பார்த்து மெய் மறந்து போனேன்.

குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை உள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரிப்பது தான் சில விரும்பத்தகாத காரணங்களுக்கு காரணம். இந்த இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்வது பள்ளிகள் மற்றும் பெற்றோரின் கடமையாகும்.

நான் பள்ளியில் படிக்கையில் எனக்கு ஒரேயொரு ஆசிரியரை மட்டும் தான் பிடிக்கும். எனக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் இடையே கொஞ்சம் இடைவெளி இருந்தது. அந்த இடைவெளி இப்போது அதிகரித்து வருகிறது. மாணவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் படி, படி என்றாலே உங்களுக்கு கோபம் தான் வருகிறது.

எங்கள் காலத்தில் படிப்பு மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது கம்ப்யூட்டர், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலைத்துறை பல்வேறு துறைகளில் உங்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

உங்கள் மீது இருக்கும் அக்கறையில் தான் ஆசிரியர்கள் படி, படி என்கின்றனர். எதையும் விரும்பி செய்தால் தான் அதில் வெற்றி பெற முடியும். எனவே விரும்பிப் படியுங்கள். பள்ளிகள் பாடங்கள் தவிர்த்து மாணவர்களுக்கு நற்பண்புகளையும் கற்றுத் தர வேண்டும் என்றார்.

விழாவில் மாணவ-மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சினேகா பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Tuesday, February 28, 2012
தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தை ரீமேக் தயாரிப்பு பொறுப்பை ஏற்றிருக்கிறார் விஜய். இதில் விக்ரம் பிரபு, கார்த்திகா ஜோடி. புது இயக்குனர் ரமேஷ் இயக்கம்.

சூப்பர் ஹீரோ கதையாக ‘முகமூடி’ படத்தை இயக்கும் மிஷ்கின் பாடல் கம்போசிங்க்காக தனது இசை அமைப்பாளருடன் ஸ்லோவேகியா பறந்திருக்கிறார்.

‘மெரினா’ படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

‘வெடிகுண்டு முருகேசன்’ படத்துக்கு பிறகு அடுத்த கோலிவுட் படத்துக்கு காத்திருக்கும் ஜோதிர்மயி மலையாளத்தில் ‘ஸ்தலம்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

எழில் இயக்கும் ‘மனம் கொத்தி பறவை’ ஏப்ரல் மாதம் ரிலீஸ்.

மீண்டும் சூர்யாவுடன் இணைகிறாரா ஸ்ருதி?!!!

Tuesday, February 28, 2012
இயக்குனர் வெங்கட் பிரபுவின் படத்தில் சூர்யா ஜோடியாக மீண்டும் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதை இயக்குநர் வெங்கட்பிரபு மறுத்துள்ளார்.

ஸ்ருதி ஹாசன் பாலிவுட்டில் லக் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஆனால் லக் அவருக்கு லக்கியாக இல்லை. தமிழில் அவர் அறிமுகமான ஏழாம் அறிவு அவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. சூர்யா-ஸ்ருதி ஜோடியும் நல்ல ஜோடியாக இருக்கிறது என்று பேசப்பட்டது.

இந்நிலையில் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் மீண்டும் சூர்யாவுடன் ஸ்ருதி ஜோடி சேர்வதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து வெங்கட் பிரபுவிடமே கேட்டதற்கு, அவர் கூறியதாவது,

மங்காத்தா வெற்றி பெற்றதையடுத்து மீண்டும் தல அஜீத்தை வைத்து படம் எடுக்கிறீர்களா என்று கேட்கின்றனர். அவரை வைத்து படம் எடுக்க ஆசையாக உள்ளது. ஆனால் அதற்கு நாளாகும்.

தற்போது சூர்யா நடிக்கும் ஆக்ஷன், த்ரில்லர் படத்தை இயக்குகிறேன். இதில் தெலுங்கு ஹீரோ ரவி தேஜாவும் நடிக்கிறார். தற்போது சூர்யாவும், ரவி தேஜாவும் வேறு படங்களில் பிஸியாக இருக்கின்றனர்.

அந்த படங்களை முடித்த பிறகு இந்த படப்பிடிப்புக்கு வருவார்கள். முன்னணி நடிகை ஒருவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். அது ஸ்ருதி தானே என்று பலர் கேட்கின்றனர். சூர்யா-ஸ்ருதி எனது படத்தில் ஜோடி சேர்வதாகக் கூறப்படுவது வெறும் வதந்தி தான் என்றார்.

இந்தி திகில் படத்தில் நடுங்கிய சதா!!!

Tuesday, February 28, 2012
சதா நடித்த இந்தி திகில் படம் தமிழுக்கு வருகிறது. ‘சில காட்சிகளில் நிஜமாகவே நடுங்கிவிட்டேன்’ என்றார் சதா. இதுபற்றி அவர் கூறியதாவது: ‘ஜெயம்’ படம் தொடங்கி ‘அந்நியன்’, ‘பிரியசகி’, ‘வர்ணஜாலம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தேன். பி.வாசு இயக்கத்தில் நடித்த ‘புலிவேஷம்’ சில மாதங்களுக்கு முன் ரிலீஸ் ஆனது. இந்தியில் ‘கிளிக்’ என்ற படத்தில் கிளாமராக நடித்திருக்கிறேன். இது தமிழில் ‘கிளிக் 3’ என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. சங்கீத் சிவன் இயக்கி இருக்கிறார். சினேகா உல்லால், ரியா சென் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இதில் மாடல் அழகியாக நடித்திருக்கிறேன். என் வேடம் கிளாமராகவும், சவாலாகவும் அமைந்தது. திகில் படமான இதில் சில காட்சிகள் நடிக்கும்போது நிஜமாகவே நடுங்கி பயந்திருக்கிறேன்.

புது அனுபவமாக இருந்தது. தமிழ், இந்தி. தெலுங்கு 3 மொழிகளிலும் என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்த துறையில் 90 சதவீதம் திருப்தி இருக்கிறது. ஸ்டார் அந்தஸ்து என்பது என்னைப் பொறுத்தவரை எட்டாக்கனியாக இருக்கவில்லை. பெரிய இயக்குனர், பெரிய நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். நிறைய படங்கள் வந்தாலும் தேர்வு செய்துதான் ஒப்புக்கொள்கிறேன். கமர்ஷியல் ஹீரோயினாக நடிக்கவே விரும்புகிறேன்.

துப்பாக்கியில் 'என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்டாக' வரும் விஜய்!!!

Tuesday, February 28, 2012
இளைய தளபதி விஜய் துப்பாக்கி படத்தில் என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறாராம்.

ஏ. ஆர். முருகதாஸின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் துப்பாக்கி. இதில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கிறார். முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில், திடீரென்று இந்தப் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் விஜயிடம் கேட்டதற்கு, 'படம் ட்ராப்னு வர்ற செய்திகளை நம்பாதீங்க. சீக்கிரமே மீண்டும் தொடங்கிடும். பெப்சி பிரச்சனை போன்றவையெல்லாம் தீர்ந்ததும் படப்பிடிப்பு தொடங்கிடும்" என்றார்.

தற்போது பெப்சி பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்ததையடுத்து தற்போது படப்பிடிப்பு துவங்கியுள்ளது. துப்பாக்கி படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்படுகிறது.

இந்த படத்தில் விஜய் என்ன கதாபாத்திரத்தில் வருகிறார் என்பது இத்தனை நாட்கள் ரகசியமாக வைத்திருந்தனர். இந்நிலையில் அவர் திருடர்களை டொப்பு, டொப்புன்னு சுட்டுத் தள்ளும் என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.

என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிப்பது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழகத்தை ஒரு என்கெளன்டர் பரபரப்புக்குள்ளாகி வருகிறது. இந்த நிலையில் விஜய் வேறு துப்பாக்கியைத் தூக்குகிறார்...!

ஸ்லம்டாக் மில்லினர் தான்வி தமிழ் ஹீரோயின் ஆனார்!

Tuesday, February 28, 2012
ஆஸ்கர் விருது பெற்ற 'ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த தான்வி லோன்கர் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆனார். முன்னாள் பள்ளித் தோழர்கள் சிலர் இணைந்து, யூ அன்ட் மீ புரொடக்ஷன் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கும் படம் 'காதல்தீவு'. இதில் 'அழகி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ராம்சரண் ஹீரோவாகவும் 'ஸ்லம்டாக் மில்லினர்' குழந்தை நட்சத்திரம் தான்வி லோன்கர் ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார்கள். மனோஜ் கே.பாரதி வில்லனாக நடிக்கிறார். மிதுன் ஈஸ்வர் இசை. முகேஷ்ஞானி ஒளிப்பதிவு. 'இது காதல் கதை. அதோடு சுற்றுலாத் தலங்களில் நடக்கும் சில திகிலூட்டும் சம்பவங்களையும் காதலோடு இணைத்து சொல்கிறோம்" என்றார் படத்தை இயக்கும் வெற்றி வீரன். ஹீரோயினாக நடிப்பது பற்றி தான்வி கூறும்போது, "கன்னட படம் ஒன்றில் நடிக்க வந்தபோது வெற்றி வீரன் அறிமுகமானார். அவரது கதைக்கு நான் பொருத்தமாக இருந்ததால் இந்த வாய்ப்பு கிடைத்தது. ஹாலிவுட் படத்தில் நடித்ததால் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டேன். தமிழ் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி மனப்பாடம் செய்கிறேன். 16 வயதில் ஹீரோயினாகியிருக்கிறேன். திறமையை வளர்த்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்" என்றார்.

நம்பிக்கை வைத்தால் வாழ்வில் வெற்றிபெறலாம்: பள்ளி விழாவில் நடிகர் கருணாஸ் பேச்சு!

Tuesday, February 28, 2012
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா மெட்ரிக் பள்ளியின் 8-ம் ஆண்டு விழா நிறுவனர் சின்னத்தம்பி தலைமையில் நடைபெற்றது.

தாளாளர் உதயக்குமார் வரவேற்றார். விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார்.

சாகித்ய அகாடமி உறுப்பினர் தங்கம்மூர்த்தி சிறப்புரையாற்றினார். திரைப்பட நடிகர் கருணாஸ் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் சுசீலா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் கருணாஸ் பேசியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகேயுள்ள தாஞ்சூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவன் நான். நம் மண்ணில் நடக்கும் இந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமை அடைகிறேன். சாதனையளர்களாக இருந்தாலும் சாதிக்க துடிப்பவர்களாக இருந்தாலும் முதலில் உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைக்கவேண்டும்.

அதுபோன்ற நம்பிக்கையை என்மீது நான் வைத்ததால்தான் சினிமாத்துறையில் இன்று உங்கள் முன் கதநாயகனாக நிற்கிறேன். அதேபோல் மாணவர்களும் தங்களின் படிப்பின் மீது நம்பிக்கை வையுங்கள், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கை மீது அவநம்பிக்கை வேண்டாம் நம்பிக்கை மீது நம்பிக்கை வையுங்கள், வாழ்வில் வெற்றி பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் புதுக்கோட்டை நகர்மன்ற துணைத்தலைவர் துணைத்தலைவர் சேட்டு, மாவட்ட பாசறை செயலாளர் ராஜசேகரன், அன்னவாசல் ஒன்றிய செயலாளர் சாம் பரமசிவம், முன்னாள் மாவட்ட செயலாளர் ராமசாமி, இலுப்பூர் தாசில்தார் கருப்பையா, உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், பட்டதாரி ஆசிரியர் வேலுச்சாமி பள்ளி தலைமையாசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா முடிவில் பள்ளி முதல்வர் சாய் விஜயபாரதி நன்றி கூறினார்.