Saturday, January 14, 2012

'பாரி பூரி கக்கூஸ் லாரி என கிண்டல் பண்ணுவதா?' - ஷங்கர் மீது பாரிவேந்தர் பாய்ச்சல்!!

Saturday, January 14, 2012
இயக்குநர் ஷங்கர் பாரிவேந்தர் பெயரை வேண்டுமென்றே கிண்டலடித்து அவமானப்படுத்துவதாக இந்திய ஜனநாயக கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பாரிவேந்தர் என்பவரது உண்மையான பெயர் பச்சைமுத்து. இவர்தான் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் மற்றும் பல தொழில் நிறுவனங்களின் உரி்மையாளர். புதிய தலைமுறை இவரது தொலைக்காட்சிதான்.

தனது பெயரான பச்சை முத்து என்பதை எந்திரன் படத்தில் ஒரு குடிகாரனுக்கு சூட்டிவிட்டார் என ஏற்கெனவே இவர் இயக்குநர் ஷங்கர் மீது குற்றம்சாட்டியிருந்தார் (ஏன், குடிப்பவர்களுக்கு பச்சைமுத்து என்ற பெயர் இருக்கக் கூடாதா என்ன?!!).

இப்போது நண்பன் படத்தில் நாயகன் பாத்திரத்துக்கு பஞ்சவன் பாரிவேந்தன் என பெயரிட்டிருப்பதையும், படத்தில் அந்தப் பெயரில் விஜய் கல்லூரியில் படித்து ஆள் மாறாட்டம் செய்வதுபோல் காட்சி அமைக்கப்பட்டுள்ளதையும், அந்தப் பெயரை கதாநாயகி, பாரிவேந்தராவது பூரிவேந்தராவது என கிண்டலடிப்பதையும் குறை சொல்லி, தனது கட்சியின் சார்பில் அவதூறு வழக்கு தொடரப் போகிறாராம்!

இதுகுறித்து இந்திய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் பி. ஜெயசீலன், சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகார் மனுவில், "எங்கள் கட்சி தலைவர் பாரிவேந்தர் பல லட்சம் மக்களின் நன்மதிப்பை பெற்றவர். எஸ்.ஆர்.எம். கல்வி குழுமம் மூலமாக கல்வி சேவையும் செய்கிறார். ஷங்கர் இயக்கிய “நண்பன்” படத்தில் பாரிவேந்தரை அவதூறு செய்துள்ளார். அந்த படத்தில் ஒரு மோசடி கதாபாத்திரத்துக்கு பாரிவேந்தன் பெயர் சூட்டியுள்ளார்.

இன்னொரு பெண் கதாபாத்திரம் மது போதையில் பாரிவேந்தராவது பூரிவேந்தராவது என்று பேசுவது போன்றும் இன்னொரு இடத்தில் பாரி, பூரி, கக்கூஸ் லாரி என்ற வசனத்தை பயன்படுத்தியும் பாரிவேந்தரை களங்கப்படுத்தி உள்ளார். ஏற்கனவே தனது “சிவாஜி” படத்திலும் வள்ளல் பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை பெயர்களில் கதாபாத்திரங்கள் உருவாக்கி தமிழ் பெண்கள் கருப்பானவர்கள் என சித்தரித்தார்.

“எந்திரன்” படத்தில் ஒரு குடிகாரனுக்கு பச்சைமுத்து என பெயர் சூட்டி அவர் பெண்களிடம் தகாத முறையில் நடப்பதுபோல் காட்சி அமைத்தார். எனவே ஷங்கர் மீதும் தயாரிப்பாளர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அவதூறான வார்த்தைகளை நீக்கவேண்டும்," என்று கூறியுள்ளார்.

நாட்டுல எவ்வளவோ பிரச்சினை... பச்சைமுத்துவுக்கு அவர் பெயரே பிரச்சினை. விட்டா இதுக்கும் வழக்கு போடச் சொல்வாங்க போல!!

பொங்கல் பண்டிகையையொட்டி 6 நாட்களுக்கு திரையரங்குகளில் 5 காட்சிக்கு அனுமதி!

Saturday, January 14, 2012
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக திரையரங்குகளில் ஆறு நாட்களுக்கு, தினசரி, 5 காட்சிகள் நடத்திக் கொள்ள, அரசு அனுமதி வழங்கியுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து நிரந்தர மற்றும் பகுதி நிரந்தர தியேட்டர்களில், பொங்கல் பண்டிகையையொட்டி, 15ம் தேதி 20ம் தேதி வரை, ஐந்து நாட்கள், தினசரி ஐந்து காட்சிகள் நடத்திக் கொள்ளலாம்.

நடமாடும் திரையரங்குகளில், 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் காலை காட்சியும், 18, 19 மற்றும் 20ம் தேதிகளில், மேட்னி காட்சியும் நடத்திக் கொள்ளலாம். கூடுதல் காட்சி குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் கேளிக்கை வரி அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு, அதிகப்படியான ஒரு காட்சி (ஐந்தாவது காட்சி) நடத்திக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

21 வருடங்களுக்கு பிறகு பாரதிராஜாவுடன் கங்கை அமரன்!

Saturday, January 14, 2012
பாரதிராஜா இயக்கத்தில் பாபு, ரமா நடித்த ‘என் உயிர்த் தோழன்’ படம் 90ல் ரிலீசானது. இதில் இளையராஜா இசையில் அனைத்து பாடல்களையும் கங்கை அமரன் எழுதினார். இதையடுத்து 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பாரதிராஜா படத்துக்கு பாட்டு எழுதியுள்ளார். இயக்குனர் அமீர், இனியா, கார்த்திகா நடிக்கும் ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்தை இயக்கி வருகிறார் பாரதிராஜா. இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவரது இசையில் வைரமுத்து, கங்கை அமரன் பாடல்கள் எழுதியுள்ளனர். இதுகுறித்து கேட்டபோது, ‘21 வருடங்களுக்குப் பிறகு பாரதிராஜா படத்துக்கு பாடல் எழுதியது சந்தோஷமான அனுபவம்’ என்றார், கங்கை அமரன்.

...!!!:-நண்பன் படத்திற்கு எதிர்ப்பு : தியேட்டர்கள் அடித்து நொறுக்கம்!

Saturday, January 14, 2012
நண்பன்" படத்தில் ஐ.ஜே.கே., கட்சி தலைவர் பச்சமுத்துவை பற்றி இழிவான வசனம் இடம்பெற்றதாக கூறி, அந்த வசனத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக கட்சியினர், தியேட்டர் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடித்த நண்பன் படம், கடந்த 12ம் தேதி, தமிழகம் முழுவதும் ரிலீசானது. சேலம் நகரில், 11 தியேட்டர்களில், "நண்பன் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பச்சமுத்து பற்றி இழிவான வசனம் இடம் பெற்றுள்ளதாக கூறி, அந்த வசனத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள், ஏ.ஆர்.ஆர்.எஸ். மல்டி பிளக்ஸ் தியேட்டரில் குவிந்தனர். "எங்கள் தலைவர் பற்றிய இழிவான வசனத்தை நீக்க வேண்டும் எனக்கூறி தியேட்டர் முன் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது; போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது ஏற்பட்ட சலசலப்பில், கட்சியினர் சிலர், ஆத்திரத்தில் தியேட்டர் கண்ணாடியை உடைத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் கட்சி தொண்டர்களை சமாதானப்படுத்தி வெளியே இழுத்து வந்தனர்.

போலீஸ் துணை கமிஷனர் ரவீந்திரன் தலைமையில், உதவி கமிஷனர் காமராஜ் மற்றும் போலீஸார், தியேட்டர் முன் குவிக்கப்பட்டனர். பதட்டம் அதிகரித்ததையடுத்து, "தியேட்டரில் மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் ரத்து செய்யப்படும் என, தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது. இதனையடுத்து இந்திய ஜனநாயக கட்சியினர் கலைந்து சென்றனர். மேலும் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கும் வரை தொடர்ந்து ‌போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் கூறினர்.

நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு - ஜெ ஆட்சியில் வரிவிலக்கு பெற்ற முதல்படம்!

Saturday, January 14, 2012
நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு அளித்துள்ளது அரசு. ஜெயலலிதா ஆட்சியில் வரிவிலக்கு பெற்றுள்ள முதல் படம் நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் தலைப்பு வைத்தாலே போதும், வரி விலக்கு உண்டு என்று முன்பு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் தரமற்ற குப்பைப் படங்களும் தமிழில் தலைப்பு வைத்ததற்காக வரி விலக்கு பெற்றன.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதாது... அனைவரும் பார்க்கத்தக்க யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், தரமான படமாக இருக்க வேண்டும். அப்போதுதான் வரிவிலக்கு என நிபந்தனைகள் விதித்தது.

வரிவிலக்கு பெறத் தகுதியான படங்களை தேர்வு செய்ய 22 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது அரசு. இதில் இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு பார்த்து பரிந்துரைக்கும் படத்துக்கே வரிவிலக்கு கிடைக்கும். வரிவிலக்குக்கு படங்களை அனுப்ப ரூ 10000 கட்டணம் உண்டு.

இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் விஜய் நடித்துள்ள நண்பன் படம் இருப்பதால் படத்துக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில், விஜய்யுடன் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் நடிக்க பொங்கலுக்கு வெளியாகியுள்ள இந்தப் படத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் வரிவிலக்கு அறிவித்துள்ளது வசூலை மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா பதவிக்கு வந்த இந்த 7 மாதங்களில் வரி விலக்கு பெற்றுள்ள முதல் படம் நண்பன் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

புயல் பாதித்த மக்களுக்கு மேலும் உதவிகள் - விஜய் அறிவிப்பு!

Saturday, January 14, 2012
புதுவை:புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் உதவிகள் செய்யப் போவதாக நடிகர் விஜய் தெரிவித்தார்.

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுவை மக்களுக்கு இன்று நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. புதுவை சுப்பையா சாலையில் உள்ள குபேர் திருமண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் பகல் 11.45 மணியளவில் புதுவைக்கு வந்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். விஜய்யை பார்த்ததும் அவர்கள் ஆரவாரமாக கோஷமிட்டனர். அவர்களை பார்த்து கையசைத்து மகிழ்ச்சி தெரிவித்த விஜய் விழா மேடைக்கு வந்தார்.

பின்னர் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவரும், புதுவை முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஸ்சிஆனந்த் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச அரிசி, ஆடைகள், போர்வை, பாய், பாத்திரங்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார் நடிகர் விஜய். அப்போது அவர் பேசுகையில், "இந்த நிகழ்ச்சியை முன்கூட்டியே நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதாக இருந்தது. ஆனால் சூட்டிங் காரணமாக என்னால் முன்கூட்டி வரமுடியவில்லை.

நாங்கள் இப்போது அளித்துள்ள உதவி சிறிய அளவிலானது தான். இன்னும் இதுபோன்ற உதவிகளை செய்வோம். அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

முன்னதாக விஜய் புதுவையில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை சுற்றிப்பார்த்து அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

விரைவில் கடலூர் மக்களையும் சந்தித்து உதவி வழங்குவதாக அவர் தெரிவி்த்தார்.