Friday, January 13, 2012

நான் தனுஷை நம்புகிறேன்! - ஐஸ்வர்யா!

Friday, January 13, 2012
சமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான்.

செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ்ருதி. ஆனால் தனுஷ் ஒன்றும் பேசவில்லை. மாறாக அன்று மாலை நடந்த 3 படப்பிடிப்பில் மனைவி ஐஸ்வர்யாவுடன் ஜாலியாக போஸ் கொடுத்திருந்தார் அவர்.

ஆனால் ஒரு மனைவியால் இதுபோன்ற செய்திகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியுமா... ஐஸ்வர்யா கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவே இல்லை. சூப்பர் ஸ்டார் மகள் அல்லவா...

தனுஷ் - ஸ்ருதி விவகாரம் குறித்து அவர் சமீபத்தில் கூறுகையில், "நான் இருப்பது சினிமா துறை. இங்கே அனைத்தையும் எதிர்கொண்டாக வேண்டிய சூழல். ஆனால் தனுஷ் - ஸ்ருதி பற்றி வந்தது வெறும் வதந்திதான். அதில் எந்த உண்மையும் இல்லை. தனுஷை நன்கு புரிந்தவள் நான். அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை, எங்கள் குடும்பத்தின் பக்கபலத்துடன் இதுபோன்ற சோதனைகளைக் கடந்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார் நிதானமாக.

காதல் வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை! ஸ்ருதிஹாசன்

Friday, January 13, 2012
நடிகர் தனுஷ்சுடன் காதல் என்ற செய்திக்கு நடிகை ஸ்ருதிஹாசன் மறுப்பு தெரிவித்துள்ளார். என்னைப் பற்றி வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன், என்று ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். தனுஷ்-சுருதி ஹாசன் ஜோடி 3 படத்தில் நாயகன் & நாயகியாக நடித்துள்ளனர். இந்த படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ்க்கும், ஸ்ருதிஹாசனுக்கும் இடையே காதல் என்ற செய்தி கோடம்பாக்கத்தையே பரபரப்புக்குள்ளாக்கியது. இருவரும் ஜோடியாக பார்ட்டிகளில் பங்கேற்றதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்த காதல் வதந்தியை ஏற்கனவே ஸ்ருதி மறுத்துள்ள நிலையில், மீண்டும் ஒருமுறை மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள புதிய பேட்டியொன்றில், `என்னையும், தனுஷையும் இணைத்து வெளியான தகவல்கள் எதுவும் உண்மை இல்லை. அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. அதை படித்தபோது, காமெடியாக இருந்தது. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எந்த சாட்சியும் இல்லை. ஆதாரம் இல்லாமல், சாட்சி இல்லாமல் எழுதுவது சட்டப்படி குற்றம். எனவே அப்படி எழுதியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன், என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இரண்டு பேர் குடும்பத்தினருக்கும் சமூகத்தில் மரியாதை இருக்கிறது. அப்படி மரியாதைக்குரிய இரண்டு குடும்பத்தினரை பற்றி மட்டரகமான வதந்திகளை பரப்புவது, நாகரீகம் அல்ல. இதற்கு மேல் அந்த விஷயம் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை, என்றும் கூறியிருக்கிறார்.

நண்பன்- சிறப்பு விமர்சனம்!

Friday, January 13, 2012
நடிகர்கள்: விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன், இலியானா, எஸ் ஜே சூர்யா
சவுண்ட் டிசைன்: ரசூல் பூக்குட்டி
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்ஸா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
மக்கள் தொடர்பு: நிகில்
தயாரிப்பு: ஜெமினி பிலிம் சர்க்யூட்
திரைக்கதை- ராஜ்குமார் ஹிராணி - அபிஜித் ஜோஷி
வசனம் - ஷங்கர் - கார்க்கி

இயக்கம்: ஷங்கர்

ஒரிஜினலோ.. ரீமேக்கோ... ஒரு படம் பார்ப்பவர் மனதை அப்படியே தன்வசப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு தரமும், நம்பகத்தன்மையும் கொண்டதாய் இருந்தாலே போதும்... நிச்சயம் வெற்றி கிடைத்துவிடும்.

அந்த வகையில் ஆண்டின் தொடக்கத்திலேயே வந்து, வெற்றிக் கோட்டைத் தொட்டிருக்கிறது ஷங்கர் - விஜய் கூட்டணியில் வெளிவந்துள்ள நண்பன்.

பெரும்பாலும் ஊழலுக்கு எதிரான கருத்துக்கள் அல்லது விஷுவல் பிரம்மாண்டங்களுக்காக அறியப்பட்ட இயக்குநர் ஷங்கர், இன்றைய கல்வி முறை மாறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய 3 இடியட்ஸ் இந்திப் படத்தை அப்படியே தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார். அப்படியே என்றால்.... ஒரு காட்சியைக் கூட மாற்றவில்லை. பெயர்களில் கூட அதே உச்சரிப்பு வருவதுபோன்ற ஒற்றுமை... அங்கே வீரு, இங்கே விருமாண்டி... அங்கே பியா, இங்கே ரியா, அங்கே ராஞ்சோ, இங்கே பஞ்சமன்.... ஆனால் இந்தியில் பார்த்தபோது கிடைத்த அதே உணர்வுகளை இந்தப் படம் இன்னொரு முறை தருவதுதான், ஷங்கரின் ஸ்பெஷல்!

குறிப்பா, மாணவர்களை கவலைக்கிடமாக்கும் கல்வி முறையின் அவலங்களை தனக்கே உரிய நக்கல் நடை வசனங்களில் வெளிப்படுத்தும் விதம், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என அனைவருக்குமே நல்ல பாடம் ('மாணவர்களுக்கு சும்மா பிரஷர் ஏத்திக்கிட்டே இருக்கிறீங்க... காலேஜ் என்ன பிரஷர் குக்கரா?!').

பிரபலமான பொறியியல் கல்லூரியில் படிக்க வருகிறார்கள் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா. அதிக மார்க், முதலிடம், நல்ல வேலைதான் வாழ்க்கை என்பதை அழுத்தமாக நம்பும் பிடிவாத கல்லூரி முதல்வர் சத்யராஜ். இந்த மார்க் சிஸ்டத்தையே அடியோடு வெறுக்கும் விஜய், சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம், இது எத்தனை தவறான கல்வி முறை என்பதை அம்பலப்படுத்த, தன் மாணவனிடம் தோற்ற கோபத்தில், விஜய் மற்றும் நண்பர்களைப் பழிவாங்கும் அளவுக்குப் போகிறார்.

ஒரு கட்டத்தில் தனது சிஸ்டமே தவறு என சத்யராஜைப் புரிந்து கொள்ள வைக்கிறார் விஜய். இடையில் சத்யராஜ் மகள் இலியானாவுடன் காதல்.

கல்லூரி முடிந்த பிறகு திடீரென காணாமல் போகிறார். பத்து வருடங்களுக்குப் பிறகு அவரைத் தேடி, அவர் கொடுத்த முகவரிக்குப் போகிறார்கள் உடன்படித்த நண்பர்கள் ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் விஜய்யுடன் சவால் விட்டு ஜெயித்த சத்யன். அங்கே விஜய்யின் பெயரில் வேறு யாரோ இருக்கிறார்கள்.

விஜய் என்ன ஆனார்... ஏன் காணாமல் போனார் என்ற கேள்விகளுக்கு விடை தேடிப் புறப்படுகிறார்கள் நண்பர்கள்.

3 இடியட்ஸ் பார்க்காமல், இந்தப் படத்தை முதல் முறை பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய நிறைவைத் தரும் வகையில் அமைந்துள்ளது ஷங்கரின் அழகான மேக்கிங். ஹீரோயிஸம் எதுவும் இல்லாமல், இயக்குநர் சொன்னதை மட்டுமே செய்து, தனக்குள் இருந்த நல்ல நடிகருக்கு வேலை கொடுத்திருக்கிறார் விஜய். இருவருக்குமே பாராட்டுக்கள்!

தமிழில் வந்துள்ள முதல் மல்டி - ஹீரோ படம் இதுதான் எனலாம். விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்ஜே சூர்யா என அனைவருமே தங்களுக்குரிய வேடங்களை மிக நிறைவாகச் செய்துள்ளனர்.

குறிப்பாக விஜய், இந்தப் படத்தில் தோற்றத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் அழகு. ஷங்கர் சொன்னமாதிரி இனி 'விஜய் விமர்சகர்களு'க்கும் அவரைப் பிடிக்கும்! நம்புங்கள்.... படத்தில் ஒரு காட்சியில் கூட பஞ்ச் இல்லை... சண்டை இல்லை... சக நண்பர்களிடம் அடி வாங்குகிறார். ஹீரோயின் அக்காவிடம் கூட அடி வாங்குகிறார்... பிரசவம் பார்க்கிறார்... அனைத்தையுமே ரசிக்கும்படி செய்திருப்பதால் எந்தக் காட்சியும் உறுத்தலாகவே இல்லை!

எப்போதும் ஜிப்பாவும் சிரிப்பற்ற முகமுமாகக் காட்சி தரும் ஜீவாவைவிட, தன் நண்பன் விஜய்யின் செயல்களை சிரித்தபடி ஏற்றுக்கொள்ளும் ஸ்ரீகாந்தின் பாத்திரம் அழகு. இருவருமே உணர்ந்து நடித்துள்ளனர்.

சத்யனுக்கு இந்தப் படம் ஒரு மறுஜென்மம். அவரை வெறும் காமெடியனாக இனி ஒதுக்கிவிட முடியாது. குறிப்பாக அந்த கல்லூரி விழா மேடைப் பேச்சுக்கு தியேட்டர் அதிர்கிறது.

கல்லூரி முதல்வர் வேடத்தில் சத்யராஜ் கலக்கியிருக்கிறார்.

இலியானா இந்தப் படத்தில்தான் இப்படியா... அல்லது எப்போதுமே இப்படித்தானா (தோற்றத்தைச் சொல்கிறோம்) பாடல் காட்சிகளில் மட்டும் பரவாயில்லை... மற்ற காட்சிகளைப் பார்க்கும்போது, 'இலியானா இனி வேணா' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

ஒரு காட்சி என்றாலும் கதைக்கு முக்கிய திருப்பம் தருகிறது எஸ் ஜே சூர்யாவின் பாத்திரம். கச்சிதமாகச் செய்திருக்கிறார்.

பாஸிடிவான இந்தப் படத்தின் 'நெகடிவ் பக்கம்' என்று பார்த்தால்... பிற்பகுதியில் வரும் பாடல்கள். இரண்டாம் பாதியை தொய்வடைய வைப்பதில் இந்தப் பாடல்களின் பங்கு பெரிது.

அடுத்து அந்த பிரசவக் காட்சி. என்னதான் லாஜிக்காக பல விஷயங்களை அதில் சேர்த்திருந்தாலும்... நம்ப கஷ்ஷ்ட்டமாக இருக்கிறது. அதேபோல நேர்முகத் தேர்வில் ஜீவா தன் கதை சொல்வதெல்லாம் இந்தப் படத்தில் மட்டும்தான் சாத்தியம். அந்த நேர்முகத் தேர்வில் உண்மையைப் பேச ஆரம்பிக்கும்போதே, காட்சியின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை உணர முடிகிறது.

நேரம் ஆக ஆக, இயக்குநரும் பொறுமை இழந்துவிட்டாரோ என்று எண்ண வைக்கும் அளவு படு செயற்கையான அந்த திருமணக் காட்சி...

இந்தப் படத்தின் பாதிக் காட்சிகள் ஏற்கெனவே பல தமிழ்ப் படங்கள் அல்லது ரீமேக் படங்களில் பார்த்த சமாச்சாரங்கள் (வசூல் ராஜா, ஏப்ரல் மாதத்தில், பறவைகள் பலவிதம்...) என்பது இன்னொரு மைனஸ். .

'இவையெல்லாம் இயக்குநரின் தவறில்லை. காரணம் ஒரிஜினல் படத்தை அவர் அப்படியே எடுத்திருக்கிறார்' என்று சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. ஷங்கர் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். காரணம் அவர் மீது அப்படியொரு அபார நம்பிக்கை இருக்கிறது தமிழ் ரசிகர்களுக்கு!

அஸ்கு லஸ்கு...' பாடலில் இயக்குநரின் குறும்பு ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் மனோஜும், இசையமைப்பாளர் ஹாரிஸும் அபாரமாக உழைத்திருக்கிறார்கள்.

வசனங்களில் ஷங்கரின் பிராண்ட் அடிக்கடி எட்டிப் பார்கிறது. கல்லூரியில் பாடம் நடத்தும் காட்சிகளில் கார்க்கியின் பங்களிப்பும் புரிகிறது.

நண்பன் படம் அறிவித்த போது, 'ஷங்கருமா ரீமேக் பக்கம் போய்விட்டார்' என்று நிறையப் பேர் குறைப்பட்டுக்கொண்டனர். ஆனால் அவர்களும், ஆஹா நல்லாருக்கே எனும் அளவுக்கு படத்தை உருவாக்கியிருப்பது ஷங்கரின் செய்நேர்த்திக்கு சான்று. மூன்று மணிநேரம் மாணவர் உலகத்தில் ஒரு நெருக்கமான பார்வையாளனாக கூடவே பயணிக்கும் உணர்வைத் தந்திருப்பது, சாதாரண விஷயமா என்ன...

எல்லாம் நன்மைக்கே ஷங்கர்!

சூர்யா படம் கேன்சலா? இயக்குனர் ஹரி பேட்டி!

Friday, January 13, 2012
சூர்யாவை வைத்து இயக்க திட்டமிட்டிருந்த படத்தை கைவிடவில்லை. படத்துக்கான வேலை தீவிரமாக நடந்து வருகிறது என்று இயக்குனர் ஹரி கூறினார். இதுபற்றி ஹரி கூறியதாவது: சூர்யா நடித்த ‘சிங்கம்’ பெரிய வெற்றி அடைந்தது. இதையடுத்து மீண்டும் அவர் நடிக்கும் படத்தை இயக்குகிறேன். அதற்கான ஸ்கிரிப்ட் மெருகேற்றும் பணியில் மும்முரமாக இருக்கிறேன். இந்நிலையில் சூர்யாவை இயக்கும் படம் கைவிடப்பட்டதாக நெட்டில் வதந்தி பரப்புகிறார்கள். இது அதிர்ச்சி அளிக்கிறது. தற்போது ‘மாற்றான்’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். அதற்கான ஷூட்டிங், புரமோஷன் என்று பிஸியாக இருக்கின்றனர். இதற்கிடையில் என் படம் பற்றிய தகவல்களை சொன்னால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் அமைதியாக இருக்கிறேன். ‘படம் டிராப் என்று எப்படி செய்தி வருகிறது?’ என சூர்யாவே என்னிடம் கேட்டார். சூர்யாவிடம் இப்படத்தின் கதையை 6 மாதம் முன்பே கூறிவிட்டேன். இப்போதும் அடிக்கடி சந்தித்து அதுபற்றி பேசி வருகிறோம். இப்படம் சிங்கம் 2-ம் பாகமா என்கிறார்கள். அதுபற்றி இப்போது சொல்ல முடியாது. இன்னும் சில நாட்களில் சூர்யாவும் நானும் இதுபற்றி அறிவிப்போம். கமர்ஷியலாக உருவாகும் இப்படம் தமிழ் திரையுலகில் புது முயற்சியாக இருக்கும். அனுஷ்கா ஹீரோயின். சந்தானம் முதன்முறையாக எங்கள் கூட்டணியில் இணைகிறார். மார்ச்சில் ஷூட்டிங் தொடங்கும். என் படங்களில் பாடல் காட்சிகளை மட்டுமே இதுவரை வெளிநாடுகளில் படமாக்கியுள்ளேன். இந்த படத்தின் முக்கிய காட்சிகள் நைஜீரியா, தென்ஆப்ரிக்காவில் படமாக இருக்கிறது. காரைக்குடியில் பிரமாண்ட செட் அமைக்கும் பணியும் நடந்துவருகிறது. ஆகஸ்ட்டில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ஹரி கூறினார்.

சம்விருதா திடீர் திருமணம்!

Friday, January 13, 2012
ஸ்ரீகாந்த் ஜோடியாக ‘உயிர்’ படத்தில் நடித்தவர், சம்விருதா. மலையாளப் படங்களில் நடித்து வரும் இவருக்கும், கோழிக்கோட்டைச் சேர்ந்த அகில் என்பவருக்கும் திடீரென்று திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தற்போது அகில், கலிபோர்னியாவில் என்ஜினீயராகப் பணியாற்றுகிறார். ‘இது, இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் திருமணம். நிச்சயதார்த்தம் ஓரிரு மாதங்களில் நடக்கிறது. இவ்வருட இறுதியில் திருமணம் நடைபெறும். திருமணத்துக்குப் பிறகு சம்விருதா தொடர்ந்து நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை’ என்றார், அவரது தாயார்.

பட்டையை கிளப்பியது பத்த வைச்சுட்டியே பரட்ட!

Friday, January 13, 2012
மகேந்திரனின் கதை, வசனத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் ‘ஆடு புலி ஆட்டம்’. கமல், ரஜினி, ஸ்ரீபிரியா, சங்கீதா, தேங்காய் சீனிவாசன், மேஜர் சுந்தர்ராஜன் நடித்தனர். விஜயபாஸ்கர் இசையமைத்திருந்தார்.
சிவாஜியின் பட நிறுவனம் தயாரித்த படம் ‘அண்ணன் ஒரு கோயில்’. கே.விஜயன் இயக்கினார். வியட்நாம் வீடு சுந்தரம் வசனங்களை எழுதியிருந்தார். சிவாஜியுடன் சுஜாதா, சுமித்ரா, மனோரமா, ஜெய்கணேஷ், சுருளிராஜன் நடித்திருந்தனர். தெலுங்கு நடிகரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான மோகன்பாபு வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். அவர் தமிழில் நடித்த முதல் படம் இது.

பாலசந்தரின் இயக்கத்தில் கமல், ரஜினி மீண்டும் இணைந்த படம் ‘அவர்கள்’. சுஜாதா, லீலாவதி, ரவிக்குமார் நடித்திருந்தனர். ஹிட் படம். ரஜினிக்கு பெயர் தந்த மற்றொரு படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சிவகுமார், சுமித்ராவுடன் ரஜினி நடித்திருந்தார்.

சிவாஜி, வாணிஸ்ரீ நடித்த Ôஇளைய தலைமுறைÕ படம் ரிலீசாகி 2 வாரங்கள் கழித்து சில காரணங்களால் சென்சார் போர்டு தடை விதித்தது. பின் மீண்டும் இப்படம் ரிலீசானது. இதேபோல் ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ படத்துக்கும் சென்சார் பிரச்னை செய்தது. ராகவ என பெயரில் வரக்கூடாது என கூறியதால், ‘ரகுபதி ராகவன் ராஜாராம்’ என பெயர் மாற்றினர். அந்த காலம் முதலே இதுபோன்ற மடத்தனமான செயல்களில் சென்சார் போர்டு ஈடுபட்டு வருகிறது என்பதற்கு இந்த படங்கள்தான் உதாரணம். ‘ரகுபதி ராகவன் ராஜாராம்’ படத்துக்கு ராம், ரஹீம் வசனங்களை எழுதினர். இவர்கள் வேறு யாருமில்லை.

ராம், ராமநாராயணன். ரஹீம், இயக்குநர் காஜா. துரை இயக்கிய இப்படத்தில் விஜயகுமார், சுமித்ராவுடன் ரஜினி நடித்திருந்தார். எம்ஜிஆர் நடிப்பில் ஸ்ரீதர் இயக்கிய படம் ‘மீனவ நண்பன்’. 100 நாள் ஓடிய படம். எம்ஜிஆரின் ஆஸ்தான ஸ்டன்ட் மாஸ்டர் ஷாம் சுந்தர் ஸ்டன்ட் காட்சிகளை அமைத்திருந்தார். லதா, நிர்மலா, சச்சு, வீரப்பா, நம்பியார், நாகேஷ் நடித்த படம்.‘நவராத்திரி’ படத்தை போலவே உருவான படம் ‘நவரத்தினம்’. இதில் லதா, ஜரினா வஹாப், ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா உள்பட 9 ஹீரோயின்களை எம்ஜிஆர் சந்திப்பது போன்ற கதை அமைக்கப்பட்டிருந்தது.

‘நவராத்திரி’ படத்தை தந்த ஏபி நாகராஜனையே இப்படத்தை இயக்க வைத்தார் எம்ஜிஆர். பாக்ஸ் ஆபீசில் பெரிய தோல்வியை சந்தித¢தது படம். திரையுலகிற்கு புதுமுகமாக அறிமுகமானார் பாரதிராஜா. புதிய தயாரிப்பாளரான எஸ¢.ஏ.ராஜ்கண்ணு அம்மன் கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்த ‘16 வயதினிலே’ படத்தை இயக்கினார் பாரதிராஜா. கமல், ஸ்ரீதேவி, ரஜினி நடித்தனர். கவுண்டமணி, பாக்யராஜ் அறிமுகமான படம். இளையராஜாவின் இசை படத்துக்கு கூடுதல் பலம். வெள்ளி விழா கண்டது. இதனால் தெலுங்கு, இந்தியிலும் இப்படம் வெளியானது.

சாகித்ய அகடமி விருது பெற்ற ஜெயகாந்தனின் நாவல் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. அதே பெயரில் தயாரித்து இயக்கினார் பீம்சிங். லட்சுமி, ஸ்ரீகாந்த், ராஜசுலோச்சனா, நாகேஷ் உள்ளிட்டோர் நடித்த படம் 100 நாள் ஓடியது.
தேவரின் மற்றொரு கமர்ஷியல் ஹிட் படம் ‘ஆட்டுக்கார அலமேலு’. ஆடுதான் முக்கிய வேடத்தில் படத்தில் இடம்பெற்றது. ஆர்.தியாகராஜன் இயக்கினார். சிவகுமார், ஸ்ரீபிரியா நடித்த இப்படம் இந்தி மற்றும் தெலுங்கிலும் ரீமேக் ஆனது.
கண்ணதாசனின் அண்ணன் மகன் கே.என். சுப்பு தயாரித்த படம் ‘கவிக்குயில்’. தேவராஜ், மோகன் இயக்கினர். சிவகுமார், ரஜினி, ஸ்ரீதேவி, எஸ்.வி.சுப்பையா நடித்தனர்.

சாரதா இரட்டை வேடத்தில் நடித்து தயாரித்த படம் ‘மழை மேகம்’. ஏ.எஸ்.பிரகாசம் இயக்கினார். முத்துராமன், ஸ்ரீகாந்த், தங்கவேலு, மனோகர் நடித்திருந்தனர். தெலுங்கு ‘ஊர்வசி’ படத்தின் ரீமேக் இது.
தொகுப்பு: ஜியா
(தொடரும்)