Saturday, January 7, 2012

2011-ல் கலக்கிய ஹன்ஸிகா, அனுஷ்கா, ரிச்சா!!

Saturday, January 07, 2012
முன்பெல்லாம் ஆண்டு இறுதியில் சினிமா பட்டியலை தயாரிக்கும்போது, அதிகப் படங்களில் நடித்த நாயகிகள் என்று எடுத்தால் அவர்கள் அதிகபட்சம் 8 முதல் 10 படங்கள் வரை ஒரு ஆண்டில் நடித்திருப்பார்கள். சிலர் 12 படங்கள் கூட நடித்ததுண்டு.

ஆனால் இப்போதைய நடிகைகள் ஒரு ஆண்டில் நான்கு படம் நடிப்பதே பெரிய விஷயமாகிவிட்டது.

தமிழ் படங்களில் 2011-ல் இளம் நாயகிகள் ஆதிக்கம் பலமாக இருந்தது. முன்னணி நடிகைகளாக இருந்த நயன்தாரா, திரிஷா, சினேகா, ஸ்ரேயா, தமன்னா போன்றோர் பின்தங்கியுள்ளனர். நயன்தாரா திருமணத்துக்கு தயாராவதால் புதிய படங்களை ஒப்புக் கொள்வதில்லை.

ஹன்சிகா, அனுஷ்கா, அமலாபால்,அஞ்சலி, காஜல் அகர்வால் என இளம் நடிகைகள்தான் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பரபரப்பாக இருந்தார்கள். அடுத்த ஆண்டிலும் இவர்கள் ஆதிக்கம் தொடரப் போகிறது.

ஹன்ஸிகா மோத்வானி

இந்த ஆண்டு எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம் என மூன்று பெரிய படங்களில் நடித்தவர் ஹன்ஸிகா. இதில் வேலாயுதம் மட்டுமே அவருக்கு வெற்றிப் படம். மற்ற இரண்டில் மாப்பிள்ளை படுதோல்வி. ஆனாலும் அவர் கைவசம் வேட்டை மன்னன், ஒரு கல் ஒரு கண்ணாடி என பெரிய படங்கள் உள்ளன. ஒரு கல் ஒரு கண்ணாடியை பெரிதும் எதிர்ப்பார்க்கிறார்.

அனுஷ்கா

இந்த ஆண்டு வானம், தெய்வத்திருமகள் படங்களில் நடித்தார். இப்போது ரஜினி பட வாய்ப்பும் இவரை நெருங்குகிறது. முன்னணி ஹீரோக்கள் அனுஷ்காவுடன் நடிக்கவே விரும்புகிறார்கள்.

சுராஜ் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாகவும், செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யா ஜோடியாகவும், தாண்டவம் படத்தில் விக்ரம் ஜோடியாகவும் தற்போது நடிக்கிறார்.

லட்சுமி ராய்

அமைதியாக சாதித்தவர் என்றால் அது லட்சுமி ராய்தான். மெகா ஹிட்டான படங்களான காஞ்சனா, மங்காத்தா படங்களில் இவர்தான் நாயகி. மங்காத்தாவில் திரிஷாவை விட பேசப்பட்டவர் லட்சுமி ராய்.

ரிச்சா கங்கோபாத்யாய்

மயக்கம் என்ன படத்தில் அறிமுகமானார். ரசிகர்களை இந்தப் படத்தில் மயக்கிவிட்டார் எனலாம். அடுத்ததாக ஒஸ்தியில் அவருக்கு நடிக்க வாய்ப்பில்லாவிட்டாலும், அவர் வந்த சில காட்சிகளில் ரசிகர்களை ஈர்த்தார். 2012-ல் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கும் நாயகிகளில் முதலிடத்தில் இருப்பவர் ரிச்சா.

அமலா பால்

அமலாபாலுக்கு தெய்வத் திருமகள் படம் திருப்பு முனையாக அமைந்தது. மாதவன், ஆர்யாவுடன் வேட்டை, மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வாவுடன் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலுக்கு இவ்வாண்டில் படங்கள் இல்லை. ஆனாலும் பெரிய நடிகர்களான சூர்யா ஜோடியாக மாற்றான், விஜய் ஜோடியாக துப்பாக்கி படங்களில் நடிக்கிறார்.

மற்றபடி தமன்னா, ஸ்ரேயா, டாப்ஸி போன்றவர்கள் ஓரிரு படங்களில் வந்தாலும், இப்போதைக்கு இவர்கள் கைவசம் தமிழில் படமில்லை.

7ஆம் அறிவு படம் மூலம் அறிமுகமான ஸ்ருதி, அந்தப் படத்துக்கே ஒரு மைனஸ் என்று விமர்சிக்கப்பட்டார். இப்போது தனுஷ் ஜோடியாக '3' படத்தில் நடிக்கிறார்.

அஞ்சலி, கார்த்திகா, அனன்யா,ஓவியா போன்றவர்களும் அடுத்த ஆண்டு வெளியாகும் படங்களில் உள்ளனர்.

சாம் அமலா பால் இன் லவ்!!

Saturday, January 07, 2012
போன படத்து சொந்தம் கூட இல்லாமல் சமீரா ரெட்டியும், அமலா பாலும் ஒரே படத்தில் போன ஜென்ம சொந்தம் போலாகி விட்டார்கள். கை பிடித்துக் குலுக்குவதென்ன, கட்டிப் பிடித்து ‘வார்ம்’ வெல்கம் கொடுப்பதென்ன... நிஜ அக்கா, தங்கை கூட கெட்டார்கள். மிஸ்.ரெட்டிக்கும், மிஸ்.பாலுக்குமான இந்த உறவு ரொட்டியும், பாலும் போல உறுதிப்பட்டது யுவிடி மோஷன் பிக்சர்ஸுக்காக லிங்குசாமி இயக்கும் ‘வேட்டை’ படத்தில்.

இந்த ஷெட்யூல்ல சாம் இருக்காங்களான்னு கேட்டுட்டுத்தான் ஒவ்வொரு முறையும் நான் நடிக்கவே வருவேன். சாம் இல்லாத ஷெட்யூல்களில் அழுகை அழுகையாக வந்தது...’’ என்றது அமலா பாலேதான். அவர் சொன்ன சாம், சமீரா ரெட்டி. ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடித்தால், படம் முடிவதற்குள் இயக்குநர் முடியைப் பிய்த்துக் கொள்ள நேரும் சினிமாவுலகில் எப்படி நேர்ந்தது இந்த சொந்தம்..? அமலாவே அழகான வாய் திறந்தார்.

இந்தப் படம் நடிக்க ஆரம்பிக்கும்போது எனக்கு சீனியர் நடிகைன்னு மட்டும்தான் சாமைத் தெரியும். அவங்க படம் ஒண்ணுகூட பார்த்ததில்லை. ஆனா படம் முடியும்போது இந்த சொந்தம் இப்போதைக்கு முடிவடையும்னு தோணவே இல்லை. அதுக்குக் காரணம் சாமோட குணம்தான். கொஞ்சம் கூட சீனியர்ங்கிற ஈகோவோ, பகட்டோ இல்லாம ஒரு ஃபிரண்ட் கூட பழகற மாதிரி இயல்பா பழகினாங்க. இன்னும் கேட்டா, ஒரு நடிகை போலவே சாமோட பழக்கவழக்கங்கள் இல்லாம... ஒரு சகோதரி போலத்தான் இருந்தது.

நாங்க ஒரே ரூம்லதான் தங்கினோம். ஒண்ணா நடிச்சோம். ஒண்ணா ஜாகிங் போனோம்... சாப்பிட்டோம். போகாத பொழுதுகள்ல கார்ட்ஸ் விளையாடினோம். இப்படியொரு கோ ஸ்டாரை என் சின்ன அனுபவத்துல இதுவரை பார்க்கலை. குற்றாலம், தூத்துக்குடின்னு தொடர்ந்த எங்க சொந்தம் வாவ்... எ கிரேட் எக்ஸ்பீரியன்ஸ்!

இதுக்கு இன்னொரு காரணமும் இருந்தது. மேடி, ஆர்யா, சாம், நான் உள்ளிட்ட எங்க டீமை ஒரு ஃபேமிலி போலவே நடத்தினார் டைரக்டர் லிங்குசாமி. யாருக்கும் எந்தக் குறையும் அவர் வைக்கலை. படத்துல எங்க கேரக்டரைப் புரிய வைக்கிறது ஆகட்டும், நடிச்சுக் கண்பிக்கிறது ஆகட்டும் அவரே ஒரு நண்பர்போல ஆனதால அந்த நேசம் எங்ககிட்டயும் தொடர்ந்தது. செட்லயே அவரை மாதிரி நடிச்சுக் காட்டி நான் கலாய்ப்பேன். அதைத்தான் அன்னைக்கு ஆடியோ லாஞ்ச் மேடையிலயும் இமிடேட் பண்ணிக் காண்பிச்சேன். முதல்ல அவரைப் போல நான் நடிச்சுக் காண்பிச்சதுல அவருக்குப் பெரிய ஷாக். ஆனா சாம் இதை எல்லாம் என்ஜாய் பண்ணி ரசிச்சாங்க.

சாமுக்கும், டைரக்டருக்கும் சின்னதா மொழிப் பிரச்னை இருந்தப்ப, செட்லேர்ந்த நான் அதுக்கு உதவியிருக்கேன். படத்துல சாமும் நானும் அக்கா, தங்கையா... அறுந்த வாலா வர்றோம். நிஜத்துலயே நாங்க அக்கா, தங்கை போல பழகி பாசமா நெருங்கிட்டதால, சினிமான்னே உணராம நடிச்சோம். ஒரு சீன்படி சாம் புல்லட் ஓட்ட, நான் பில்லியன்ல உக்காந்து வரணும். எனக்கு பைக் ஓட்டத் தெரியும்; ஆனா புல்லட் ஓட்ட நம்மால ஆகாது. சாம் அதுலயும் போல்டான பெண்தான். ஸ்டைலா ஏறி கான்ஃபிடன்ஸோட அவங்க புல்லட் ஓட்ட, யூனிட்டே அசந்தது. சாமால புல்லட் ஓட்ட முடியுமா, முடியாதான்னெல்லாம் கேட்காம நானும் பைக்ல ஏறி உக்காந்த தைரியத்தை எல்லாரும் பார்த்து வாய்பிளந்தாங்க.

அது என்னோட தைரியம் இல்லை. சாமோட தைரியத்து மேல நான் வச்ச நம்பிக்கை. ஒரு ஏரோபிளேனைக் கொடுத்து என்னையும், சாமையும் தனியா அனுப்பினாலும் நான் சாமை நம்பி ஏறி உக்காருவேன். அதுதான் சாம். அதுதான் நான். படம் முடிஞ்சும் இன்னும் எங்க ரிலேஷன்ஷிப் எஸ்.எம்.எஸ், போன்கால்னு தொடருது. இனி நேர்ல எப்ப சாமைப் பார்ப்பேனோ..?’’
அழாக்குறையாக அலுத்துக்கொண்ட அமலாவிடம், ‘நீங்க சமீராவை சாம்னு கூப்பிடறீங்க. சமீரா உங்களை எப்படிக் கூப்பிடுவாங்க..?’ என்று கேட்டால் கொஞ்சம் நாணத்துடன் சிரித்து, ‘‘அமலா பால் இன் லவ்...’னு கூப்பிடுவாங்க. சாம் மட்டுமில்லை... யூனிட்ல எல்லோரும் என்னை அப்படித்தான் கூப்பிட்டாங்க. அதுக்குக் காரணத்தை வெளியே சொல்ல முடியாது. விட்ருங்க ப்ளீஸ்..!’’ என்றார்.

'திரைக்கதை மன்னன்' இயக்குநர் கே பாக்யராஜ்!!

Saturday, January 07, 2012
தமிழ் திரையுலகின் மிகச் சிறந்த எழுத்தாளர், திரைக்கதை மன்னன் எனப் புகழப்படும் கே பாக்யராஜுக்கு இன்று பிறந்த நாள். திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அவர் பிஸியாக இருந்த காலத்தை விட, இன்று அவருக்கு கூடுதலாக வாழ்த்துகள் குவிகின்றன... இதற்கு ஒருபக்கம் மீடியா, இன்னொரு பக்கம் அவரது அருமை இன்றைய தலைமுறைக்கும் புரிந்திருப்பது!

எழுபதுகளின் இறுதியில் தொடங்கியது கே பாக்யராஜின் திரையுலகப் பிரவேசம். தமிழ் சினிமாவுக்கு புதிய வெளிச்சம் பாய்ச்சிய இயக்குநர் பாரதிராஜாவின் முதன்மை மாணவராகத் திகழ்ந்த அவர், புதிய வார்ப்புகள் படத்தில் நாயகனாக தனது குருவின் இயக்கத்திலேயே அறிமுகமானார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

அடுத்து தனது இயக்கத்தில் சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தை ஆரம்பித்தார். சுதாகருடன் இன்னொரு கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் தமிழ் சினிமாவையே அவர் பக்கம் திரும்ப வைத்தது. தொடர்ந்து அவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் வெள்ளி விழாப் படங்களாக அமைந்தன. தமிழ் சினிமா வரலாற்றில் தொடர்ந்து 11 வெற்றிப் படங்களைத் தந்த ஒரே இயக்குநர் - ஹீரோ என்ற பெருமை பாக்யராஜுக்கே உண்டு.

திரைக்கதை எழுதுவதில் பாக்யராஜுக்கு நிகர் யாருமில்லை. ஒரு சம்பவத்தை அதன் சூழல், இயல்புத் தன்மை, மனிதர்களின் பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் ஒரு தேர்ந்த நெசவாளியைப் போல நெய்து தருவதில் பாக்யராஜ் ஸ்பெஷலிஸ்ட். அவரது படங்கள் அனைத்துமே பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றன.

தாவணிக் கனவுகளில், ஒரு காட்சியை உணர்வுப் பூர்வமாக உருவாக்குவது குறித்து தனது குருநாதரை வைத்தே அமைத்திருப்பார் பாக்யராஜ். அவர் எப்பேர்ப்பட்ட தேர்ந்த திரைக்கதையாசிரியர் என்பதைப் புரிந்து கொள்ள அந்தக் காட்சியே சான்று.

பெரும்பாலும் அவரது படங்கள் நகைச்சுவை இழையோட அமைந்திருக்கும். ஆனால் த்ரில்லர் கதைகள் தருவதில் மன்னன் அவர். சிறந்த உதாரணம், அனைத்து மொழிகளிலும் வெற்றிக் கொடி நாட்டிய சிகப்பு ரோஜாக்கள். இந்தப் படத்தின் கதை வசனம் பாக்யராஜ்தான். பின்னாளில் தானே இயக்குநராக கொடி கட்டிப் பறந்த நேரத்தில், பாரதிராஜாவுக்காக மீண்டும் ஒரு கதையை உருவாக்கித் தந்தார். அதுதான் ஒரு கைதியின் டைரி. மிகச் சிறந்த த்ரில்லர் படம் என அனைவரும் பாராட்டினர் இந்தப் படத்தை. பாக்யராஜின் வசனங்கள் அந்தப் படத்துக்கு இன்னொரு ப்ளஸ்.

இதே படத்தை, வேறொரு க்ளைமாக்ஸுடன் இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து உருவாக்கினார். அந்தப் படம் 250 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது.

தனது இயக்கத்தில் அவர் உருவாக்கிய 'விடியும் வரை காத்திரு' இன்னொரு அசத்தல் த்ரில்லர்!

எல்லா வகைப் படங்களையும் எடுப்பதில் அவர் கைதேர்ந்தவர். அவரால் சுவரில்லாத சித்திரங்கள், மவுன கீதங்கள் போன்ற குடும்பப் படங்களையும் தர முடியும். ஒரு கை ஓசை, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, பவுனு பவுனுதான் போன்ற படங்களையும் தரமுடியும். முந்தானை முடிச்சு, இன்று போய் நாளை வா, எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு என சிரிப்பு எனும் சர்க்கரை தடவிய சமூகப் படங்களையும் அவரால் தர முடிந்தது.

பாக்யராஜின் முந்தானை முடிச்சு, ஜனரஞ்சக சினிமாவின் உச்சம் என்றால் மிகையல்ல. ஏவிஎம்மில் படம் செய்த முதல் வெளி இயக்குநர் என்ற பெருமையும் பாக்யராஜுக்குதான்!

இதனால்தான் அவரை தனது சினிமாவுலக வாரிசு என மேடையில் அறிவித்தார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.

இந்த திரைக்கதை யுக்தி எப்படி அவருக்குக் கைவந்தது? என்று முன்பு அவரிடம் கேட்டோம். அதற்கு பாக்யராஜ் சொன்ன பதில்:

எங்க டைரக்டர் பாரதிராஜா கிட்ட அன்னிக்கு இருந்த நாங்கள்லாம் கிராமத்திலிருந்து நிறைய அனுபவங்களோட வந்தோம். அந்த அனுபவங்களை வைத்துதான் திரைக்கதைகளை உருவாக்கினோம். ஆனா அதே போதும்னு நிக்கலை. அன்றாடம் வெளியில் நடப்பதை சரியாக உள்வாங்கிக் கொண்டோம். அப்படி எனக்கு வாய்ப்பு கிடைக்காத போது, எனது உதவியாளர்களை வெளியில் அனுப்பி, நாட்டு நடப்பு, அவர்களுக்கு கிடைச்ச அனுபவங்களை காட்சிகளாக்கினோம். கத்துக்கிறது ஒரு தொடர் நிகழ்வு. அது நின்னுடுச்சின்னா, எழுத வராது," என்றார்!

கே பாக்யராஜின் திரைப் பயணம் தொடர வாழ்த்துகிறோம்!

இசைப்பள்ளி திறந்தார் ஜேம்ஸ் வசந்தன்!!

Saturday, January 07, 2012
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ‘அகடமி ஆல்ப் மியூசிக் ஸ்கூல்’ என்ற இசைப் பள்ளியை தொடங்கியுள்ளார். பாலமுரளிகிருஷ்ணா, இதை திறந்து வைத்தார். பிறகு நிருபர்களிடம் ஜேம்ஸ் வசந்தன் கூறியதாவது: முறைப்படி சங்கீதம் கற்றவர்கள்தான் பாட முடியும் என்ற நிலை இருந்தது. என்றாலும், இசையார்வம் உள்ள யாரும் சங்கீதம் கற்கலாம், பாடலாம். நம்மால் சினிமாவில் பாட முடியுமா என்று நினைப்பவர்கள், குறைந்தபட்ச இசை அறிவையாவது வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு வழிகாட்டும் விதமாக இந்தப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சினிமாவில் பாடுவதற்கு மட்டுமின்றி, அனைத்துவிதமான சங்கீதமும் கற்றுத்தர, தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்கள். நான் இசையமைக்கும் படங்களில் புதிய பாடகர்களை அறிமுகப்படுத்துவேன்.

டெல்லியில் தாண்டவம்!!

Saturday, January 07, 2012
யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம், ‘தாண்டவம்‘. விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் டெல்லியில் உள்ள ஜம்மா மஸ்ஜித் பகுதியில் தொடங்கியது. பழங்கால மசூதியான இது, படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு விக்ரம், ஜெகபதி பாபு பங்குபெறும் சண்டைக்காட்சி படமாக்கப்படுகிறது. தொடர்ந்து 20 நாட்கள் டெல்லியில் படப்பிடிப்பு நடைபெறும். இதையடுத்து படக்குழு அமெரிக்கா செல்ல இருப்பதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

71 புதுமுகங்களின் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி

Saturday, January 07, 2012
சிட்டி லைட்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம், ‘ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி’. சேரன் உதவியாளர் சண்முகராஜ் இயக்குகிறார். வெங்கடேஷ், அக்ஷரா ஜோடியுடன் 71 புதுமுகங்கள் நடித்துள்ளனர். தாஜ்நூர் இசை. ஜோஷி, சரவணன் ஒளிப்பதிவு. படம் பற்றி இயக்குனர் சண்முகராஜ் கூறியதாவது: இதுவரை சினிமாவில் சொல்லப்படாத காதல் கதை என்று தைரியமாகச் சொல்லும் படம் இது. ஒரு பையன் அல்லது பெண் எப்போது, யாரை காதலிப்பார்கள், எப்போது சண்டையிடுவார்கள். எப்போது திருமணம் செய்வார்கள் என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இதைப் பார்த்தால் கண்டிப்பாக காதலில் யாரும் தோற்கமாட்டார்கள். எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள் என்று கேட்டால், அதுதான் படம். இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும் நடிப்பு பயிற்சி அளித்து முழுப்படத்தையும் ஹேண்டிகேமில் படமாக்கி, டிரையல் பார்த்தோம். அதில் திருப்தி ஏற்பட்டபின் மீண்டும் படத்தை ஷூட் பண்ணினோம். இப்படி இதுவரை யாரும் படமாக்கியதில்லை. ஒவ்வொரு சீனும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும். காமத்துப்பாலில் உள்ள 16 குறள்களுடன் யுகபாரதி வித்தியாசமான பாடலை எழுதியுள்ளார். இது பேசப்படும் விதமாக இருக்கும். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் பாடல் வெளியீடு இருக்கும். இவ்வாறு சண்முகராஜ் கூறினார்.

கோச்சடையானில் அடுத்த மாதம் நடிப்பேன்! - ரஜினி அறிவிப்பு!!

Saturday, January 07, 2012
கோச்சடையான் குறித்து ரஜினியே அறிவிப்பு வெளியிட்டிருப்பது இதுதான் முதல் முறை.

பூரண உடல்நலம் பெற்று, பழையபடி சுறுசுறுப்பாக வலம் வர ஆரம்பித்துள்ள ரஜினி, பத்திரிகையாளர்களிடம் பேசியிருப்பதும் இதுதான் முதல்முறை.

ஒய்ஜி மகேந்திரன் நாடகம் பார்த்து முடித்த பிறகு, அதுகுறித்து நிருபர்களிடம் பேசியவர், அந்த நாடகத்தின் வசனங்களை தான் வெகுவாக ரசித்ததாகக் கூறினார்.

அவரது உடல்நிலை குறித்துக் கேட்டபோது, "நான் ரொம்ப நல்லா இருக்கேன். அடுத்த மாதம் கோச்சடையான் ஷூட்டிங்ல கலந்துக்குவேன்," என்றார்.

நாடகங்கள் குறித்து பேசிய அவர், "நாடகங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆரம்ப நாட்களில் நாடகங்களில் நடித்துள்ளேன்," என்றார்.

ரஜினி பேசியதற்கு ஒரு நாள் முன்புதான், கோச்சடையான் இசை கோர்ப்புப் பணி குறித்து ஏ ஆர் ரஹ்மான் பேட்டியளித்திருந்தார். இந்தப் படத்துக்கான இசை வேலைகள் விரைவில் தொடங்கவிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

சமீரா ரெட்டியிடம் கிரெடிட் கார்டு மோசடி!!

Saturday, January 07, 2012
கோலிவுட், பாலிவுட் என மாறி மாறி நடித்து ரசிகர்களை தனது கவர்ச்சியால் கட்டிப் போட்டிருக்கும் நடிகை சமீரா ரெட்டியிடம் கிரெடிட் கார்டு மோசடி நடந்துள்ளது. சுமார் 4 லட்சம் ரூபாய் வரை அவரது கணக்கில் இருந்து பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடி சம்பவம் குறித்து சமீரா அளித்துள்ள பேட்டியில், சமீபத்தில் எனது மொபைலுக்கு பேசிய ஒரு நபர், தன்னை அமெரிக்க வாழ் இந்தியர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து என்னுடைய கணக்கில் இருந்து பணம் எடுத்து விட்டதாக தெரிவித்தார். இதனால் குழம்பிப் போன நான் என்னுடைய கிரெடிட் கார்டு கணக்கை சரிபார்த்தேன். சுமார் ரூ.4 லட்சம் பணம் எடுக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நான் மீண்டும் அந்த நபரிடம் பேசினேன். அப்போது பேசிய நபர், பணம் எடுத்த பிறகு கவனித்தபோதுதான் உங்கள் பெயரில் அக்கவுண்ட் இருந்தது தெரிந்தது. நான் உங்கள் ரசிகன். எனவே நான் எடுத்த பணத்தை உங்கள் அக்கவுண்ட்டிலேயே போட்டு விட்டேன். நண்பர்கள் எடுத்த பணத்ததிற்கு நான் பொறுப்பாக மாட்டேன், என்றார். அதோடு கிரெடிட் கார்டை பயன்படுத்துவது குறித்த டிப்ஸ்களையும் அந்த நபர் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவர் எனது கணக்கில் ரூ.1 லட்சம் போட்டு விட்டார். மீதி 3 லட்சம் ரூபாய் அபேசாகி விட்டது, என்று என்றார்.. மேலும் இனிமேல் ‌கிரேடிட் கார்ட் ‌போன்றவைகளை உபயோகிக்க போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

பணகஷ்டம் இல்லாததால் ஸ்ரேயா புது முடிவு!!

Saturday, January 07, 2012
எனக்கு இப்போது பண கஷ்டம் இல்லை; எனவே இனிமேல் நல்ல படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கப் போகிறேன், என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். கடந்த ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக இருந்த ஸ்ரேயாவை சமீப காலமாக எந்த படத்திலும் காண முடியவில்லை. அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் பேசப்படாததால், புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை. தமிழில் கடைசியாக ரௌத்திரம் படத்தில் நடித்தார்.

வாய்ப்பில்லாமல் இருப்பது பற்றி ஸ்ரேயாவிடம் கேட்டால் வாய்கிழிய விளக்கம் அளிக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் பன்னிரெண்டு வருடமாக சினிமாவில் இருக்கிறேன். என்ன கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன் என்ற பெயரைப் பெற்றுள்ளேன். நல்ல நடிகைகளுக்கு மார்க்கெட் என்ற வரையறையே கிடையாது. எனக்கு மார்க்கெட் போய் விட்டது என்றும் படவாய்ப்புகள் இல்லை என்றும் சொல்லப்படுவதில் உண்மை இல்லை. சினிமாவுக்கு வந்த புதிதிலும் எல்லா படங்களையும் ஒப்புக் கொண்டேன். சில படங்களில் தயாரிப்பாளர், இயக்குனர் வேண்டப்பட்டவராக இருந்ததால் நடித்தேன். இப்போது அப்படியெல்லாம் நடிக்க வேண்டிய அவசியமில்லையே. இப்போது பணக்கஷ்டம் இல்லை. எனவே இனிமேல் நல்ல படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். இதை வைத்து எனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று வதந்தி பரப்புகிறார்கள். எனக்கு நிற்க நேரமில்லாத அளவுக்கு வேலை. ஒரு பாட்டுக்கு ஆடுவது, விளம்பரங்கள், நிகழ்ச்சிகள், சேவை அமைப்புகள் என நான் ரொம்ப பிஸியாக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.