Tuesday, January 31, 2012

எதற்கும் டென்ஷன் ஆகமாட்டார் கமல்! - ஆண்ட்ரியா!!!

பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடித்தவர் ஆண்ட்ரியா. இவர் தற்போது விஸ்வரூபத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கமலின் விஸ்வரூபம் படத்தில் நடிக்கிறேன். நடிகர், இயக்குநர், கதாசிரியர் என்ற முப்பரிமாணங்களில் அவர் இதில் பொறுப்பு ஏற்றிருக்கிறார். அவருடன் நடிப்பது எனக்கு கிடைத்த 3 போனஸ். ஷூட்டிங் நேரத்தில் எதற்கும் டென்ஷன் ஆகாமல் அடிக்கடி கதைகள் சொல்லி பட குழுவினரை ஜாலியாக வைத்திருக்கும் அவரது போக்கு எனக்கு பிடிக்கும். அடுத்து வெற்றிமாறன் இயக்கும் வட சென்னை படத்தில் நடிக்க உள்ளேன். அதிக படங்களில் நடிக்கவில்லையே? என்கிறார்கள். அதற்கு காரணம் இருக்கிறது. ஒரே பாணியிலான வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் உதறிவிடுவேன். ஆனால், கமர்ஷியல் படங்களை நான் தவிர்த்துவிடுவதாக சிலர் தவறாக எடுத்துக் கொள்கிறார்கள்.

தாயை இழந்த எனக்குத் துணையாக நின்றது இசைஞானியின் இசைக்கரங்கள்! - உருக வைத்த முத்துக்குமார்!

தாயை இழந்த எனக்கு துணையாக வந்தது இசைஞானியின் இசைக்கரங்களே. அன்று பிடித்த அவரது கரங்களை இன்றுவரை நான் விடவில்லை என்றார் பிரபல பாடலாசிரியர் கவிஞர் நா முத்துக்குமார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பிரகாஷ் ராஜின் தோணி பட இசைவெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை மாலை நடந்தது.

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள படம் அது. படத்தின் இசைவெளியீட்டை, இளையராஜாவுக்கு சிறப்பு செய்யும் விதத்தில் அமைத்திருந்தார் பிரகாஷ் ராஜ்.

இதுவரை தன் வாழ்க்கையிலேயே முதல் முறையாக தான் இசையமைத்த பட இசை விழாவில் அந்தப் படப் பாடல்களை லைவாக இசைக்க வைத்து, வந்திருந்தவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி தந்தார் இளையராஜா.

நான்கு பாடல்கள் இசைக்கப்பட்டன. நான்கும் முத்தான பாடல்கள் என்று சொல்லும் அளவுக்கு மிக இனிமையாக, அர்த்தமுள்ளதாக அமைந்திருந்தது சிறப்பு.

இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள், சாதனையாளர்கள், இளையராஜாவின் அபிமானிகள் அத்தனை பேரும் குவிந்திருந்தனர். மாலை 7 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி, இரவு 9.30ஐ தாண்டிய பிறகும் நீடித்தது. ஆனால் ஒருவரும் வெளியில் எழுந்து செல்லவில்லை. அப்படியொரு ஈர்ப்புடன் அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்தனர்.

இளையராஜாவுடனான தங்கள் அனுபவங்கள், அவரது இசையின் சிறப்பு, இளையராஜா எனும் அற்புதமான கலைஞனின் தொழில்முறை நேர்த்தி என பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர் பிரபலங்கள்.

இயக்குநர்களின் ஆதர்ச நாயகனாகக் கருதப்படும் மகேந்திரன், இயக்குநர் சிகரம் எனப் புகழப்படும் பாலச்சந்தர், எஸ்பி முத்துராமன், இயக்குநர்கள் பார்த்திபன், கேஎஸ் ரவிக்குமார், ஆர் வி உதயகுமார், ஜெயம் ராஜா, ராதா மோகன் என ஒவ்வொருவர் பேசியதையும் தனித்தனி கட்டுரைகளாகவே வெளியிடலாம். அத்தனை சிறப்பாக அமைந்தது பேச்சு.

குறிப்பாக நாசரின் பேச்சு, சுவாரஸ்யமிக்கதாக அமைந்தது.

இந்த விழாவின் ஹைலைட் என்றால் அது கவிஞர் நா முத்துக்குமாரி்ன் பேச்சு. அந்தப் பேச்சை கண்கலங்காமல் கேட்டவர்கள் அநேகமாக வெகு சிலராகத்தான் இருந்திருப்பார்கள்.

அவரது பேச்சு முழுவதுமாக:

இசைஞானி அவர்களுக்காக முதல்முறையாக நான் தோணி திரைப்படத்திற்காக அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறேன். ஜூலி கணபதி படத்துக்காகத்தான் அவரை நான் முதல் முறையாக என் குருநாதர் பாலுமகேந்திராவுடன் சந்தித்தேன். அந்த சந்திப்பு மறக்க முடியாதது. ஒரு பரீட்சை எழுதப்போகும் மாணவனின் பதைப்புடன் அவர் அறைக்குச் சென்றேன்.

எனக்குத் தந்த மெட்டுக்கு...

‘எனக்குப் பிடித்தப் பாட்டு அது உனக்குப் பிடிக்குமே
என் மனது போகும் வழியை உன் மனது அறியுமே
எனக்குப் பிடித்த நிலவு அது உனக்குப் பிடிக்குமே’

என்ற பல்லவியை அவருக்குக் கொடுத்தேன். படித்துப் பார்த்துவிட்டு ‘நன்றாயிருக்கிறது பல்லவி..! ஒரு சின்ன திருத்தம் செய்யலாமா?’ என்று கேட்டார். ‘தாராளமாக ஐயா’ என்று சொன்னேன்.

‘எனக்குப் பிடித்த நிலவு அது உனக்குப் பிடிக்குமே’ என்ற வரியை ‘என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே’ என்று மாற்றினால் அர்த்தம் இன்னும் சிறப்பாக இருக்குமென்றார். நான் எழுதிய வரிகளை விட பத்துமடங்கு சிறப்பாக இருக்கிறது என்று பரவசப்பட்டுப் போனேன்.

அன்று எனக்கு ஒன்று புரிந்தது. பாடலில் திருத்தம் என்பது சிதைப்பது அல்ல; செதுக்குவது என்று. அதன் பின்னர் நிறைய பாடல்கள் எழுதினேன். ஒவ்வொரு முறை அவர் அறைக்குள் நுழையும்போதும் என் கைகால்கள் நடுங்கத் துவங்கும்.

அவர் எப்போதும் என்னை அமரவைத்து, நகைச்சுவையாகப் பேசி என்னை இயல்புக்குக் கொண்டுவருவார். ஒவ்வொரு முறை பாடல் எழுதும்போதும் அவரிடம் ஒரு புதிய விஷயத்தை நான் கற்றுக்கொள்வேன். எப்படி எளிமையாக எழுத வேண்டும்… எப்படி மக்களுக்குப் புரியும் வகையில் எழுத வேண்டும்… போன்ற பல விஷயங்களை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்.

‘தோணி’ திரைப்படத்தின் கம்போஸிங்கிற்கு "முத்துக்குமாரையும் கூட்டி வாருங்களேன்," என்று சொல்லியனுப்பியிருந்தார். போயிருந்தேன். அது ஒரு பரவச அனுபவம். முதல் முறை அவருடன் கம்போசிங்கில். ஒரு முக்கால் மணி நேரத்தில் வரிசையாக 5 டியூன்களைப் போடுகிறார். நான் கண்களை மூடி அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். கடவுளிடம் நேரடியாகப் பேசுபவர்கள் குழந்தைகளும் இசைக் கலைஞர்களும் என்று சொல்வார்கள். அந்த தருணத்தில் அதை நான் கண்டுகொண்டேன்.

என் மகனுக்கு தினமும் கண்ணே கலைமானே...

இன்றைக்கும் நான் இசைஞானியின் பாடல்களைக் கேட்காமல் தூங்குவதில்லை. என் மகனுக்கு நான் தினமும் பாடும் தாலாட்டு ‘கண்ணே கலைமானே’ பாடல்தான். ஒரு பாடலாசிரியராக என்னுடைய குருவாக அவரை நினைக்கிறேன். ஒரு சில பாடல்களே அவர் திரைப்படத்திற்கு எழுதியிருந்தாலும் அவர் எழுதிய பாடல்களுக்கு இன்றைக்கும் நான் ரசிகன். அழகி திரைப்படத்தில் எழுதியிருப்பார்…

"கோயில் மணிய யாரு ஏத்துறா?
தூண்டா வெளக்க யாரு ஏத்துறா ?
ஒரு போதும் அணையாம நின்று எரியணும்..”

அதே படத்தின் வேறொரு பாடலில்...

“இருள் தொடங்கிடும் மேற்கு - அங்கு
இன்னும் இருப்பது எதற்கு?
ஒளி தொடங்கிடும் கிழக்கு
உண்டு பொதுவினில் ஒரு விளக்கு”

இதை எந்தக் கவிஞனும் எழுதி விடலாம். ஆனால் அதன்பின்னர் வரும் 'ஒளி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை' என்ற வரிகள் அத்தனை சிறப்பானவை. அதே போல நாடோடித் தென்றல் படத்தில்,

'யாரும் விளையாடும் தோட்டம்
தினந்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக் கொண்டு
பொன்னு தரும் பூமி இந்த மண்ணு நம்ம சாமி
கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறோடும் ஊரைப் பாத்து டேரா போடு'

என்ற வரிகள். இந்த பூமியை, மண்ணை அவர் நேசிக்கும் அழகை அத்தனை அற்புதமாக்ச சொல்லியிருப்பார்.

நான் சிறுவயதில் தாயை இழந்தவன். அந்தத் தனிமை எப்போதும் என்னுடன் இருந்துகொண்டே இருக்கும். அப்போது ‘ஆவாரம்பூ’ படத்தில் ஒரு பாடல் கேட்டேன்.

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே..!
அதைக்கேட்டு தூங்கும் ஆவராம்பூவே..!
தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு

இந்த வரிகளைக் கேட்டவுடன் அவரின் இசைக் கரங்களை நான் பிடித்துக்கொண்டேன். அதன் பின்னர் வரும்,

தாய் இழந்த துன்பம் போலே
துன்பம் அது ஒன்றுமில்லை
பூமி என்ற தாயும் உண்டு
வானம் என்ற தந்தை உண்டு
நீங்கிடாத சொந்தம் என்று
நீரும் காற்றும் எங்கும் உண்டு

என்ற வரிகள் எனக்கு தன்னம்பிக்கை அளித்தன. அன்று பிடித்த அவரின் இசைக் கரங்களை இன்றுவரை நான் விடவில்லை," என்றார்.

அதுவரை நிசப்தத்தில் இருந்த அரங்கம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து அதிர்ந்தது!

நயன்தாரா ரிட்டன்ஸ்! எடுத்த எடுப்பிலேயே ரூ.1.5 கோடி சம்பளம்!

காதல் கசந்துவிட்டதால் மீண்டும் நடிக்க ஆரம்பத்திருக்கும் நயன்தாராவுக்கு எடுத்த எடுப்பிலேயே ரூ1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நயன்தாரா. பிரபுதேவாவை திருமணம் செய்ய இருந்ததால், தெலுங்கில் ஸ்ரீராம்ராஜ்யம் படத்தோடு நடிப்பிற்கு முழுக்கு போட்டார். சினிமாவை விட்டு விலகுவதற்கு முன்பு வரை அவருடைய மார்க்கெட் ரேட்டிற்கு எந்த சரிவும் இல்லை. நல்ல நிலையிலேயே அவர் சினிமாவை விட்டு நீங்கினார்.

இந்நிலையில் பிரபுதேவா-நயன்தாரா காதலில் விரிசல் ஏற்பட்டு, இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் நயன்தாரா மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டார். இப்போது தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தில் அவருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் ரூ.1.5 கோ‌டியாம். நயன்தாராவின் இந்த சம்பள ரேட்டை கேட்டு முன்னணி நடிகைகள் பலர் வாயடைத்து போய் உள்ளனராம். நடிப்பிற்கு முழுக்கு போட்டு போன நடிகையை திருப்பி அழைத்து வந்து இவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்களே என்று பலர் புலம்பி வருகின்றனர்.

முதல் படத்திற்கே இவ்வளவு என்றால் இனி நடிக்க போகும் படத்திற்கு...?! அப்ப இனிமேல் நயன்தாரா காட்டில் மழை தான்... போங்க!!

கிளிப்பிங்ஸ்!!!

ரஜினியின் கோச்சடையான் பட ஷூட்டிங், பூஜையுடன் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.

மனைவி கீதாஞ்சலிக்கு குழந்தை பிறந்ததால் இரண் டாம் உலகம் பட ஷூட்டிங்கை நிறுத்தியிருந்தார் செல்வராகவன். படத்தின் 2வது ஷெட்யூல் ஐதராபாத்தில் இந்த வாரம் தொடங்குகிறது.

நீர்பறவை படத்தில் விஷ்ணு ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். பட ஷூட்டிங் தூத்துக்
குடியில் நடக்க உள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பின் சிரஞ்சீவி நடிக்கும் தெலுங்கு படத்தை ஷங்கர் இயக்க பேச்சு நடக்கிறது.

பசங்க பாண்டிராஜ் இயக்கும் மெரினா படம் வரும் 3ம் தேதி ரிலீசாகிறது.

அரிவாளை கீழே போடுங்கய்யா...! - இளையராஜா!!!

சினிமாவில் இன்றைக்கு அரிவாள், ரத்தம் என வன்முறை அதிகரித்து வருகிறது. ஆயுதத்தை கீழே போடுங்கள், அன்பை உபயோகியுங்கள், என்றார் இசைஞானி இளையராஜா.

ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள செங்காத்து பூமியிலே படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இளையராஜா கூறுகையில், "செங்காத்து பூமியிலே வன்முறைக்கு எதிரான படம். இன்றைய காலகட்டத்தில் அப்படி வந்திருக்கும் ஒரே படம் என்று கூடச் சொல்லலாம்.

இப்படத்தின் இயக்குனர் ரத்னகுமார் என்னிடம் இசையமைக்க கேட்டபோது வழக்கமான “என்ன... அருவா வெட்டு குத்து படம் தானா, வன்முறையை விதைச்சிட்டு என்னத்த அறுவடை பண்ணப் போறீங்க” என்று கேட்டேன். உடனே படத்தை முடிச்சிட்டு வந்து போட்டுக் காட்டினார்.

ஒரு நல்ல கருத்தை சொல்லும் படமாக இருந்ததால் இசையமைக்க ஒப்புக் கொண்டேன்.

மனிதனாகப் பிறக்கிறோம், வாழ்கிறோம், மடிகிறோம்... இந்த வாழ்க்கையை மனிதன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டாமா... கோபத்தின் வெளிப்பாடுதான் வன்முறை. கோபத்தின் ஆயுதத்தை தூக்குவதற்கு முன் தனது குடும்பத்தையும், குழந்தைகளையும் நினைத்து பார்த்தால் ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற எண்ணம் வராது.

ஆயுதத்தை கீழே போடுங்கள், அன்பை உபயோகியுங்கள். வன்முறை காணாமல் போகும். இதைத்தான் செங்காத்து பூமியிலே படம் பிரதிபலிக்கிறது. பெண்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். அப்போதுதான் வன்முறையின் வலி புரியும். தென் தமிழகத்து மக்களின் வாழ்க்கை, வலிகளை மிக யதார்த்தமாக படமாக்கியிருக்கிறார் ரத்னகுமார்.

இது போன்ற சிறு பட்ஜெட் படங்களுக்கு, கதையுள்ள கருத்துள்ள படங்களுக்கு பத்திரிகையாளர்கள் ஆதரவு தந்து உற்சாகப்படுத்தி வரவேற்க வேண்டும். பெரிய நடிகர்கள் படங்களுக்கு மட்டுமே ஆதரவு என்ற நிலைமை மாற வேண்டும். நல்ல கதைகளுக்கு நடிகர்கள் தேவை இல்லை," என்றார்.

ஏற்கெனவே, "வன்முறை, அரிவாள் கலாச்சாரம் அதிகமாக உள்ள படங்களுக்கு இசையமைக்க மாட்டேன். நீ அரிவாள கீழே போடுய்யா... இசை அமைக்கிறேன்," என இயக்குநர் அமீரிடமே சொன்னவர் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி சிறந்த குணசித்திர நடிகர் அவரது திறமை வீணாகிறது : இயக்குனர் மகேந்திரன்!

இன்றைக்கு இருக்கும் நடிகர்களில் மிகச் சிறந்த குணசித்திர நடிகர் ரஜினிதான். அவரது திறமையை வேறு பாணியில் பயன்படுத்தி வீணடிக்கிறார்கள் என்றார் இயக்குனர் மகேந்திரன். பிரகாஷ்ராஜ் தயாரித்து இயக்கி நடிக்கும் படம் ‘தோனி’. இளையராஜா இசை அமைக்கிறார். இதன் பாடல் கேசட் விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் மகேந்திரன் கூறியதாவது: நான் இயக்கிய படங்களில் ஜீவனாக அமைந்தது இளையராஜா இசைதான். அவரது இசை இல்லாமலிருந்திருந்தால் இன்றைக்கு நான் பேசப்பட்டிருக்கமாட்டேன். ரஜினிகாந்த் மிகச் சிறந்த குணசித்திர நடிகர்.

ஆனால் அவரை வேறு பாணியில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவருக்கு இணையாக இன்றைக்கு பிரகாஷ்ராஜ் மிகப் பெரிய குணசித்திர நடிகராக இருக்கிறார். ஆனால் அவரை வில்லனாக பல படங்களில் பார்க்க வேண்டி உள்ளது. அவர் நடிக்கும் எல்லா படங்களையும் நான் பார்த்துவிடுவேன். குணசித்ர வேடத்தில் நூறு சதவீதம் தனது நடிப்பை தருவதுபோல் வில்லன் வேடத்திலும் தருகிறார். ‘கில்லி’ படத்தில் பிரகாஷ்ராஜ் ‘செல்லம்’ என்று அடிக்கடி சொல்வார்.

அப்படத்தில் விஜய்யை மணப்பதற்கு பதில் பிரகாஷ்ராஜையே த்ரிஷா கல்யாணம் பண்ணி இருக்கலாம் என்று எனக்கு தோன்றியது. இவ்வாறு மகேந்திரன் கூறினார். கே.பாலசந்தர், பாலுமகேந்திரா, எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.
div>

இலியானாவுடன் மோதலா? பிரியங்கா பரபரப்பு பேட்டி!!!

இலியானாவுடன் மோதலா என்பதற்கு பிரியங்கா சோப்ரா பதில் அளித்தார். பாலிவுட் ஹீரோயின் பிரியங்கா சோப்ரா. இவர் கூறியதாவது: இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘அக்னீபத்’ படம் இந்தியில் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. அதேபோல் ‘சாத் கூஹுன் மாப்’ என்ற படத்திற்காக பிலிம்பேர் விருது கிடைத்திருக்கிறது. இதை கொண்டாடும் ஆசை இருக்கிறது. ஆனால் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறேன். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறேன். இப்போதும் வாய்ப்புகள் வருகின்றன. மனதுக்கு பிடித்ததாக அமையவில்லை. கால்ஷீட் பிரச்னையும் நடிக்க முடியாததற்கு காரணம். நல்ல வேடம் வந்தால் நிச்சயம் ஏற்பேன். ‘பர்பி’ என்ற படத்தில் நானும் இலியானாவும் சேர்ந்து நடித்தோம். எங்களுக்குள் மோதல் என்று கிசுகிசு வெளியானது. அப்படி எதுவும் இல்லை. இலியானா இனிமையானவர் மட்டுமல்ல அழகானவர், நல்ல நடிகை. ஒருவருடத்துக்கும் மேலாக இருவரும் இணைந்து பணியாற்றினோம். அவரது தாய், தங்கையை நான் சந்தித்து பேசி இருக்கிறேன். நாங்கள் தோழிகளாக இருக்கிறோம். இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.

இரவு விருந்து.... தோழி ஃபராகான் கணவரைப் புரட்டியெடுத்த ஷாரூக்கான்!

மும்பை: அக்னிபாத் வெற்றி விழா விருந்துக்கு வந்த பிரபல பெண் இயக்குநர் ஃபராகானின் கணவரும் இயக்குநருமான சிரீஷ் குந்தை கடுமையாக அடித்து உதைத்தார் நடிகர் ஷாரூக்கான்.

ஃபராகானும் ஷாரூக்கும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிப்பில் வெளியான அக்னிபாத் படம் வெற்றியடைந்ததை முன்னிட்டு மும்பை புறநகரில் உள்ள உணவகத்தில் சஞ்சய் தத் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். நடிகர் ஷாருக்கான் விருந்துக்கு வந்தார்.

விருந்து நடந்து இடத்திற்குள் நுழைந்த ஷாருக்கான் அங்கு நின்று கொண்டிருந்த இயக்குநர் சிரிஷ் குந்தரை நோக்கி வேகமாக சென்றார். பின்னர் திடீரென அவருடைய நீளமான தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளினார். சிரிஷ் குந்தர் முகத்தில் ஷாருக்கான் மாறிமாறி குத்தியதாகக் கூறப்படுகிறது.

இதைப் பார்த்த உணவகத்தின் உரிமையாளரான பாபா தீவான் தலையிட்டு ஷாருக்கானை பிடித்து வேறுபக்கமாக அழைத்துச் சென்றார். ஆனால் அவரை வெளியேறச் சொன்னார் ஷாரூக். உடனே சஞ்சய் தத் தலையிட்டு, ஷாரூக்கை அழைத்துச் சென்றுவிட்டாராம். அவர் மட்டும் வராமலிருந்திருந்தால் நிலைமை மிக மோசமாகிவிட்டிருக்கும் என்கிறார்கள்.

பின்னர் இயக்குநர் சிரிஷ் குந்தர், விருந்து நடந்த இடத்திலிருந்து வேகமாக வெளியேறினார். அப்போது அவருடைய முகம் முழுவதும் வீங்கி காணப்பட்டது.

சிரிஷ் குந்தரின் மனைவி பிரபல இயக்குநர் ஃபராகான் ஆவார். இவரும், ஷாருக்கானும் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். ஷாரூக் தனது மே ஹுன் நா மற்றும் ஓம் ஷாந்தி ஓம் படங்களை இயக்கும் வாய்ப்பை ஃபரா கானுக்கு தந்திருந்தார். ஏராளமான படங்களில் ஷாரூக்கானுக்காக நடனம் அமைத்தவர் அவர்தான். ஆனால் தீஸ் மார் கான் படத்தில் ஃபராகான் அக்ஷய் குமாரை ஒப்பந்தம் செய்ய, பிரச்சினை ஆரம்பமானது.

சிரீஷ் குந்தரும் ஒரு காலத்தில் ஷாரூக்கின் நண்பராக இருந்தார். ஆனால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஷாரூக்கை மோசமாக கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தார். இதனால் அவர் இயக்கிய ஜோக்கர் படத்துக்கு ஷாரூக் கால்ஷீட் கொடுக்கவில்லை. அந்த கோபத்தில், ஷாரூக்கின் ரா ஒன் படம் குறித்து கேவலமான விமர்சித்திருந்தாராம் சிரிஷ்.

இந்த நிலையில், நேற்றைய விருந்துக்கு வந்த ஷாரூக்கை மிகவும் கோபப்படுத்தும் விதத்தில் சிரீஷ் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த கோபத்தில்தான் ஷாரூக் வெளுத்தாராம். எனினும் இதுபற்றி போலீசில் புகார் தரப்போவதில்லை என்று பாராகான் தெரிவித்து உள்ளார்.

"ஒருவரை அடிப்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அது மோசமான விஷயம் என்றும் அடிக்கடி கூறுவார் ஷாரூக். அவரா இப்படிச் செய்தார் என்று ஆச்சர்யமாக உள்ளது," என்றார் ஃபாராகான்.

இந்த சண்டையின் போது நேரில் பார்த்த அனைவருமே, ஷாரூக் பக்கம் தவறில்லை என்றே குறிப்பிட்டுள்ளனர்.

2008-ம் ஆண்டு கத்ரீனா கைஃபின் பிறந்த நாள் விருந்தில் ஷாரூக்கானும் சல்மான் கானும் கைகலப்பில் இறங்கி பெரும் பிரச்சினையானது நினைவிருக்கலாம்!