Wednesday, February 1, 2012

சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசால் தனுஷ், கார்த்தி படங்கள் தள்ளிவைப்பு!!!

பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களை பண்டிகை காலங்களில் மட்டும் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்ததால் தனுஷின் 3 மற்றும் கார்த்தியின் சகுனி படங்களின் ரிலீஸ் தள்ளிபோய் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும் தான் அதிகளவு தியேட்டர் கிடைப்பதாகவும், இதனால் சிறுபட்ஜெட் படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் பெட்டிக்குள் முடங்கி கிடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இதற்கு தீர்வு காணும் விதமாக, இனி பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களை பண்டிகை நாட்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அதிரடி முடி‌வால் இம்மாதம் ரிலீசாவதாக இருந்த கார்த்தியின் "சகுனி" மற்றும் தனுசின் "3" ஆகிய இரு படங்களும் தமிழ் புத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இம்மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் படங்கள் : ஒரு நடிகையின் வாக்குமூலம், முப்பொழுதும் உன் கற்பனைகள், மெரினா, செங்காத்து பூமியிலே, அரவாண், தோனி, காதலில் சொதப்புவது எப்படி, கொண்டான் கொடுத்தான், அம்புலி உள்ளிட்ட 20 படங்கள் ரிலீசாக உள்ளன.

இயக்குநரான லஷ்மி ராமகிருஷ்ணா!!!

தமிழ் சினிமாவில் 'அம்சமான ஆன்டி' என்று பெயரெடுத்த லட்சுமி ராமகிருஷ்ணா, அடுத்து இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

பிரிவோம் சந்திப்போம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணா. தமிழில் இதுவரை 33 படங்கள் செய்துவிட்டார். தொலைக்காட்சி சீரியல்களிலும் வருகிறார்.

இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். தனது முதல் படத்துக்கு ஆரோகணம் என்று தலைப்பு வைத்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணா. சத்தமில்லாமல் படப்பிடிப்பை ஆரம்பித்தவர், இப்போது கிட்டத்தட்ட முடித்தேவிட்டார்.

தனது படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணா கூறுகையில், "அரைச்ச மாவையே அரைக்காமல் புதுசா, கொஞ்சம் நேர்மையா ஒரு படம் வந்தால் மக்கள் ரசிக்கத்தான் செய்கிறார்கள். உதாரணமா மௌனகுரு.

ஒரு சீரியஸான விஷயத்தை சீரியஸாகவே சொல்லாம ரொம்ப ஜாலியா சொல்லலாம். பாஸிட்டிவ்வா அணுகலாம் அப்படித்தான் ஆரோகணத்தை எடுத்திருக்கேன். மனசுக்கு நெருக்கமா நடந்த, பார்த்த ஒரு விஷயத்தை இதில் சொல்லி இருக்கேன்.

'ஆரோகணம்' படத்தை முதல் முதலாக என் சொந்த பேனரில், சொந்த பணத்தில் ஆரம்பித்தேன். ஒரு பரிட்ச்சார்த்த முயற்சி செய்யும் போது இன்னொருத்தர் காசில் விளையாட பயம் எனக்கு. முதல் பாதி முடித்து ஒரு டிவிடி யை மெடிமிக்ஸ் நிர்வாகத்தின் தலைவருக்கு அனுப்பிவைத்தேன். பார்த்துவிட்டு இந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்ற சொல்லி அவரே கையிலெடுத்துக்கொண்டார்.

நான் ரொம்ப பெரிய இயக்குநராகனும்னு படம் பண்ணவில்லை. எனக்கு இருக்கிற அறிவில் இந்த படத்தை பண்ணியிருக்கிறேன். சில விஷயங்களைச் சொல்லியிருக்கேன்," என்றார்.

சம்பத் , ஜெயப்பிரகாஷ் , விஜி சந்திரசேகர் , உமா பத்மநாபன், ராஜி, விஜயசாரதி ஆகியோருடன் விரேஷ், ஜெய் குஹேரனி என இரண்டு புதியவர்களை அறிமுகம் செய்கிறார் இந்தப் படத்தில் லட்சுமி.

சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய யுத்தம் செய் படத்துக்கு இசை தந்த கே இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற ‘ஆடுகளம்”, ‘ஈரம்” எங்கேயும் எப்போதும் படங்களின் எடிட்டர் கிஷோர் ஆரோகணத்தை எடிட் செய்கிறார்.

சரி... இந்தப் படத்தில் நீங்கள் நடிக்கவில்லையா என்றால்.... சிரித்தபடி, "கேஎஸ் ரவிக்குமார் ஸ்டைலை இந்தப் படத்தில் ஃபாலோ பண்றேன்", என்றார்!

தனியாக வசிக்கும் வாரிசு நடிகை!!!

கோலிவுட் படங்கள்ல நடிச்சாலும் வேர்ல்டு ஹீரோவோட மகள் தனி வீட்லதான் வசிக்கிறாராம்... வசிக்கிறாராம்... இங்கு நடக்கிற ஷூட்டிங்குக்கு தனியா போற வாரிசு, டோலிவுட், பாலிவுட் படங்கள்ல நடிக்கும்போது இந்த பாணியை மாத்திக்கிறாராம். அங்கே எந்த பட ஷூட்டிங்குக்கு போனாலும் தன்னோடு துணையை அழைச்சிட்டு போறாராம்... போறாராம்... பாலிவுட்ல அம்மாகுலத்தையும் டோலிவுட்ல கவுதம நடிகையையும் அழைச்சிட்டு போறாராம்... போறாராம்...

பிரகாச வில்லன் நடிகரு இயக்குற படத்துக்கான பாடல் கம்போசிங்ல ஞானி இசை நிறைய ஐடியா கொடுத்தாராம்... கொடுத்தாராம்... நடிகரும் வேற வழியில்லாம அவரு சொன்ன மாதிரி சில சீன்களை படமாக்கினாராம். ஷூட்டிங் முடிஞ்சதும் அந்த காட்சிகளை பார்க்க இசை ஆசைப்பட்டாராம். நொந்துபோன நடிகரு, அந்த காட்சிகளை இசைக்கு போட்டு காட்டினாராம்... காட்டினாராம்...

அம்புலியான 3டி படத்தை சில வினியோகஸ்தருங்க வாங்க வந்தாங்களாம்... வந்தாங்களாம்... ஆனா, தயாரிப்பு கேட்ட தொகை பயங்கரமா இருந்துச்சாம். குறைச்சி கேட்டதும், விற்க மறுத்துட்டாராம்... மறுத்துட்டாராம்... படத்தை நானே ரிலீஸ் பண்ணிக்கிறேன்னு தயாரிப்பு அலப்பறை பண்றாராம்... பண்றாராம்...

விஷால் படத்தில் இருந்து வெளியேறினார் பிரகாஷ்ராஜ்!

த்ரிஷா நடிக்கும் படத்தில் இருந்து பிரகாஷ்ராஜ் வெளியேறினார். விஷால், த்ரிஷா முதன்முறையாக ஜோடியாக நடிக்கும் படம் ‘சமரன்'. இதை திரு இயக்குகிறார். இவர் ஏற்கனவே விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை' படத்தை இயக்கியவர். இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க முதலில் அரவிந்த சாமியிடம் பேசப்பட்டது. இப்படம் மூலம் அவர் ரீ என்ட்ரி ஆவார் என்று திரையுலகினர் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் மீண்டும் நடிக்க வருவதற்கு மறுத்துவிட்டார். இதையடுத்து அந்த வேடத்துக்கு பிரகாஷ்ராஜ் பேசப்பட்டார். முதலில் நடிப்பதாக ஒப்புக்கொண்டார். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஒரு மாதம் தள்ளிப்போனது. நடிகர்களின் கால்ஷீட் பிரச்னையும் ஏற்பட்டது. இப்போது படத்தில் இருந்து பிரகாஷ்ராஜ் வெளியேறி இருக்கிறார். தற்போது இந்த வேடத்திற்கு மனோஜ் பாஜ்பாய் தேர்வாகி உள்ளார். இவர், இந்தியில் பிரபல நடிகர். தற்போது 'சமரன்' ஷூட்டிங் பாங்காக்கில் நடக்கிறது. விஷால், பாஜ்பாய், த்ரிஷா நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக உள்ளன.

தானே புயல் நிவாரணத்துக்கு ஜெயலலிதாவிடம், இன்று ரூ.8 1/2 கோடி நிதி உதவி வழங்கப்பட்டது: கமலஹாசன் ரூ.15 லட்சம் வழங்கினார்!

சென்னை::தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம், தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று (புதன்கிழமை) தலைமைச் செயலகத்தில் பலர் நிதியுதவி வழங்கினார்கள்.

அவர்கள் விவரம் வருமாறு:-

சட்டப்பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார், சட்டப் பேரவை துணைத் தலைவர் டி.தனபால், அரசு கொறடா பி. மோகன் ஆகியோர் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் - 57 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஏ. வைத்தியலிங்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் ஆகியவற்றின் பணியாளர்கள் சார்பாக 26 லட்சத்து 71 ஆயிரத்து 638 ரூபாய்.

வனத்துறை அமைச்சர் கே.டி. பச்சமால் தமிழ்நாடு வனத்துறை, தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம், தமிழ்நாடு வன வளர்ப்புக் கழகம் ஆகியவற்றின் பணியாளர்கள் சார்பாக 50 லட்சத்து 63 ஆயிரத்து 482 ரூபாய்.

உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையரகம், தமிழ்நாடு கிடங்கு கழகம், மாநில நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையரகம் ஆகியவற்றின் பணியாளர்கள் சார்பாக 1 கோடியே 6 லட்சம் ரூபாய்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் - 15 லட்சம் ரூபாய்.

பொள்ளாச்சி என். மகாலிங்கம் சக்தி குழும நிறுவனத்தின் சார்பாக 1 கோடி ரூபாய்.

சென்னை, அமால் கமேஷன் பிரைவேட் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி 1 கோடி ரூபாய்.

தமிழ் திரைப்பட நடிகர் கமலஹாசன் ரூ.15 லட்சம்.

இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டி.எம். பாஷின் 1 கோடி ரூபாய்.

சென்னை சில்க்ஸ் இணை மேலாண்மை இயக்குநர் கே. மாணிக்கம் 50 லட்சம் ரூபாய்.

தமிழ்நாடு பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளத்தின் தலைவர் கே.தங்கராஜ் 50 லட்சம் ரூபாய்.

ஜெமினி இன்டஸ்டீரிஸ் மற்றும் இமேஜிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஏ. ரவிசங்கர் பிரசாத் 50 லட்சம் ரூபாய்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கோபாலகிருஷ்ணன் எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் சார்பாக 30 லட்சம் ரூபாய்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே. அய்யப்பன் 25 லட்சம் ரூபாய்.

கும்பகோணம், சிட்டி யூனியன் வங்கியின் மேலாண்மை இயக்குநரும், முதன்மை செயல் அலுவலருமான டாக்டர் என். காமகோடி 25 லட்சம் ரூபாய்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

வேல் டெக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கே.ரங்கராஜன் மகாலஷ்மி 20 லட்சம் ரூபாய்.

சென்னை பிரஸ் கிளப் சார்பாக 10 ஆயிரம் ரூபாய்.

முதல்-அமைச்சரிடம், தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறு வாழ்வுக்காக 8 கோடியே 50 லட்சத்து 97 ஆயிரத்து 120 ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று அளிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 64 கோடியே 84 லட்சத்து 7 ஆயிரத்து 747 ரூபாயாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்ல சூர்யா, இப்ப விஜய், எப்பூடி...காஜல் குஷி!!

நடிகை காஜல் அகர்வால் ஒரே குஷியாக உள்ளாராம். அதற்கு காரணம் நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்.

நடிகை காஜல் அகர்வால் ஆண்கள் பத்திரிக்கைக்கு அரை நிர்வாணப் போஸ் கொடுத்தார் என்று பிரச்சனை வந்தபோதிலும் அவர் காட்டில் ஜில்லென்று என்று மழைக் கொட்டிக் கொண்டு தான் இருக்கிறது. தெலுங்கில் முன்னணி நாயகர்களின் படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இது தவிர தமிழில் சூர்யாவுடன் மாற்றான் படத்தில் ஒப்பந்தமாகி ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.

ஏற்கனவே தமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யாவுடன் நடித்த பெருமிதத்தில் இருந்த காஜல் அடுத்து நம்ம இளைய தளபதி விஜயுடன் துப்பாக்கி படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். அப்புறம் அவர் குஷியாக இருக்க மாட்டாரா என்ன. மாற்றான் ஷூட்டிங் முடிந்த கையோடு விஜயுடன் நடிக்க சென்றுவிட்டார் காஜல்.

ஏய், பார்த்தியா முதலில் சூர்யாவுடன் நடித்தேன். அந்த ஷூட்டிங் முடிந்த கையோடு தற்போது கோலிவுட்டின் இன்னொரு முன்னணி ஹீரோவான விஜய்யுடன் நடிக்கிறேன். இதெல்லாம் நான் செய்த பாக்கியம் தான் என்று தனது தோழிகளிடம் சொல்லி, சொல்லி பூரிக்கிறாராம்.

பத்திரிக்கை பிரச்சனைக்குப் பிறகு காஜலின் மார்க்கெட் சரியும் என்று நினைத்தவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. அது இப்போதைக்கு சரியாது என்றுதான் தெரிகிறது...!

29-வது முறையாக பிலிம்பேர் விருது வாங்கிய ஏ ஆர் ரஹ்மான்!!!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு இந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது அளிக்கப்பட்டது.

ரோஜா படத்துக்காக முதல் முறையாக பிலிம்பேர் விருது பெற்றார் ரஹ்மான். அதன் பிறகு ஜென்டில்மேன், காதலன், ஆர்டிபர்மன் சிறப்பு பிலிம்பேர் விருது, பம்பாய், ரங்கீலா, காதல் தேசம், மின்சாரக்கனவு, தில்சே, ஜீன்ஸ், தால், முதல்வன், அலைபாயுதே, லகான், பகத்சிங், சாதியா, ஸ்வதேஸ், ரங் தே பசந்தி, சில்லுனு ஒரு காதல், குரு (பின்னணி இசை), சிவாஜி த பாஸ்,ஜானே து யா ஜானே நா, ஜோதா அக்பர், டெல்லி 6, விண்ணைத்தாண்டி வருவாயா, விண்ணைத் தாண்டி வருவாயா (தெலுங்கு) ஆகிய படங்களுக்கு பிலிம்பேர் விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன.

இந்த முறை ராக்ஸ்டார் இந்திப் படத்தின் இசைக்காக அவருக்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது அவர் பெறும் 29வது பிலிம்பேர் விருது.

நேற்று முன்தினம் மும்பையில் நடந்த பிரமாண்ட விழாவில் இந்த விருதினை அவர் பெற்றுக் கொண்டார். இந்த விருதின் நுனியில் வைரங்கள் பதித்துக்கொடுத்திருந்தனர் பிலிம்பேர் விழா குழுவினர்.

அடுத்த படத்தின் ஹீரோ அஜீத் (அ) விக்ரம் : ஷங்கர்!

'நண்பன்' படம் வெற்றி பிறகு ஓய்வில் இருக்கும் ஷங்கர், இனி ரீமேக் படங்களை இயக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய அடுத்த படம் குறித்து சிறிய தகவல் ஒன்றையும் கூறியுள்ளார். நண்பன் படத்துக்கு முன் ஆக்ஷன் + த்ரில்லர் கலந்த கதை ஒன்றை இயக்க இருந்ததாக கூறிய ஷங்கர், அந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிப்பார் என வெளிவந்த செய்திகள் பொய்யானது என்று கூறினார்-. மேலும், படத்திற்கு அஜீத் (அ) விக்ரம் ஹீரோவாக நடித்தால் நல்லாயிருக்கும் என்று ஷங்கர் கூறினார். இதனையடுத்து படத்தின் அறிவிப்புகள் மார்ச் மாதம் வெளியாகும்.

பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் 'செங்காத்து பூமியிலே': இளையராஜா!

இளையராஜா இசையமைப்பில் உருவாகியிருக்கும் 'செங்காத்து பூமியிலே' படம் விரைவில் வெளியாக இருக்கிறது. பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியிருக்கும் ரத்னகுமார் இயக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இளையராஜா, "வன்முறைக்கு எதிரான படம், ஒரே படம் என்றுகூட 'செங்காத்து பூமியிலே' படத்தை சொல்லலாம். மனிதனாகப் பிறக்கிறோம், வாழ்கிறோம், மடிகிறோம். வாழ்கிற வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும். கோபத்தின் வெளிப்பாடுதான் வன்முறை. கோபத்தில் ஆயுதத்தை தூக்குவதற்கு முன்பு தனது குடும்பத்தையும், குழந்தைகளையும் நினைத்துப் பார்த்தால், ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற எண்ணம் வராது. ஆயுதத்தைக் கீழே போடுங்கள், அன்பை உபயோகியுங்கள். வன்முறை காணாமல் போகும். இதைத்தான் 'செங்காத்து பூமியிலே' படம் பிரதிபலிக்கிறது. இயக்குநர் ரத்னகுமார் என்னிடம் வந்து இப்படத்திற்கு இசையமைக்க சொன்ன போது, "என்ன வழக்கமான அருவா, வெட்டுக்குத்து தானா? வன்முறையை விதைச்சிட்டு என்னத்த அறுவடை பண்ணப் போறீங்க." என்று கேட்டேன். உடனே படத்தை முடிச்சிட்டு போட்டுக் காட்டினார். படத்தைப் பார்த்தேன் ரத்னகுமாரைப் பாராட்டினேன். இருந்தாலும் படத்தில் கொலைகளும் கொஞ்சம் அதிகம்தான். ஆனால், நல்ல கருத்தைச் சொல்லும் கதை என்பதால் கதைக்களத்துக்காக ரத்த வாடையைத் தெளித்திருக்கிறார். குறிப்பாக தென்மாவட்ட மக்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். வன்முறையின் வலி புரியும்." என்று கூறியவர், படத்தின் நடிகர்களைப் பற்றி கூறியபோது, "நல்ல கதைக்கு நடிகர்கள் தேவையில்லை. அது மாதிரிதான் 'செங்காத்து பூமியிலே' படத்துக்கும் நடிகர்கள் தேவையில்லை. இந்தப் படத்தில் நடிச்ச சந்தமாயி என்ற கதாபாத்திரம் அப்படியே என் கண்முன்னே இன்னமும் நிழலாடிக் கொண்டிருக்கிறது. வாழ்ந்து காட்டிவிட்டார். இந்தப் படம் ஓடணும். யதார்த்தமான தென்பகுதி மக்களின் வாழ்க்கை பதிவு என்றுகூட இப்படத்தைச் சொல்லலாம்." என்றார்

முதல்முறையாக இளையராஜாவுடன் கைகோர்த்தார் கவுதம் மேனன்!!!தமிழ் சினிமா இசைக்கு 2012- நல்லவிதமாக அமையப் போவதற்கான அமர்க்களமான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன.

கடந்த சில ஆண்டுகளாக சத்தமே இசை என்று சத்தியம் பண்ணிக்கொண்டிருந்த கோலிவுட்டில், மீண்டும் சங்கீதம் மனதை வருடத் தொடங்கியுள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்ப மாதமான ஜனவரியில் தோணி, மயிலு என இளையராஜாவின் மிக இனிமையான இரண்டு இசைக் குறுந்தகடுகள் வெளியாகியுள்ளன. பெரும் போர்க்கள சத்தத்தில் சிக்கித் தவித்தவனுக்கு மென்மையான வருடல் மாதிரி அமைந்துள்ளன இந்தப் படங்களின் ஒவ்வொரு பாடலும்.

அடுத்த இனிய செய்தி, இயக்குநர் கவுதம் மேனன், இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்திருப்பது.

ராஜாவின் மிகத் தீவிரமான ரசிகர்தான் கவுதம் மேனன் என்றாலும், இதுநாள் வரை அவர் இளையராஜா இசையில் படம் எதுவும் செய்யவில்லை. இவர் பங்குதாரராக இருந்த நிறுவனம் தயாரித்த அழகர்சாமியின் குதிரையில் முதல்முறையாக இணைந்தார் தயாரிப்பாளர் என்ற முறையில். அந்தப் படம் பின்னர் க்ளவுட் நைன் கைக்கு மாறியது.

இப்போது நேரடியாக தனது இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு இளையராஜாவை இசையமைக்குமாறு கவுதம் மேனன் கேட்க, அதற்கு இசைஞானியும் ஒப்புக் கொண்டார்.

அந்தப் படம்தான் 'நீதானே என் பொன் வசந்தம்'. என்பதுகளில் இளையராஜாவின் இசையில் வந்த அற்புதமான பாடலின் முதல் வரிதான் இந்தத் தலைப்பு. இந்தத் தலைப்பை இளையராஜாவின் இசை ரசிகன் என்ற முறையில் வைத்ததாக முன்பே கவுதம் மேனன் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அப்போது இசையமைப்பாளர் யார் என்பதை அவர் சொல்லவில்லை. ரஹ்மான் இசையமைக்கக் கூடும் என்று சொல்லப்பட்டது.

இதுநாள் வரை இந்த விஷயத்தை சஸ்பென்ஸாக வைத்திருந்த கவுதம் இப்போது வெளிப்படையாக அறிவித்தார். "ஆம்... இசைஞானி இளையராஜா சார்தான் நீதானே என் பொன் வசந்தம் பட இசையமைப்பாளர். அவரது ரசிகன் என்ற முறையில், அவருடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன். விரைவில் இசைக் கோர்ப்பு ஆரம்பமாக உள்ளது. என்னுடைய நீண்ட நாள் கனவு இது... இந்தப் படம் முடியும் வரை நான் கனவில் மிதக்கப் போகிறேன்,"என்றார்.

இதுகுறித்து இளையராஜாவிடம் கேட்டபோது, "ஆமாம்... இந்த ஆண்டு நான் சில முக்கியமான படங்களுக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளேன். ஒன்று கவுதம் மேனன் படம். இன்னொன்று ராஜீவ் மேனன் படம். வேலை முடிந்ததும் விரிவாகப் பேசலாம்," என்றார்.

படத்தின் ஹீரோ ஜீவா கூறுகையில், "நீதானே என் பொன் வசந்தம் படத்தில் இளையராஜா + கவுதம் மேனன்... முழுக்க முழுக்க காதல் பாடல்கள். ஆம்... நம் இசைஞானி இசையில் நான் நடிக்கும் படம்... ஆஹா நினைப்பே சுகமாக உள்ளது," என்றார்.

ஆஹா... கோலிவுட் இசையின் பொற்காலம் திரும்பிடுச்சி!