Friday, January 6, 2012

இந்த வருஷம் யாருக்கெல்லாம் டும்டும்டும்?

Friday, January 06, 2012
இந்த ஆண்டு நிச்சயம் கல்யாணம் செய்துகொள்வார்கள் என்று கூறப்படும் நடிகைகள் மூன்று பேர். நயன்தாரா, சினேகா, ஜெனிலியா ஆகிய மூவரும்தான் அவர்கள்.

நயன்தாரா திருமணம் கடந்த ஜூலையிலேயே நடக்கவிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் தள்ளிப் போனது. இந்த ஆண்டு நிச்சயம் நடக்கும் என்கிறார்கள்.

சினேகா - பிரசன்னா திருமணம் உறுதியாகிவிட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் திருமணம் நடக்கலாம் என்று தெரிகிறது. இருவரும் ஜோடியாக விழாக்களுக்கு வருகிறார்கள். இணைந்தே விருதுகளைப் பெறுகிறார்கள். சினேகா கைவசம் இப்போது சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்தான். அதை முடித்ததும் திருமணம் என்பது உறுதி.

ஜெனிலியாவுக்கு நிச்சயதார்த்தம் சமீபத்தில் முடிந்தது. பிப்ரவரி மாதம் மொத்தம் 5 நாட்கள் இந்தத் திருமணம் நடக்கிறது. பெரிய இடத்து மாப்பிள்ளை. மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்தான் மணமகன். ஜெனிலியா கைவசமும் இப்போதைக்கு வேறு படங்கள் இல்லை.

அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்!

ஜேசுதாஸுக்கு ஸ்ரீ நாராயண விருது: நாளை விருது வழங்கும் விழா!

Friday, January 06, 2012
திருச்சூர்:2011ம் ஆண்டுக்கான ஸ்ரீ நாராயண விருதுக்கு பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளில் சினிமா பாடல்கள் பாடியுள்ளார். மயக்கும் குரல் வளம் கொண்ட அவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ஜேசுதாஸின் திறமையை பாராட்டி 2011ம் ஆண்டுக்கான ஸ்ரீ நாராயண விருது அவருக்கு வழங்கப்படவிருக்கிறது. கேரள மாநிலம் திருச்சூரில் நாளை (ஜனவரி 7) நடக்க உள்ள விழாவில் சிவகிரை மடாதிபதி பிரகாசானந்த சுவாமிகள் விருதையும், ரூ.50,000 பரிசுத் தொகையும் ஜேசுதாசுக்கு வழங்குகிறார். விருது வழங்கும் விழாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் எம். ராமச்சந்திரன் துவக்கி வைக்க உள்ளார்.

'மார்க்கெட் போய்டுச்சா... சேச்சே..!' - ஸ்ரேயா!!

Friday, January 06, 2012
தமிழில் தனக்கு மார்க்கெட் போய்விட்டதாக வரும் செய்திகளில் உண்மையில்லை என்கிறார் நடிகை ஸ்ரேயா.

ராசியில்லாத நடிகை என்ற லிஸ்டிலிருந்த ஸ்ரேயா, சிவாஜியில் ரஜினி ஜோடியாக நடித்ததன் மூலம் இந்தியாவின் பிரபல நடிகையாக மாறினார்.

தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என டாப் கியரில் போய்க் கொண்டிருந்தவர், இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தில் வடிவேலுவுடன் டூயட் பாடியதிலிருந்து சரிவுக்குள்ளானார்.

சமீப காலமாக அவர் நடித்த படங்கள் பெரிதாகப் போகவில்லை. இப்போது அவருக்கு படங்களும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கடைசியாக ரௌத்திரம் படத்தில் நடித்தார். ஸ்ரேயா மார்க்கெட் சரிந்து விட்டதாகவும் புதுப் படங்களுக்கு தயாரிப்பாளர்கள் அவரை ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுபற்றி ஸ்ரேயாவிடம் கேட்ட போது, "நான் பன்னிரெண்டு வருடமாக சினிமாவில் இருக்கிறேன். என்ன கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன் என்ற பெயரைப் பெற்றுள்ளேன்.

நல்ல நடிகைகளுக்கு மார்க்கெட் என்ற வரையறையே கிடையாது. எனக்கு மார்க்கெட் போய் விட்டது என்றும் படவாய்ப்புகள் இல்லை என்றும் சொல்லப்படுவதில் உண்மை இல்லை.

சினிமாவுக்கு வந்த புதிதிலும் எல்லா படங்களையும் ஒப்புக் கொண்டேன். சில படங்களில் தயாரிப்பாளர், இயக்குனர் வேண்டப்பட்டவராக இருந்ததால் நடித்தேன். இப்போது அப்படியெல்லாம் நடிக்க வேண்டிய அவசியமில்லையே. பணக்கஷ்டம் இல்லை. எனவே தேர்ந்தெடுத்து நடிக்கப் போகிறேன்.

நல்ல கதைகளாக இருந்தால் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். இதை வைத்து எனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று வதந்தி பரப்புகிறார்கள். எனக்கு நிற்க நேரமில்லாத அளவுக்கு வேலை. ஒரு பாட்டுக்கு ஆடுவது, விளம்பரங்கள், நிகழ்ச்சிகள், சேவை அமைப்புகள் என நான் ரொம்ப பிஸி," என்றார்.

நல்ல கதை இல்லாததால படங்களில் நடிக்கவில்லை என்கிறீர்கள்.... ஒத்தப் பாட்டு, குத்துப் பாட்டெல்லாம் எதில் சேர்த்தி?!

ஷாரூக் மாதிரி மாப்பிள்ளை வேணும் : தீக்ஷா!

Friday, January 06, 2012
ஷாரூக்கான் மாதிரி நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் கல்யாணம் பற்றி பேசலாம், என்று நடிகை தீக்ஷா சேத் கூறியுள்ளார். ராஜபாட்டை படத்தில் விக்ரம் ஜோடியாக வந்த அழகு தேவதை தீக்‌ஷா, அடுத்து சிம்பு நடிக்கும் வேட்டை மன்னன் படத்தில் நடிக்கிறார். படத்தில் தீக்ஷாவுடன், ஹன்சிகா மோத்வானியும் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இதுபற்றி தீக்ஷா அளித்துள்ள பேட்டியில், வேட்டை மன்னன்ல ஹன்சிகா மோத்வானியும் நடிக்கப்போறங்க. ஆனால் இது பற்றி இதுவரைக்கும் சிம்பு என்கிட்ட எதுவும் பேசலை. நான் பார்த்த வரைக்கும் சிம்பு எல்லா விசயத்திலும் ரொம்பவே ஓபன் டைப்பாத்தான் இருக்கிறார். என்கிட்ட நீதான் படத்தோட ஹீரோயின்னு சொல்லிதான் கமிட் பண்ணினார். கதையில ஒருவேளை இன்னொரு கேரக்டர் இருக்கலாம். அதுல ஹன்சிகாவே கூட நடிக்கலாம், என்று கூறியுள்ளார். திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அம்மணி, எனக்கு இப்பத்தான் 20 வயசு ஆகுது. ஷாருக் கான் மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளை கண்ணுல மாட்டுறப்ப என் கல்யாண மேட்டரைப்பத்தி பேசலாம், என்று கூறியிருக்கிறார்.

இசைப்புயலுக்கு இன்று பிறந்த நாள்... ரஜினி மற்றும் திரையுலகினர் வாழ்த்து!

Friday, January 06, 2012
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி உள்பட தமிழ் திரையுலகினர் இன்று வாழ்த்து தெரிவித்தனர்.

ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ ஆர் ரஹ்மான். அதன் பிறகு ஜென்டில்மேன், பம்பாய் என அடுத்தடுத்த ஹிட் கொடுக்க, ரஹ்மானின் கேரியர் கிராப் எங்கேயோ போய்விட்டது. தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக உயர்ந்த அவர், பின்னர் இந்திக்கும் போனார்.

இந்தியில் மிகவும் வெற்றிகரமான இசையமைப்பாளர் என்ற புகழ் பெற்றார். அவர் இசையமைத்த இந்திப் படங்களின் பாடல்களை வெளியிடுவதில் இசை வெளியீட்டு நிறுவனங்கள் மத்தியில் ஏக போட்டி.

பின்னர் ஹாலிவுட்டிலும் கால்பதித்தார். ஸ்டீபன் ஸ்பீல்பர்க் படத்துக்கே இசையமைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார் ரஹ்மான்.

நான்கு முறை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை வென்றுள்ள ஏ ஆர் ரஹ்மான், ஸ்லம்டாக் மில்லியனேர் என்ற ஆங்கிலப் படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ என்ற பாடலுக்காக ஆஸ்கர் விருதினை வென்றார். அதே படத்தின் இன்னொரு பாடலுக்கு பாடலாசிரியர் குல்சாருடன் இணைந்து மேலும் ஒரு ஆஸ்கர் விருதினைப் பெற்றார் ரஹ்மான்.

ரஹ்மானின் மனைவி பெயர் சாய்ரா. கதீஜா, ரஹ்மா என இரு மகள்களும், அமீன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். மகள் கதீஜா ஏற்கெனவே எந்திரன் படத்தில் புதிய மனிதா... பாடலை எஸ்பிபியுடன் பாடியுள்ளார். சிறுவன் அமீனும் பாடகராக அடியெடுத்து வைத்துள்ளான்.

பொதுவாக எந்த சர்ச்சையிலும் சிக்கிக்கொள்ளாதவர் ரஹ்மான். முதல் முறையாக முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தன்னையும் அறியாமல் சர்ச்சைக்கு உள்ளானார். முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று கூறும் டேம் 999 படத்தின் இசைக்கு ஆஸ்கர் கிடைக்க பிரார்த்திப்பதாக அவர் கூறியதால் தமிழுணர்வாளர்கள் ரஹ்மானுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இது பற்றி எதுவும் தெரியாத நிலையில் தாம் அப்படி பேட்டியளித்ததாகக் கூறி, வருத்தம் தெரிவித்தார் ரஹ்மான்.

இப்போது அவர் ரஜினியின் கோச்சடையான், ராணா, மணிரத்னத்தின் பூக்கடை ஆகிய படங்களுக்கு மட்டும் இசையமைத்து வருகிறார். இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

பிறந்த நாள் காணும் அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காலையிலேயே போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். திரையுலகின் முன்னணி கலைஞர்கள் இயக்குநர்கள் ஷங்கர், மணிரத்னம், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் அனைவரும் அவரை வாழ்த்தினர்.

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இசைப்புயலுக்கு நமது வாழ்த்தையும் பதிவு செய்வோம்!

கனவுக் கன்னிகள்!!!

Friday, January 06, 2012
இவர்கள்தான் இந்த ஆண்டு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் ஆட்டிப் படைக்கப் போகும் தேவதைகள். கடைசி நேரத்தில் மின்னலென யாராவது புகுந்து இவர்கள் அனைவரையும் ஓரம் கட்டி விடக் கூடும். அதற்காக நாக்கை தொங்க விட்டபடி காத்திருப்பதை விட, கிடைத்திருக்கும் இலுப்பை பூக்களை சர்க்கரையாக நினைப்பது மேல். அதனால்தான் லட்சுமி கடாட்சம் படைத்த பாக்கியவான்கள், இந்த ஏஞ்சல்ஸை இந்த ஆண்டுக்கான கனவுக் கன்னிகளாக முன்னிறுத்தி இருக்கிறார்கள். இவர்களை நம்பித்தான் ஃபைனான்சியர்களும் முதலீடு செய்திருக்கிறார்கள்.

‘நம்ம’ சூப்பர் ஸ்டாரான ரஜினியின் ஸ்டைலுக்கு குரு என இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவை சொல்லலாம். அவரது அத்யந்த புத்திரி

தான் சோனாக்ஷி சின்ஹா. ‘தபங்’ என்ற ஒரேயொரு படத்தின் வழியே துருவ நட்சத்திரமாக மாறியிருக்கும் இவரை, இந்தி நடிகர் அக்ஷய் குமார் மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார். விளைவு, இவர்கள் காம்பினேஷனில் இந்தாண்டு 3 படங்கள் வெளிவர இருக்கின்றன. தவிர, சல்மானுடன் ‘கிக்’கும் சதமடிக்க காத்திருக்கிறது. ஒருவேளை சொன்ன தேதியில் கமலின் ‘விஸ்வரூபம்’ ஷூட்டிங் தொடங்கியிருந்தால், சோனாக்ஷி இந்த வருடமே தமிழ்ப் படத்தில் நடித்திருப்பார். ஜஸ்ட் மிஸ். பழைய கதைகளை பேசி பயனில்லை. நடப்புக்கு வருவோம். நடப்பாண்டில் தமிழில் இவர் அறிமுகமாக கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.

வாரிசு நடிகையாக இருந்த போதும், ஸ்ருதி ஹாசனின் ப்ளஸ் பாயிண்ட், ‘நம்ம வீட்டு பெண் மாதிரி இருப்பதாக’ ஒவ்வொருவரையும் நினைக்க வைப்பதுதான். பாடத்தெரியும், ஆடத் தெரியும், நடிக்கவும் தெரியும் என எல்லா ஏரியாக்களிலும் சிக்ஸர் அடிக்கும் ஸ்ருதிக்கு, தெலுங்கும், இந்தியும் காலை வாறினாலும் தமிழ், கோபுரத்தில் அமர வைத்திருக்கிறது. ரிலீஸாகப் போகும், ‘3’, அவரது புகழை எட்டுத் திசையிலும் பரப்பட்டும்.

தீக்ஷை தரும் வல்லமை படைத்த தீக்ஷா சேத், 2009ம் ஆண்டு மிஸ்.இந்தியா போட்டியில் பங்கேற்றவர். ஏணி மீது ஏறாமலேயே பரணில் உள்ள பொருளை எடுக்கும் அளவுக்கு உயரம். அதற்கேற்ற உடல் வாகு. தெலுங்கு, தமிழ் என விமானத்தில் பறந்தபடி சேவை செய்யும் இந்த அரபிக் குதிரை, டூயட் பாடவும், கதாநாயகர்களால் காப்பாற்றப்படவும், ஈஷிக் கொண்டு வெளிநாடுகளில் சுற்றுவதற்காகவுமே பிறவி எடுத்தவர். எனவே ஹீரோயிச திரையுலகில், இவருக்கென்று ஓர் இடம் கட்டாயம் உண்டு.

அல்டிமேட் ஸ்டார் அஜீத்தின் ஜோடி என்ற ஒரே பெருமையுடன் தமிழ்கூறும் நல்லுலகை ஆட்டிப் படைக்க வருகிறார் பார்வதி ஓமனக்குட்டன். 1987ல் பிறந்த இவர், 2008ம் ஆண்டின் மிஸ்.இந்தியா மகுடத்துக்கு பெருமை சேர்த்தவர். ‘பில்லா 2’&ன் நாயகி. கேரளத்து செழுமைகள் அனைத்தையும் தன்னுள் கொண்டிருக்கும் இந்த பார்வதியின் அருள் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் இப்பொழுதே தவம் செய்யத் தொடங்கிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

பாலைவனமாக வறண்டிருக்கும் இளைஞர்களின் வாழ்வில் பாலை ஊற்ற வந்திருக்கும் தேவதைகளே... உங்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்!

நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய சினிமா டைரக்டர்-தயாரிப்பாளர் கைது: வாடிக்கையாளர் போல் புகுந்து போலீஸ் மடக்கி பிடித்தது!

Friday, January 06, 2012
சென்னை::சென்னையில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் அபய் குமார்சிங் ஆகியோர் உத்தர விட்டனர்.

அதன்படி மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையாளர் ராதிகா, கூடுதல் துணை ஆணையாளர் சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் விபச்சார தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் கிங்ஸ்லின், இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ ஆகியோர் சென்னையில் சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்டு வரும் பெண்களை ஏமாற்றி விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் போல் பேசினார்கள்.

மறுமுனையில் பேசிய நபர் தன்னிடம் அழகான இளம் துணை நடிகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்ட இடத்திற்கு ரூ. 10 ஆயிரத்துடன் வந்தால் அழைத்து செல்வதாக கூறினார். சரி என்று வாடிக்கையாளர் போல் சென்ற விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரை தி.நகரில் தேவ் ஆனந்த் பிலிம்ஸ் என்ற அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.

அவர்களை பின் தொடர்ந்து சென்ற விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் அந்த நிறுவனத்தில் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்த பிறகு அதிரடியாக புகுந்து அங்கு விபசாரம் நடத்தி வந்த செல்வநாயகன் (54) மற்றும் அவரின் உதவியாளர் ஞானபிரகாசம் (64) ஆகியோரை கைது செய்தனர்.

அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்த வைத்திருந்த 2 இளம் பெண்களை மீட்டனர். விசாரணையில் செல்வ நாயகன் தேவ்ஆனந்த் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சினிமா படம் தயாரிப்பதாகவும், சில படங்களுக்கு துணை இயக்குனராக இருந்ததாகவும் தெரிவித்தார்.

தற்போது “போசதே” என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்குவதாகவும் கூறினார். இதே போல் சினிமாவில் துணை நடிகையாக நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாக சென்னை ஆழ்வார் திருநகரில் ஒரு அபார்ட் மெண்டில் 3 இளம்பெண் களை தங்க வைத்து விபசார தொழில் செய்து வந்த சினிமா துறையில் ஒவியராக வேலை செய்து வந்த நாகேந்திரன் (50) மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சினிமா மேக்கப்மேன் கண்ணதாசன் (30) என்பவர்களையும் கைது செய்தனர்.

அவர்கள் விபசாரத்தில் ஈடுபடுத்த வைத்திருந்த சென்னையைச் சேர்ந்த 3 இளம்பெண்களும் மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சைதாப் பேட்டை 4-வது பெரு நகர குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப் பட்ட இளம்பெண்கள் மயிலாப்பூர் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்கள்.

நடிகர் மன்சூர்அலிகான் கைது:ரூ. 1 கோடி நில மோசடி!

Friday, January 06, 2012
சென்னை::சென்னை கே.கே. நகரைச் சேர்ந்தவர் துரைவேலன். இவர் நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் அரும்பாக்கம் புலியூர் பகுதியில் தனக்கு சொந்தமான ரூ. 1 கோடி நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து நடிகர் மன்சூர்அலிகான் அபகரித்து விட்டதாக தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் மனு மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. துணை கமிஷனர் ராதிகா மேற்பார்வையில் நில மோசடிப் பிரிவு உதவி கமிஷனர் ஜேசுராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டுக்கு போலீசார் சென்று கைது செய்தனர்.

பின்னர் மன்சூர்அலிகானை வேனில் ஏற்றி போலீஸ் கமிஷனர் அலுவலத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.