Monday, April 30, 2012

மீண்டும் 3 ஹீரோயின் கதையை இயக்கும் டைரக்டர்!!!

Monday, April, 30, 2012
ஜோதிகா, ரம்பா, லைலா 3 ஹீரோயின்கள் நடித்த ‘த்ரீ ரோசஸ்' பட இயக்குனர் பரமேஸ்வர் அடுத்து ‘உயிரெழுத்து' படத்தை இயக்குகிறார். இதுவும் 3 ஹீரோயின்கள் கதை. இது பற்றி பரமேஸ்வர் கூறியதாவது: மூன்று பெண்கள் தங்கி இருக்கும் ஒரு வீட்டில் நுழையும் நான்கு தீவிரவாதிகள் அவர்களை மிரட்டி அங்கேயே தங்குகின்றனர். அங்கிருந்தபடி நகரம் முழுவதும் வெடிகுண்டு வைத்து தகர்க்க முயல்கின்றனர். இதில் ஒரு பெண் அவர்களுக்கு துணைபோகிறார். இறுதியில் தீவிரவாதிகள் திட்டம் எப்படி முறியடிக்கப்படுகிறது என்பது கதை.

ஏற்கனவே இயக்கிய ‘த்ரீ ரோசஸ்' கதையில் 3 ஹீரோயின்கள் நடித்தனர். இதிலும் வர்ஷா, பிராச்சி, சூரியகிரண் ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். தீவிரவாதிகள் திட்டத்தை ஹீரோக்கள்தான் முறியடிப்பார்கள் என்ற சினிமா பார்முலாவை மாற்றி ஹீரோயின்கள் சாதிப்பதுபோல் இக்கதை அமைந்துள்ளது. விஜய் வில்சன் ஒளிப்பதிவு. பவன் இசை. சயத், மணி தயாரிப்பு.

சினேகா-பிரசன்னா காதல் திருமணம் : ஜோடியாக இன்று அறிவிப்பு!!!

Monday, April, 30, 2012
பைவ் ஸ்டார், அழகிய தீயே, அஞ்சாதே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரசன்னா. பார்த்திபன் கனவு, வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சினேகா. இவர்கள் இருவரும் ‘அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இருவீட்டார் சம்மதத்துடன் மே 11ம் தேதி சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் திருமணம் நடக்கிறது.

இதுபற்றிய அறிவிப்பை இன்று பிற்பகலில் சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் பிரசன்னா-சினேகா ஜோடியாக அறிவிக்கின்றனர். இதற்கிடையில் தங்கள் திருமண அழைப்பிதழை ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு இருவரும் ஜோடியாக சென்று அளித்தனர். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டு வருகிறது.

சமர் ஆனது விஷாலின் சமரன்!!!

Monday, April, 30, 2012
விஷால் - த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் சமரன் படத்தின் தலைப்பு சமர் என்று மாற்றப்பட்டுள்ளது.

திரு இயக்கும் இந்தப் படத்தில் விஷாலுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் த்ரிஷா. இன்னொரு நாயகியாக சுனேனா நடிக்கிறார்.

மனோஜ் பாஜ்பாய், ஜேடி சக்ரவர்த்தி ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர்.

அதிரடி சண்டைக் காட்சிகள், நகைச்சுவை நிரம்பிய இந்தப் படத்துக்கு முதலில் சமரன் என்று பெயர் சூட்டியிருந்தனர்.

ஆனால் இன்னும் சுருக்கமாகவும் அழுத்தமாகவும் வேண்டும் என்பதற்காக இந்தப் பெயரை இப்போது சமர் என்று மாற்றப்பட்டுள்ளது.

"சமர் என்ற பெயர் இன்னும் நன்றாக இருக்கிறது. அதனால்தான் இந்த மாற்றம். படத்தின் முக்கிய காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட உள்ளன. மே மாதம் முழுவதும் அங்குதான் ஷுட்டிங்" என்றார் படத்தின் ஹீரோ விஷால்.

ஆமா... கல்யாணந்தான்... ஆனாலும் நடிப்பேன்! - ஸ்ரேயா!!!

Monday, April, 30, 2012
விரைவில் தனக்கு திருமணம் நடக்கப் போவதாக வந்த செய்திகள் உண்மைதான் என்றும், ஆனாலும் திருமணத்துக்குப் பிறகு நடிப்பு தொடரும் என்றும் நடிகை ஸ்ரேயா கூறினார்.

தென்னகத்தில் பிரபல நடிகையாகத் திகழ்ந்து, பின்னர் பாலிவுட்டிலும் நடித்தவர் ஸ்ரேயா. இப்போது இரண்டு மூன்று படங்களில் நடித்தாலும், அந்த அளவு பிஸியாக இல்லை. எனவே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பமாகிவிட்டது.

இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்டபோது, "திருமண ஏற்பாடுகள் நடப்பது உண்மைதான். பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். அதது அந்தந்த வயதில் நடக்க வேண்டும். பெற்றோருக்கும் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே நானும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டேன்.

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையையே திருமணம் செய்து கொள்வேன். திருமணத்துக்கு நான் சம்மதித்து விட்டதால் ஸ்ரேயாவுக்கு சினிமா வாய்ப்பு போய்விட்டது. அதனால்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று வதந்திகள் பரவக்கூடும். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை.

திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன். சினிமாவுக்கும், திருமணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவு செய்து இதனை புரிந்து கொள்ளவேண்டும். மனதுக்கு பிடித்தவர் கிடைத்தால் காதலிக்கலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அப்படி யாரையும் இதுவரை நான் சந்திக்கவில்லை. எனவேதான் பெற்றோர் பார்க்கிறார்கள்.

எனக்கு கணவராக வருபவர் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம். சினிமா உலகை நன்கு புரிந்த, தெளிவானவராக இருக்க வேண்டும். எனக்கு நல்ல நண்பராக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் என்னோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

திருமணத்துக்கு பிறகு நிறைய பேர் விவாகரத்து செய்து பிரிகிறார்கள். அப்படி விவாகரத்து செய்வது எனக்கு பிடிக்காது. அதனால் முதலிலேயே தீர ஆராய்ந்து திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்," என்றார்.

எனக்கென்று தனி இடம் இல்லை - தமன்னா!!!

Monday, April, 30, 2012
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ”ஏனென்றால் காதல் என்பேன்” படம் மூலம் ரீஎண்ட்ரி ஆகும் தமன்னா கூறியதாவது:

தமிழ்ப் படங்களில் நடித்து ஒன்றரை வருடம் ஆகிறது. நான் தெலுங்கில் நடித்த “ரச்சா” படம் வெற்றியடைந்ததை அடுத்து, தமிழில் “ரகளை” என்ற பெயரில் ரிலீஸ் செய்தனர். தற்போது தெலுங்கில் பிசியாக இருக்கிறேன். அதனால் தமிழ் சினிமாவிலிருந்து விலகி விட்ட்தாக கூறுகிறார்கள். நல்ல கதை, நல்ல கேரக்டர் அமையும்போது நிச்சயம் நடிப்பேன்.

ஒரே மாதிரியாக நடித்ததால்தான் தமிழில் வாய்ப்பு குறைந்ததாக சொல்வதை ஒப்புக்கொள்ள மாட்டேன். ஸ்கிரிப்ட்தான் ஹீரோயினை தீர்மானிக்கிறது. தமிழில் இப்போது நிறைய ஹீரோயின்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் என் இடத்தை பிடித்து விட்டார்கள் என்பதை ஏற்கமாட்டேன். காரணம் எனக்கென்று எந்த தனி இடமும் கிடையாது. நான் நடிகை, எனக்கு பிடித்த, என்னால் முடிகிற கேரக்டர்களில் நடிக்கிறேன். அது எந்த மொழியாக இருந்தாலும் சரி.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜீத், சூர்யாவுடன் நடிக்க ஆசை! – ஸ்ரேயா!

Monday, April, 30, 2012
’தல’ அஜீத், சூர்யாவுடன் நடிக்க விருப்பப்படுவதாக கவர்ச்சி நாயகி ஸ்ரேயா கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:

கவர்ச்சியாக நடிக்கும் பாத்திரங்களில் நிறைய படங்கள் நடித்துவிட்டேன். ஸ்ரேயா என்றாலே கவர்ச்சியான இமேஜ்தான் ஞாபகத்துக்கு வரும். அந்தளவுக்கு படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படி நடிப்பது எனக்கு விருப்பம் கிடையாது. என்ன செய்வது, இயக்குனர்கள்தான் என்னை அதுபோல் நடிக்க வைக்கின்றனர். விருது பெறும் நடிப்பை வெளிப்படுத்தும் வேடம், ஆக்ஷன் மற்றும் கிராமத்து பெண் போன்ற வேடங்களில் நடிக்கவே எனக்கு விருப்பம் அதிகம்.

மேலு, அஜீத், சூர்யாவுடன் இதுவரை நான் நடிக்கவில்லை. அவர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன். நடிப்பை விட்டு விலகுவதற்கான எண்ணம் எனக்கு இல்லை. நல்ல வேடங்களுக்காக காத்திருக்கிறேன். இந்த ஆண்டு தெலுங்கில் ”லைஃப் ஈஸ் பியூட்டிபுல்”, மற்றும் தீபா மேத்தாவின் ”மிட்நைட்ஸ் சில்ரன்” படங்கள் வெளிவரவுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

'வேறுமொழிப் பட காட்சியை இனி யாரும் சுட முடியாது!' - பெண் இயக்குநர் பேச்சு!!!

Monday, April, 30, 2012
சாஃப்ட்வியூ மீடியா காலேஜ் சார்பாக சென்னையில் நடந்த சித்திரை போட்டோ எக்ஸ்போ-வில் பிரபல திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம், திருதிரு துறுதுறு திரைப்படத்தின் இயக்குனர் ஜே.எஸ்.நந்தினி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் புகைப்படங்களை தேர்வு செய்து பரிசளித்தார்கள். மிகவும் அழகாகவும் ஜீவனுள்ள வகையிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை 'க்ளிக்'கிய மாணவர்களை பாராட்டிய இருவரும் திரைப்பட துறையில் நுழைவதற்கான யுக்திகளையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மு.களஞ்சியம் பேசும்போது, "மனிதனின் நாகரீக வளர்ச்சிக்கும் பாரம்பரிய பெருமைக்கும் எவ்வளவோ உதாரணங்கள் இருந்தாலும் ஓவியம் மிகவும் சிறப்பானது. ஓவியத்திலிருந்து வந்ததுதான் இந்த புகைப்படக்கலை. ஓவியமாகட்டும், புகைப்படமாகட்டும். அவற்றை அழகுபடுத்த மிக முக்கியமானது லைட்டிங்தான்.

ஒரே கேமிராவை பயன்படுத்துகிற இருவேறு கேமிராமேன்கள் விதவிதமான திறமையுடன் மிளிர்வதற்கு காரணம் லைட்டிங் எனப்படும் இந்த கலைதான். மணிரத்னமும், கவுதம்மேனனும் ஒரே மாதிரி கேமிராவைத்தான் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் படத்தில் மட்டும் எப்படி அவ்வளவு அழகுணர்ச்சி தெரிகிறது? அதற்கு காரணம் அவர்கள் தேர்வு செய்யும் லொக்கேஷன்கள். அங்கு சிதறும் ஒளியும். அதை சரியான கோணத்தில் இணைக்கும் அவர்களின் கற்பனையும்தான்.

இன்று படித்துவிட்டு வெளியே வருகிற எல்லா மாணவர்களுக்கும் உடனே டைரக்ஷன் செய்துவிட வேண்டும். உடனே ஒளிப்பதிவாளராகிவிட வேண்டும் என்ற அவசரம்தான் தெரிகிறது. இந்த எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். நல்ல விஷயங்களை தெரிந்து கொள்கிற ஆர்வம் வர வேண்டும். அதற்காக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கார்த்திருக்கிற பொறுமை வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும்.

உலகின் மிகப்பெரிய இயக்குனராக கருதப்படும் அகிரகுரோசோவா தனது 46 வது வயதில்தான் முதல் திரைப்படத்தை உருவாக்கினார். அதுவரைக்கும் அவர் இந்த துறையை பற்றி தேடி தேடி அறிந்து கொண்டார். அகிரகுரோசோவாவிடம்தான் உதவி இயக்குனராக இருந்தார் ஸ்பீல்பெர்க். இவரே அவரைத் தேடிப்போய் உங்களிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்ற வேண்டும் என்று கேட்டார். அவரிடம், எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று கூறினார் அகிரகுரோசோவா. பரவாயில்லை. நான் ஜப்பான் மொழியை கற்றுக் கொள்கிறேன் என்று கூறி அந்த மொழியை கற்றுக் கொண்டு உதவி இயக்குனராக பணியாற்றினார் ஸ்பீல்பெர்க்.

இந்த அர்ப்பணிப்பு இருந்தால்தான் பெரிய டைரக்டர் ஆக முடியும். நிறைய கற்க வேண்டும். அவசரப்படுகிறவர்களால் டைரக்டர் ஆக முடியாது," என்றார்.

இயக்குநர் ஜே.எஸ்.நந்தினி பேசுகையில், "இன்று உலகம் மிகவும் அருகில் வந்துவிட்டது. எல்லாமும் இணையத்தில் கிடைக்கிறது. சுயமான கற்பனை இருந்தால்தான் வெற்றிபெற முடியும். உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் ரிலீஸ் ஆன படம்தானே? அதிலிருந்து ஒரு காட்சியை திருடி நமது கதையில் வைத்துக் கொள்வோம் என்று நினைக்கவே முடியாது.

அப்படி ஒரு காட்சியை நாம் எந்த தயாரிப்பாளரிடம் சொன்னாலும், இது அந்த படத்தில் வந்த காட்சியாக இருக்கிறதே என்று கூறுகிற அளவுக்கு இன்று எல்லாமும் எல்லாருக்கும் எளிதாகிவிட்டது. எனவே மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்," என்றார்.

நிகழ்ச்சி முடிவில் சாப்ட்வியூ மீடியா காலேஜ் இயக்குனர் எம். ஆன்ட்டோபீட்டர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

தமிழ் டர்ட்டி பிக்சர்ஸில் நடிக்க நான் ரெடி... நிகிதா!!!

Monday, April, 30, 2012
கன்னட டர்ட்டி பிக்சர்ஸில் நடிக்க மறுத்து விட்ட கன்னட நடிகை நிகிதா துக்ரால், தற்போது தமிழில் எடுக்குப்படும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்தியில் வித்யா பாலனின் எடுப்பான கவர்ச்சியால் பெரும் வெற்றி பெற்ற தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டதாகும். இப்படத்தை தற்போது தமிழிலும், கன்னடத்திலும் ரீமேக் செய்யவுள்ளனர்.

தமிழில் அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது. கன்னடத்தில் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் நடிக்கவுள்ளார்.

முதலில் இந்த வேடத்தில் நடிக்க பூஜா காந்தி மற்றும் நிகிதாவை அணுகினர். ஆனால் இருவரும் நடிக்க மறுத்து விட்டனர். இதுகுறித்து நிகிதா கூறுகையில், இது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறாக இருக்குமானால் நிச்சயம் நான் ஒப்புக் கொண்டிருப்பேன். ஆனால் இது ஒரு விபச்சாரியின் கதையாக உள்ளது. இதில் நான் நடித்தால் அது சில்க்கையும், கன்னட மக்களையும் அவமானப்படுத்தும் செயலாகும் என்பதால் நடிக்கவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில் தற்போது தமிழ் டர்ட்டி பிக்சர்ஸில் நடிக்க நான் தயார் என்று திடீரென கூறியுள்ளார் நிகிதா. சில்க் ஸ்மிதா தமிழில்தான் பிரபலமானார். தமிழ் நடிகையாகவே இருந்தவர் அவர். எனவே தமிழில் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நான் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் நிகிதா.

ஆனால், கன்னடத்தில் படு கவர்ச்சியாக இப்படத்தை எடுக்கவிருப்பதால்தான் நிகிதா நடிக்க மறுத்து விட்டார் என்றும், தமிழில் அந்த அளவுக்கு கவர்ச்சி இருக்காது என்பதால்தான் தமிழில் நடிக்க விரும்புகிறார் என்றும் ஒரு டாக் உலவுகிறது.

த்ரிஷா,பிபாஷாவுடன் நெருக்கமா? ராணா பதில்!!!

Monday, April, 30, 2012
த்ரிஷா, பிபாஷாவுடன் நெருக்கமா என்றதற்கு ராணா பதில் அளித்தார்.
த்ரிஷாவுடன் காதல், பிபாஷாவுடன் டேட்டிங் செல்கிறார் என்று தெலுங்கு நடிகர் ராணா பற்றி திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு ராணா பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
இந்தியில் ‘தம் மாரோ தம் படத்தில் நடித்தேன். பிபாஷா பாசு ஜோடியாக நடித்தார். அப்போதுமுதல் இருவரும் நண்பர்களாக இருக்கிறோம். புத்தாண்டின்போது இருவரும் கோவா சென்றோம். இதுபற்றி என்னை கேட்காதவர்கள் இல்லை. ‘நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா? என்கிறார்கள். கோவாவுக்கு நாங்கள் மட்டுமா சென்றோம். எங்களைப்போல் 200 பேருக்கு மேல் சென்றார்கள். அவர்களிடம் ஏன் இதுபோல் கேட்கவில்லை. எங்களுக்குள் எந்த உறவும் கிடையாது என்பதை இன்டர்நெட்டில் தெரிவித்துவிட்டேன். ஆனாலும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் இருவரையும் இணைத்து பேசினால் அதில் அவர்களுக்கு ஒரு த்ரில் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த கிசுகிசுக்கள் முன்பு என்னை பாதித்தது. இப்போது பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பிபாஸுவை பொறுத்தவரை எனக்கு நெருக்கமான நண்பர். எனக்கு அடிபட்டபோது நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அதைக்கூட காதல் என்று கதை கட்டுகிறார்கள். நண்பனுக்கு அடிபட்டால் இன்னொரு நண்பர் விசாரிக்க மாட்டாரா? எங்களை இணைத்து வைப்பதில் மற்றவர்கள் ஏன் குறியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதேபோல்தான் த்ரிஷாவுடனும் என்னை இணைத்து பேசினார்கள்.
எனக்கென்று ஒரு காதலி இருக்கிறார். அவர் ஐதராபாத்தில் உள்ளார். அவர் யார் என்பதை இப்போது சொல்ல விரும்பவில்லை. ஆனால் நிச்சயம் சினிமா நடிகை கிடையாது. எனது திருமணம் பற்றியும் இப்போதைக்கு யோசிக்கவில்லை.
இவ்வாறு ராணா கூறினார்.

வி்த்யா பாலன் செம போல்ட்... புகழும் அனுஷ்கா!!!

Monday, April, 30, 2012
வித்யா பாலன் புகழ் பாட ஆரம்பித்துள்ளார் அனுஷ்கா. யாரும் செய்யத் தயங்குவதை வித்யா பாலன் படு போல்டாக செய்கிறார்.அவரது அந்த போக்கு என்னைக் கவர்ந்து விட்டது என்று அதற்குக் காரணம் கூறுகிறார் அனுஷ்கா.

வித்யா பாலன் ரொம்பவே வித்தியாசமான நடிகை. சாதாரண கேரக்டர்களில் நடிப்பதை விட வித்தியாசமான, யாரும் செய்யத் தயங்கும் வேடங்களாக தேடிப் பிடித்து நடிக்க ஆரம்பித்துள்ளார் அவர். இதனால் அவருக்கு செம பேராகியுள்ளது.

அவரது டர்ட்டி பிக்சர்ஸும், கஹானியும் பெரிய அளவில் அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்துள்ளன. இதுதான் அனுஷ்காவை அசரடித்து விட்டதாம்.

இப்போது டர்ட்டி பிக்சர்ஸின் தமிழாக்கத்தில் வித்யா கேரக்டரில் அனுஷ்தான் நடிக்கப் போகிறார். அதேபோல கஹானி படத்தின் ரீமேக்கிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். அதில் வித்யா பாலன் கர்ப்பணி கேரக்டரில் நடித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

இதுகுறித்து அனுஷ்கா கூறுகையில், வித்யா பாலன் மிகவும் போல்டாக நடிக்கிறார். யாருமே தயங்கும் கேரக்டர்களை அவர்தேடிப் பிடித்து நடிக்கிறார். அவரது அந்தப் பாணி என்னைக் கவர்ந்து விட்டது. நானும் கிட்டத்தட்ட அப்படித்தான். மற்றவர்கள் செய்யத் தயங்குவதை செய்வதில் எனக்கு இயற்கையிலேயே ஆர்வம் அதிகம் என்கிறார் பூரிப்புடன்.

சீக்கிரமா 'டர்ட்டி' ஆகுங்க அனுஷ்கா...!

இரு மொழி படங்கள் டிரெண்ட் தற்போது தமிழ், தெலுங்கில் அதிகரித்து வருகிறது!!!

Monday, April, 30, 2012
இரு மொழி படங்கள் டிரெண்ட் தற்போது தமிழ், தெலுங்கில் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக தமிழ்தெலுங்கு படங்களுக்கு இடையே நெருக்கமான சூழ்நிலை நிலவி வருகிறது. தமிழ் ஹீரோக்கள் நடித்த படங்கள், தெலுங்கில் வசூலைக் கொடுத்து வருகிறது. இதனால் சில வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்ட தமிழ்ப்படங்கள் கூட டப் செய்யப்பட்டு அங்கு வெளியிடப்பட்டு வருகிறது.
பொதுவாக ஆக்ஷன் மசாலாப் படங்களையே தெலுங்கு ரசிகர்கள் விரும்புவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் கதையம்சம் உள்ள படங்களும் அங்கு வரவேற்பை பெற்றுள்ளன. அதனால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்ப் படங்களின் உரிமம் பல கோடிகளை எட்டியுள்ளது.

அதேபோல தெலுங்கு ஹீரோக்கள் நடித்த படங்கள் சென்னை போன்ற நகரங்களில் வசூல் குவிக்கிறது. தமிழ் ‘காஞ்சனா’ தெலுங்கிலும், தெலுங்கு ‘அருந்ததி’ தமிழிலும் சக்கைபோடு போட்டன. இப்படிப்பட்ட சூழலில் இரு மொழிகளில் படங்களை தயாரிப்பது அதிகரித்து வருகிறது. தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கிய ‘மகதீரா’, தமிழில் ‘மாவீரனா’கப் பேசப்பட்டது. இப்போது அவர், ‘நான் ஈ’ படத்தை தமிழ், தெலுங் கில் உருவாக்கி வருகிறார். கருணாகரன், ‘ஏனென் றால் காதல் என்பேன்’ படத்தை தமிழ், தெலுங்கில் உருவாக்கி வருகிறார். கவுதம் வாசுதேவ் மேனன், ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தை தமிழ், தெலுங்கில் இயக்குகிறார். மோகன்பாபு மகள் லட்சுமி மஞ்சு, ‘மறந்தேன் மன்னித்தேன்’ என்ற படத்தை இருமொழிகளில் தயாரித்து வருகிறார்.

வீரப்பன் வாழ்க்கையை மையமாக கொண்டு ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கும் ‘வனயுத்தம்’ தமிழ், கன்னடத்தில் தயாராகிறது. ஷாம் நடிக்கும், ‘ஏஸ் ராஜா ராணி ஜாக்கி மற்றும் ஜோக்கர்’ படமும் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. இவை தவிர, சில சிறிய பட்ஜெட் படங்களும் தமிழ்தெலுங்கு, தமிழ்கன்னட மொழிகளில் தயாராகி வருகின்றன. ‘‘படங்களுக்கான பட்ஜெட், உயர்ந்து வரும் நட்சத்திரங்களின் சம்பளம் போன்றவற்றை சரி கட்ட, வரும் காலங்களில் இரு மொழிகளில் படங்கள் அதிகமாக உருவாவதை தவிர்க்க முடியாது. இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கும்போது ஒவ்வொரு காட்சியையும் இரண்டு முறை படமாக்க வேண்டும் என்பதை தவிர, வேறு கூடுதல் செலவு இல்லை. இரண்டு மாநிலங்களிலும் வியாபாரம் செய்து கொள்ளலாம். ஏதாவது ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்றாலும் லாபம்தான். இப்படி பல சாத்தியக் கூறுகள் இருப்பதால் இருமொழி படங்கள் தயாரிப்பு அதிகரிக்கும்’’ என்கிறார் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர்.

கோவை சரளாவும், கருணாசும் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம்!!!

Monday, April, 30, 2012
பாபா சினி பிலிம்ஸ் சார்பில் எஸ்.எஸ்.பாபா விக்ரம் தயாரித்து, இசை அமைத்து இயக்கும் படம், ‘பொம்மை நாய்கள்’. கருணாஸ், ராதாரவி, பாபிலோனா நடித்துள்ளனர். படம் பற்றி பாபா விக்ரம் கூறும்போது, ‘‘ஒரு வீட்டில் இருக்கும் நாய் பொம்மைகள் உயிர்பெற்று தீயவர்களை அழிப்பது போன்ற கதை. பெரும்பாலான காட்சிகள் அனிமேஷன் செய்யப்பட்டுள்ளது. சாம்ஸ், ஆர்த்தி, கிரேன் மனோகர் துப்பறிவாளர்களாக நடித்துள்ளனர். காமெடி, திகில் கலந்த படம். கோவை சரளாவும், கருணாசும் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளனர். அடுத்த மாதம் வெளியாகிறது.

மகன் உதயநிதி நடித்த படத்தை பார்க்க பயந்தேன்: ஸ்டாலின்!

Monday, April, 30, 2012
ஊட்டியில் தி.மு,க.பொருளாளர் மு.க., ஸ்டாலின் தினகரன் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி: எனது மகன் உதயநிதி நடித்த படத்தை பார்ப்பதற்கு முன் பயந்தேன். ஆனால், படம் பார்த்த பின் அந்த பயம் இல்லை. நன்றாக நடித்துள்ளார். படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. தி.மு.க.,வில் உழைத்தவர்கள் மட்டுமே கட்சி பொறுப்பில் இடம் பெற வேண்டும். நான் கட்சிக்காக உழைக்க வில்லை. எனவே சினிமா துறையை தேர்வு செய்துள்ளேன் என உதயநிதி கூறியுள்ளார். எனவே அவர் அரசியலுக்கு வராமல், கலைத்துறைக்கு சென்றது எனக்கு மகிழ்ச்சி தான். அதில் எந்த வருத்தமும் இல்லை. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.