இரு மொழி படங்கள் டிரெண்ட் தற்போது தமிழ், தெலுங்கில் அதிகரித்து வருகிறது!!!

Monday, April, 30, 2012
இரு மொழி படங்கள் டிரெண்ட் தற்போது தமிழ், தெலுங்கில் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக தமிழ்தெலுங்கு படங்களுக்கு இடையே நெருக்கமான சூழ்நிலை நிலவி வருகிறது. தமிழ் ஹீரோக்கள் நடித்த படங்கள், தெலுங்கில் வசூலைக் கொடுத்து வருகிறது. இதனால் சில வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்ட தமிழ்ப்படங்கள் கூட டப் செய்யப்பட்டு அங்கு வெளியிடப்பட்டு வருகிறது.
பொதுவாக ஆக்ஷன் மசாலாப் படங்களையே தெலுங்கு ரசிகர்கள் விரும்புவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் கதையம்சம் உள்ள படங்களும் அங்கு வரவேற்பை பெற்றுள்ளன. அதனால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்ப் படங்களின் உரிமம் பல கோடிகளை எட்டியுள்ளது.

அதேபோல தெலுங்கு ஹீரோக்கள் நடித்த படங்கள் சென்னை போன்ற நகரங்களில் வசூல் குவிக்கிறது. தமிழ் ‘காஞ்சனா’ தெலுங்கிலும், தெலுங்கு ‘அருந்ததி’ தமிழிலும் சக்கைபோடு போட்டன. இப்படிப்பட்ட சூழலில் இரு மொழிகளில் படங்களை தயாரிப்பது அதிகரித்து வருகிறது. தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கிய ‘மகதீரா’, தமிழில் ‘மாவீரனா’கப் பேசப்பட்டது. இப்போது அவர், ‘நான் ஈ’ படத்தை தமிழ், தெலுங் கில் உருவாக்கி வருகிறார். கருணாகரன், ‘ஏனென் றால் காதல் என்பேன்’ படத்தை தமிழ், தெலுங்கில் உருவாக்கி வருகிறார். கவுதம் வாசுதேவ் மேனன், ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தை தமிழ், தெலுங்கில் இயக்குகிறார். மோகன்பாபு மகள் லட்சுமி மஞ்சு, ‘மறந்தேன் மன்னித்தேன்’ என்ற படத்தை இருமொழிகளில் தயாரித்து வருகிறார்.

வீரப்பன் வாழ்க்கையை மையமாக கொண்டு ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கும் ‘வனயுத்தம்’ தமிழ், கன்னடத்தில் தயாராகிறது. ஷாம் நடிக்கும், ‘ஏஸ் ராஜா ராணி ஜாக்கி மற்றும் ஜோக்கர்’ படமும் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. இவை தவிர, சில சிறிய பட்ஜெட் படங்களும் தமிழ்தெலுங்கு, தமிழ்கன்னட மொழிகளில் தயாராகி வருகின்றன. ‘‘படங்களுக்கான பட்ஜெட், உயர்ந்து வரும் நட்சத்திரங்களின் சம்பளம் போன்றவற்றை சரி கட்ட, வரும் காலங்களில் இரு மொழிகளில் படங்கள் அதிகமாக உருவாவதை தவிர்க்க முடியாது. இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கும்போது ஒவ்வொரு காட்சியையும் இரண்டு முறை படமாக்க வேண்டும் என்பதை தவிர, வேறு கூடுதல் செலவு இல்லை. இரண்டு மாநிலங்களிலும் வியாபாரம் செய்து கொள்ளலாம். ஏதாவது ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்றாலும் லாபம்தான். இப்படி பல சாத்தியக் கூறுகள் இருப்பதால் இருமொழி படங்கள் தயாரிப்பு அதிகரிக்கும்’’ என்கிறார் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர்.

Comments