'வேறுமொழிப் பட காட்சியை இனி யாரும் சுட முடியாது!' - பெண் இயக்குநர் பேச்சு!!!

Monday, April, 30, 2012
சாஃப்ட்வியூ மீடியா காலேஜ் சார்பாக சென்னையில் நடந்த சித்திரை போட்டோ எக்ஸ்போ-வில் பிரபல திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம், திருதிரு துறுதுறு திரைப்படத்தின் இயக்குனர் ஜே.எஸ்.நந்தினி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் புகைப்படங்களை தேர்வு செய்து பரிசளித்தார்கள். மிகவும் அழகாகவும் ஜீவனுள்ள வகையிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை 'க்ளிக்'கிய மாணவர்களை பாராட்டிய இருவரும் திரைப்பட துறையில் நுழைவதற்கான யுக்திகளையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மு.களஞ்சியம் பேசும்போது, "மனிதனின் நாகரீக வளர்ச்சிக்கும் பாரம்பரிய பெருமைக்கும் எவ்வளவோ உதாரணங்கள் இருந்தாலும் ஓவியம் மிகவும் சிறப்பானது. ஓவியத்திலிருந்து வந்ததுதான் இந்த புகைப்படக்கலை. ஓவியமாகட்டும், புகைப்படமாகட்டும். அவற்றை அழகுபடுத்த மிக முக்கியமானது லைட்டிங்தான்.

ஒரே கேமிராவை பயன்படுத்துகிற இருவேறு கேமிராமேன்கள் விதவிதமான திறமையுடன் மிளிர்வதற்கு காரணம் லைட்டிங் எனப்படும் இந்த கலைதான். மணிரத்னமும், கவுதம்மேனனும் ஒரே மாதிரி கேமிராவைத்தான் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் படத்தில் மட்டும் எப்படி அவ்வளவு அழகுணர்ச்சி தெரிகிறது? அதற்கு காரணம் அவர்கள் தேர்வு செய்யும் லொக்கேஷன்கள். அங்கு சிதறும் ஒளியும். அதை சரியான கோணத்தில் இணைக்கும் அவர்களின் கற்பனையும்தான்.

இன்று படித்துவிட்டு வெளியே வருகிற எல்லா மாணவர்களுக்கும் உடனே டைரக்ஷன் செய்துவிட வேண்டும். உடனே ஒளிப்பதிவாளராகிவிட வேண்டும் என்ற அவசரம்தான் தெரிகிறது. இந்த எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். நல்ல விஷயங்களை தெரிந்து கொள்கிற ஆர்வம் வர வேண்டும். அதற்காக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கார்த்திருக்கிற பொறுமை வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும்.

உலகின் மிகப்பெரிய இயக்குனராக கருதப்படும் அகிரகுரோசோவா தனது 46 வது வயதில்தான் முதல் திரைப்படத்தை உருவாக்கினார். அதுவரைக்கும் அவர் இந்த துறையை பற்றி தேடி தேடி அறிந்து கொண்டார். அகிரகுரோசோவாவிடம்தான் உதவி இயக்குனராக இருந்தார் ஸ்பீல்பெர்க். இவரே அவரைத் தேடிப்போய் உங்களிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்ற வேண்டும் என்று கேட்டார். அவரிடம், எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று கூறினார் அகிரகுரோசோவா. பரவாயில்லை. நான் ஜப்பான் மொழியை கற்றுக் கொள்கிறேன் என்று கூறி அந்த மொழியை கற்றுக் கொண்டு உதவி இயக்குனராக பணியாற்றினார் ஸ்பீல்பெர்க்.

இந்த அர்ப்பணிப்பு இருந்தால்தான் பெரிய டைரக்டர் ஆக முடியும். நிறைய கற்க வேண்டும். அவசரப்படுகிறவர்களால் டைரக்டர் ஆக முடியாது," என்றார்.

இயக்குநர் ஜே.எஸ்.நந்தினி பேசுகையில், "இன்று உலகம் மிகவும் அருகில் வந்துவிட்டது. எல்லாமும் இணையத்தில் கிடைக்கிறது. சுயமான கற்பனை இருந்தால்தான் வெற்றிபெற முடியும். உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் ரிலீஸ் ஆன படம்தானே? அதிலிருந்து ஒரு காட்சியை திருடி நமது கதையில் வைத்துக் கொள்வோம் என்று நினைக்கவே முடியாது.

அப்படி ஒரு காட்சியை நாம் எந்த தயாரிப்பாளரிடம் சொன்னாலும், இது அந்த படத்தில் வந்த காட்சியாக இருக்கிறதே என்று கூறுகிற அளவுக்கு இன்று எல்லாமும் எல்லாருக்கும் எளிதாகிவிட்டது. எனவே மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்," என்றார்.

நிகழ்ச்சி முடிவில் சாப்ட்வியூ மீடியா காலேஜ் இயக்குனர் எம். ஆன்ட்டோபீட்டர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Comments