எங்கப்பா மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை என் படம் மீது காட்டுகிறது ஜெ அரசு! - உதயநிதி ஸ்டாலின்!!!

Wednesday,April,18, 2012
என் தந்தை மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியை எனது படங்கள் மீது காட்டுகிறது ஜெயலலிதா அரசு, என தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை:

"நான் தயாரித்து நடித்து திரைக்கு வந்துள்ள 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 7-ம் அறிவு படத்துக்கு, அந்தப் படம் திரையரங்குகளிலிருந்து எடுக்கப்பட்ட பிறகு வரிவிலக்கு அறிவித்து, அந்தப் பலன் யாருக்கும் கிடைக்காமல் செய்தனர்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தைப் பொறுத்தவரை, அரசு நிர்ணயித்துள்ள அத்தனை விதிமுறைகளையும் பூர்த்தி செய்து உரிய முறையில் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளோம்.

சமீபத்தில் கேளிக்கை வரிவிலக்கு கொடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் ஆங்கிலம் கலந்த தமிழ் பாடல் உள்ளது. பாரில் வைத்து திருமணம் நடப்பது போல் காட்சி வருகிறது. இதுபோன்ற திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளித்துவிட்டு, எந்த வித ஆபாச காட்சிகளும், கலாச்சார சீரழிவு விஷயங்களும் இல்லாத, எங்கள் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க மறுப்பது எந்த வகையில் நியாயம்?

வன்முறை அதிகமாக உள்ள மற்றும் ஆங்கில கலப்பு அதிகமாக உள்ள படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களையும் கவர்ந்த, ஆங்கிலக் கலப்பில்லாத 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துக்கு வரிவிலக்கு அளிக்க மறுப்பது என்ன நியாயம்?

இதனால் எனக்கு மட்டும் பாதிப்பு இல்லை. என்னை நம்பி படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments