பள்ளிகள் பாடம் தவிர்த்து நற்பண்புகளையும் கற்றுத் தர வேண்டும்: சினேகா!!!

Tuesday, February 28, 2012
பள்ளிகள், பாடங்களைத் தவிர்த்து நற்பண்புகளையும் கற்றுத் தர வேண்டும் என்று நடிகை சினேகா அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை கொளத்தூர் எவர்வின் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 20ம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை சினேகா பேசியதாவது,

ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டதற்கு ஆசிரியரா, மாணவரா அல்லது பெற்றோர் காரணமா என்று விவாதம் செய்யாமல் இனி இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பது தான் என்னைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு.

பிள்ளைகள் மார்க் குறைவாக வாங்கினால் பெற்றோர்கள் அவர்களைத் திட்டுகின்றனர். இந்த காலத்தில் படிப்பு தவிர பல்வேறு துறைகளில் ஜொலிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இங்கே 2 வயது ப்ரீ கேஜி குழந்தை டிரம்ஸ் வாசித்ததைப் பார்த்து மெய் மறந்து போனேன்.

குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை உள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரிப்பது தான் சில விரும்பத்தகாத காரணங்களுக்கு காரணம். இந்த இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்வது பள்ளிகள் மற்றும் பெற்றோரின் கடமையாகும்.

நான் பள்ளியில் படிக்கையில் எனக்கு ஒரேயொரு ஆசிரியரை மட்டும் தான் பிடிக்கும். எனக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் இடையே கொஞ்சம் இடைவெளி இருந்தது. அந்த இடைவெளி இப்போது அதிகரித்து வருகிறது. மாணவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் படி, படி என்றாலே உங்களுக்கு கோபம் தான் வருகிறது.

எங்கள் காலத்தில் படிப்பு மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது கம்ப்யூட்டர், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலைத்துறை பல்வேறு துறைகளில் உங்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

உங்கள் மீது இருக்கும் அக்கறையில் தான் ஆசிரியர்கள் படி, படி என்கின்றனர். எதையும் விரும்பி செய்தால் தான் அதில் வெற்றி பெற முடியும். எனவே விரும்பிப் படியுங்கள். பள்ளிகள் பாடங்கள் தவிர்த்து மாணவர்களுக்கு நற்பண்புகளையும் கற்றுத் தர வேண்டும் என்றார்.

விழாவில் மாணவ-மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சினேகா பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Comments