ஆஸ்கார் விருது வழங்கும் தேர்வுக் குழுவில் ஏழு இந்திய திரையுலக பிரபலங்கள் பெயர்கள் அறிவிப்பு!

ஆஸ்கார் விருது வழங்கும் தேர்வுக் குழுவில் இந்திய சினிமாதுறையை சேர்ந்த இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர் மற்றும் வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர் ஸ்ரீநிவாஸ் மோகன் உட்பட 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெறும். உலகின் உயரிய விருதாக இந்த விருது கருதப்படுகிறது. அடுத்த ஆண்டிற்கான ஆஸ்கர் விழா பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்வுக் குழுவினர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலை தற்போது ஆஸ்கர் குழு வெளியிட்டுள்ளது.
 
அதன்படி 59 நாடுகளைச் சேர்ந்த 842 புதிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக ஆஸ்கர் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள் அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், அனுபம் கேர் ஆகியோருடன் 2.0, பாகுபலி படங்களின் வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர் ஸ்ரீநிவாஸ் மோகனும் இடம்பெற்றுள்ளார்.இத்தகவலை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த ஸ்ரீநிவாஸ் மோகன் ஆஸ்கர் குழுவில் இணைந்ததில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.
 
இதில் அனுபம் கேர், அர்ச்சி பஞ்சாபி ஆகியோர் நடிகர்களுக்கான தேர்வுக் குழுவிலும்,ஜோயா அக்தர் இயக்குநர்களுக்கான தேர்வுக் குழுவிலும், அனுராக் காஷ்யப் குறும்படங்கள் மற்றும் அனிமேஷன் பிரிவிலும்,ஸ்ரீநிவாஸ் மோகன் மற்றும் ஷெர்ரி பர்தா ஆகியோர் வி.எஃப்.எக்ஸ் பிரிவிலும்,ரித்தேஷ் பத்ரா எழுத்தாளர்களுக்கான பிரிவிலும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments