திரைவிமர்சனம் – கடாரம் கொண்டான்!

இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா தூங்காவனத்தை இயக்கியது போலவே கடாரம் கொண்டானையும் இயக்கி உள்ளார்.ஹாலிவுட் படங்கள் எப்படி ஒன்றரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணிநேரத்திற்குள் முடிந்துவிடுகிறதோ அது போல கடாரம் கொண்டானும் சரியாக இரண்டு மணி நேரம் ஒரு நிமிடத்தில் முடிந்து விடுகிறது.படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஒரே விறுவிறுப்பாக கதை நகர்கிறது. அதாவது விறுவிறுப்பாக கதையை நகத்த முயற்சித்திருக்கிறார் ராஜேஷ் எம் செல்வா. ஆனால் அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டியிருக்கிறது.
 
படத்தின் துவக்கம் என்னவோ சுவாரசியமாகத்தான் இருக்கிறது. மலேசியாவில் பெட்ரோனாஸ் டவரிலிருந்து ஓர் இரவு விக்ரம் எதையோ எடுத்துக் கொண்டு வெளியேறுகிறார். அவரை இரண்டு நபர்கள் பின் தொடர, அவர்களிடம் இருந்து தப்பிக்க முயல்கிறார் விக்ரம்.
அவ்வாறு முயலும்போது ஒரு விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் கீழே விழுகிறார். அவரை ஓர் மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள் காவல் துறையினர்.அந்த இரவு ட்யூட்டியில் இருக்கும் டாக்டர் வாசு ஒரு இந்தியர். புதிதாக மலேசியாவுக்கு தன் கர்ப்பிணி மனைவி ஆதிராவுடன் இடம் பெயர்ந்துள்ள இந்த டாக்டர் வேலையில் சேர்ந்து இரண்டு வாரங்களே ஆகின்றன.அவர் ட்யூட்டியில் இருக்கும்போது அன்றிரவு விக்ரமை கொல்ல ஒரு முயற்சி நடக்கிறது.நல்லவேளையாக டாக்டர் விக்ரமை காப்பாற்றுகிறார்.யார் இந்த கொலையாளிகள் ?விக்ரமை ஏன் கொலை செய்ய முயல்கிறார்கள்? இந்த கொலை முயற்சியை தடுத்து டாக்டரின் வாழ்க்கை எப்படி மாறப்போகிறது? இவை எல்லாம் கடாரம் கொண்டான் விரிவாக விளக்குகிறது.
 
படத்தின் பலம் என்று எடுத்துக் கொண்டால் அது விக்ரமின் நடிப்பு என்று தான் கூற வேண்டும். ஆனால் இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகனை வைத்துக்கொண்டு அவனை முழுமையாக பயன்படுத்தாமல் விட்டு விட்டு இருக்கிறார் ராஜேஷ் எம் செல்வா.படத்தில் ஒரு பெரும் பகுதியில் விக்ரமை காண முடிவதில்லை. கதை வேணு என்னும் அபியையும், ஆதிராவாக வரும் அக்ஷரா ஹாசனையுமே சுற்றி நகர்கிறது. ஆங்காங்கே விக்ரம் வந்து செல்கிறார். ஆனால் , அவர் வரும் அந்த சிறு பகுதியில் கூட அவர் தன் முத்திரையை திறம்பட பதிக்கிறார்.இன்னும் கொஞ்சம் விக்ரம் இருந்திருந்தால் நன்றாக இருக்குமோ என்று நாம் யோசிக்க தோன்றுகிறது.விக்ரம் ஒரு சில இடங்களில் மட்டும் வருகிறார் என்றால் அவர் வசனங்கள் அதை விட குறைவு.ஆடிக்கு ஒரு தடவை அம்மாவாசைக்கு ஒரு தடவை அவருக்கு ஒரு வசனம் வருகிறது.
 
ஆனால் மனுஷன் நடிப்பில் வல்லவன். வார்த்தைகளும் வசனங்களும் கொடுக்கவில்லை என்றால் என்ன? நான் நடிப்பிலேயே பேசி விட்டுச் செல்கிறேன் என்று அப்படியே செய்திருக்கிறார். அவர் எங்கெல்லாம் வருகிறாரோ அங்கெல்லாம் கதை விறுவிறுப்பாக நகர்கிறது.படத்தின் கதை மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் எடுத்துக் கூறப்படவில்லை.இதனால் இது எத்தனை பேருக்கு புரியும் என்று தெரியவில்லை.
 
புரிந்த கதையையே மக்கள் சில நேரங்களில் நிராகரித்து விடுகின்றனர். புரியாத கதை எப்படி மக்களுக்கு பிடிக்கும்? கொஞ்சம் கஷ்டம் தான். படத்தின் பின்னணி இசை சில இடங்களில் வசனங்களை கேட்க இயலாமல் செய்துவிடுகிறது. இது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம் என்று தான் கூற வேண்டியிருக்கிறது. நாசரின் மகன் ஆகிய அபி இப்படத்தில் வேனுவாக கலக்கியிருக்கிறார். அக்ஷரா ஹாசன் ஆதரவாக நடிக்க முயற்சித்திருக்கிறார். அவர் நடிப்பு மிகவும் மிகைப்படுத்தப்பட்டதாகவும் நம்பகத்தன்மையற்றும் காணப்படுகிறது.ஆக மொத்தத்தில் கடாரம் கொண்டான் சில விஷயங்களில் நம்மை திருப்தி படுத்தினாலும் பல இடங்களில் ஏமாற்றமே அளிக்கிறது.

Comments