களவாணி 2’ விமர்சனம்!

விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘களவாணி’ படத்தின் தொடர்ச்சியாக அல்லாமல், அப்படத்தின் கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாகியுள்ள ‘களவாணி 2’ எப்படி என்று பார்ப்போம்.
 
தன் வயது இளைஞர்கள் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்து வர, விமலோ வெள்ளை வேட்டி சட்டையுடன் சொந்த ஊரை வெட்டியாக சுற்றி வருவதையே முழு நேர வேலையாக வைத்திருக்கிறார். கிடைக்கும் வாய்ப்புகளில் கிடாய் வெட்டுவது போல அவ்வபோது கஞ்சா கருப்பை ஏமாற்றி பணத்தை ஸ்வாக செய்து வருபவருக்கு, மகளிர் குழு தலைவியான ஓவியா மீது காதல் வர, ஓவியாவும் விமலை காதலிக்கிறார்.
 
இதற்கிடையே, ஊராட்சி தேர்தலில் ஓவியாவின் அப்பாவான ராஜ்மோகன்குமாரை எதிர்த்து விமலின் மாமாவும் முன்னாள் தலைவருமான துரை சுதாகர் எதிர்த்து போட்டியிடுகிறார். தேர்தலை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கும் விமல், தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டால், எங்கே வாக்கு பிரிந்துவிடுமோ என்ற பயத்தில் தன்னிடம் பேரம் பேச முயற்சிப்பார்கள், அதை வைத்து சில லட்சங்களை எதிர் தரப்பிடம் வாங்கிக் கொள்ளலாம், என்ற முடிவில் அவரும் தேர்தலில் போட்டியிடுகிறார். ஆனால், விமலை ஒரு பொருட்டாகவே மதிக்காத துரை சுதாகரும், ராஜ்மோகன்குமாரும் அவரை அவமானப்படுத்துகிறார்கள். இதனால் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று இருவர் முகத்திலும் கரியை பூச நினைக்கும் விமல், தனது களவாணி தனத்தால் எப்படி தேர்தலில் ஜெயிக்கிறார், என்பதே படத்தின் மீதிக்கதை.
 
‘களவாணி’ மூலம் ஹீரோவாக அறிமுகமான விமலின் 25 வது படமாக ‘களவாணி 2’ வெளியாகியிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த அறிக்கி என்ற அதே கதாபாத்திரத்தில் நடித்தவர், பத்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே இளைஞராகவே படத்தில் வலம் வருகிறார். அதே பொய்யான வாக்குறுதி, ஏமாற்றுத்தனம் என்று தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பவர், தோற்றத்திலும் அதே அறிக்கியை திரும்ப கொண்டு வந்திருக்கிறார்.
 
மகளிர் குழு தலைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஓவியா அழகாக இருக்கிறார். காதலனிடம் ஏமாறுவது, பிறகு சமாதானம் ஆகி மீண்டும் காதலனை ஏற்றுக்கொள்வது என்று வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயினாகவே நடித்திருந்தாலும்,  கொடுத்த சின்ன வேலையை அழகாக செய்திருக்கிறார்.
”ஆனி போய் ஆடி போய் ஆவணி வந்தால் என் புள்ள டாப்புல வருவான்” என்ற வசனத்தை “ஆனி போய் ஆடி போய் ஆவணி வந்தால் என் புள்ள அன்னபோஸ்ட்ல ஜெயிப்பான்” என்று பேசுவதோடு சரண்யா பொன்வன்னனில் வேலை முடிந்து போகிறது. அவரைப் போலவே இளவரசுவும் சில
காட்சிகளில் விமலை திட்டுவதோடு தனது வேலையை முடித்துக் கொள்கிறார்.
 
காமெடிக்காக களம் இறங்கப்பட்டுள்ள விஜே விக்னேஷ், முடிந்தவரை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். அவர் முயற்சி வீண் போனாலும், விமலின் பர்பாமன்ஸ் சில இடங்களில் நமக்கு ஆறுதல் சிரிப்பை வர வைக்கிறது. அதே பஞ்சாயத்தாக நடித்திருக்கும் கஞ்சா கருப்பு விமலுடன் சேர்ந்து தேர்தலில் நின்று துவண்டுபோவது ரசிக்க வைக்கிறது.
 
துரை சுதாகர் ஆரம்பத்தில் வில்லன் வேடமாக தெரிந்தாலும், படம் முடியும் போது ஹீரோவாக தெரிகிறார். தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக கையாண்டிருப்பவர், அளவான நடிப்பால் அசத்துவதோடு, வில்லன் மட்டும் இன்றி குணச்சித்திர வேடங்களுக்கும் ஏற்றவராகவும் இருக்கிறார்.
எதார்த்தமான காதல், கிராம வாழ்க்கை மற்றும் இயல்பான திரைக்கதை மூலம் வெற்றி பெற்ற ’களவாணி’ படத்தின் தொடச்சியாக இப்படம் இல்லை என்றாலும், அப்படத்தில் இருந்த அத்தனை கதாபாத்திரங்களும் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதே சமயம், அதில் இருந்த இயல்பும், புதுமையும் மிஸ்ஸிங்.
 
ஹீரோ தனது களவாணி தனத்தால் காதலில் ஜெயிப்பதை ’களவாணி’ யில் காட்டிய இயக்குநர் சற்குணம், அதையே மாற்றி, அதே களவாணி தனத்தால் அரசியலில் ஜெயிப்பதை ‘களவாணி 2’-வாக எடுத்திருப்பவர், ஊராட்சி தேர்தலில் நடக்கும் மோசடிகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.
விமல், ஓவியா மற்றும் சற்குணம் ஆகிய மூவருக்கும் இப்படம் மிக முக்கியமான படமாக இருந்தாலும், திரைக்கதை நகர்த்தலிலும், கதாபாத்திர தேர்விலும் முக்கியத்துவம் இல்லாத படமாக இருக்கிறது. இருப்பினும், விமலின் களவாணித்தனம், ஊராட்சி தேர்தலில் நடக்கும் அரசியல் போன்றவை ரசிக்க வைக்கிறது.
 
மொத்தத்தில், பெரிய எதிர்ப்பார்ப்பின்றி பார்த்தால் ‘களவாணி 2’ வை ஒரு முறை காணலாம்.
ரேட்டிங் 3/5
Casting : Vimal, Oviya, Durai Sudhakar, Rajmohan Kumar, Ilavarasu, Saranya Ponvannan, VJ Vignesh, Kanja Karuppu
Directed By :  Sarkunam
Music By :  Mani Amuthavan, Ronald Reegan, V2 - Background Score Natarajan
Produced By : Varman Productions
 

Comments