நடிகர் சங்க தேர்தல் : ரஜினியை நினைத்து வருத்தப்பட்ட கமல்!

நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்த கமல் ஹாஸன் நண்பர் ரஜினியை நினைத்து வருத்தப்பட்டுள்ளார். நடிகர் சங்க தேர்தல் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறந்து இன்று நடந்து கொண்டிருக்கிறது. வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடந்து வருகிறது. நடிகர்கள் விஜய், சூர்யா, விக்ரம், ஆர்யா உள்ளிட்டோர் வாக்களித்துவிட்டனர். இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கும் வடிவேலு இன்னும் வரவில்லை. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் பிற்பகலில் வந்து வாக்களித்தார்.
 
வாக்களித்த பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, நடிகர் சங்க தேர்தலில் ரஜினியால் வாக்களிக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. அவருக்கு தபால் ஓட்டு சரியான நேரத்தில் போய் சேராதது தபால் துறையின் பிழையாக இருக்கலாம். இது போன்ற பிரச்சனைகள் இனி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 3 ஆயிரம் வாக்குகள் உள்ள நடிகர் சங்க தேர்தல் குறித்து இத்தனை செய்திகள் வெளியிடுவது பாராட்டுக்குரியது என்றார். மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிக்கு தபால் ஓட்டு தாமதமாக சென்றதால் அவரால் வாக்களிக்க முடியவில்லை. தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்து ரஜினிகாந்த் ட்வீட் செய்தார்.
 
அவரின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்களோ, சர்கார் படத்தில் விஜய் ஒரு ஓட்டு போட அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தார், நீங்கள் இங்கனக்குள்ள இருக்கிற மும்பையில் இருந்து வர முடியாதா சார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். நடிகர் சங்க தேர்தல் இன்று நடக்குமா, நடக்காதா என்று இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அனைத்தும் உறுதியானதால் தான் தபால் ஓட்டுகள் அனுப்பப்படுவதில் தாமதம் ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது. சென்னையில் உள்ளவர்களே தேர்தல் இன்று நடக்காது என்று நினைத்து வேறு வேலைகளை பார்க்கத் திட்டமிட்டிருந்தனர். அப்படி இருக்கும்போது மும்பையில் இருக்கும் ரஜினி மட்டும் என்ன பண்ணுவார், பாவம். அவரை எப்படி குறை சொல்ல முடியும்?

Comments