ஓ பேபி படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு சமந்தாவுக்கு டப்பிங் பேசிய சின்மயி!

பாடகி சின்மயி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்தார். கடைசியாக கடந்த வருடம் ‘96’ என்ற படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்தார். இந்த நிலையில் ‘மீடூ’ வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய அவரை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கினர்.
 
இதுகுறித்து சின்மயி கூறும்போது, “டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் என்னை நீக்கிவிட்டனர். இனிமேல் என்னால் தமிழ் படங்களுக்கு பின்னணி குரல் கொடுக்க முடியாது. நான் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளாக சந்தா கட்டவில்லை என்றும் அதனால் நீக்கி விட்டதாகவும் காரணம் சொல்கிறார்கள். சந்தா கட்டாதது குறித்து எனக்கு தகவல் வரவில்லை” என்றார். பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றார். ஆனாலும் டப்பிங் பேச யாரும் அவரை அழைக்கவில்லை.
 
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படத்தில் மீண்டும் டப்பிங் பேசியதாக டுவிட்டரில் சின்மயி தெரிவித்து உள்ளார். சமந்தா தெலுங்கில் ‘ஓ பேபி’ என்ற படத்தில் நடித்துள்ளார். நந்தினி ரெட்டி இயக்கி உள்ளார். இந்த படம் தமிழிலும் வெளியாகிறது. தமிழ் பதிப்பில் சமந்தாவுக்கு சின்மயி டப்பிங் குரல் கொடுத்துள்ளார். இதற்காக சமந்தாவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Comments