நடிகர் சங்க தேர்தல் குறித்து ஆர்யா, விஷால், நாசர் பேட்டி!

தேர்தல் நேரத்தில் நடிகர் சங்கத்தில் உள்ளவர்கள் ஒருவரையொருவர் குறை கூறியது வேடிக்கையானது என்று நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். நடிகர் சங்க தேர்தல் நடக்குமா, நடக்காதா என்று இருந்த நிலையில் ஒரு வழியாக திட்டமிட்ட நாளான இன்றே வாக்குப்பதிவு நடக்கிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் அடங்கிய பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகிறது. நடிகர் சங்க தேர்தலில் 3000க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கிறார்கள். அதில் 1,500 ஓட்டுகள் நாடக கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடையது. அதனால் தான் இரு அணியும் நாடக கலைஞர்களின் வாக்குகளை பெற தீவிர முயற்சி செய்தது.

இன்று காலை வாக்களிக்க வந்த விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தேர்தலை நடத்த அனுமதி அளித்த நீதியரசருக்கு நன்றி. நடிகர் சங்க கட்டிடத்திற்காகவே இவ்வளவு போராட்டமும். எதிரணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். கடைசி நேரத்தில் வாக்குப்பதிவு நடக்கும் இடம் மாற்றப்பட்டதால் அந்த தகவலை வாட்ஸ்ஆப் மூலம் வாக்காளர்களுக்கு தெரிவித்தோம் என்றார்.
நாசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 3 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தான் நடிகர் சங்க தேர்தல் நடந்தது. பாண்டவர் அணியை சேர்ந்தவன் என்பதில் பெருமையாக உள்ளது. இந்த தேர்தல் நடக்க பாண்டவர் அணியே காரணம். ரஜினி சார் உள்பட பலருக்கு தபால் ஓட்டுகள் போய் சேரவில்லை. இது குறித்து தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். தபால் ஓட்டுகள் சரியான நேரத்தில் போய் சேராததால் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். ஆனால் அது யாருக்கு என்பது தெரியவில்லை என்றார்.

 நடிகர் சங்க தேர்தலில் ஆர்யா காலையிலேயே வாக்களித்தார். வாக்களித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தேர்தல் நேரத்தில் நடிகர் சங்கத்தில் உள்ளவர்கள் ஒருவரையொருவர் குறை கூறியது வேடிக்கையானது. எந்த அணி வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு நான் ஆதரவு அளிப்பேன் என்றார்.

 உண்மையும், நேர்மையும் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி வெற்றி பெறும் என்று பாண்டவர் அணியை சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார். மேலும் சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த பூர்ணிமா பாக்யராஜ் கூறுகையில், தேர்தல் நடக்கும் இடத்தை மாற்றியதால் வாக்காளர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இடத்தை கண்டுபிடித்து வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.

Comments