சூடு பிடிக்கும் நடிகர் சங்க தேர்தல்: நாசருக்கு எதிராக களமிறங்கும் பாக்யராஜ்!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு நாசருக்கு போட்டியாக நடிகர் பாக்யராஜ் களமிறங்க உள்ளார்.நடிகர் சங்க தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு  நடிகர் விஷால் இன்று மனுதாக்கல் செய்தார். இதன்பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘நடிகர் சங்க கட்டடத்தை கட்டவிடாமல் நீதிமன்றம் மூலம் எஸ்.வி.சேகர் தடுக்க முயற்சிக்கிறார். எஸ்.வி.சேகர் தொடர்ந்த வழக்குகளால் நடிகர் சங்க கட்டடப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
 
கட்டடப் பணியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இன்னும் 6 மாத காலத்தில்  நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும். கடந்த தேர்தலில் பாண்டவர் அணியான  நாங்கள் சொன்னதைவிட அதிகம் செய்துள்ளோம். எங்கள் அணியில் குஷ்பு சேர்ந்ததற்காக, அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
 
தென்னிந்திய  நடிகர் சங்க தேர்தலில், பல்வேறு பதவிகளுக்காக விஷால் அணியில் இருந்து 22 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பொதுச் செயலாளார் பதவிக்கு விஷால், துணைத் தலைவர் பதவிக்கு பூச்சி முருகன்,  கருணாஸ் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு குஷ்பு, ரமணா, நந்தா, கோவை சரளா உள்பட 19 பேரும் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர்.
 
தென்னிந்திய  நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நாசருக்கு போட்டியாக நடிக்க பாக்யராஜ் களமிறங்குகிறார். அவரது அணியை சேர்ந்த ஐசரி கணேஷ், விஷாலுக்கு எதிராக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...
 
என்னுடைய நேர்மையைக் காப்பாற்றுவதற்காகத் தேர்தலில் நிற்கிறேன்: விஷால்!
 
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஜூன் 23ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் பாண்டவர் அணி சார்பில் விஷால், பூச்சி முருகன், குஷ்பு, கோவை சரளா, லதா, மனோபாலா உள்ளிட்ட பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் விஷால் பேசியதாவது :-
 
கட்டட பணிகளை தடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள், அதை நாங்கள் நடக்க விட மாட்டோம். இன்னும் 4 அல்லது 6 மாத காலத்தில் கட்டட பணிகள் முழுமையாக முடிவடைந்து கட்டடம் திறக்கப்படும். இந்த பணிகள் நிச்சயம் நிறைவேறும். கடந்த முறை தேர்தலில் சொன்ன எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம். நடிகர்களின் ஓய்வு ஊதியம் அதிகரித்து வழங்கப்படும்.
 
மிரட்டல்கள், எனக்கு புதிதல்ல. அடுக்குமாடி குடியிருப்பு சங்க தேர்தலில் நின்றாலும், இப்போது மிரட்டல் வருகிறது. தேர்தல் நேரத்தில், இரண்டு ஓட்டுகளை பெறுவதற்காக, மற்றவர்களை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

Comments