ஜீவி - பட விமர்சனம்!

எ ஸ்கொயர் பிளஸ் பி ஸ்கொயர் இஸிகோல்டு ஏ ஸ்கொயர் + பி ஸ்கொயர் என்று இயந்திரத் தனமாய் கணக்கு சொல்லும் புத்திசாலி மாணவனா நீங்க.. அப்ப உங்களுக்கு கண்டிப்பா ஜீவி பிடிக்கும்..
சிறுகதை – குறிப்பாக தி.ஜானகிராமன் படைப்புகளை வாசிப்பவரா நீங்க .. – அப்ப உங்களுக்கு கண்டிப்பா ஜீவி பிடிக்கும்..
திருமூலரின்
பிரமனைப் பார்த்து போயில் தெளிந்து நீ
அரமனைக்குள்ளே அந்தித்து வாசியை
உரமனைத் தாக்கு ஓடிலும் ஓடாது
திரமனை யோடுஞ் சிவயோகி ஆகுமே – என்ற பாடலை பாடி அதன் பொருளைக் கண்டுணர்ந்து உள்ளீர்களா.. – அப்ப உங்களுக்குக் கண்டிப்பா ஜீவி பிடிக்கும்
விதி குறித்தும் அதை அலசும் மதி குறித்தும் நண்பர்களிடம் அலசுவதுண்டா.. – அப்ப கண்டிப்பா ஜீவி உங்களுக்கு பிடிக்குமுங்கறேன் ..அட நல்லதொரு சினிமா பார்க்க பிரியப்படுபவரா நீங்க – அப்ப கண்டிப்பா ஜீவி உங்களுக்கு பிடிச்சே தீரும்.
 
இந்த ஜீவி படத்தின் பின் கதை நகைத் திருட்டை மையமாக கொண்டு நகர்வதால் இப்படம் சில பலரால் க்ரைம் சஸ்பென்ஸ் படம் என்று சிலாகிக்கப்படுகிறது. அதே சமயம் வழக்கமான வாழ்வியல் சம்பவங்களுடன் கொஞ்சம் பரிச்சயமற்ற தொடர்பியல் என்ற சிந்தனையை புகுத்தி கதையாசிரியர் பாபு தமிழும், இயக்குநர் வி.ஜே.கோபிநாத்தும் இணைந்து அமைத்திருக்கும் திரைக்கதை ஆரம்பத்தில் கொஞ்சம் ஒட்டாமல்தான் போகிறது,ஆனால் அதை பொருட்படுத்தாமல் இயக்குநர் படத்தை கொண்டு போயிருந்த விதத்திலும் அந்த திருட்டு போன நகைக்கான முடிச்சு அவிழும் போக்கும் ஒட்டு மொத்த படத்தை வெகுவாக சிலாகிக்க வைத்து விட்டது.
 
கதை என்னவென்று கேட்டால் ஒரு டீ ஷாப்பில் வேலை செய்யும் ஹீரோ வெற்றியும், கருணாகர னும் ரூம் மேட்ஸ். அவர்கள் குடியிருக்கும் ஹவுஸ் ஓனர் ரோகினி. அவர் தன் கண் பார்வையற்ற ஒற்றை மகளின் திருமணத்திற்காக 50 சரவண் நகை வாங்கி அதை பீரோவில் வைக்க, அந்த பீரோ சாவி தொலைந்துவிடுகிறது. தொலைந்த சாவி நாயகன் வெற்றியிடம் கிடைக்க, வறுமை, காதல் தோல்வி, விரக்தியின் உச்சத்தில் இருக்கும் வெற்றி அந்த நகையை கொள்ளையடித்து விடுவ தோடு, தனது புத்திசாலித் தனத்தால் போலீசிடம் சிக்கிக்கொள்ளாமல் எஸ்கேப் ஆகிறார். ஆனாலும் அந்த நகைத் திருட்டின் பின்னணியில் அது ,இது எதை எதையோ பின்னி சுபம் போடுவதுதான் மேட்டர்.
 
ஒரே மாதிரியான சம்பவங்கள் வெவ்வேறு குடுபத்தோட சந்ததியை ஆக்கிரமிக்கும். அது தொடராம இருக்க வேண்டும் என்றால் ஒரு மையப் புள்ளியில் முழுமை பெற வேண்டும். அதாவது விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்று நாம் கேஷூவலாக சொல்வதற்கு பின்னால் ஒரு அறிவியல் இருக்கிறது என்பதை இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கும் கதையாசிரியர் பாபு மற்றும் இயக்குநர் கோபிநாத் இருவரும் திரையில் வரவில்லை என்றாலும் இவர்கள்தான் படத்தின் ஹீரோ-க்கள் என்று சொல்லலாம்.
ஆனாலும் ஹீரோவாக வரும் வெற்றி கதாபாத்திரத்தை உணர்ந்து அளவாக நடித்திருக்கிறார். ஆனால் போலீஸைக் கண்டால் முகத்தில் காட்டும் பயம் காதலியைக் காணும் போதும், அதிர்ச்சி யான தகவல்களை கேட்கும் போது வெளிப்படுத்த தவறி விட்டார். வெற்றியின் நண்பராக நடித்திருக்கும்(?) கருணாகரன் இயக்குநர் சொன்னதை செய்திருப்பதால் வெறுப்பேற்றவில்லை.
 
ரோகினி, ரமா, கண் பார்வையற்றவராக நடித்திருக்கும் ஹீரோயின், ஹீரோவை கழட்டி விடும் பெண், மைம் கோபி என படத்தில் சில காட்சிகள் வரும் நடிகர்கள் கூட கவனிக்கும்படி நடித்திருக்கிறார்கள்.
ஆனாலும் தினத்தந்தி படித்தே பழக்கப்பட்டு விட்ட பெரும்பாலானோருக்கு புரியாத மொழியில் கதையை கொண்டு போயிருக்கிறார்கள்.. ஆரம்பத்தில் சொன்னது போல் அதை ஒரு மையப் புள்ளியில் இணைத்து தங்கள அறிவி ஜீவித் தனத்தை நிரூபித்து விட்டார்கள்..மொத்தத்தில் குழப்பமான  ஒரு திரைக்கதைக்குள் பார்வையாளனையும் ஒரு சேர பயணப்பட வைத்த ஜீவி தமிழ் சினிமாவுக்கு அரிய வரவுதான்.
மார் 3. 25 / 5

Comments