இந்த ஆண்டில் கோடிகளைக் கொட்டாத கோடை - மே மாதப் படங்கள் ஓர் பார்வை!

கோடை விடுமுறை என்றாலே இரண்டு விஷயங்கள்தான் மக்களின் பொழுது போக்கும் இடங்களாக இருக்கும். ஒன்று சுற்றுலாத் தளங்கள், அடுத்தது சினிமா தியேட்டர்கள்.கோடை விடுமுறை என்றாலே மே மாதம் 1ம் தேதியிலிருந்துதான் ஆரம்பமாகும். ஏப்ரல் மாதக் கடைசி வரையில் கடைசி தேர்வுகள், அடுத்த கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணம் கட்டுதல் என மக்களும் பிஸியாக இருப்பார்கள். இருந்தாலும் சினிமாவைப் பொறுத்தவரையில் ஏப்ரல் 14, தமிழ்ப் புத்தாண்டிலிருந்தே கோடை ஆரம்பமாகிவிடும்.

இந்த ஆண்டில் தமிழ்ப் புத்தாண்டுக்கு ஒரு படம் கூட வரவில்லை. இரண்டு நாள் முன்னதாக வந்த 'காஞ்சனா 3' படம் வெற்றி பெற்று லாபத்தையும் கொடுத்தது. ஏப்ரலில் வந்த மற்ற படங்கள் வெற்றி பெறாமல் தோல்வியைத் தழுவின.

ஏப்ரல் மாதமே பரவாயில்லை என மே மாதப் படங்களின் தோல்வி நிலை திரையுலகை அதிர்ச்சியடைய வைத்ததுதான் மிச்சம். மே மாதம் 20க்கும் அதிகமான படங்கள் வெளிவந்தன. விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன், பிரபுதேவா ஆகியோர் தான் மே மாதப்படங்களின் முக்கிய நடிகர்கள். இவர்கள் படங்கள் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் தோல்வியைத் தழுவியது யாரும் எதிர்பாராத ஒன்று. அதிலும், சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்', சூர்யா நடித்த 'என்ஜிகே' படங்கள் மோசமான தோல்வி என்று கூட சொல்ல முடியாமல் படுதோல்விப் படங்களாக அமைந்தது திரையுலகினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

திரையுலகத்தில் விசாரித்துப் பார்த்ததில் ஓரளவிற்கு வெற்றிப் படம் என 'தேவராட்டம், மான்ஸ்டர்' ஆகிய படங்களைச் சொல்கிறார்கள். இந்த இரண்டு படங்கள்தான் சில லட்சங்களையாவது லாபமாகக் கொடுத்ததாம். மற்ற படங்கள், சில கோடிகளைக் கூடக் குவிக்காமல், பல கோடிகளை நஷ்டமாக்கியதுடன், கோடை வெயிலையும் மீறி, சினிமாவில் வசூல் வறட்சியை ஏற்படுத்தியுள்ளன.

மே மாதம் 1ம் தேதி கவுதம் கார்த்திக் நடித்த 'தேவராட்டம்' படம் வெளிவந்தது. முத்தையா இயக்கத்தில் மீண்டும் வெளிவந்த ஒரு சாதிப் படமாக இருந்தாலும் பி அண்ட் சி ஏரியாக்களில் இந்தப் படம் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றது.

மே 3ம் தேதி 'கே 13, தனிமை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' ஆகிய படங்கள் வெளிவந்தன. 'கே 13' படத்தை வித்தியாசமாக எடுக்க முயற்சித்தார்கள். ஆனால், ஒரே வீட்டுக்குள் முழுப் படமும் நகர்ந்து ரசிகர்களின் பொறுமையை சோதித்தது. மற்ற இரண்டு படங்களின் வெளியீட்டு போஸ்டர்களையாவது ரசிகர்கள் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

மே 10ம் தேதி 'எங்கு சென்றாய் என் உயிரே, கீ, உண்மையின் வெளிச்சம், வேதமானவன்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'கீ' படம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், படத்தின் தாமதமான வெளியீடே அந்தப் படத்திற்கு வில்லனாக அமைந்தது. ஓரளவிற்கு விளம்பரம் செய்திருந்தால் சுமாரான வெற்றிப் படமாகவாவது இந்தப் படம் அமைந்திருக்கும். மற்ற மூன்று படங்களும் மூன்று காட்சிகளாவது ஓடியிருக்குமா என்பது சந்தேகம்தான்.

மே 9ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட '100' படம் நிதிப் பிரச்சினையால் அன்றைய தினம் வெளிவரவில்லை. மறுநாளாவது வெளிவரும் என்று பார்த்தால் அன்றும் பிரச்சினை முடியாமல் மே 11ம் தேதி வெளியானது. மே 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட 'அயோக்யா' படமும் நிதிப் பிரச்சினையில் சிக்கியது. பிரச்சினை தீர்ந்து பின்னர் மே 11ம் தேதி வெளியானது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நடித்த படமே இப்படிப் பிரச்சினையில் சிக்கிவிட்டதே என திரையுலகினர் ஆச்சரியப்பட்டார்கள். இதில் '100' படத்தை லாபகரமான படம் என தயாரிப்பாளர் கூறி வருகிறார். திரையுலகில் விசாரித்ததில் இரண்டு படங்களும் லாபம் தரவில்லை என்றாலும் பெரிய நஷ்டத்தைத் தரவில்லை என்கிறார்கள்.

மே 17ம் தேதி 'மான்ஸ்டர், மிஸ்டர் லோக்கல், நட்புன்னா என்னானு தெரியுமா' ஆகிய படங்கள் வெளிவந்தன. எலியை மையமாக வைத்து வெளிவந்த 'மான்ஸ்டர்' படம் சிறுவர், சிறுமியர்களைக் கவர்ந்து எதிர்பாராத வெற்றிப் படமாக அமைந்தது. அதே சிறுவர், சிறுமியர்களால் கொண்டாடப்பட்டு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்', நயன்தாரா போன்ற முன்னணி நடிகை நடித்தும் சில நாட்களிலேயே தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டது. 'நட்புனா என்னானு தெரியுமா' ஓரளவிற்கு சுமாரான படமாக இருந்தாலும் தாமதமான வெளியீட்டால் கவனம் ஈர்க்காமல் போனது.

மே 24ம் தேதி 'லிசா, நீயா 2, ஔடதம், பேரழகி ஐஎஸ்ஓ, சீனி, வண்ணக்கிளி பாரதி' ஆகிய படங்கள் வெளிவந்தன. அந்த வாரம் சிறிய படங்களின் வாரமாகவே அமைந்தது. அவற்றில் ஒரு படம் கூட பார்க்கும்படியான படமாக இல்லாமல் போனது வருத்தமான விஷயம். சில படங்களை எதற்கு தயாரித்து வெளியிட்டார்கள் என்பது கூடத் தெரியவில்லை.

மே 31ம் தேதி 'என்ஜிகே, தேவி +2, திருட்டுக் கல்யாணம்' ஆகிய படங்கள் வெளிவந்தன. செல்வராகவன், சூர்யா கூட்டணியின் முதல் படம் என அதிகாலை காட்சிகள் கூட அரங்கு நிறைந்த காட்சிகளாக ஆனது. ஆனால், அரைகுறை அரசியல் படமாக அமைந்து ஏன் இப்படிப்பட்ட படத்தில் சூர்யா நடிக்க சம்மதித்தார் என கேள்வி கேட்க வைத்தது. முதல் பாகம் தந்த வெற்றியால் 'தேவி + 2' என இரண்டாம் பாகம் தயாரித்து வெளியிட்டார்கள். இரண்டாம் பாகம் என்பது பிளஸ் அல்ல மைனஸ் என மீண்டும் நிரூபித்த படங்களில் இதுவும் ஒன்று. 'திருட்டுக் கல்யாணம்' பட எண்ணிக்கையில் சேர்ந்ததுடன் சரி.

வழக்கம் போல பெரிய நடிகர்களின் படங்கள் ஏமாற்றத்தைத் தந்த படங்களாகவும், சிறிய நடிகர்களின் படங்கள் எதிர்பாராத வெற்றியைத் தந்த படங்களாகவும் அமைந்தது.

கோடை விடுமுறையில் சில பல கோடிகளை அள்ளிவிடலாம் என்ற எதிர்பார்ப்புடன் படங்களை வெளியிட்டு பல கோடிகளை நஷ்டப்படுத்தியவர்கள்தான்

இந்த ஐந்து மாதங்களுக்குள்ளாகவே 90 படங்கள் வரை வெளிவந்துவிட்டன. அடுத்த ஆறு மாதங்களில் 100க்கும் அதிகமான படங்கள் நிச்சயம் வெளிவரும். வருடா வருடம் எண்ணிக்கைதான் மாறுகிறதே தவிர, வசூல் எண்ணிக்கை குறைந்து கொண்டேதான் போகிறது.

மே மாதம் வெளியான படங்கள்

மே 1 : தேவராட்டம்

மே 3 : கே 13, தனிமை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

மே 10 : எங்கு சென்றாய் என் உயிரே, கீ, உண்மையின் வெளிச்சம், வேதமானவன்

மே 17 : மான்ஸ்டர், மிஸ்டர் லோக்கல், நட்புன்னா என்னானு தெரியுமா

மே 24 : லிசா, நீயா 2, ஔடதம், பேரழகி ஐஎஸ்ஓ, சீனி, வண்ணக்கிளி பாரதி

மே 31 : தேவி +2, என்ஜிகே, திருட்டுக் கல்யாணம்
அதிகமானார்கள். கதை இருந்தால்தான் படங்கள் ஓடுகின்றன என்று தெரிந்தும் செய்த தவறுகளையே திரும்பத் திரும்பச் செய்தால் யார்தான் காப்பாற்ற முடியும்.

Comments