எஸ்.ஜே.சூர்யாவுக்கு இதுநாள் வரை கிட்டாத ஒரு விஷயத்தை பெற்று தந்த மான்ஸ்டர்’!

ஒருநாள் கூத்து’ படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை மாநகரம் படத்தை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு ‘மான்ஸ்டர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். 
நாயகி பிரியா பவானி சங்கர் பேசும்போது, “இந்த படத்தில் கிடைத்த அனுபவம், எஸ்.ஜே.சூர்யா நாயகன் என்றதும் அவருடன் எனக்கு பொருத்தமாக இருக்குமா? என்று தயங்கினேன். ஆனால் இயக்குநர் முதலில் கதை கேட்டு முடிவு செய்யுங்கள் என்று கூறினார். படக்குழுவினருடன் ஜாலியாக பணியாற்றினேன். ஜஸ்டினின் இசையில் எனக்கு ஒரு பாடல் அமைந்ததில் மகிழ்ச்சி என்றார்.
 
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது, “பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-உடன் இது என்னுடைய முதல் படம். என் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து இப்படத்தை தயாரித்ததற்கு S R பிரகாஷ்பாபு, S R பிரபு, வெங்கடேசன் ஆகியோருக்கு நன்றி. நான் எப்போதும் வீட்டுப்பாடம் செய்துவிட்டு தான் பணிக்கு வருவேன். ஆனால் இப்படத்தில் அதெல்லாம் போதவில்லை.
இப்படத்தின் நாயகன் எஸ்.ஜே.சூர்யா, வில்லன் எலி என்ற புள்ளியில் தான் ஆரம்பமாகும். என் வீட்டில் நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவம் தான் இப்படம். மூன்று நாட்கள் ஒரு எலி என்னைத் தூங்க விடாமல் செய்தது. அதேபோல் அனுபவம் பெரும்பாலானோருக்கு நடந்திருக்கும். அந்த சம்பங்களின் தொகுப்பே இப்படம் என்றார்.
 
எஸ்.ஜே.சூர்யாவிடம் கதை கூறியதும் அவர் ஒரு காட்சியை நடித்துக் காண்பித்தார். காலையிலிருந்து மாலை வரை தனியாகவே நடிப்பார் எஸ்.ஜே.சூர்யா. இக்கதையின் கருவை கூறியதும் எழுத்தாளர் ஷங்கர் தாஸ் நம்பவில்லை. ஆனால், ஒவ்வொரு காட்சியாக எடுக்க எடுக்க என்னைவிட ஆர்வமாக முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினார். அதேபோல், உண்மையான எலியை வைத்துதான் படப்பிடிப்பு நடத்தினோம். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் கிடையாது. இதுவரை யாரும் பார்த்திராத எஸ்.ஜே.சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம். எலியுடன் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஒரு பாடல் இருக்கிறது. அப்பாடலை எஸ்.ஜே.சூர்யாவே பாடியிருக்கிறார்.
 
நாயகன் எஸ்.ஜே.சூர்யா பேசும் போது, “இந்த படத்தில் எனக்கு மிகப் பெரிய ஆசிர்வாதம் இருக்கிறது. எலி என்பது பிள்ளையார் வாகனம். அதிலிருந்தே எனக்கு ஆசிர்வாதம் ஆரம்பித்தது. குழந்தைகளுக்கும் செல்ல பிராணிகளுக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய உறவு இருக்கும். இப்படத்தில் எலியை வைத்து எடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். ‘அந்தி மாலை’ பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பிரியா பவானி ஷங்கர் அழகான, திறமையான மற்றும் தனித்துவமான நடிகை. நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்.
 
சில காட்சிகள் எலிக்குத் தகுந்தாற்போல் முகபாவனை வரவில்லை என்று மீண்டும் நடித்தது வித்தியாசமாக அனுபவமாக இருந்தது. இயக்குநர் ஒவ்வொரு காட்சி கண் இப்படி இருக்க வேண்டும், கன்னம் இப்படி இருக்க வேண்டும் என்று நுட்பமாக நடிக்க வைத்தார். அதிலும் காதும் நடிக்க வேண்டும் என்று கூறுவார். இன்னொரு முக்கியமான விஷயம் நான் நடித்து முதல் முறையாக ‘யு’ சான்றிதழ் பெற்ற படம் ‘மான்ஸ்டர்’ தான்” என்றார்.

 

Comments