ரஜினி, அஜித், விஜய் டாப்: பரபரப்பில் தமிழ் சினிமா: அதிரடி சதவீத மாற்றம்!

தமிழ் சினிமா வியாபாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம், ஒவ்வொரு மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்கமும் இணைந்த தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு ஆகிய சங்கங்கள் இணைந்து பேசி முடிவு எடுப்பார்கள்.

கடந்த 2018ம் ஆண்டில் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் தலைவராக திருப்பூர் சுப்பிரமணியம், பொதுச்செயலாளராக ரோகிணி தியேட்டர் பன்னீர்செல்வம், பொருளாராக இளங்கோவன் ஆகியோர் செயலாற்றி வருகிறார்கள்.

புது அறிவிப்பு
அந்த சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வரி விதிப்புடன் கூடிய விதிமுறைகளான, பராமரிப்பு செலவுகள் உயர்வு, சொத்து வரி உயர்வு, வேலையாட்கள் ஊதிய உயர்வு போன்றவை திரையரங்க நிர்வாக நடைமுறைக்கு பெரும் பாரமாக இருந்து வருகின்றன. எனவே அவற்றை மனதில் கொண்டு இதனை எதிர்கொள்ளும் விதமாக நமது நிர்வாக நடைமுறையில் ஒரே நிலையான வழிமுறைகளை செயல்படுத்தும் வண்ணம் வினியோகஸ்தர்களுக்கான புதிய நடைமுறைகளை கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ரஜினி, அஜித், விஜய் டாப்
அதன்படி முதல் வாரத்தில் ஏ சென்டர்களில் ரஜினி, அஜித், விஜய் படங்களுக்கு 60 சதவீதம், மற்ற சென்டர்களில் 65 சதவீதம், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோருக்கு ஏ சென்டர்களில் 55 சதவீதம், மற்ற சென்டர்களில் 60 சதவீதம், மற்ற நடிகர்களுக்கு ஏ,பி,சி சென்டர்களில் 50 சதவீதம் எனவும், இரண்டாவது வாரத்தில் முதல் வார சதவீதத்திலிருந்து 5 சதவீதம் குறைத்தும் அவர்கள் புதிய நடையைமுறைய் கொண்டு வர உள்ளதாக அவர்களது சங்கத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தி உள்ளனர். இந்த கடிதத்தின் நகல் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு திரைப்படத்தை வினியோகஸ்தர்கள் தியேட்டர்களுக்கு வினியோகம் செய்யும் போது வசூலாகும் தொகையை இருவரும் பிரித்துக் கொள்ளும் நடைமுறை காலம் காலமாக 60 - 40 சதவீதம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது. இது குறிப்பிட்ட நடிகர்களின் படங்கள், தியேட்டர்கள் ஆகியவற்றைப் பொறுத்து 70 - 30, 80 - 20 சதவீதமாகவும் இருக்கும். அட்வான்ஸ் தொகை உள்ளிட்ட விஷயங்களும் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மொத்த வசூலிலிருந்து வரும் நிகரத் தொகையைத்தான் இந்த விகிதத்தில் அமைந்த பங்காக அவர்கள் பிரித்துக் கொள்வார்கள்.

வினியோகஸ்தர்கள் சங்கம் ஏற்குமா.?
புதிய சதவீத அறிவிப்பு குறித்து திரையுலக வட்டாரங்களில் விசாரித்த போது, ஒரு படத்தை வெளியிடும் வினியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே இதுவரையில் 70 சதவீதம், 30 சதவீதம் என்ற விகிதம்தான் இருந்தது. இதை இப்போது புதிய சங்கத்தினர் மாற்றி அமைக்க முன் வருகிறார்கள். ஆனால், அதை ஏற்றுக் கொள்வதாக வேண்டாமா என்பது குறித்து வினியோகஸ்தர்கள் சங்கம்தான் முடிவு செய்வார்கள்.

யாருக்கு லாபம்.?
மேலும், தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக சினிமா வியாபாரத்தில் திரையரங்கு உரிமையாளர்களின் கைகள்தான் ஓங்கி வருகிறதாம். சில பைனான்சியர்கள், சில வினியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்களாகவும் இருப்பதாலும், தங்கள் தியேட்டர்கள் சங்கத்தை தமிழ் சினிமாவில் முன்னிறுத்தவும் அவர்கள் முயற்சித்து வருகிறார்களாம்.

ஒவ்வொரு ஏரியாவிலும் சிண்டிகேட் வைத்துக் கொண்டு 30 அல்லது 40 தியேட்டர்களை தனி நபர் ஒருவரே அவர்களது அனுமதி இல்லாமல் அங்கு படங்களை வெளியிட முடியாத சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்களாம். அவர்கள் அனைவரும் சேர்ந்துதான் பழைய சங்கத்தை செயல்படாமல் நிறுத்தி வைத்து புதிய சங்கம் மூலம் சினிமா வியாபாரத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறார்கள்.

அதோடு தயாரிப்பாளர் சங்கத்தின் கடந்த நிர்வாகம் அதிரடியாக இல்லாமல் போனது படத் தயாரிப்புக்கு கடன் வாங்கி முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் மற்ற சங்கங்களின் பேச்சுக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக சில தயாரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

யாருக்கு பாதிப்பு.?
பழைய சதவீத முறையிலிருந்து புதிய சதவீத முறைக்கு மாறினால் வினியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் வரும் பங்கு குறையும். அதன் மூலம் நடிகர்களுக்கான சம்பளமும் குறைய வேண்டும். ஆனால், நடிகர்கள் எப்போதுமே அவர்களது சம்பளத்தைக் குறைக்க ஒத்துக் கொள்வதில்லை. திரையரங்கு உரிமையாளர்களின் புதிய சதவீத முறையைக் கொண்டு வரும் முயற்சியால் தற்போது வியாபாரத்தில் புதிய சிக்கல் ஏற்படும்.

புதிய சங்கத்தினர் கொடுத்த நடிகர்களின் பட்டியலில் கமல்ஹாசன், விக்ரம் ஆகியோர் இல்லாததும் அவர்களை வைத்து படங்களைத் தயாரித்து வரும் தயாரிப்பாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்பரேட்டை காப்பியடிக்க முயற்சி
இந்தியா முழுவதும் உள்ள கார்பரேட் மல்டிபிளக்ஸ் நிர்வாகங்கள் அவர்களுக்கு என தனி வியாபார முறையை பின்பற்றி வருகிறார்கள். அவர்களது வழிக்கு தான் பட தயாரிப்பாளர்களும் செல்கிறார்கள். குறிப்பாக இது ஹிந்தி திரையுலகில் நடைமுறையில் இருந்து வரும் விஷயம். தமிழ்நாட்டில் உள்ள அதே கார்பரேட் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் அப்படிப்பட்ட நடைமுறை தான் தொடருகிறது. அவர்களது வியாபாரத்தை போலவே தங்களது வியாபாரத்தையும் கொண்டு வர வேண்டும் என இந்த சங்கத்தினர் விரும்புவதாக தெரிகிறது. பல சிங்கிள் தியேட்டர் உரிமையாளர்கள் இந்த புதிய சங்கத்தின் நடைமுறைக்கு தங்களை ஈடுபடுத்தி கொள்ள தயாராக இல்லை என தெரிகிறது.

எல்லாமும் பாதிக்கும்.?
தமிழ் சினிமா ஏற்கெனவே பல்வேறு சிக்கல்களால் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. சமீபத்திய பல படங்களின் மூலம் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பைரசி பத்து வருடங்களுக்கும் மேலாக பெரும் பிரச்சினையாகி பூதாகரமாகி உள்ளது. டிக்கெட் கட்டண உயர்வால் தியேட்டர்களுக்கு மக்கள் வருவதும் குறைந்துவிட்டது. இந்நிலையில் தற்போது இப்படி வியாபாரத்தில் ஒரு புதிய நடைமுறையைக் கொண்டு வந்தால் அது மொத்தமாக பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என சீனியர் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

தயாரிப்பாளர் சங்கம் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் மூலம் செயல்படாமல் உள்ள நிலையில் இந்த புதிய பிரச்சினையை யார் எப்படி அணுகப் போகிறார்கள் என்பது இனி தெரிய வரும்.

Comments