நான் ரெடி தலதான் சொல்லனும் : மனம் திறக்கும் வெங்கட் பிரபு!

பன்முகத்தன்மை கொண்ட ஒரு படைப்பாளி எளிய மக்கள் வாழ்வியலின் கொண்டாட்டங்களை தனது படைப்பு திறனால் திரையில் வெளிப்படுத்தியவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் வெளியான சென்னை 600028 திரைப்படம் சுண்ணாம்பு கால்வாய் பக்கத்திலே இன்னும் சுற்றிக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.. அடுத்தடுத்து இயக்குநராக தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர், ஆகச்சிறந்த படைப்புகளை வெளி கொண்டுவரும் தயாரிப்பு பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இவருடைய தயாரிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ஆர்.கே. நகர் படத்திற்காக அவரை சந்தித்தேன்.
ஆர்.கே.நகர் படம் குறித்து சொல்லுங்கள்…

ஆர்.கே.நகர் என்னுடைய தயாரிப்பு. என்னிடம் உதவி இயக்குநராக இருந்து பணியாற்றிய சரவணராஜன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். படம் நல்லா வந்திருக்கிறது. இந்த காலகட்டத்திற்கு ஏற்ற கதைக்களம். மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். ஜனரஞ்சகமான படம் என்பதால் எல்லாதரப்பட்ட மக்களுக்கும் இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.ஆர்.கே.நகர் என்று சொன்னவுடன் கடந்த கால அரசியல் நிகழ்வுகள் நினைவிற்கு வருகிறது. இந்த படம் எதைப் பற்றி பேசும்…
 
இன்று இருக்கக்கூடிய காலகட்டத்தில் நடக்கும் பிரச்னைகள் பற்றி பேசும் படம். நாங்கள் இந்த பிரச்னையை வைத்து விளம்பரம் செய்யவில்லை அதை மக்கள் படத்தைப் பார்த்த்து புரிந்துக்கொள்வார்கள். இது முழுக்க முழுக்க அரசியல் படம் கிடையாது. ஆர்.கே.நகரில் தேர்தல் நடக்காமல் போன போது நடந்த இன்னொரு கதையாக இந்த படம் உருவாகி இருக்கிறது.அந்த நேரத்தில் அந்த ஏரியா மக்கள் எப்படி பாதிப்பட்டார்கள், அவர்களுடைய வாழ்க்கையில் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுதியது என்பதைப்பற்றியும் இந்த படத்தில் பேசப்பட்டிருக்கிறது.
  
இந்த படத்தை தயாரிப்பதற்கான காரணம் ஏதாவது இருக்கிறதா…
 
“இந்த படத்தில் இருந்த ஒரு சம்பவம் என்னை அதிகமாக பாதித்தது. என்னுடைய நண்பரும் இந்த படத்தை எடுக்க முன் வந்ததால் ஒரு நம்பிக்கை கிடைத்தது. இந்த படத்தின் களமாக இருக்கட்டும், கதையாக இருக்கட்டும் எல்லாம் சரியாக அமைந்ததால் இந்த படத்தை தயாரிக்க வேண்டும் என்கிற தேவையை எனக்கு ஏற்படுத்தியது.கதைசொல்லியாக இருந்து கதை கேட்கும் இடத்திற்கு நகர்ந்திருக்கிறீர்கள். எப்படி இருக்கிறது இந்த பயணம்…
 
நிறைய கதைகளை கேட்கிறேன், நிறைய இளைஞர்கள் நல்ல சிந்தனை உள்ள கருத்துக்களோடு வருகிறார்கள். தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையை நோக்கி நகர்கிறது என்பதை உணர முடிகிறது.
சினிமாத்துறை மிகவும் கடுமையான போட்டிகள் நிறைந்தது. ஒரு படத்தை தயாரித்து அதை வெளியிடுவது என்பது அவ்வளவு எளிமையான காரியம் இல்லை. ஒரு நல்ல படத்தை எடுத்துவிடுவோம் அந்த படம் மக்களிடம் போய் சேருவது கடினமாக இருக்கும்.
 
சமீபத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்' நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்று சொல்கிறார்கள், ஆனால் அவருடைய இயக்கத்தில் வெளியான ‘ஆரண்ய காண்டம்' திரைப்படம் இதைவிட நல்ல படம். ஆனால் அந்த படம் மக்களிடம் வெகுவாக போய் சேரவில்லை. ‘உறியடி 2' நல்ல படம் ஆனால் ‘உறியடி' படமும் ஆழமான கருத்தை சொன்ன படம் ஆனால் அது வெகுஜன மக்களை ஈர்க்கவில்லை. சில படங்கள் எல்லாவற்றையும் தாண்டி மக்களிடம் போய் சேர்ந்து விடுகிறது. எங்களுடைய ‘சென்னை-60028', ‘காக்கா முட்டை', போன்ற படங்கள் மக்களிடம் சரியாக போய் சேர்ந்தது. ஒரு நல்ல படைப்பை மக்களிடம் கொண்டு போய் சேர்பதில் உள்ள பிரச்னையை ஒரு தயாரிப்பாளராக என்னால் உணரமுடிகிறது.வெகுஜன மக்கள் நினைப்பது ஒரு படத்திற்கு பெரிய ஹீரோ இருக்க வேண்டும், பெரிய இயக்குநர் அந்த படத்தை இயக்கி இருக்க வேண்டும், ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தை எடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.பா.இரஞ்சித் இயக்கிய அட்ட கத்தி படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் திரையிட்டு காட்டி அவர் மூலமாக அந்த படத்தை வெளியிட முடிந்தது. இதைப்போல ஒரு பெரிய பிரபலம் சிறய படத்தை வெளியிட தேவை படுகிறார்.
 
காக்கா முட்டை” படமும் தனுஷ், வெற்றிமாறன் போன்றவர்கள் இருந்ததால் அந்த படத்தை மக்களிடம் எளிமையாக கொண்டு சேர்க்க முடிகிறது என்கிற எதார்த்தத்தில் இருந்து இதை புரிந்துக்கொள்ள முடிகிறது. ஒரு படைப்பை உருவாக்குவதை விட மக்களிடம் அந்த படைப்பை கொண்டு போய் சேர்பதுதான் சவாலாக இருக்கிறது.சமீப காலமாக அரசியல் பேசக்கூடிய படங்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறதே அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்…
 
எல்லா காலகட்டங்களிலும் அரசியல் பேசக்கூடிய படங்கள் வந்துக்கொண்டுதான் இருக்கிறது. “தண்ணீர் தண்ணீர்', ‘மக்கள் ஆட்சி', ‘மக்கள் என் பக்கம்', தாழ்த்தப்பட்ட மக்களைப்பற்றி பேசும் படம், பொது சமூகத்தில் இருப்பவர்களுக்கான படம் என அரசியல் படங்கள் தொடர்ச்சியாக வந்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள் அதிகம் வந்துவிட்டதால் அதிகம் இதைப்பற்றி பேசக்கூடிய தளங்கள் கிடைத்திருக்கிறது. அரசியல் இல்லாமல் படங்கள் எடுப்பது என்பது குறைவு. கதைக்களங்கள் அப்படித்தான் இருக்கிறது.நூற்றாண்டு கால சினிமாவை கற்பனையில் இருந்து நகர்த்தி எதார்த்தப் படைப்பை கொடுத்த இயக்குநர் மகேந்திரன் இழப்பை எப்படி பார்க்கிறீர்கள்…
 
மிகப்பெரிய இழப்பு… அவருடைய படைப்புகள் இன்றைக்கு வரக்கூடிய இளைய தலைமுறை இயக்குநர்களுக்கு ஒரு பாடம்தான். அவர் சொன்ன கருத்துக்கள், உணர்வுகள் இன்னும் எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ள முடியும். எனக்கு அவரோடு நெருங்கி பழகக்கூடிய பெரும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய பக்கத்து வீடு நான். என்னை சின்ன வயத்தில் இருந்தே பார்த்து வருகிறார். நாங்க ரோட்டுல கிரிக்கெட் விளையாடும் போது எங்களோடு வந்து விளையாடுவார். அவருடைய மகன் ஜான் எனக்கு நல்ல நண்பர். அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்க வந்தார். அட்லிக்குதான் நன்றி சொல்ல வேண்டும். எப்படி அவர் யோசித்து அவரை கொண்டுவந்தார் என்று தெரியவில்லை. அடுத்தடுத்து அவருக்கு படங்களும் கிடைத்தது. ஆனால் அவருடைய இழப்பு என்பது ஈடு செய்ய முடியாது. இன்றைக்கு வரக்கூடிய அத்தனை இயக்குநர்களும் அவருடைய மரணம்”.
 
உங்களுடைய பார்ட்டி படம் பற்றி…
 
பார்ட்டி' படம் எல்லா வேலைகளும் முடிந்து வெளியாவதற்கு தயாராக இருக்கிறது. என்னுடைய முந்தைய படங்களின் பாதையில் இருந்து சற்று மாறி கிரேசி மோகன் சாருடைய வழிமுறையில் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன் அப்படி உருவானதுதான் ‘பார்ட்டி'. இந்த படத்தைத் தொடர்ந்து சிம்புவுடன் ‘மாநாடு' இருக்கிறது. கொஞ்சம் வேற மாதிரியான அரசியல் த்ரில்லர் படமாக இருக்கும். அடுத்த மாதம் இந்த படத்துடைய படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம்”
ரசிகர்களின் பெரும் எதிர்பபார்ப்பாக இருக்கும் மங்காத்தா2 பற்றி…
 
தலதான் அதை எப்போ பண்ணலாம் என்று சொல்ல வேண்டும். மங்காத்தா 2 பண்ணலாமா அல்லது வேற எதாவது பண்ணலாமா என்று. பொதுவாக பேசியிருக்கோம் என்ன நடக்க போகிறது என்று
விரைவில் சொல்கிறோம்”.ஜனநாயகத்தை காப்போம் என்கிற முழக்கத்தை முன்வைத்து படைப்பாளிகள், கலைஞர்கள் எங்கள் ஓட்டு பி.ஜே.பிக்குஅல்ல என்கிற முன்னெடுப்பை கையில் எடுத்திருக்கிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன…படைப்பாளிகளுக்கென்று ஒரு சுதந்திரம் இருக்கிறது அதற்கு பாதிப்பு ஏற்படும்போதும், படைப்புச்சுதந்திரம் பறிக்கப்படும்போதும் அந்த உரிமையை பெற போராட வேண்டிய சூழல் ஏற்படும் போது நிச்சயம் போராடத்தான் வேண்டும். எனக்கு பெரிய அளவில் அரசியல் புரிதல் இல்லை, நான் அரசியலை ஆழ்ந்து பின்பற்றுவதும் இல்லை. அரசியலைப்பற்றி நான் முழுமையாக கற்று தெளிந்தவனும் இல்லை... இதனால் இந்த முயற்சிக்கு நான் எதிரானவன், ஆதரவானவன் என எடுத்துக்கொள்ள வேண்டாம். சாதாரன குடிமகனாக இருந்து இதை பார்க்கும்போது எல்லா படைப்பாளிகளுக்கும் இது நல்ல விதமாக அமைய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை" என்றவரின் ஆரோக்கியமான உரையாடலில் இருந்து விடை பெற்றேன்…

Comments