Sarkar Movie Stills!!! சர்கார்!

















 
தாயம் உருட்டி விளையாடுவதற்கு சி.எம். நாற்காலி என்ன அதிர்ஷ்ட குலுக்கலா?’ என்று அங்கலாய்க்கிற அத்தனை அரசியல்வாதிகளுக்கும், நடுவில் எவன் நுழைந்தாலும் நடு மண்டை சுடுமல்லவா? அந்த அனலில் ஊற வைத்த ஆந்திரா கோங்குராதான் சர்கார்! விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு தெறிக்க தெறிக்க ஒரு வரவேற்பு வளைவே வைத்துவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய்யும் பத்து வருஷத்துக்கு தேவையான அரசியலை ஒரே படத்தில் பேசி உதற விட்டிருக்கிறார். இது ட்ரெய்னிங் புராஜக்டாங்ணா… ?
 
போகிற நாட்டிலெல்லாம் பொருளாதார படுகுழியை வெட்டிவிட்டுப் போகிற கார்ப்பரேட் கிரிமினல்தான் விஜய். தன் வோட்டை போடுவதற்காக அமெரிக்காவிலிருந்து கிளம்பிவரும் அவரை, இங்கிருக்கும் அரசியல்வாதிகள் தெரியாத்தனமாக சீண்டி வைக்க, ஆட்சியே அரோகராவாகிறது. அது எப்படிய்ய்ய்ய்ய்ய்ய்யா சாத்தியம் என்பதுதான் முழு படமும். ஒரு கார்ப்பரேட் மூளை எப்படியெல்லாம் யோசிக்கும்? எப்படியெல்லாம் ரூட் போடும்? யோசித்து யோசித்து காட்சி பின்னியிருக்கிறார் ஏ.ஆர்.முருதாஸ்.
 
தமிழக அரசியல் களத்தில் நேர்க்கோட்டில் பயணிக்கும் இந்தக்கதை, விஜய்யின் முந்தைய படங்களை போல கமர்ஷியல் மசாலாக்களை அரைத்து உடம்பெல்லாம் பூசிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. அதுவே இப்படத்தின் நடுநடுவே வரும் சின்ன சின்ன தொய்வுக்கு காரணமாக அமைந்தாலும், விஜய் என்கிற ஒன்மேன் ஆர்மியின் மிடுக்கும் துடுக்கும் ஆஹ்…ஹாவ்! அதுவும் தன் இரண்டு கைகளையும் பறவையின் சிறகு போல விரித்துக் கொண்டு அவர் என்ட்ரி கொடுக்கும் அந்த காட்சி கொள்ளை அழகு!
 
வருடத்திற்கு ஆயிரத்து எண்ணூறு கோடி சம்பாதிக்கும் விஜய், மெல்ல சாமானிய மக்களோடு கனெக்ட் ஆகிற காட்சிகள் அதிரடி! அயோத்திக் குப்பமே ஒன்று திரண்டு ‘போ போ…’ என்று விரட்டல் கோஷம் போட்டாலும், அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் மொத்த கூட்டத்தையும் தன் பக்கம் வளைக்கும் விஜய், அந்த நேரத்தில் சொல்லும் தக்காளிப்பழ லாஜிக்… செம! நடப்பு சி.எம். நடத்துகிற பொதுக்கூட்டத்தில் நுழைந்து, அவர் அருகிலேயே அமர்ந்து சவால் விடுகிற அந்த காட்சியெல்லாம் விஜய் ரசிகர்கள் விரல் வலிக்க விசில் குவிக்கும் நேரம்!
 
எல்லாம் சரி. அவர் சொல்லும் அந்த மீனவ பிளாஷ்பேக் சரியான பூ சுற்றல். அப்பா மீன் பிடிக்க போவாராம். ஆனால் விஜய்யின் அம்மா மட்டும் அமிதாப்பின் மருமகள் போல அத்தனை பாலீஷ்ஷாக இருப்பாங்களாம். போங்கய்யா….!
 
விஜய்க்கு ஜோடி கீர்த்தி சுரேஷ். ‘என் மேல் உங்களுக்கு ஈர்ப்பு இருக்கிறதா?’ என்று தூயத் தமிழில் கேட்டுவிட்டு ஒரு சில டூயட்டுகளுக்கு மட்டும் பயன்பட்டிருக்கிறார். மற்றபடி கீர்த்தியின் போர்ஷன் மொத்தமும் பழைய பேப்பருக்கு கூட ஈடாகாத பேரீச்சம் பழம்!
 
நம்பர் ஒன்னாக பழ.கருப்பையாவும், நம்பர் டூவாக ராதாரவியும். ‘பொடிப்பய…’ என்று அடிக்கடி சமாளித்துக் கொண்டாலும் விஜய்யின் தந்திரத்தின் முன் அத்தனையும் தவிடு பொடி ஆவதை ரசிக்க ரசிக்க செய்திருக்கிறார் ராதாரவி. பழ.கருப்பைய்யா தன் அலட்டிக் கொள்ளாத நடிப்பால் அசர வைக்கிறார். அதுவும் முதலமைச்சர் பதவியேற்கப் போகிற நேரம் பார்த்து அதை தட்டிவிடுகிற விஜய் மீது அவர் காட்டுகிற வெறுப்பும், நரிச்சிரிப்பும் லாவகக் கத்தி!
 
படம் முழுக்க காசுக்கு ஓட்டுபோட்ட மக்களை கண்டபடி ஏசிக் கொண்டேயிருக்கிறார்கள். டிக்கெட் காசையும் கொடுத்து திகட்ட திகட்ட திட்டும் வாங்க வேண்டியிருக்கே என்று திரைக்கு முன் உட்கார்ந்து நெளிகிறான் மிஸ்டர் வாக்காளன்.
 
ஜெ. இல்லாத தமிழக அரசியலுக்காக எத்தனை வருஷம் காத்திருந்தாரோ, இதுதான் சமயம் என்று ஒவ்வொரு சொல்லின் முனையிலும் லாடம் கட்டி அடிக்கிறார் விஜய். அதுவும் ஒரு மருத்துவமனைக்குள் நுழைந்து அங்கு படுத்திருக்கும் நோயாளிகள் குறித்து அவர் அடிக்கும் லெச்சர், உள் மனசுக் கடுப்பின் உரைப்புத் துவையல்! (அதற்காக கொசுக்கடிக்கெல்லாம் காரணம், பொதுப்பணித்துறை என்று அளந்துவிடுவதெல்லாம் அமெச்சூர்ங்ணா…)
ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், யோகிபாபுவை கொண்டாடுகிறது தியேட்டர். இன்னும் கொஞ்சம் வாய் பேச விட்டிருக்கலாமே முருகா?
 
விஜய் மாதிரியான மஹா கார்ப்பரேட் மூளையை, சற்றே உலரப் போட வருகிறார் வரலட்சுமி. ஒன்றிரண்டு தந்திரங்கள் பலித்தாலும், அதே தந்திரத்தில் அவர் சிக்கி சீரழிவது டபுள் ஸ்பீட் ஸ்கிரீன் ப்ளே! கொடுத்த வேடத்தை அப்பழுக்கில்லாமல் செய்து தந்திருக்கிறார் அவரும்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஒரு விரல் புரட்சி’ பாடலை மட்டும் திரும்ப திரும்ப கேட்கலாம். டூயட்டுகளில் நமைச்சல் இசைச்சல்… அல்லது இரைச்சல்!
 
அரசியல் விமர்சன படங்களுக்கு வசனங்கள் மட்டுமே உயிர் தொகை என்று உணர்ந்து அடித்திருக்கிறார் முருகதாஸ். ஒரு ஓட்டில் தலையெழுத்தே மாறிய சம்பவங்களை வரிசை படுத்தி வாசிக்கிற போது, ஒரு ஓட்டுதானே… என்கிற அலட்சியத்தை விரட்டி, விஜய்யின் ஆக்ஷன் எபிசோட்டை ரசிக்க தயாராக்கிவிடுகிறார் ரசிகனை. அதே போல, 49ஓ வை மட்டுமே அறிந்த சமானியர்களுக்கும், 49பி என்கிற சட்டத்தை அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
 
நாடு முழுக்க இருக்கிற விஜய் ரசிகர்களே… ப்ளீஸ் அலர்ட்! விஜய்யின் வேட்பாளர் லிஸ்ட்டில் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு நோ சீட்! அவருக்கு சகாயமும், பியூஷ் மானுஷும், சபரி மாலாக்களும் போதும்!
 
உங்களில் யார் சகாயம்? அது தெரிந்தவர்கள், விஜய்யின் அடுத்த ஆட்டத்துக்கு தயாராகலாம். மற்றவர்கள் காத்திருந்தால், தள்ளுபடி விலையில் சர்கார் டிக்கெட் கிடைக்கும். அதிகமில்லை ஜென்டில்மென். ரெண்டே நாள்தான்…!
வெறும் காபந்து சர்கார்!

Comments