ரஜினி-கமல் ரசிகர்கள் மோதும் ‘எங்கிட்ட மோதாதே’!!!

ஈரோஸ் இண்டர்நேஷனல் மற்றும் ஆர்.வி.பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘எங்கிட்ட மோதாதே’.
இந்தப் படத்தில் நட்டி நட்ராஜ், ராஜாஜி, விஜய் முருகன், சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கணேஷ் சந்த்ரா, இசை – நடராஜன் சங்கரன், படத் தொகுப்பு – அத்தியப்பன் சிவா, கலை – கே.ஆறுச்சாமி, பாடல்கள் – யுகபாரதி, நடனம் – சிவசங்கர், சண்டை பயிற்சி – மிராக்கிள் மைக்கேல், தயாரிப்பு மேற்பார்வை – கே.வி.சுப்ரமணி, தயாரிப்பு நிர்வாகம் – எம்.வி.ரமேஷ், பி.ஆர்.ஓ. – ரியாஸ் கே.அஹ்மத், டிசைனஸ் – விஜய். எழுத்து – இயக்கம் – ராமு செல்லப்பா.
 
இந்தப் படம் வரும் மார்ச் 10-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதற்காக படக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
 
அப்போது இயக்குநர் ராமு செல்லப்பா பேசும்போது, “இந்தப் படம் 1980-களில் நடக்கும் கதை. நாகர்கோவில், திருநெல்வேலி ஊர்களின் பின்னணியில் நடக்கும். காதல், கலகலப்பு என பொழுதுபோக்காக உருவாகியுள்ள படம் இது.
 
திரைப்படங்களுக்கு கட் அவுட் பேனர் வைக்கும் தொழில் செய்யும் நட்டி நட்ராஜ் தீவிரமான ரஜினி ரசிகர். இன்னொரு ஹீரோவான ராஜாஜி அதைவிட தீவிர கமல் ரசிகர். ராஜாஜியின் தங்கையான சஞ்சிதா ஷெட்டியை நட்ராஜ் காதலிக்கிறார். ராஜாஜியின் ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார்.
 
இயக்குநர் மகேந்திரன் ஸார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜானி படத்தை மனதில் வைத்துதான் இந்தப் படத்துக்கு ஆரம்பத்தில் ஜானி ஆர்ட்ஸ் என்றுதான் பெயர் வைத்திருந்தோம். அப்புறம் அதைவிடவும் கமர்ஷியலாக, கேட்சிங்கான தலைப்பு வேண்டும் என்று நினைத்தோம். அப்போது எங்களுடைய நினைவில் வந்தது இந்த ‘எங்கிட்ட மோதாதே’ டைட்டில்.
 
இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘ராஜாதிராஜா’ படத்தில் ரஜினி ஆடிப் பாடும் ஒரு பாடலான ‘எங்கிட்ட மோதாதே’ ரஜினி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற பாடல். இதனால் இதனையே வைத்தால் படத்தின் கதைக்குப் பொருத்தமாக இருக்குமே என்று நினைத்தோம்.
 
இதற்காக இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் ஸாரை நேரில் சந்தித்து கேட்டபோது எந்த பலனும் எதிர்பாராமல் உடனடியாக அனுமதி கொடுத்தார். அதனால் உற்சாகமாக இந்த்த் தலைப்பை வைத்துவிட்டோம்..” என்றார்.
 
“இந்தப் படத்தில் மிக ஜாலியான, இயல்பான கிராமத்து பெண்ணாக வருகிறேன். கேரக்டருக்காக என்னை கொஞ்சம் கருப்பா மாத்திட்டாங்க. ஆனால் ரொம்ப பிரைட்டான கேரக்டர்..” என்றார் நாயகி சஞ்சிதா ஷெட்டி.
 
ஹீரோவான நட்டி நட்ராஜ் பேசும்போது, “இந்தப் படம் ரஜினி-கமல் ரசிகர்களின் அன்றைய வாழ்க்கை போராட்டத்தைச் சொல்லும் படம். கதை சொன்ன நேர்த்தி, இயக்கம்.. என் கேரக்டர் ஸ்கெட்ச்.. எல்லாமே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ரசித்து நடித்திருக்கிறேன். நானும், ராதாரவி ஸாரும் வார்த்தைகளாலேயே மோதிக் கொள்ளும் ஒரு காட்சி படத்திற்கு மிக சுவையூட்டும் காட்சியாக இருக்கும். படத்தின் டர்னிங் பாயிண்ட்டே அதுதான் என்று சொல்லலாம். இது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் படமாக உருவாகியுள்ளது..” என்றார் சந்தோஷத்தோடு..!
 
படத்தினை தமிழகம் முழுவதும் கே.ஆர்.பிலிம்ஸ் சார்பில் கே.ஆர்.சரவணன் வெளியிடுகிறார்.

Comments