கெத்து: திரை விமர்சனம்!!!

Saturday, January 16, 2016
சென்னை: உதயநிதி, முதல் முறையாக சந்தானம் இல்லாமல் நடித்தது மற்றும் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்தது, ஆகியவற்றால் ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்போடு வெளியாகியிருக்கிறது ‘கெத்து’.
நூலகம் ஒன்றில் பணிபுரியும் உதயநிதியின், தந்தை சத்யராஜ் பள்ளி ஒன்றில் விளையாட்டுத் துறை ஆசிரியராக பணியாற்றுகிறார். பள்ளியின் எதிரே டாஸ்மாக் மதுபானக் கடை இருப்பதால், அங்கே செல்லும் குடிமகன்கள் போதையில் பள்ளி வளாகத்திற்குள் நுழைவதும், போதையில் விழுந்து கிடப்பதும் என்று இருப்பதால், அந்த மதுபானக் கடை குறித்து போலீஸில் சத்யராஜ் புகார் செய்கிறார். இதனால், அந்த டாஸ்மாக் பாருக்கு ஆபத்து ஏற்பட, பார் முதலாளியால் சத்யராஜுக்கு ஆபத்து வருகிறது.

அந்த ஆபத்தில் இருந்து தந்தையை உதயநிதி காப்பாற்ற, மறுநாள் பார் முதலாளி கொலை செய்யப்படுகிறார். அவருடன் மோதலில் ஈடுபட்ட சத்யராஜ், தான் அந்த கொலையை செய்தார் என்று அவரை போலீஸ் கைது செய்கிறது.
ஆனால், அந்த கொலையை சத்யராஜ் செய்யவில்லை என்பதற்கான ஆதாரம், உதயநிதியிடம் கிடைக்க, அதை வைத்து தனது போலீஸ் நண்பர் கருணாகரனுடன் இணைந்து அந்த குற்றவாளியை கண்டுபிடிக்க துப்புதுலக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார். இதற்கிடையில், உதயநிதி பணிபுரியும் நூலகம் மற்றும் ஆதரவற்றோர் சிறுவர்கள் இல்லத்தை நடத்தும் ராஜேஷ் கொலை செய்யப்பட, எதற்காக இந்த கொலைகள், யார் அந்த கொலையாளி என்று தேடிச் செல்லும் உதயநிதி அந்த கொலையாளியை பிடித்து, காரணத்தை தெரிந்துக்கொண்டாரா இல்லையா, என்பது தான் முடிவு.
க்ரைம் திரில்லர் பாணியில் உள்ள கதையை, காதல், ஆக்‌ஷன், குடும்ப டிராமா என்று கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் திருக்குமரன்.
முதல் முறையாக ஆக்‌ஷன் பக்கம் தாவியிருக்கும் உதயநிதிக்கு, முகத்தில் வளர்த்திருக்கும் தாடி மட்டும் தான் புது. மற்றபடி அனைத்துமே, அவருடைய முந்தைய படங்களில் நாம் பார்த்தது தான். நடனத்தில் ஒவ்வொரு படமாக தன்னை வளர்த்துக்கொண்ட உதய், தற்போது சண்டைக்காட்சிகளில் தன்னை வளர்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளார், என்பது அத்தனை ஆக்‌ஷன் காட்சிகளிலும் தெரிகிறது. எனினும், ஐம்பது அறுபது பேரை ஒட்டுமொத்தமாக அடித்து பீதியை கிளப்பாமல் அடக்கி வாசித்ததற்காக, அவருக்கு சல்யூட் அடிக்கலாம்.
நாயகி எமி ஜாக்சன், வெள்ளக்காரி போல இருக்கும் தமிழ் பெண்ணாக நடித்துள்ளார். அவரிடமும் ஏதாவது வித்தியாசத்தை காண்பிக்க வேண்டும் என்று இயக்குநர் உதட்டுக்கு மேலே மச்சம் ஒன்றை ஒட்டியுள்ளார். ஆனால், பாடல்களில் மட்டும் அந்த மச்சம் ஏன் மிஸ்ஸிங் என்று தான் புரியவில்லை.
’பாகுபலி’ அளவுக்கு சத்யராஜுக்கு பெயர் வாங்கிக்கொடுக்கும் கதாபாத்திரம் இந்த படத்தில் இல்லை என்றாலும், கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் தனது வேலையை முழுமையாக செய்திருக்கிறார். 
படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ராந்துக்கு படம் முழுவதும் வசனம் கிடையாது. அதேபோல அவருக்கு நடிக்கவும் வாய்ப்பு இல்லை. முறைப்பது, ஓடுவது என்பது தான் அவருடைய வேலை, அதை சரியாக செய்திருக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் அனைத்துமே சுமா ரகம் தான். அதிலும் அந்த கானா பாட்டை ஜீரனிக்கவே முடியல.
தயாரிப்பாளரும் இயக்குநரும் கொஞ்சம் அசந்தால் போதும் குமுளி, கம்பம் ஆகிய ஏரியாக்களுக்கு தள்ளிக்கொண்டு போய்விடுவார் ஒளிப்பதிவாளர் சுகுமார். அப்படி தான் இந்த படத்திலையும் செய்துள்ளார். சென்னை கதைக்களமாக இருந்தாலே பாடல்களுக்கு குமுளியை லொக்கேஷனாக தேர்வு செய்யும் சுகுமார், படம் முழுவதும் குமுளியில் நடந்தால் சும்மாவா இருப்பாரு, பாடல் காட்சிகளுக்காக பல மலைகளில் ஏறி இறங்கியிருக்கிறார். 
படத்தின் முதல் பாதியும், காதல் காட்சிகளும் படத்திற்கு ஸ்பீட் பிரேக்கராக உள்ளது. விக்ராந்தின் கதாபாத்திரம் எண்ட்ரியான பிறகு, படத்தில் சற்று சுவாரஸ்யம் அடைந்தாலும், விக்ராந்தை உதயநிதி கண்டுபிடிக்க மேற்கொள்ளும் முயற்சிகள்  அனைத்தும் சீரியல் போலவே இருப்பதால், விக்ராந்தின் கதாபாத்திரத்தின் மீதான ஈர்பு குறைந்துவிடுகிறது.
உதயநிதிக்கு ஏற்ற வகையில் ஒரு ஆக்‌ஷன் படமாக இப்படத்தை இயக்குநர் திருக்குமரன் இயக்கியிருக்கிறார். அதனால், ரவுடியினால் குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சினையை, அப்படியே துப்பரியும் கதையாக மாற்றியிருக்கிறார். இருப்பினும், இப்படத்தின் போஸ்டர்களில் இருந்த ஆக்‌ஷன் மூட் கூட, படத்தின் காட்சிகளில் இல்லை. 
மொத்தத்தில் உதயநிதிக்கான ஆக்‌ஷன் டெஸ்டிங்காக அமைந்துள்ள ‘கெத்து’ ரசிகர்களுக்கான ட்ரீட்டாக அமையவில்லை.

Comments