நடிகர், நடிகையர் சம்பளம் குறைக்கப்படுமா?!!!

Thursday, November 5, 2015
Chennai:தியேட்டர் கட்டணத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளதால், தமிழ்ப் படங்களின் தயாரிப்பு செலவை கட்டுப்படுத்த, தயாரிப்பாளர்கள் தரப்பில் முக்கிய முடிவு கள் எடுக்கப்பட உள்ளன.




தமிழகத்தில் ஆண்டுக்கு, 300 படங்கள் வெளியாகின்றன. கட்டுப் படுத்த முடியாத திருட்டு வி.சி.டி., பிரச்னையால், பல படங்கள் தோல்வியை தழுவுகின்றன. பெரிய நடிகர்களின் படங்கள் கூட, 100 நாளை தொட முடியாமல் போகிறது.
ஒரு படத்தின் தயாரிப்பு செலவு அதிகபட்சமாக, 100 கோடி ரூபாய் வரை செல்கிறது. நடிகர், நடிகையர் சம்பளம், ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால், படத்தின் வசூல் குறைந்தால், தயாரிப்பாளர், வினியோகஸ்தர் தான் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம், கேளிக்கை வரி விலக்கின் பலன், மக்களை சென்று அடையும் வகையில், சமீபத்தில் புதிய உத்தரவை பிறப்பித்தது.
அதன்படி, 120 ரூபாய் கட்டணம் வசூலித்த, 'மல்டி பிளக்ஸ்' தியேட்டர்களில், இனி, 85 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்க முடியும். தீபாவளிக்கு வெளியாக உள்ள படங்களுக்கு, அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க, கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக களமிறங்கி
உள்ளனர். இதனால், படங்கள் தோல்வியடைந்தால், முன் எப்போதும் இல்லாத வகையில், வினியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளருக்கு பெரும் இழப்பு ஏற்படும்.
படங்கள் தோல்வி அடைந்தால், தங்கள் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை நடிகர்கள் திருப்பித் தர, ஏற்கனவே தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு, அது நிலுவையில் உள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சிலர் கூறியதாவது:
பெரிய நடிகர்கள்,
10 - 30 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கு கின்றனர். சிரிப்பு நடிகர்கள் அவர்களுக்கு உள்ள வரவேற்புக்கு தக்கபடி, நாள் அடிப்படையில் சம்பளம் பெறுகின்றனர்.
ஒரு நாளுக்கு அதிகபட்சமாக, 2 லட்சம் ரூபாய் வரை வாங்குகின்றனர். முன்னணி நடிகையரும், ஒரு படத்திற்கு, 2 கோடி ரூபாய் வரை வாங்குகின்றனர்.
தமிழ் சினிமா இப்போது, நடிகர், நடிகையரை மட்டும் நம்பி இருக்காமல், நல்ல கதையம்சம் உள்ள படங்களை நோக்கி பயணிக்கத் துவங்கியுள்ளன. கும்கி, காஞ்சனா போன்று பல படங்கள் வசூலிலும் வெற்றியை கண்டுள்ளன. இனி, பெரிய பட்ஜெட் படங்கள் நஷ்டம் அடைந்தால், அதை நடிகர், நடிகையரின் சம்பளத்தில் சரி செய்யவும், மக்களை தியேட்டர்களுக்கு வரவழைக்கும் வகையிலும், திரைப்பட கூட்டுக் குழு அமைத்து திட்டம் வகுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments