எம்.எஸ்.வி. பாடல்களில் உள்ள இசை நுணுக்கங்களை வெளிப்படுத்துவேன்: இசை நிகழ்ச்சி பற்றி இளையராஜா!!!

21st of July 2015
சென்னை:மறைந்த ‘மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதனின் நினைவைப் போற்றும் வகையில், இசையமைப்பாளர் இளையராஜா தலைமையில் சென்னையில் வருகிற 27-ம் தேதி இசை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
 
சென்னை காமராஜர் அரங்கத்தில் திங்கள்கிழமை (ஜூலை 27) மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த இசை அஞ்சலி நிகழ்ச்சியில், இளையராஜாவின் குழுவினர், எம்.எஸ்.விஸ்வநாதனின் சாகாவரம் பெற்ற பாடல்களை இசைத்துப் பாடுகிறார்கள்.
 
எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைக் குழுவில் பணிபுரிந்த பல்வேறு இசைக் கலைஞர்களும் இதில் கலந்துகொண்டு அவருக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். பின்னணிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி, சித்ரா உள்ளிட்டோரும், இளம் தலைமுறைப் பாடகர்களும் பங்கேற்று எம்.எஸ்.விஸ்வநாதனின் அழியாப் புகழ்பெற்ற பாடல்களைப் பாடவுள்ளார்கள். சுமார் 3 மணி நேரம் நடைபெற உள்ள இந்த இசை அஞ்சலியில் 25 பாடல்கள் அரங்கேறவுள்ளன. இந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகை கடந்த சில நாள்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது.
 
இந்த நிகழ்ச்சி பற்றி இளையரஜா கூறும்போது,
‘திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணனின் இசைத்திறமையும், ஆளுமையும் அனைவரும் அறிந்ததே. அவரின் இந்த இசை நுணுக்கங்களை நான் அறிந்த அளவுக்கு வேறு யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் இந்த இசை நுணுக்கங்களையெல்லாம் எல்லோருக்கும் வெளிப்படுத்த உள்ளேன். எவ்வளவு பெரிய உயர்வான விஷயங்களை எப்படி சர்வசாதாரணமாக செய்து காட்டியிருக்கிறார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தப் போகிறேன். இசையில் ஒவ்வொருவருடைய கற்பனையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். நம் உயிரை  எங்கோ அழைத்துச்செல்கின்ற உணர்வைக் கொண்டுவருவது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. இதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன்.
 
இதை மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். அவர் உடலை விட்டு உயிர் பிரிந்து சென்றாலும் அவர் என்றும் மறையாத நித்ய சொரூபர். எம்.எஸ்.வி.யின் இசைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும்.’” என்றார்.
இந்த இசை நிகழ்ச்சி, ஜீவா - இளையராஜா கல்வி அறக்கட்டளை சார்பாக நடத்தப்படுகிறது.

Comments