இது என்ன மாயம் - விமர்சனம்!!!

31st of July 2015
சென்னை:விக்ரம் பிரபுவின் 6வது படம். இயக்குனர் விஜய்யின் 8வது படம். இருவரும் இணைந்து மாயம் செய்திருக்கிறார்களா?

கதைக்களம்

விக்ரம் பிரபுவும் அவரது நண்பர்கள் ஆர்.ஜே.பாலாஜி, பாலாஜி வேணுகோபால் உள்ளிட்ட நண்பர்களும் மேடை நாடக நடிகர்கள். நாடகத்தின் மீது மக்களுக்கு ஆர்வமில்லாததால், நிஜ வாழ்க்கையில் காதலுக்கு உதவுவதற்கு நாடக யுக்தியைப் பயன்படுத்துகிறார்கள். அந்த டெக்னிக் நன்றாக வேலை செய்யத் துவங்க, பல காதலர்கள் தாங்கள் விரும்பும் பெண்ணின் விவரங்களோடு விக்ரம் பிரபுவின் குழுவை நாடுகிறது.

 
அதில் பணக்காரரான நவ்தீப்பும் ஒருவர். தான் காதலிக்கும் பெண்ணான கீர்த்தி சுரேஷின் விவரத்தை விக்ரம் பிரபுவிடம் கூறி, தன்மேல் கீர்த்தி சுரேஷிற்கு காதல் வரும்படி செய்யக் கேட்கிறார் நவ்தீப். ஆனால், நவ்தீப் விரும்பும் அந்தப் பெண் தன் முன்னாள் காதலி என்பது தெரிந்ததும் அதிர்ச்சியாகிறார் விக்ரம் பிரபு. கீர்த்தியும், விக்ரம் பிரபுவின் ஃப்ளாஷ்பேக் என்ன? ஏன் பிரிந்தார்கள்? நவ்தீப், கீர்த்தியின் காதலுக்கு விக்ரம் பிரபு உதவினாரா? இல்லையா? என்பன போன்ற கேள்விக்கு விடையளிக்கிறது ‘இது என்ன மாயம்’ படத்தின் இரண்டாம்பாதி.

படம் பற்றிய அலசல்

ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் காதல் வருவது... பின் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு சம்பவத்தால் பிரிந்து போவது, பின்னர் தங்களுக்குள் இருக்கும் காதலை ஒருவருக்கொருவர் வெளிக்காட்டாமல் மனதிற்குள்ளேயே விரும்புவது என காலம் காலமாக தமிழ்சினிமாவில் சொல்லிவரும் அதே கதையைத்தான் இயக்குனர் விஜய்யும் இப்படத்தில் காட்டியிருக்கிறார். ஆனால், அதில் கொஞ்சம் வித்தியாசமாக, இன்றைய டிரென்ட்டுக்குத் தகுந்தபடி காதலுக்கு உதவும் மேடை நாடக யுக்தி என்பது மட்டும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

படத்தின் ஆரம்பத்திலேயே நாடக மேடை யுக்தியை காதலுக்குப் பயன்படுத்தும் சுவாரஸ்ய காட்சிகள் அறிமுகமாகிவிடுவதால் ரசிகர்களை உடனடி திரைக்குள் இழுத்துவிடுகிறார் இயக்குனர். ஆனால், விக்ரம் பிரபுவுக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் ‘லவ்’ வரும் காட்சிகளெல்லாம் ரொம்பவும் ‘க்ளிஷே’வாக இருக்கிறது. தவிர, விக்ரம் பிரபுவும், கீர்த்தியும் பிரிவதற்கான காரணமும் ‘சொத்தை’யாக இருக்கிறது. முதல்பாதியில் இருந்த வேகமும், விறுவிறுப்பும் இரண்டாம்பாதியில் படிப்படியாக குறைந்து போவதும், க்ளைமேக்ஸ் எதிர்பார்த்தபடியே அமைந்துவிடுவதும் படத்திற்கு பலவீனங்களாக அமைந்துவிட்டன.

டெக்னிக்கலாக இப்படம் ஒரு தரமான உழைப்பை வழங்கியிருப்பதை நிச்சயம் பாராட்ட வேண்டும். குறிப்பாக நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு. உண்மையிலேயே மாயம் செய்திருக்கிறார். ஜி.வி.யின் பாடல்கள் கதை ஓட்டத்திற்கு கொஞ்சம் தடையாக இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணியில் ‘ரொமான்ஸ்’ படத்திற்குரிய டச் கொடுத்திருக்கிறார் ஜி.வி. எடிட்டிங்கும் ஓ.கே.

நடிகர்களின் பங்களிப்பு

படத்திற்குப் படம் விக்ரம் பிரபுவின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. தனக்கென ஒரு பாணியை வைத்துக் கொண்டு அதில் யதார்த்தமாக நடிக்கத் துவங்கிவிட்டார். இப்படத்தில் ரொமான்ஸிலும் அசத்தியிருக்கிறார் ‘இளைய திலக’த்தின் மகன். புதுமுகம் கீர்த்தி சுரேஷ் பல ஆங்கிள்களில் அழகாகவும், ஒரு சில ஆங்கிள்களில் சுமாராகவும் இருக்கிறார். நடிப்பில் முதல் படத்திலேயே பாஸ் மார்க்கைத் தாண்டிவிட்டார். கண்டிப்பாக ஒரு ரவுண்ட் வருவார். அப்பாவி பணக்காரர் வேடத்திற்கு பொருத்தமாக இருக்கிறார் நவ்தீப். நடிப்பதற்கு பெரிய வேலையில்லை. விக்ரம் பிரபுவின் நண்பர்களாக வரும் ஆர்.ஜே. பாலாஜி, பாலாஜி வேணுகோபால் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள். கிடைத்த இரண்டு காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள் நாசரும், அம்பிகாவும்.

பலம்

1. காதலுக்கு உதவும் நாடக யுக்தியை காமெடியும், சுவாரஸ்யமும் கலந்து சொல்லியிருக்கும் விதம்.
2. விறுவிறுப்பான படத்தின் முதல்பாதி.
3. டெக்னிக்கல் விஷயங்கள்.

பலவீனம்

1. மெதுவாக நகரும் இரண்டாம்பாதியும், எதிர்பார்த்த க்ளைமேக்ஸும்.
2. காதலர்களின் பிரிவுக்கான காரணத்தில் அழுத்தமில்லாமல் இருப்பது.
3. படத்தில் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘க்ளிஷே’ காட்சிகள்.

மொத்தத்தில்...

ஒரு சுவாரஸ்யமான, தரமான ரொமான்ஸ் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விஜய். அதற்காக புதிய ஐடியா ஒன்றை கையிலெடுத்த இயக்குனர், திரைக்கதையால் முழுப்படத்திற்கும் ரசிகர்களைக் கட்டிப்போடும் மாய வித்தையை செய்யத் தவறிவிட்டார். டெக்னிக்கலாக மேஜிக் செய்திருக்கும் இப்படம், முழுவதுமாக ரசிகர்களை மெய்மறக்க வைக்கத் தவறிவிட்டது.

ஒரு வரி பஞ்ச் : இன்னும் மாயம் செய்திருக்கலாம்!

Comments