மாரி விமர்சனம்: இறங்கி ஆட்டம் போட்டு பாட்டு பாடி ரசித்து விட்டு வரலாம்!!!

17th of July 2015
சென்னை:மாரி தனுஷ், காஜர் அகர்வால் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் அனிரூத் வெற்றி கூட்டணியில் வெளிவந்திருக்கும் படம். தர லோக்கல் என்று சொல்கிற அளவுக்கு சி கிளாஸ் ரசிகர்களை குஷிபடுத்துவதற்காகவே வந்துள்ள படம் போல் இது தோன்றுகிறது.
 
தனுஷின் லோக்கல் தாதா கேரக்டர் ஆகட்டும், முறுக்கு மீசை ஆகட்டும், கருப்பு கண்ணாடி என ஒரிஜினல் தாதாக்களையே மிஞ்சுகிறது அவரின் ஒப்பனை.

சென்னையில் குடிசை பகுதியில் வசித்து வருகிறார் மாரி (தனுஷ்) புறாக்களை வளர்ப்பதன் மீது அக்கறை காட்ட பின்பு அந்த புறாக்களுக்காகவே அடிமையாகி விடுகிறார். விதவிதமான புறாக்களை வாங்கி வளர்த்து சந்தோஷப்படுகிறார்.

இந்நிலையில் ஒரு புறா பந்தயத்தில் ஒரு கும்பலுடன் மோத பிரச்னை பெரிதாகிறது. லோக்கல் போலீஸ் ரவுடி கும்பலுக்கு சல்யூட் அடிக்க அனைத்து திசைகளிலும் தனுஷை அடக்க நினைக்கிறார்கள்.

அவர்களுடைய அந்த திட்டங்களில் இருந்து தனுஷ் எப்படி மீள்கிறார் என்பதை காமெடியும் கெத்துமாக படத்தின் மீதிக்கதை. இதற்கிடையில் காஜல் அகர்வாலின் காதலும் தனுஷை துரத்துகிறது.

தனுஷ் வழக்கம் போல் நம்ம வீட்டு பையன் போல உடுப்பு நடிப்பு எல்லாம். அவர் பேசும் தோரணை ஆகட்டும், நடக்கும் தோரணை ஆகட்டும் அத்தனையும் அவ்வளவு அழகு. படத்தை தான் ஒருவராக முழுவதும் சுமந்து இருக்கிறார்.

காஜர் அகர்வால் வழக்கம் போல நடிப்பு கம்மி தான். மாடர்ன் ஆடைகளில் பார்த்த இவரை நம்ம ஊர் தாவணி சட்டையில் பார்ப்பது மனதிற்கு ஆறுதல். லோக்கல் போலீஸ் அருண்குமாராக விஜய் ஏசுதாஸ். அந்த அளவிற்கு போலீஸ் உடுப்பு இவருக்கு பொருந்தவில்லை.

தனுஷிற்கு அடுத்து படத்தின் மிகப்பெரிய பலம் அனிரூத்தின் பின்னணி இசை. ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பின்னணி இசைக்கும் ரசிகர்களின் கை தட்டல் நம் காதுகளை பிளக்கிறது என்றால் அது மிகையல்ல.

ரோபோ சங்கர் வழக்கம் போல் தனது இயல்பான காமெடியை படம் முழுக்க கொடுத்து இருக்கிறார். இவர் செய்யும் ஒவ்வொரு காமெடிக்கும் சிரிப்பலை அடங்குவதற்கு வெகு நேரம் ஆகிறது.
படத்தின் அநேக இடங்கள் ஆடுகளத்தை நினைவு படுத்த தவறவில்லை.
 
மொத்தத்தில் கருத்து, கதை இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இறங்கி ஆட்டம் போட்டு பாட்டு பாடி ரசித்து விட்டு வரலாம் இந்த மாரியை!

Comments