பிளாக் பஸ்டர்களும் சூப்பர்ஹிட்டுகளும் ; 2௦14ன் டாப் 1௦ படங்கள்!!!

1st of January 2015
சென்னை:கிட்டத்தட்ட 2௦௦ படங்களுக்கு மேல் வெளியாகி ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது 2௦14 தமிழ் சினிமா..! வழக்கம்போல இந்த வருடத்திலும் சில படங்களே கதையம்சம், வசூல், நல்ல பெயர் என்கிற வகையில் கவனம் ஈர்த்தன. எண்ணிக்கையில் பல படங்கள் ஹிட் என தயாரிப்பாளர்களாலும் இயக்குனர்களாலும் சொல்லப்பட்டது.
 
ஆனால் நமது behind frames, வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்தும், மார்க்கெட்டிங் துறையில் இருந்தும் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும் சிறந்த விமர்சனங்ககளை பெற்ற படங்கள் என்கிற வகையிலும் முதல் பத்து இடங்களை பிடித்த படங்களை இங்கே பட்டியலிட்டு இருக்கிறது.

1. கத்தி – விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் என்கிற துப்பாக்கி வெற்றிக்கூட்டணியின் அடுத்த படைப்பு என்கிற எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப்படம் தயாரிப்பு நிறுவனம், கதை என பல சர்சைகளில் சிக்கினாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது.
ரிசல்ட் : பிளாக் பஸ்டர்
 
2. வேலையில்லா பட்டதாரி – அம்மா சென்டிமென்ட்டை மையமாக வைத்து, வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனையை புதிய கோணத்தில் அணுகியிருந்த இந்தப்படம் ஒரு நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தனுஷுக்கு வெற்றியை கொடுத்தது. அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் இவர்களுடன் அனிருத்தின் இசையும் சீரான திரைக்கதையும் வெற்றிக்கு வித்திட்டது.
ரிசல்ட் : பிளாக் பஸ்டர்
 
3. மான் கராத்தே : சிவகார்த்திகேயன் நடிப்பில் சம்மர் ட்ரீட்டாக வெளியான ‘மான் கராத்தே’  ஒரு ஹீரோவாக அவரை இன்னும் ஒருபடி உயர்த்தியுள்ளது.. கிட்டத்தட்ட 11கோடி பட்ஜெட்டில் தயாரகி 3௦கோடிக்கு வியாபாரமாக்கிய இந்தப்படம் அதில் வெறும் 2கோடி ரூபாய் என்கிற சிறிய நட்டத்தையும் மிகப்பெரிய லாபத்தையும் சம்பாதித்தது. ஏ.ஆர். முருகதாஸின் கதைக்கு, நேர்த்தியாக திரைக்கதை அமைத்து இயக்கியிருந்தார் இயக்குனர் திருக்குமரன். சிவகார்த்திகேயனின் காமெடியும் அனிருத்தின் பாடல்களும் சுட்டீஸ்களை ரொம்பவே கவர்ந்ததால் படம் ஐம்பது நாட்களை எளிதாக தாண்டியது.
ரிசல்ட் : சூப்பர்ஹிட்
 
4. மஞ்சப்பை : ராஜ்கிரணையும் விமலையும் வைத்து தாத்தா, பேரன் என புது கதைக்களத்தில் படத்தை இயக்கியிருந்தார் அறிமுக இயக்குனர் ராகவன். இந்தப்படத்தை திருப்பதி பிரதர்ஸும் சற்குணம் சினிமாஸும்.இணைந்து தயாரித்திருந்தன. இந்தப்படம் ரிலீஸான அன்றே கிட்டத்தட்ட ‘கோச்சடையான்’ படம் ரிலீஸான அன்று எவ்வளவு வசூலித்ததோ அதில் 70 சதவீதத்தை தொட்டு வினியோகஸ்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ரிசல்ட் : சூப்பர்ஹிட்
 
5. அரண்மனை : முதன்முறையாக தனது நகைச்சுவை ரூட்டிலிருந்து விலகி, பேய்க்கதைக்குள் அடியெடுத்து வைத்த இயக்குனர் சுந்தர்.சிக்கு பேமிலி ஆடியன்ஸ் கூட்டமாக வந்து ஆதரவுக்கரம் நீட்டினர்.  வினய், சந்தானம், ஹன்சிகா, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா என கலர்கலரான நட்சத்திர பட்டாளத்துடன் இந்த ‘அரண்மனை’யை 50% திகில், 50% காமெடி என சரிவிகிதமாக பிரித்திருந்தார் சுந்தர்.சி.
ரிசல்ட் : ஹிட்
 
6. முண்டாசுப்பட்டி : கேமராவினால் படம்பிடித்தால் இறந்துவிடுவோம் என்கிற வித்தியாசமான மூட நம்பிக்கையை வைத்து ஒரு அருமையான காமெடிப்படமாக வெளியான முண்டாசுப்பட்டிக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுத்தனர். ராம்குமார் இயக்கி விஷ்ணு, நந்திதா, காளிவேங்கட், ராமதாஸ் நடிப்பில் சி.வி.குமார் தயாரித்த இந்தப்படம்கிட்டத்தட்ட பத்து கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.
ரிசல்ட் : ஹிட்
 
7. சதுரங்க வேட்டை : நாம் அடிக்கடி செய்திகளில் படிக்கும் நான்கு சீட்டிங் விஷயங்களை கையில் எடுத்து அந்த நான்கிற்கும்  முடிச்சுப்போட்டு சுவராஸ்யமாக ‘சதுரங்க வேட்டை’ ஆடியிருந்தார் அறிமுக இயக்குனர் வினோத். ‘நாளை’ நட்டி நடிப்பில் புகுந்து விளையாடி இருந்தார். இயக்குனராக வினோத்திற்கும் தயாரிப்பாளராக மனோபாலாவுக்கும் இது அறிமுக வெற்றியாகவும், இதனை வெளியிட்ட திருப்பதி பிரதர்சுக்கு இந்த வருடத்தின் ஹாட்ரிக் வெற்றியாகவும் இந்தப்படம் அமைந்தது..
ரிசல்ட் : ஹிட்
 
8. யாமிருக்க பயமே : சாதாரண படம் என்கிற அளவில் மட்டுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியான ‘யாமிருக்க பயமே’ படம் இந்தவருடத்தின் மிகச்சிறந்த வெற்றிப்படங்களில் ஒன்றாக அது அமைந்துவிட்டது. கிருஷ்ணா, கருணாகரன், ஓவியா, ரூபா மஞ்சரி ஆகியோர் நடித்திருந்த இந்தப்படம் ஹாரர், காமெடி இரண்டும் கலந்த காமெடி த்ரில்லர் கையில் இடம்பிடித்தது. பயமுறுத்துவதையும் அதன் மூலம் சிரிக்கவைப்பதையும் கவனத்தில் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் டி.கே.
ரிசல்ட் : ஹிட்
 
9. கோலி சோடா : துவண்டு கிடந்த சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு புத்துணர்வு டானிக் தந்த படம்தான் ‘கோலி சோடா’.  ஒளிப்பதிவாளராக இருந்து ஒரு இயக்குனராக மாறிய விஜய் மில்டனுக்கு இது மிகப்பெரிய அங்கீகாரம். படத்தின் குழந்தை நட்சத்திரங்கள் முதல் வில்லன்களாக நடித்த அனைவருக்கும், இதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த வெற்றியில் சம பங்கு உண்டு.இந்தப்படத்தின் மீது நம்பிக்கை வைத்து இதனை வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தான் முதல் பாராட்டை பெறுகிறது.
ரிசல்ட் : ஹிட்
 
1௦. நாய்கள் ஜாக்கிரதை : தனது  நாலு வருட காத்திருப்பு வீண்போகாதவாறு ‘நாய்கள் ஜாக்கிரதை’ மூலமாக ஒரு நடிகராக மட்டுமின்றி, ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றிவாகை சூடியிருக்கிறார் சிபிராஜ். படத்தில் இரண்டாவது ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு சுப்பிரமணி கேரக்டரில் நடித்திருந்த ‘பெல்ஜியம் ஷெப்பர்டு’ நாய் சிபியை காப்பாற்றி கரையும் சேர்த்தது. “அப்பா டாக்கியை பாக்க இன்னொருக்கா போலாம்பா” என குட்டீஸ்கள் பல இடங்களில் மீண்டும் அப்பாக்களின் கையை பிடித்து இழுக்க, படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா கூட்டம் தான்.. ஆரம்ப கட்ட வரவேற்பை வைத்து சுமார் எட்டு கோடிகளை தொடும் என எதிர்பார்த்த படம், 11 கோடியையும் தாண்டியது..
ரிசல்ட் : ஹிட்

Comments