வெள்ளக்கார துரை - விமர்சனம்: சிரிப்பு துரை இந்த வெள்ளக்கார துரை!!!

27th of December 2014
சென்னை:ரியல் எஸ்டேட் தொழில், வட்டித் தொழில் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் காமெடி படம் ‘வெள்ளக்கார துரை’.
ஜான் விஜய்யிடம் வட்டிக்கு 15 லட்சம் ரூபாய் கடன் பெற்று, ஒரு இடத்தை வாங்கி சொந்தமாக ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பிக்கிறார் சூரி.

அதற்கு நண்பர் விக்ரம் பிரபுவும் உதவியாக இருக்கிறார். சூரியின் மொத்த நிலத்தையும் பெரிய ஒரு தொகைக்கு வாங்க ஒருவர் முன்வரும் நிலையில் அந்த நிலம் சுடுகாடு என்று தெரிய வருகிறது!
ஜான்விஜய்க்கு பணத்தை திருப்பி கொடுக்காத நிலையில் அவர் சூரியையும், விக்ரம் பிரபுவையும் கடத்தி தன் பண்ணை வீட்டில் அடிமைப்படுத்தி வைக்கிறார்.


ஜான்விஜய்யின் வீட்டில் இருக்கும் ஸ்ரீதிவ்யா மீது விக்ரம் பிரபுவுக்கு காதல் வருகிறது. அவரை ஜான்விஜய்யின் தங்கை என்று தப்பாக நினைக்கும் விக்ரம் பிரபு, திடீரென்று ஜான்விஜய்க்கும், ஸ்ரீதிவ்யாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடப்பதை பார்த்து அதிர்ந்துபோகிறார்.

நிச்சயதார்த்தம் முடிந்த இரவே வீட்டை விட்டு ஓடுகிறார் ஸ்ரீதிவ்யா. அவரது பின்னால் விக்ரம் பிரபுவும் செல்கிறார்! இந்நிலையில் விக்ரம் பிரபுதான் ஸ்ரீதிவ்யாவை கடத்திச் சென்றார் என்று நினைக்கும் ஜான்விஜய், விக்ரம் பிரபுவை தேடி கண்டு பிடித்து அவரை அடித்து உதைத்து ஸ்ரீதிவ்யாவை மீட்டு வந்து திருமணம் செய்ய முயற்சிக்கிறார்.

அதன் பிறகு நடக்கும் களேபரங்களும், திருப்பங்களும், கடைசியில் ஸ்ரீதிவ்யா யாருக்கு சொந்தமாகிறார் என்பதும்தான் ‘வெள்ளக்கார துரை’.

படம் பார்க்க வருபவர்களை இரண்டு மணி நேரம் சிரிக்க வைத்தால் போதும், லாஜிக்கை பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்ற முடிவோடு இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் எழில்! அதில் அவர் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளார் எனலாம்.

படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு கேரக்டருக்கு இணையாக படம் முழுக்க வரும் சூரியின் கேரக்டரை பெரிதும் நம்பியை ‘வெள்ளக்கார துரை’யை களமிறக்கியிருக்கிறார் எழில்! அழதப்பரசான கதை, காட்சி அமைப்புகள் என்றாலும் கதையில் எழில் வைத்துள்ள சில ட்விஸ்ட்கள் படத்தை போரடிக்காமல் கொண்டு செல்ல உதவியிருக்கிறது.

அத்துடன் டி.இமானின் இசையில் அமைந்துள்ள நான்கு பாடல்களும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
இதுவரை ஆக்ஷன் கேரக்டர்களை செய்து வந்த விக்ரம் பிரபு இதில் காமெடி கேரக்டரை கையாண்டிருக்கிறார். தனக்கு காமெடியும் வரும் என்பதை சூரியுடன் இணைந்து சில காட்சிகளில் நிரூபித்துள்ள விக்ரம் பிரபு, ஆக்ஷனிலும், நடன காட்சிகளிலும் குறை வைக்கவில்லை!

வில்லேஜ் கேரக்டருக்கு ரொம்பவும் பொருந்தியிருக்கிறர் ஸ்ரீதிவ்யா! ‘ஊரு நல்லா இருக்கணும்னு அப்பா கஷ்டப்பட்டார்! ஆனால் அவரை காப்பாற்ற யாரும் வரவில்லை’ என்று கண்கலங்கும்போதாகட்டும், ‘நேற்று எனக்கு ‘வட்டி’யுடன் (ஜான் விஜய்) நிச்சயதார்த்தம், இன்று உன்னுடன் முதலிரவு’ என்று விக்ரம் பிரபுவிடம் குறும்புத்தனமாக வசனம் பேசும் இந்த இரண்டு காட்சிகள் போதும் ஸ்ரீதிவ்யா நடிப்பை பட்டியலிட!

கலகலப்பான கதையோட்டத்திற்கு வலு சேர்த்திருப்பது சூரியோட கேரக்டர்தான்! அடி வாங்குவது, அடிப்பது, பஞ்சு வசனம் பேசுவது என படம் முழுக்க காமெடி தர்பார் நடத்துகிறார் சூரி! ஜான்விஜய் வில்லத்தனம், காமெடி என இரண்டு விதமான நடிப்பிலும் தன்னுடைய கேரக்டரை சிறப்பித்துள்ளார். சிங்கமுத்து, பாவா லட்சுமணன், மனோபாலா, சிங்கம் புலி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் முதலானோரும் சிரிக்க வைக்கிறார்கள்.
 
லாஜிக் பற்றி கவலைப்படாமல் இரண்டு மணிநேரம் சிரித்துவிட்டு வர நினைப்பவர்கள் இந்த ‘வெள்ளக்கார துரை’யை பார்க்கலாம்.

Comments