ஃபேஸ்புக் கணக்குகளை முடக்கும் ரஜினி ரசிகர்கள்!!!!

19th of December 2014
சென்னை:லிங்கா திரைப்படம் குறித்து விமர்சிப்பவர்களின் ஃபேஸ்புக் கணக்கை முடக்கும் செயலில் ரஜினி ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 
சமீபத்தில் வெளியான லிங்கா திரைப்படம் குறித்து ஃபேஸ்புக்கில் ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் அதிகப்படியான மக்களால் பின்தொடரப்படும் (Followers) கார்டூனிஸ்ட் பாலா, மற்றும் தமிழ் ஸ்டுடியோஸ் அருண் ஆகியோர் லிங்கா திரைப்படத்திற்கு எதிராக விமர்சனங்களை எழுதியதால்  ரஜினி ரசிகர்கள் ஃபேஸ்புக் நிர்வாகத்திற்கு புகார் அளித்து அவர்களது கணக்குகள் முடக்கியுள்ளனர்.
 
இதுகுறித்து தமிழ் ஸ்டுடியோஸ் அருண் கருத்து தெரிவிக்கையில், “என்னுடைய விமர்சனங்கள், கருத்துகள் யாவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. நண்பர்கள் அதன் மீது ஒரு விவாதத்தை முன்னெடுக்கலாம். அல்லது அது சார்ந்த விடயங்களை, விவாதங்களை உருவாக்கலாம். என்னுடைய கருத்துகளை எத்தனை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் மிக மோசமாக ஆபாசமாக எழுதுவது, உள்பெட்டிக்கு தகவல் அனுப்புவது, அலைபேசியில் அழைத்து மிரட்டுவது, நேரில் பார்க்கும்போது மிரட்டும் தொனியில் நடந்துக்கொள்வது போன்ற செயல்களையெல்லாம் அனுமதிக்க முடியாது.
 
நண்பர்களுடன் இதுப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது உடனே சைபர் க்ரைமில் ஒரு புகார் பதிவு செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். பல வெளிநாடு வாழ் நண்பர்களும் இதனையே அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை. கருத்து மாறுபாட்டின் காரணமாக நீங்கள் என்னை எதிர்க்கலாம். ஆனால் கொலை மிரட்டல், குரோதம், நேரில் பார்த்தால் தாக்கிவிடும் எண்ணம் இதையெல்லாம் அழித்துவிடுங்கள். இது அப்படியே தொடருமானால், நண்பர்கள் அறிவுரைப்படியே சைபர் க்ரைம் தான் செல்ல வேண்டும்.
 
ரசிக மனோபாவம், தனிமனித துதிபாடலில் திளைத்திருக்கும் நண்பர்கள்தான் இப்படி அருவருக்கத்தக்க வகையில் நடந்துக்கொள்கிறார்கள். இந்த மாதிரியான சமயங்களில்தான், இன்னும் காத்திரமாக எப்படி செயல்பட வேண்டும் என்கிற தெளிவு எனக்கு ஏற்படுகிறது. தனிமனித துதிபாடலும், ரசிக மனோபாவமும் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டிய வஸ்துக்கலாக இருக்கிறது”என்றவர் தெரிவித்தார்.
 
மேலும், ரஜினி ரசிகர்களின் இந்த செயல்கள் கருத்துரிமையை பறிக்கும் செயலாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Comments