12வது சென்னை திரைப்பட விழா : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்!!!

19th of December 2014
சென்னை:12வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று செனனி, உட்லண்ட்ஸ் திரையரங்கில் தொடங்கியது. இதில் தமிழக செய்தி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:


பொழுது போக்குகளின் ராணியாகவும், புதுமைப்படைப்புகளின் திலகமாகவும், புரட்சிகளக்கு வித்திடும் களமாகவும், விளங்குவது திரைப்படம். புகழின் உச்சிக்கு சிலரைக் கொண்டு செல்லும் ஏணியாகவும், அதேநேரம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை வாழவைக்கும் வாழ்வாதாரமாகி, அவர்களின் வாழ்க்கைக கடலை கடக்க உதவும் தோணியாகவும், திகழ்வது திரைப்படத் துறை.

தமிழ்த் திரைப்பட படைப்பாளிகளும், வல்லுநர்களும், திரைத்துறையின் பல பிரிவுகளிலும், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களும், தலைசிறந்த உலகத் திரைப்படங்களை இங்கிருந்தே கண்டு, அதன் சிறப்புகளை உள்வாங்கி, தமிழ்த் திரையுலகை மேம்படுத்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் தான், ஆண்டு தோறும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்திட அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்.

சர்வதேச திரைப்பட விழா நடத்த, 2011ஆம் ஆண்டில் 25 லட்சம் ரூபாயும், 2012ஆம் ஆண்டில்  50 லட்சம் ரூபாயும், 2013ஆம் ஆண்டில் 50 லட்சம் ரூபாயும், அன்றையதினம் முதல்வராக இருந்த ஜெயலலிதா மானியமாக வழங்கினார். அதேபோல் இந்த ஆண்டும், அதாவது 2014ஆம் ஆண்டு டிசம்பர் 18 முதல் 25 வரை சர்வதேச திரைப்பட விழா நடத்த அரசு ரூபாய் 50 லட்சம் மானியமாக வழங்கியுள்ளது.

இவ்வாண்டு நடைபெறும், சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பிரான்ஸ், பல்கேரியா, உறங்கேரி, ஜெர்மனி, ஈரான், ஆஸ்திரேலியா, பிரேசில், போலந்து  முதலான 45 நாடுகளை சேர்ந்த 171 படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில், கேன்ஸ், வெனிஸ், பெர்லின் திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுபெற்ற படங்களும் அடங்கும். மேலும் 17 தமிழ்த் திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன.

இந்த 12வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பயின்று வரும் மாணவர்களால் எடுக்கப்பட்ட ஐந்து படங்கள் திரையிடப்பட உள்ளன. அதில் முதலாவதாக தேர்வு செய்யப்படும் படத்திற்கு 'அம்மா விருது' வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.

உலக திரைப்பட வல்லுநர்களால் 'கேன்ஸ் திரைப்பட விழா' என்றும் 'வெனிஸ் திரைப்பட விழா'  என்றும், 'டொரண்டோ திரைப்பட விழா' என்றும் எவ்வாறு பேசப்படுகிறதோ,  அதேபோல, சென்னை சர்வதேச திரைப்பட விழாவும் உலக அளவில் புகழ்ந்து பேசப்படும், என்பதை இங்கே உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

சமைக்கின்ற உணவின் சுவை எதில் இருக்கிறது என்றால், அதை சாப்பிடுவதில் தான் இருக்கிறது. அதேபோல, தயாரிக்கப்படும் திரைப்படத்தின் சிறப்பு எதில் இருக்கிறது என்றால் அந்தப் படத்தை மக்கள் பார்ப்பதிலே இருக்கின்றது. ஆகவே, மக்கள் பார்க்கின்ற படங்களை எடுக்க வேண்டும் பார்க்கக்கூடிய படங்களை எடுக்க வேண்டும். மக்களுக்கு பயன் அளிக்கும் படங்களை எடுக்க வேண்டும். இன்று தொடங்கி 25ஆம் தேதி வரை நடக்கும் 12வது சென்னை சர்வதேச திரைப்பட விழா மிகவும்
வெற்றிகரமாக நடந்திட என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Comments