மகன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் விஜயகாந்த்!!!

12th of November 2014
சென்னை:நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளையமகன் சண்முகப்பாண்டியன், ‘சகாப்தம்’ என்ற படத்தில் மூலம் ஹீரோவாக அறிமுகாவது அனைவரும் அறிந்ததே. அறியாதது இப்படத்தில் சிறப்பு தோற்றம் ஒன்றில் விஜயகாந்த் நடிப்பது.

விஜயகாந்த் நடித்த ‘வல்லரசு’, ‘நரசிம்மா’, ‘தென்னவன்’, ‘சுதேசி’, ‘அரசாங்கம்’, ‘விருதகிரி’ போன்ற படங்களை தயாரித்த எல்.கே.சுதீஷ், இப்படத்தினை மிகப் பெரிய பொருட்ச்செலவில் தயாரித்து வருகிறார்.


பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான ஆளியார் டேம், வால்பாறை, ஆனைமலை போன்ற பகுதிகளில் இப்படத்தின் முதல் கட்டப்படபிடிப்பு நடந்து முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் 20 நாட்கள் நடைபெற்றது. அங்கே சுமார் ஒருகோடி செலவில் ஆயிரம் துணை நடிகர்கள் முன்னிலையில் இருநூறு நடனகலைஞர்கள் பங்கேற்க ஆறு நாட்கள் ஒருபாடல் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. இப்பாடலுக்கு நடன இயக்குனர் ஷோபி அவர்கள் நடனம் அமைத்தார். இதில் நாயகன் சண்முகப்பாண்டியனும், நாயகி நேகாவும் பங்கேற்று மிகச்சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார்கள்.

தற்போது இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக இப்படக்குழு வெளிநாடு சென்றுள்ளார்கள். மலேசியாவில் உள்ள கோலாலம்பூர், லங்காவி மற்றும் பேங்காக்கிலும் 35 நாட்கள் படமெடுத்து படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதில் நாயகிகளாக மிஸ்-இந்தியா பட்டம் வென்ற நேகாவும், மிஸ் பெங்களூர் பட்டம் வென்ற சுப்ரா ஐயப்பாவும் அறிமுகமாகிறார்கள். இவர்களோடு சிங்கம்புலி, ஜெகன், பவர்ஸ்டார் டாக்டர்.சீனிவாசன், தேவயாணி, ரஞ்சித், ராஜேந்திரநாத், சண்முகராஜன், பன்னீர் புஷ்பங்கள் சுரேஷ், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்காக சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். இப்பாடலை தயாரிப்பாளர் சுதீஷ் அவர்களின் நட்பிற்காக பாடிக்கொடுத்தார்.

இப்படத்தில் நடிகர் விஜயகாந்த் சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிக்கிறார். அரசியலில் ஈடுபட்ட பிரகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த விஜயகாந்த், தனது மகனுக்காக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கப்போகிறார். அது எந்த மாதிரியான வேடம் என்பது குறித்து படக்குழுவினர் ரகசியம் காக்கின்றனர்.

சுரேந்தர் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும், இப்படத்தின் கதையை நவீன் கிருஷ்ணா எழுதியுள்ளார். வேலுமணி வசனம் எழுத, கார்த்திக்ராஜா இசையமைக்கிறார். பூபதி ஒளிப்பதிவு செய்ய, ஜே.கே கலை துறையை கவனிக்கிறார்.  ராக்கி ராஜேஷ் சண்டைப்பயிற்சி அமைக்க, ஷோபி, அபி, நோபல் ஆகியோர் நடனம் அமைக்கின்றனர். நா.முத்துக்குமார், விவேகா, பா.விஜய் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள்
.

Comments