லிங்கா' படத்திற்கு தடை கோரிய வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்!!!

25th of November 2014
சென்னை:லிங்கா' படத்திற்கு தடை கோரிய வழக்கில், தீர்ப்பை ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
 
மதுரை ரவி ரத்தினம் தாக்கல் செய்த மனு: 'முல்லைவனம் 999' படம் மூலம் இயக்குனரானேன். இக்கதை முல்லைப் பெரியாறு அணை, அதை கட்டிய பொறியாளர் பென்னிகுவிக் வரலாற்றை கருவாகக் கொண்டது. அக்கதையை 'யூ டியூப்'பில் பதிவேற்றம் செய்தேன். 'முல்லைவனம் 999' கதையை திருடி, 'லிங்கா' படம் தயாரித்துள்ளனர். இதை 'ராக்லைன்' வெங்கடேஷ் தயாரித்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வினியோகம் செய்ய உள்ளார்.

வழக்குப் பதிவு செய்யக்கோரி மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் செய்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். 'லிங்கா' படம் வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். ரஜினிகாந்த், 'மனுதாரர் உள்நோக்குடன் மனு தாக்கல் செய்துள்ளார். குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை. படத்தில் நடித்துள்ளதைத் தவிர எனக்கு வேறு சம்பந்தமில்லை. எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் விளம்பர நோக்கில் மனுதாரர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்,' என பதில் மனு தாக்கல் செய்தார்.
 
இதுபோல் கே.எஸ்.ரவிக்குமார், கதாசிரியர் பொன்குமரன் பதில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் ரவிரத்தினம் கூடுதல் மனு தாக்கல் செய்தார். நீதிபதி எம்.வேணுகோபால் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார், ரஜினிகாந்த் சார்பில் வக்கீல் சஞ்சய் ராமசாமி ஆஜராகினர்.மதுரை போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர் பதில் மனு: மனுதாரர் கோரியுள்ள நிவாரணத்தை அளிக்கும் அதிகாரம் போலீஸ் எல்லைக்குட்பட்டதல்ல. மனுதாரர் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (ஐ.டி.,) மற்றும் இந்திய தண்டனைச் சட்டப்படி புகார் அளித்துள்ளார். ஐ.டி.,சட்டப்படி வழக்குப் பதிவு செய்ய முடியாது. 'முல்லைவனம் 999' படத்திற்கு பூஜை போட்டிருந்தாலும், படப்பிடிப்பு துவங்கவில்லை. மனுதாரர் அவரது கதை என்ன என்பதை குறிப்பிடவில்லை.
 
பொன்குமரனும் தனது கதை என்ன என்பதை தெரிவிக்கவில்லை. இச்சூழ்நிலையில் கதை திருட்டு நடந்துள்ளதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும்? புகாரில் முகாந்திரம் இல்லை. இவ்வாறு குறிப்பிட்டார். உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சாமிநாதன்,"இம்மனு நிலைக்கத்தக்கதல்ல,” என்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன்," இருதரப்பிலும் தேவையான ஆவணங்களை தர மறுக்கின்றனர். போலீசார் எப்படி விசாரணையை முடிக்க முடியும்?” என்றார். நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

Comments