கடவுள் போல் விஜய் அண்ணா வந்து உதவினார் - மாணவி கண்ணீர் மல்க பேட்டி!!!

10th of November 2014
சென்னை:சென்னை சைதாப்பேட்டையில் உள்ள டீக்கடையில் வேலை பார்ப்பவர் ஷாகுல்ஹமீது. இவரது மனைவி பாஹிராபேஹம். இவர்களது மகள் பாத்திமா. 

சைதாப்பேட்டை அரசு பள்ளியில் பிளஸ்2 தேர்வில் 1109 மதிப்பெண்கள் பெற்ற பாத்திமாவிற்கு இன்ஜினீயரிங் படிக்க வேண்டும் என்பது கனவு.
 
ஆனால் அவருடைய தந்தையின் வறுமை சூழல் காரணமாக மேற்படிப்பு படிக்க முடியவில்லை. இந்த விஷயத்தை தனது உதவியாளர்கள் மூலம் அறிந்த விஜய், பாத்திமாவின் இன்ஜினீயரிங் படிப்பிற்கான முழு செலவையும் ஏற்று, சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி இன்ஜினீயரிங் கல்லூரியில் இதற்கான தொகையை விஜய் செலுத்தியுள்ளார்.

இதுபற்றி மாணவி பாத்திமா கூறியதாவது: இன்ஜினீயரிங் துறையில் ஐ.டி. படிக்க வேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம். ஆனால் எங்கள் வறுமை சூழ்நிலையால் மேற்கொண்டு படிக்க முடியாமல் போய்விடுமோ என தவித்துக் கொண்டிருந்தேன்.
இந்த சமயத்தில், கடவுள் போல் விஜய் அண்ணா வந்து எனக்கு உதவி செய்துள்ளார். இந்த உதவியை என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்.

நான் நல்லபடியாக படித்து வேலைப் பார்த்து என் குடும்பத்தை காப்பாற்றுவேன். நன்றாக படி, எதைப் பற்றியும் கவலைப்படாதே என்று எனக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் தந்த விஜய் அண்ணாவிற்கு நன்றி' என கண்ணீர் மல்க பாத்திமா கூறினார்.

பாத்திமாவின் தந்தை ஷாகுல் ஹமீது கூறுகையில்: எங்கள் மகள் படிப்பிற்கு உதவி செய்த விஜய்க்கு எங்கள் வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டுள்ளோம். என் மகள் இனி படித்து எங்களை காப்பாற்றுவாள்.
 
எங்களை நேரடியாக அழைத்து இப்படி உதவி செய்த விஜய்யை எந்த காலத்திலும் மறக்க மாட்டோம்' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
 

Comments