மறைந்த நடிகர் சிவாஜிகணேசன் இந்தியாவின் கெளரவமிக்க சொத்து

2nd of October 2014
சென்னை:மறைந்த நடிகர் சிவாஜிகணேசன் இந்தியாவின் கெளரவமிக்க சொத்து என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நடிகர் சிவாஜிகணேசனின் 86-ஆவது பிறந்த நாளையொட்டி சிவாஜி நினைவு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், விருதுகளை வழங்கிப் பேசியது:

சிவாஜிகணேசன், காலத்தால் அழிக்க முடியாத கலைஞர். "பராசக்தி' தொடங்கி எத்தனை, எத்தனையோ படங்களில் அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பாசம், அன்பு, நட்பு, துரோகம், கோபம், காதல், ஈகை, வீரம் என இப்படி எண்ணற்ற முக பாவனைகளைத் தனது நடிப்பாற்றலின் மூலம் வெளிப்படுத்தியவர் அவர். கதாநாயகன் என்பதை விட சிவாஜி ஒரு சிறந்த வில்லன் நடிகர் ஆவார். "ரங்கோன் ராதா' படத்தில் அவரது கதாபாத்திரத்தைப் பார்த்தால் இன்றைக்கு உள்ள பெண்களும் சாபமிடுவார்கள். அந்த அளவுக்கு அவர் தனது வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருப்பார். "திரும்பிப் பார்' போன்ற படங்கள் அதற்குச் சிறந்த உதாரணம்.

இந்தியாவின் கெளரவமிக்க சொத்து நடிகர் சிவாஜி கணேசன். அவர் அரசியலில் தோற்றுப்போனதில் எனக்கு மிகுந்த வருத்தமுண்டு. திரையில் நடிக்கத் தெரிந்த அளவுக்கு நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாமல் போனதும் அவரது அரசியல் தோல்விக்கு காரணமாகும்.

சிவாஜி பிறந்த நாள் விழாவை கலை உலகம் கொண்டாட வேண்டும். சிவாஜியின் குடும்பத்தினர் இந்த விழாவைக் கொண்டாடுவதை விட, திரை உலகினர் ஒன்றுசேர்ந்து கொண்டாடுவதே திரை உலகம் சிவாஜிக்கு செலுத்தும் மரியாதையாகும் என்றார் அவர்.

விழாவில், பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், பின்னணிப் பாடகி ஜமுனா ராணி, நடிகர்கள் வி.எஸ்.ராகவன், சி.ஆர்.பார்த்திபன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் சிவாஜியின் மகன்கள் ராம்குமார், நடிகர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comments