கம்பெனி ஊழியரிடம் பணம் கொள்ளை: ஸ்டண்ட் நடிகர் உள்பட 3 பேர் கைது: கத்தி படத்தில் நடித்தவர்!

28th of October 2014சென்னை:மருந்து கம்பெனி ஊழியர் முகத்தில் மிளகாய் பொடி தூவி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுசம்பந்தமாக கத்தி படத்தில் ஸ்டண்ட் நடிகராக நடித்தவர் உள்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னாள் ஊழியர் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் மருந்து, மாத்திரை தயாரிக்கும் கம்பெனி  உள்ளது.

இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுப்பதற்கு கடந்த மாதம் 7ம் தேதி, சென்னை வேப்பேரியில் உள்ள அந்த கம்பெனியின் தலைமை அலுவலகத்தில் இருந்து 5 லட்சத்து 90 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஊழியர் ஜெயபால், மினி வேனில் சென்றார். தண்டலம் அருகே பைக்கில் வந்த 3 பேர், மினிவேனை மறித்து முகவரி கேட்டுள்ளார். ஜெயபால் விளக்கம் அளித்துக்கொண்டு இருந்தபோது ஒருவன், ஜெயபால் முகத்தில் மிளகாய் பொடி தூவினார். இதன்பிறகு ஜெயபாலை தாக்கி, பணத்தை கொள்ளையடித்து தப்பினர்.

இதுகுறித்து புகாரின்படி, திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், எஸ்ஐ செல்வநாதன் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். மருந்து கம்பெனியின் முன்னாள் ஊழியர் பாண்டியன், ஆதிக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகத்தின்பேரில் உத்தரமேரூர் திருப்புலிவனம் கிராமத்தை  சேர்ந்த மனோஜ்குமார் (26), சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை குருந்தனகோட்டை பகுதியை சேர்ந்த தனசேகர் (25) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இவர்களுக்கு மருந்து கம்பெனி ஊழியரை தாக்கி கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

கொள்ளைக்கு உடந்தையாக சென்னை சூளைமேட்டை சேர்ந்த குமார் (22) இருந்துள்ளார். அவர்களிடம் இருந்து 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு பைக்கை கைப்பற்றியுள்ளனர். இதுசம்பந்தமாக முன்னாள் ஊழியர்கள் பாண்டியன், ஆதி ஆகியோரை தேடி வருகின்றனர்.கொள்ளையடித்த பணத்தில் விலையுயர்ந்த செல்போன்கள், டிவி வாங்கியதாக தெரிவித்து உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கொள்ளையில் சம்பந்தப்பட்டுள்ள மனோஜ்குமார், விஜய் நடித்த கத்தி திரைப்படத்தில் ஸ்டண்ட் நடிகராக நடித்துள்ளார். மனோஜ்குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

Comments