மெட்ராஸ்: திரை விமர்சனம்!!!

27th of September 2014
சென்னை:தமிழ் சினிமாவே மெட்ராசில் வாழ்ந்துக் கொண்டிருந்தாலும், தமிழ்ப் படங்களில் மெட்ராசையும், அதன் மக்களையும் இதுவரை எந்த இயக்குனர்களும் சரியாக காட்டியதில்லை. அப்படி காட்டினாலும், "காசி மேடு ரவுடி" என்ற விதத்தில் மட்டுமே காட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பாடம் புகட்டும் வகையில், ஒரிஜினல் நார்த் மெட்ராசையும், அதில் வாழும் மக்களின் வாழ்க்கையையும், ரொம்ப தெளிவாக இயக்குனர் ரஞ்சித் 'மெட்ராஸ்' படம் மூலம் கட்டியிருக்கிறார்.

ஹவுசிங்  போர்டு குடியிருப்பில் வாழும் கார்த்தியும், கலையரசனும் நெருங்கிய நண்பர்கள். இதில் கார்த்தி, நன்றாக படித்துவிட்டு நல்ல வேளையில் இருக்கிறார். கலையரசன் அரசியல் கட்சி ஒன்றில் சிறு பொறுப்பில் இருக்கிறார். அந்த அவுசிங் போர்டில் உள்ள சுவற்றில், வெளி ஏரியாவில் உள்ள அரசியல்  தலைவர், தனது அப்பாவின் படத்தை வரைந்து விளம்பரப் படுத்துகிறார். பல ஆண்டுகளாக இந்த சுவருக்காக, இரு தரப்பினருக்கும் மோதலும், உயிர் சேதமும் ஏற்பட்டாலும், இந்த சுவரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று கலையரசன் நினைக்கிறார்.

இதற்காக, அரசியல்வாதி மாரியின் துணையுடன், சுவரை கைப்பற்றும் முயற்சியில் கலையரசன் இறங்க, அந்த மோதலில் வில்லன் கண்ணனின் மகன் மைம் கோபி கொல்லப்படுகிறார். இதற்கு பழி வாங்குவதற்காக கார்த்தி கண் முன்னே, கலையரசன் கொல்லப்படுகிறார். கலையரசனின் கொலைக்கு பழி வாங்க துடிக்கும் கார்த்தியை, அதில் இருந்து மீட்க  அவருடைய காதலியான கேத்ரின் தெரசா முயற்சிக்க, அதில் இருந்து கார்த்தி மீண்டு வந்தாரா அல்லது எதிர் கோஷ்ட்டியினரை வீழ்த்தி அந்த சுவரை கைப்பற்றினாரா என்பது தான் கிளைமாக்ஸ்.

மெட்ராஸ் என்றாலே, மெரினா கடற்கரையையும், சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனையும், எல்.ஐ.சி பிள்டிங்க்கையும் காட்டி, மெட்ராஸ் காரங்களை கடப்பாக்கி வந்த தமிழ் சினிமா இயக்குனர்கள், இதுபோன்ற படங்களைப் பார்த்து நோட்ஸ் எடுத்துக்கொள்ள இந்த படம் பயன்பெறும். அந்த அளவுக்கு நார்த் மெட்ராசை ரொம்ப தெளிவாக காண்பித்துள்ளார் இயக்குனர் ரஞ்சித்.

வட சென்னை, ஹவுசிங் போர்டு குடியிருப்பு ஒன்றில் உள்ள ஒரு குறிப்பிட்ட சுவருக்காக அடித்துக்கொள்ளும் அரசியல் கோஷ்ட்டிகள், அதில் நட்பு, காதல் என்று படம் விறுவிறுப்பும், சுவாரஸ்யமாகவும் நகர்கிறது.

வட சென்னை இளைஞாக நடிக்க கார்த்தி, ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். அவருடைய பாடி  லேங்குவேச்சும், நடிப்பும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பருத்திவீரன் படம் எப்படி கார்த்திக்கு பல ஆண்டுகள் ரசிகர்களிடையே பெரும் புகழைக்  கொடுத்ததோ, அதுபோல மெட்ராஸ் படமும் கார்த்திக்கு பல ஆண்டுகள் புகழைக்  கொடுக்கும்.

நாயகியாக நடித்துள்ள புதுமுகம் கேத்ரின் தெரசா, ரசிகர்களின் மனதில் ஒட்டிக்கொள்கிறார்.

கார்த்தியின் நண்பராக நடித்துள்ள கலையரசன், அவருடைய மனைவியாக நடித்துள்ள நடிகை, வில்லனாக நடித்துள்ள கண்ணன், மைம் கோபி, எதிர் கோஷ்ட்டியினராக நடித்துள்ளவர்கள், என்று பெரும்பாலான முகங்கள் இதுவரை திரையில் பார்க்காத முகங்களாக இருந்தாலும், அவர்களுடைய நடிப்பு ரொம்ப இயல்பாக உள்ளது. அதிலும் ஜானி என்ற வேடத்தில் நடித்துள்ள நடிகரும், அவர் வரும் காட்சிகள் அனைத்தும் திரையரங்கையே அதிர வைக்கிறது.

சந்தோஷ் நாராயணின் இசையில், பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொறு விதத்தில் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.

வட சென்னையை ஒளிப்பதிவாளர் முரளியின் கேமரா, ரொம்ப எதார்த்தமாக காட்டியுள்ளது. இரவு காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் முரளியின் கேமராவுக்கு பெரும் சவாலாக இருந்தாலும், அவற்றை ரொம்ப சாமர்த்தியமாக படமாக்கி சாதித்திருக்கிறார்.

அட்ட கத்தி படத்தில் ஜாலியான இளைஞர்களைப் பற்றி சொன்ன, ரஞ்சித், இந்த படத்தில் சீரியஸான இளைஞர்களைப் பற்றி சொல்லியிருக்கிறார். சீரியஸான விஷயத்தை கையில் எடுத்தாலும், இடையே காதல், காமெடி என்று திரைக்கதையை சுவைப்பட எழுதியுள்ள ரஞ்சித், அவ்வபோது அந்த சுவர் மேட்டரை சொல்லி, முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்த்துகிறார்.

இடைவேளைக்குப் பிறகு கலையரசன் கொலை செய்யப்பட்டவுடன், அந்த சுவரைக் கண்டுக்கொள்ளாத கார்த்தி, வெகுண்டெழுந்து நிற்கும் போது படம், இன்னும் ஜெட் வேகத்தில் பாய்கிறது.

காதல், காமெடி என்று தமிழ் சினிமா செம்மறி ஆடுகளைப் போல, ஒருவருக்கு ஒருவர் பின்னால், ஒரே விஷயத்தை அரைத்துக் கொண்டிருக்க, ஒரு சமூகத்தைப் பற்றி, இப்படி தெளிவாக சொல்ல வேண்டும் என்று நினைத்து, இயக்குனர் ரஞ்சித், எடுத்துக்கொண்ட முயற்சி, ஒரிஜினல் இடங்களில் படமாக்கிய விதம், என்று அனைத்துமே படத்தை மிக பிரம்மாண்டமான படைப்பாக்கியுள்ளது.

இதுபோன்ற படங்களில், இயல்பாக வரும் சினிமாத்தனங்கள் இப்படத்தில் துளி கூட இல்லாமல் இருப்பது இப்படத்திற்கு கிடைத்துள்ள மற்றொரு சிறப்பு. ஒட்டு மொத்தத்தில் இந்த  'மெட்ராஸ்' தான் உண்மையான மெட்ராஸ்  பற்றிய ஒரிஜினல் படம் என்றே சொல்லலாம்.

Comments