துபாயிலும் ஆடியோ ரிலீஸ் நடத்தலாமே..” – நட்புக்கரம் நீட்டுகிறார் யூ.டி.எஸ்.ரமேஷ்

5th of August 2014
சென்னை:துபாயில் கடந்த ஆறு ஆண்டுகளாக துபாய் தமிழ்ச்சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு இந்த சங்கத்தின் தூண்களில் ஒருவராக விளங்கும் யூ.டி.எஸ்.ரமேஷ் மிக முக்கிய காரணமாக இருக்கிறார். சென்னை மேற்கு மாம்பலம் தான் இவரது சொந்த ஊர் என்றாலும், சிறு வயதிலேயே துபாயில் செட்டிலாகிவிட்டார்.
 
துபாய் தமிழ்ச் சங்கம் அமைப்பின் மூலம் சில ஆயிரம் பேருக்கு வேலை தேடிக் கொடுத்திருக்கிறோம். நம் நாட்டிலிருந்து போய், துபாயின் சட்டங்கள், விதிகள் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த பலருக்கு வழிகாட்டி மீட்டிருக்கிறோம். பல நாடுகள் பங்கேற்க மூன்று முறை சர்வதேச குறும்பட விழா நடத்தியிருக்கிறோம்” என்கிறார் யூ.டி.எஸ் ரமேஷ். இயக்குநர் சிகரம் பாலசந்தர் தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற போது முதலில் அவரை அழைத்து  துபாயில் பாராட்டுவிழா நடத்தியதும் இவர்தான
 
இயல்பிலேயே நடிப்பு ஆர்வம் உள்ளவரான யூ.டி.எஸ் ரமேஷ், ‘அவ்வைசண்முகி’ படம் இந்தியில் ‘சாக்ஷி420′ என்ற பெயரில் உருவானபோது. அதில் கமலுடன் ஒரு காட்சியில் நடித்திருகிறாராம். இப்போது  ‘ஆ’ என்கிற 3டி பேய்ப்படத்திலும்,  இயக்குநர் களஞ்சியம் நாயகனாக நடிக்கும் ‘ஆனந்தமழை’ படத்தில் நெகடிவ் ரோலிலும்  நடித்திருக்கிறார்..
 
அதுமட்டுமல்ல.. தன் மனைவி இயக்கத்தில் தமிழன் டிவிக்காக துபாயிலிருந்து தயாரித்த ‘உல்டா புல்டா’ என்கிற நகைச்சுவை தொடர் நிகழ்ச்சியிலும் நடித்துள்ளார் ரமேஷ். இது தமிழன் டிவியில் 28எபிசோடுகள் ஒளிபரப்பானது. “துபாயில் பல மொழிப் படங்களின் ஆடியோ விழாக்கள் நடத்துகிறார்கள். தமிழ்ப்பட ஆடியோ விழாக்களை  ஏன் நடத்துவதில்லை. அப்படி நடத்திட முன்வந்தால் நான் உதவத்தயார்” என நட்புக்கரம் நீட்டுகிறார் யூ.டி.எஸ் ரமேஷ்.

Comments