ரீ-என்டரியாகும் நடிகைகள்! - ஸ்பெஷல் ரிபோர்ட்!!!

26th of August 2014
சென்னை:நடிக்க வந்தது ஒரு விபத்து என்று சொல்லும் நடிகைகள் உண்டு. தமிழ் சினிமாவில் நம்பர்-1 இடத்தை பிடிப்பேன் என்று சொல்லும் நடிகைகளும் உண்டு. சில சூழ்நிலைகளால் நதியா, நஸ்ரியா போன்ற நடிகைகள் வந்த சில வருஷத்திலே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர்களும் உண்டு, தன்ஷிகா போன்ற சிலர் வாய்ப்பு வரும் வரை போராடி பார்ப்பவர்களும் உண்டு. பிஸியா இருந்த நடிகைகள் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை தொடரும் போது, அவர்களுக்கு ஒரு ஓய்வு தேவைப்படுகிறது.

கேமரா வெளிச்சத்தில் இருந்து விடுதலை பெறுகிறார்கள். காதல் ,பிரச்சனைகள் என்று ஒரு பக்கம் ஒதுங்கியவர்களை கூட (நயன் போன்றவர்களை) சினிமா கை பிடித்து கூட்டி வந்திருகிறது. குடும்ப வாழ்க்கை போர் அடித்து சினிமா திரும்பியவர்களும் உண்டு. குழந்தைகள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள் என்று சிம்ரன், ஜோதிகா போன்றவர்கள் கேமரா முன்னால் வர விரும்புவதும் உண்டு. அதனால் சில கேரக்டர் ரோல் செய்யும் நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர், என்பது உண்மை. சமீபத்தில் அப்படி கேமரா முன்னால் வந்த, வர இருக்கும் நடிகைகளை இங்கு பாப்போம்;
பூர்ணிமா பாக்யராஜ்

80, 90 களில் பேசப்பட்ட நடிகை. திருமணத்திற்கு பிறகு, காஸ்ட்யும் டிசைனர் ஆக இருக்கிறார். தனது மகன் சாந்தனுவை தயார்படுத்தி கொண்டு இருக்கிறார். இயக்குனர் சுசிந்திரனின் ஆதலால் காதல் செய்வீர் படம் மூலம் அம்மா ரோலில் ரீ-என்ட்ரி ஆனார். ஜில்லா வை அடுத்து வாய்மை என்ற படத்தில் தன் மகனோடு நடித்து வருகிறார். இவர் எல்லா படங்களையும் ஒத்துகொள்வதில்லை. சில விரும்பிய படங்களில் மட்டுமே நடிக்கிறார்.

ஸ்ரீதேவி

1967 இல் முருகா என்ற படத்தில் அறிமுகம் ஆகி, தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என்று அனைத்து மொழிகளிலும் ரஜினி, கமல் என்று அத்தனை பெரிய நடிகர்களுடனும் ஒரு ரவுண்டு வந்தவர். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை தவிர்த்தார். 2012 இல் பெண் இயக்குனரின், இங்கிலீஷ் விங்கிலிஷ் படம் மூலம் மீண்டும் கேமரா முன் வந்தார். அப்பட வெற்றிக்கு பிறகு படங்களில் நடிக்க நம்பிக்கை வந்திருக்கிறது. கதைகள் ஒரு பக்கம் கேட்டு கொண்டிருப்பதாக தகவல். இவர் மகள் ஜானவியும் இப்போது நடிக்க தயாராகி விட்டதாகவும், இவர் நடிக்க கொஞ்சம் தயக்கம் காட்டுவதாகவும் செய்திகள் வருகின்றன. சினிமாவில் ஏதும் சொல்ல முடியாது. மகள் அறிமுகமாகும் படத்தில் கூட இவர் நடிக்கலாம்.

சிம்ரன்

1995 இல் சனம் ஹர்ஜாய் என்ற இந்தி படம் மூலம் அறிமுகம். 97 இல் ஒன்ஸ் மோர் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அஜீத், விஜய், சூர்யா, கமல் என்று அத்தனை நடிகர்களோடும் நடித்து பரபரப்பானவர். இவரின் நடன இடை ரசிகர்களை கவர்ந்தது.ரஜினியோடு மட்டும் நடிக்கவில்லை என்ற ஏக்கம் இன்று வரை இருக்கிறது.2014 இல் வெளிவந்த ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார். த்ரிஷ்யம் தமிழ் பதிப்பில் கமலோடு நடிப்பார் என்ற செய்தி காற்றில் பரவி வந்தது. அவரே அதற்கு மறுப்பு செய்தியும் அனுப்பினார். இப்போது டான்ஸ் ஷோ, டிவி நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கிறார். நல்ல கதைகளும் கேட்டு வருகிறார். அவர்க்கு நடிப்பில் தயாரிப்பில் ஆர்வம் இருக்கிறது. அதனால் சிம்ரனை மீண்டும் சினிமாவில் விரைவில் பார்க்கலாம்.

மீனா

1982-ல் குழந்தை நட்சத்திரமாக, எங்கேயோ கேட்ட குரல் படத்தில் நடித்தார் மீனா. ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னாளில் அவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்த ஒரே நடிகை மீனா தான். தமிழ் உட்பட பல மொழிகளில் நடித்துவிட்டார். திருமணம் செய்த பிறகு கொஞ்சம் இடைவெளி. சில மலையாள படங்களில் நடித்தார்.அதில் 2013ல் வெளி வந்த த்ரிஷ்யம் மலையாள படம் வெற்றி பெற்று பல விருதுகளை கொடுத்தது. தெலுங்கு த்ரிஷ்யம் ரீ-மேக்கிலும் அவரே நடித்தார். த்ரிஷ்யம் போன்ற நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறார்.

அமலா

மைதிலி என்னை காதலி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா. தொடர்ந்து பல படங்களில் ரஜினி, கமல், பிரபு, மம்மூட்டி என்று பல நடிகர்களோடு நடித்த படங்கள் சூப்பர் ஹிட். தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர், 2012 இல் தெலுங்கில் வெளி வந்த லைப் இஸ் பியூட்டிபுல் படம் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். பல விருதுகளை அந்த படத்தில் பெற்றார். இப்போது ஜீ தமிழ் டிவியில், உயிர் மெய் என்ற சீரியலில் ஒரு டாக்டர் ரோலில் நடித்து வருகிறார். நல்ல கதை, நல்ல ரோல் அமைந்தால் சினிமாவிலும் மீண்டும் நடிப்பார் என தெரிகிறது.

ஜோதிகா

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு நடிகை ஜோ. 1998 இல் வெளிவந்த டோலி சாஜே ரக்னா என்ற இந்தி படத்தில் ப்ரியதர்ஷன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். பிறகு அஜீத்தின், வாலி படம் மூலம் தமிழுக்கு வந்த ஜோதிகா, சூர்யா உடன் உயிரிலே கலந்தது , பூவெல்லாம் கேட்டு பார், காக்க காக்க உள்ளிட்ட 7 படங்களில் ஜோடியாக நடித்தார். பின்னர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர், தியா ,தேவ் என்ற 2 குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். இவருக்கு இப்போது மீண்டும் நடிக்கும் ஆசை வந்துவிட்டது. சூர்யா உட்பட அனைவரும் ஜோ, திரும்ப நடிக்க வருவதை விரும்புகின்றனர். மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்து வெற்றி பெற்ற ஹவ் ஓல்டு ஆர் யூ படம் ஜோவை யோசிக்க வைத்து, அவரே அந்த படத்தை தயாரித்து நடிக்க ரெடி ஆகி விட்டார். இதுதவிர பசங்க பாண்டிராஜ் இயக்கும் படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். விரைவில், ஜோவை அந்த பழைய துறுதுறு நடிப்போடு பார்க்கலாம்...!

சங்கீதா

நிறைய மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். 90 களில் வெளிவந்த வாழ்ந்து காட்டுவோம் தமிழ் படத்தில் அறிமுகம் ஆனார். ஆனாலும் விஜய்யுடன்

நடித்த பூவே உனக்காக படம் இவரை பேச வைத்தது. சில படங்களில் நடித்தவர், ஒளிபதிவாளர் மற்றும் சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர், இப்போது மலையாளத்தில் சீனிவாசன் படமான நகரவாரிதி நடுவில் ஞான் என்ற படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டு இருக்கிறார். தமிழ் படங்களிலும் நடிக்க கதை கேட்டு வருகிறார்.

மதுபாலா

1991இல் பாலச்சந்தர் இயக்கத்தில், மம்மூட்டியுடன் நடித்து வெளிவந்த அழகன் படம் தான் மதுபாலாவின் முதல் தமிழ்ப்படம். தமிழ், இந்தி, மலையாளம் என்று நடித்தவர் திடீரென திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு 2 குழந்தைகளுக்கு தாயானவர், 2008 இல் கபி சோச்சா பி நா தா என்ற இந்தி படம் மூலம் ரீஎன்ட்ரி ஆனார். சமீபத்தில் தமிழில், மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் அறிமுகமான வாயை மூடி பேசவும் படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி ஆனார். தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னட படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். தமிழ் படத்தில் நல்ல கதை கிடைத்தால் உடனே நடிக்க ரெடியாக இருக்கிறார் மதுபாலா.

கெளதமி

குரு சிஷ்யன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கெளதமி. ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்தவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என இந்திய சினிமாக்களில் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். குடும்பசூழல், உடல்நிலை பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் சினிமாவில் சில காலம் நடிக்காமல் இருந்த கெளதமி, நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது கமல்ஹாசன் நடிக்க இருக்கும் த்ரிஷ்யம் ரீ-மேக்கான பாபநாசம் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். தொடர்ந்து நல்ல படங்கள் அமையும் பட்சத்தில் மீண்டும் நடிக்க இருப்பதாக கெளதமி கூறியுள்ளார்.

இப்படியாக தமிழ் சினிமாவில் 1980-90களில் ரசிகர்களின் தூக்கத்தை கலைத்த நடிகைகள், ஒருகட்டத்தில் தங்களை குடும்ப வாழ்க்கையில் இணைத்து கொண்டு, தங்களது கடமைகளை முடித்துவிட்டு வீட்டில் சும்மா இருப்பதை விட, நல்ல ரோல் கிடைக்கும் போது அதில் நடித்து, அதன்மூலம் பணம், புகழ் கிடைக்கும் சினிமாவை ஏன் விட வேண்டும் என்ற எண்ணமும், எங்கிருந்தோ நடிகைகள் இங்கு வந்து நடிப்பதை விட சொந்த மொழியில் நாம் ஏன் நடிக்க கூடாது என்ற எண்ணமும் அவர்களை மீண்டும் சினிமாவில் நடிக்க தூண்டுகிறது.

Comments