பின்னணி பாடகர் ஆனார் நடிகர் சின்னி ஜெயந்த் - எம்.எஸ்.விஸ்வநாதன் வாழ்த்து!!!

6th of August 2014
சென்னை:நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், மிமிக்ரி கலைஞர் என்று பன்முகம் கொண்டவரான நடிகர் சின்னி ஜெயந்த் பின்னணி பாடகர் என்ற புதிய பரிணாமம் எடுத்துள்ளார்.

சின்னி ஜெயந்திடம் இருந்த குரல் வளத்தை அறிந்த பிரபல இசைக்குழுவான ஸரிகமபதநி கிருஷ்ணா, அவருக்கு பாட்டு பாடும் ஆர்வத்தை எற்படுத்தியது மட்டும் இன்றி, அவருக்கு துணையாக இருந்து, பல மாதங்களாக முறையான பயிற்சிகள் கொடுத்து தற்போது சின்னி ஜெயந்தை  ஒரு முழுமையான பாடகராக உருவாக்கியுள்ளார்.


சின்னி ஜெயந்தை பாடகராக உருவாக்கியதோடு மட்டும் அல்லாமல், டி.எம்.எஸ்  உள்ளிட்ட பழம்பெரும் பாடகர்களின், பிரபல பாடல்களை ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் சின்னி ஜெயந்த்  பாடும் நிகழ்ச்சி ஒன்றையும், ஸரிகமபதநி கிருஷ்ணா, சென்னையில் நடத்தினார்.

48 மணி நேரம் தொடர் இசை நிகழ்ச்சியை நடத்தி உலக சாதனை புரிந்த ஸரிகமபதநி ஸ்ரீ கிருஷ்ணா, நடத்திய இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  நவீன் பைன் ஆர்ட்ஸ் பன்னீர் செல்வம், கண் கிருஷ் டான்ஸ் & மியூசிக் கம்பெனி கண்ணன் ஆகியோர் செய்தார்கள்.

முதல் முறையாக இப்படிப்பட்ட பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பாடகராக அறிமுகமாகும் சின்னி ஜெயந்த், அதற்கு முன்பு இசை சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சென்று, தான் பாடகரானதையும், அதற்காக தான் மேற்கொண்ட பயிற்சிகள் பற்றியும் சொல்லியதுடன், சில பாடல்களையும் பாடிக்காட்ட, பாட்டு பாடிய சின்னி ஜெயந்தை, அவருக்கு சொல்லிக் கொடுத்த கிருஷ்ணாவையும் எம்.எஸ்.விஸ்வநாதன் வெகுவாக பாராட்டி, "நீ தாரளமாக பாடலாம்" என்று வாழ்த்தி அனுப்பியுள்ளார்.

இந்த இசை சக்கரவர்த்தியின் வாழ்த்துக்களுடன், சென்னை ராஜா முத்தையா அரங்கத்தில் 'பாட்டும் நானே பாவமும் நானே' என்ற தலைப்பில், ஸரிகமபதநி இசைக் குழுவினருடன் இணைந்து சின்னி ஜெயந்த் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

இதில், மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றுள்ள, அதே சமயம் பாடுவதற்கு கடினமாக கருதப்படும் பல பாடல்களை, தொடர்ந்து பாடி பலரது பாராட்டுக்களைப் பெற்றார்.

இந்த நிக்கழ்சியில் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், நடிகர்  ரமேஷ் கண்ணா, கதையாசிரியரும் இயக்குனருமான லியாகத் அலிகான், நடிகை ஒகே ஒகே மதுமிதா, பாடகி ஜீவா வர்ஷினி ஆகியோர் கலந்துகொண்டு சின்னி ஜெயந்துக்கு வாழ்த்து தெரிவித்ததோடு மட்டும் அல்லாமல், நிகழ்ச்சி முடியும் வரை இருந்து அவருடைய பாடல்களை ரசித்தனர்.

நடிகர் ரமேஷ் கண்ணா பேசும் போது, "நான் கே.எஸ்.ரவிகுமாரிடம் பத்து வருடங்கள் உதவி இயக்குனராக இருந்தேன். ஆனால், இயக்குனர் விக்ரமன் மூலம் தான் நடிகராக அறிமுகம் செய்யப்பட்டேன். அதுபோல தான், திரைத்துறையில் பல வருடங்களாக நடிகராக இருந்த சின்னி ஜெயந்தை  இன்று ஒரு பாடகராக ஸரிகமபதநி கிருஷ்ணா உலகிற்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இத்தனை நாட்கள் எங்கு வைத்திருந்தாய் இந்த திறமையை என்று சின்னி ஜெயந்திடம் நான் கேட்டேன், அந்த அளவுக்கு ரொம்ப அற்புதமாக பாடினர். சினிமா துறையில் இன்னமும் புகழின் உச்சியில் இருக்கும் சின்னி ஜெயந்த், இனி பாடகராகவும் புகழின் உச்சத்தை அடைவார்." என்று தெரிவித்தார்.

இயக்குனர் லியாகத் அலிகான் பேசுகையில், "திறமைகளை கடவுள் தான் கொடுப்பார். ஆனால் அதை மனிதர்கள் தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தில் வெற்றி பெற்றால், தான் தான், தன்னால் தான் முடிந்தது என்று தான் சொல்வார்கள், ஆனால் சின்னி ஜெயந்த் அப்படி இல்லாமல், தனக்கு பயிற்சி கொடுத்த ஸரிகமபதநி கிருஷ்ணாவைப் பற்றி இந்த மேடையில் பல முறை கூறினார். இது தான் அவருடைய சிறந்த பன்பு. நடிகராக இருந்த சின்னி ஜெயந்திடம் மறைந்திருந்த இந்த பாடகர் திறமையை, கிருஷ்ணா ரொம்ப அழகாக அறிந்து, அவரை இப்படிப்பட்ட மேடையிலும் பாட வைத்திருப்பது பாராட்டுக்குரியது." என்றார்.

இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் பேசுகையில், "சின்னி ஜெயந்தின் குரல் வளம் ரொம்ப அருமையாக உள்ளது. பாடுவதற்கு கஷ்ட்டமாக உள்ள பல பாடல்களை அவர் இங்கே, எந்தவித கஷ்ட்டமும் இல்லாமல் சிறப்பாக பாடினர். எனக்கு ஆச்சரியமாகத்தான் உள்ளது. நான் தற்போது இயக்குனர் என்ற படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன், அந்த படத்தில் சின்னி ஜெயந்தை கண்டிபாக பாட வைப்பேன்." என்றார்.

பாடகர் என்ற புதிய அவதாரம் எடுத்துள்ள சின்னி ஜெயந்த், பேசுகையில், "சூப்பர் ஸ்டாரைப் பார்த்து சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொண்ட நான், நடிகர் திலகத்தைப் பார்த்து நடிப்பைக் கற்றுக்கொண்டேன். பிறகு சூப்பர் ஸ்டார் மூலம், வருடைய படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானேன். 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, பிறகு இயக்கம், தயாரிப்பு என்று பல ரீதியில் பயணித்தேன்.

இயக்குனர் பாலச்சந்தர் தான், ஒருவரை பார்த்ததுமே அவரிடம் உள்ள திறமையை அறிந்து, அவர்களை நடிக்க வைப்பார். அதுபோல நான் பாடுவேன் என்பதை கண்டுபிடித்தவர் கிருஷ்ணா தான். அவரை நான் வாத்தியார் என்று தான் அழைக்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு சிறந்த முறையில் பயிற்சி கொடுத்து, இன்று உங்கள் முன்னாள் என்னை ஒரு பாடகராக அறிமுகப்படுத்தியுள்ளார்.

இங்கே வந்தவர்கள் அனைவரும் கேட்டார்கள், நீங்கள் முன்னாடியே பாட வந்திருக்கலாமே என்று, அப்படி நான் வந்திருந்தால் கிழக்கு வாசல், இதயம் உள்ளிட்ட படங்கள் எனக்கு கிடைத்திருக்காது. ஒரு துறையில் சற்று வாய்ப்புகள் குறைந்தால், நாம் வேறு தளத்தில் மாற வேண்டும். அப்படி தான் நான் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என்று மாறினேன். பிறகு மிமிக்ரி  செய்வதை வைத்து கலக்கப் போவது யார்? என்ற நிகழ்ச்சியின் மூலம் நகைச்சுவை நடிகர்களுக்கு வேறு ஒரு தளத்தைக் காட்டினேன். தற்போது எந்த தொலைக்காட்சியைப் பார்த்தாலும், அதுபோன்ற நிகழ்சிகள் ஒளிபரப்பாகி, பல காமெடி நடிகர்களுக்கு வேலை கொடுத்துக்கொண்டிருக்கிறது.

தற்போது பாடகராக பயணிக்க ஆரம்பித்துள்ளேன். சினிமா துறையில் உள்ளவர்களில் சிறப்பாக பாடக்கூடிய இன்னும் பலர் இருக்கிறார்கள். இயக்குனர் பி.வாசு, நடிகர் கார்த்திக் என்று பலர் நன்றாக பாடும் திறமைக் கொண்டவர்கள். தற்போது என்னைத் தொடர்ந்து இன்னும் பல பேர் இது போன்ற மேடைகளில் உங்கள் முன்னாள் பாடகர்களாக நிற்பார்கள், அதற்காக பாதையை தான் நான் இங்கு உருவாக்கியுள்ளேன்." என்று கூறினார்.

நிகழ்ச்சியின் முடிவில் வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சின்னி ஜெயந்த், ஸரிகமபதநி கிருஷ்ணா அனைவருக்கும் "கண் கிருஷ் டான்ஸ் & மியூசிக் கம்பெனி" கண்ணன், மூர்த்தி கிருஷ்ணன் ஆகியோர் சால்வைகள் அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கினார்கள்.

Comments