திரை விமர்சனம்: சலீம்!!!

31st of August 2014
சென்னை:தனியார் மருத்துவமனையில் மருத்துவராக  வேலை பார்க்கும் விஜய் ஆண்டனி, அனைவருக்கும் உதவும் மனபான்மையுடன் செயல்படுகிறார். தனியார் மருத்துவமனையாக இருந்தாலும், அவசரத்திற்காக வருபவர்கள் ஏழையாக இருந்தாலும் கூட, அவர்களிடம் இருப்பதை வாங்கிக்கொண்டு வைத்தியம் பார்க்கிறார். இதனால் மருத்துவமனை நிர்வாகம் விஜய் ஆண்டனி மீது கோபம் கொள்கிறது.

அனாதனையான விஜய் ஆண்டனிக்கு, நாயகி அக்ஸா பார்டசாநியுடன் திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்திற்கு முன்பு இருவரும் காதலிக்க தொடங்க, எதற்கு எடுத்தாலும் அக்ஸா கோபப்படும் குணமுடையவராக இருக்கிறார். அவசர அறுவை சிகிச்சையில் இருந்தாலும் தான் போன் பண்ணும் போது எடுக்கவில்லை என்றால், விஜய் ஆண்டனி மீது தாண்டவம் ஆடுகிறார்.

இந்த நிலையில், அக்ஸாவின் பிறந்தநாளுக்காக அவருடைய நண்பர்களுக்கு விருந்து அளிப்பதாக கூறி ஓட்டல் ஒன்றுக்கு அவர்களை விஜய் ஆண்டனி அழைக்கிறார். பணியை முடித்துக்கொண்டு விஜய் ஆண்டனி அங்கு செல்லும் போது, வழியில் சாலை ஓரத்தில் வெட்டு காயங்களுடன், அலங்கோல நிலையில் பெண் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை பார்த்து, அவரைக் தனது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்க்கிறார்.

விருந்துக்கு விஜய் ஆண்டனி வராததால், அவர் மீது கோபடமடையும் அக்ஸா, திருமணமே வேண்டாம் என்று கூறிவிடுகிறார். இந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகமும் விஜய் ஆண்டனியை வேலையை விட்டு தூக்கி விடுகிறது. இதனால் விரக்தியடையும் விஜய் ஆண்டனி, நல்லவனகா வாழும் தன்னை,இப்படி கேவலப் படுத்துகிறார்களே, என்று எண்ணி, ஒரு நாள் மட்டும் தனக்கு பிடித்தவனாக வாழ  முடிவு செய்கிறார். பிறகு அமைச்சர் மகன் ஒருவனை கடத்தி, ஹோட்டல் ஒன்றில் சிறை வைக்கிறார். இந்த நிலையில் விஜய் ஆண்டனியால் காப்பற்றப்பட்ட பெண், மருத்துவமனையில் இருந்து மாயமாகிறார்.

விஜய் ஆண்டனியிடம் உள்ள அமைச்சர் மகனை மீட்க போலீஸ் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளும், அவர்களுக்கு விஜய் ஆண்டனி, தண்ணி காட்டுவதும் என்று பரபரப்பாக படம் நகர, இதற்கிடையில் காணாமல் போன அந்த பெண்ணின்   நிலை என்ன ஆனது, அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்று, திரைக்கதையில் மேலும் சூடுபிடிக்க தொடங்க இறுதியில், அமைச்சரின் மகனை போலீஸ் மீட்டதா, அவர்களிடம் இருந்து விஜய் ஆண்டனி தப்பித்தாரா என்பது தான் க்ளைமாக்ஸ்.

நான் என்ற படத்தின் மூலம், கதையின் நாயகனாக நடித்து, வெற்றி பெற்ற விஜய் ஆண்டனி, மீண்டும் அப்படி ஒரு கதையை தான் தேர்வு செய்து மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். நான் படத்தில் சலீம் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்ததால், இப்படம் அதன் தொடர்ச்சியாக இருக்கலாம் என்று நினைக்கும் ரசிகர்களுக்கு, இது வேற, அது வேற என்று திரைக்கதையை ரொம்ப தெளிவாக அமைத்திருக்கிறார் என்.வி.நிர்மல்குமார்.

படத்தின் ஆரம்பத்தின் முதலே அமைதியான மருத்துவராக வரும் விஜய் ஆண்டனி, தனியார் மருத்துவமனைகள் எப்படி லாபம் ஈட்டும் தொழிற்சாலைகளாக செயல்படுகிறது என்பதை ரொம்ப தைரியமாக சொல்லியிருக்கிறார். எப்போதும் அமைதியாகவும், பொறுமையாகவும் விஜய் ஆண்டனி, நடிப்பது அவருடைய கதாபாத்திரத்திற்கு சரியானதாக இருந்தாலும், எப்போதும் இப்படியே நடிப்பது சரியானதாக இல்லை என்றெ சொல்ல வேண்டும்.

இரண்டாம் பாதியில் அமைச்சரின் மகனை கடத்திய பிறகு வரும் ஒரு சண்டைக்காட்சியில் தனது சுறுசுறுப்பு தனத்தைக் காட்டும் விஜய் ஆண்டனி, பிறகு மீண்டும் தனது அமைதியை கடைபிடிப்பதை தவிர்த்திருக்கலாம்.

நாயகி அக்ஸா பார்டசாநி, நல்லா கொழுக் மொழுக் என்று ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் நாயகியைப் போல இருக்கிறார்.  அவர் செய்யும் அடாவடித் தனத்தால் நமக்கே, அவர் மீது பெரும் கோபம் எற்படுகிறது. அந்த அளவுக்கு தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.

அமைச்சராக நடித்துள்ள ஆர்.என்.ஆர்.மனோகர், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளவர் என படத்தில் சில கதாபாத்திரங்கள் சிறப்பான முறையில் வடிவமடைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இருந்தாலும், அமைச்சர் மகன் கடத்தலுக்குப் பிறகு, படத்தோடு ஒட்டி வரும், சிறு சிறு நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது.

எம்.சி.கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமாக உள்ளது. விஜய் ஆண்டனியின்  இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்கும்படியாக உள்ளது.

படத்தின் ஆரம்பத்தில் இருந்தே, படத்தில் ஏதோ இருக்கிறது என்ற எதிர்ப்பார்ப்பை படம் பார்ப்பவர்களுக்கு எற்படுத்தும் இயக்குனர் நிர்மல் குமார், அதை படம் முடியும் வரை தக்கவைக்கும், அளவுக்கு திரைக்கதையை தெளிவாக அமைத்திருக்கிறார்.

இடைவேளையின் போது போலீசிடம் துப்பாக்கி காட்டி விஜய் ஆண்டனி, தப்பிக்கும் போது, ஏதோ பாட்ஷா போல விஜய் ஆண்டனிக்கு மற்றொரு முகம் இருக்குமோ, என்ற யோசனையுடன் டீ குடித்துவிட்டு மீண்டும் படத்தை தொடர்ந்தால், அமைச்சரின் மகன் கடத்தல், அவரைக் காப்பற்ற நடவடிக்கை எடுக்கும் போலிஸ் என்று படம் மீண்டும் பரபரப்படைய இறுதி வரை இந்த பரபரப்பு தொடர்ந்து இறுதியில், ரசிகர்கள் கைதட்டும் வகையில் படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் நிர்மல்.

கேங் ரேப், என்ற ஒரு விஷயத்தை கருவாக  எடுத்துக்கொண்டு, அதில் இப்படி ஒரு தெளிவான திரைக்கதையோடு, பரபரப்பான காட்சிகளோடு உருவாகியிருக்கும் சலீம் கொடுத்த காசுக்கு முழு திருப்தியைக் கொடுக்கும் படம் தாம்.

Comments