புதியதோர் உலகம் செய்வோம்' படக்குழுவினரை நேரில் வாழ்த்திய அப்துல் கலாம்!!!

22nd of August 2014
சென்னை:ஊழல் என்பதை ஒழிப்பதற்கு, சிறுவர்கள் அவர் அவர் வீட்டில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் 'புதியதோர் உலகம் செய்வோம்'.

இப்படம் குறித்து அறிந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தனது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், அவர்களை தனது சார்பாக அனுப்பி வைத்தார். இப்படத்தைப் பார்த்த பொன்ராஜ், படம் குறித்து வெகுவாக பாராட்டினார்.

இந்த நிலையில், இப்படக்குழுவினரை அப்துல் கலாம் அவர்கள், நேரில் சந்தித்து ஆசி வழங்கியுள்ளார். சென்னை வந்த அப்துல் கலாம் அவர்கள், சென்னை ஆளுனர் மாளிகையில் புதியதோர் உலகம் செய்வோம் படக்குழுவினரை அழைத்து சந்தித்த அவர், "நல்ல கருத்தை வலியுறுத்தும் இத்திரைபப்டம் மாபெரும் வெற்றி பெற வெண்டும். இளைஞர்களோடு பெற்றோர்களும் இப்படத்தைப் பார்க்க வேண்டும். மேலும் பல மொழிகளிலும் இத்திரைப்படம் வெளிவர வேண்டும்." என்று வாழ்த்தி கூறினார்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பத்து வயது சிறுவன் ரோஷன் தன தந்தையைப் பார்த்துப் பேசிய வசனத்தை நேரில் உணர்ச்சி பொங்க பேசி நடித்துக் காட்டியதைப் பார்த்து அப்துல் கலாம் அவர்கள் உருகிப் போனார்களாம். மேலும், அஜித், அணு, யாழினி, சந்தோஷ் பாலாஜி, சூர்யெஷ்வர் ஆகியோர் இப்படத்திலுள்ள "தேசம் எங்கள் தேசம்..." பாடலின் சில வரிகளைப் பாடியதைக் கேட்டு கலாம் அவர்கள் ஆனந்த மடைந்தார்களாம்.

இந்த சந்திப்பின் போது படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதிய கே.எஸ்.நாகராஜன் ராஜா, தயாரிப்பாளர் எம்.எஸ்.ஜெயக்குமார், இணைத் தயாரிப்பாளர் பிரியா ஜெயக்குமார், அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், சமூக சேவகர் அப்துல்கனி ஆகியோர் உடன் இருந்தனர்.
   

Comments